வயங்குமணி பொருத வகையமை வனப்பின்பசுங்காழ் அல்குல் மாஅயோ ளொடு
வினைவனப்பு எய்திய புனைபூஞ் சேக்கை,
விண்பொரு நெடுநகர்த் தங்கி, இன்றே
இனிதுடன் கழிந்தன்று மன்னே; நாளைப் 5
பொருந்தாக் கண்ணேம் புலம்வந்து உறுதரச்
சேக்குவம் கொல்லோ, நெஞ்சே! சாத்துஎறிந்து
அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடுவில் ஆடவர் படுபகை வெரீஇ
ஊர்எழுந்து உலறிய பீர்எழு முதுபாழ் 10
முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந்ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென,
மணிப்புறாத் துறந்த மரம்சோர் மாடத்து
எழுதுஅணி கடவுள் போகலின், புல்லென்று 15
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால்நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில்,
குயில்காழ் சிதைய மண்டி, அயில்வாய்க்
கூர்முகச் சிதலை வேய்ந்த
போர்மடி நல்இறைப் பொதியி லானே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework