உழுந்துதலைப் பெய்த கொழுங்கனி மிதவைபெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி,
மனைவிளக் குறுத்து, மாலை தொடரிக்,
கனைஇருள் அகன்ற கவின்பெறு காலைக், 5
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென,
உச்சிக் குடத்தர், புத்துகன் மண்டையர்,
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப், 10
புதல்வற் பயந்த திதலை! அவ் வயிற்று
வால்இழை மகளிர் நால்வர் கூடிக்,
'கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக'- என
நீரொடு சொரிந்த ஈர்இதழ் அலரி 15
பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்,
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து,
'பேர்இற் கிழத்தி ஆக' எனத் தமர்தர;
ஓர்இற் கூடிய உடன்புணர் கங்குல், 20
கொடும்புறம் வளஇக், கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்த காலை, யாழநின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என. 25
இன்நகை இருக்கை, பின்யான் வினவலின்-
செஞ்சூட்டு ஒண்குழை வண்காது துயல்வர
அகமலி உவகையள் ஆகி, முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சி யோளே - மாவின்
மடம்கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்குஈர் ஓதி, மா அ யோளே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework