வேர்முழுது உலறி நின்ற புழற்கால்தேர்மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
வற்றல் மரத்த பொன்தலை ஓதி
வெயிற்கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
நுண்ணிதின் நிவக்கும் வெண்ஞெமை வியன்காட்டு 5
ஆளில் அத்தத்து, அளியள் அவனொடு-
வாள்வரி பொருத புண்கூர் யானை
புகர்சிதை முகத்த குருதி வார,
உயர்சிமை நெடுங்கோட்டு உருமென முழங்கும்
'அருஞ்சுரம் இறந்தனள்' என்ப- பெருஞ்சீர் 10
அன்னி குறுக்கைப் பறந்தலைத், திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல்லிணர்ப் புன்னை போலக்,
கடுநவைப் படீஇயர் மாதோ - களி மயில்
குஞ்சரக் குரல குருகோடு ஆலும், 15
துஞ்சா முழவின் துய்த்தியல் வாழ்க்கைக்,
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஊழடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பாற்
சிறுபல் கூந்தற் போதுபிடித்து அருளாது,
எறிகோல் சிதைய நூறவும், சிறுபுறம், 20
'எனக்குஉரித்து' என்னாள், நின்ற என்
அமர்க்கண் அஞ்ஞையை அலைத்த கையே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework