அன்றுஅவண் ஒழிந்தன்றும் இலையே; வந்துநனி
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
அன்றுஅவண் ஒழிந்தன்றும் இலையே; வந்துநனிவருந்தினை- வாழி, என் நெஞ்சே!- பருந்து இருந்து
உயாவிளி பயிற்றும், யாஉயர் நனந்தலை,
உருள்துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம், 5
எம்மொடு இறத்தலும் செல்லாய்; பின்நின்று,
ஒழியச் சூழ்ந்தனை ஆயின், தவிராது,
செல்இனி; சிறக்க நின் உள்ளம்! வல்லே
மறவல் ஓம்புமதி; எம்மே - நறவின்
சேயிதழ் அனைய ஆகிக், குவளை 10
மாஇதழ் புரையும் மலிர்கொள் ஈர்இமை,
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
பழங்கண் கொண்ட, கதழ்ந்துவீழ், அவிர்அறல்
வெய்ய உகுதர, வெரீஇப், பையென,
சில்வளை சொரிந்த மெல்இறை முன்கை 15
பூவீழ் கொடியின் புல்லெனப் போகி;
அடர்செய் ஆய்அகல் சுடர் துணை ஆக,
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்குசாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!