துன்அருங் கானமும் துணிதல் ஆற்றாய்பின்நின்று பெயரச் சூழ்ந்தனை ஆயின்,
என்நிலை உரைமோ - நெஞ்சே!- ஒன்னார்
ஓம்பரண் கடந்த வீங்குபெருந் தானை
அடுபோர் மிஞிலி செருவேல் கடைஇ, 5
முருகுறழ் முன்பொடு பொருதுகளம் சிவப்ப,
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
ஒண்கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு
விசும்பிடை தூரஆடி, மொசிந்து உடன், 10
பூவிரி அகன்துறைக் கணைவிசைக் கடுநீர்க்
காவிரிப் பேர்யாற்று அயிர்கொண்டு ஈண்டி,
எக்கர் இட்ட குப்பை வெண்மணல்
வைப்பின் யாணர் வளம்கெழு வேந்தர்
ஞாலம் நாறும் நலம்கெழு நல்இசை, 15
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்,
ஆல முற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில்மனை மகளிர்
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகர நெற்றி வான்தோய் புரிசைச் 20
சிகரம் தோன்றாச் சேண்உயர் நல்இல்
புகாஅர் நல்நாட் டதுவே - பகாஅர்
பண்டம் நாறும் வண்டுஅடர் ஐம்பால்,
பணைத்தகைத் தடைஇய காண்புஇன் மென்தோள்,
அணங்குசால், அரிவை இருந்த
மணம்கமழ் மறுகின் மணற்பெருங் குன்றே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework