நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய்
நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்,
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் 5
தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே,
கூர்எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
காணுநர் இன்மையின், செத்தனள் பேணிப்
பொலங்கலம் சுமந்த பூண்தாங்கு இளமுலை,
'வருக மாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து 10
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன்,
'மாசுஇல் குறுமகள்!' எவன் பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு?' என யான்தற்
கரைய, வந்து விரைவனென் கவைஇ,
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம்கிளையா, 15
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
பேணினென் அல்லெனோ- மகிழ்ந!- வானத்து
அணங்குஅருங் கடவுள் அன்னோள், நின்
மகன்தாய் ஆதல் புரைவது - ஆங்கு எனவே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework