வேகாத வெயிலுக்குள்ளே -ஏதில்லலோ லேலோ
விறகொடிக்கப் போறபெண்ணே -ஏதில்லலோ லேலோ 1

காலுனக்குப் பொசுக்கலையோ -ஏதில்லலோ லேலோ
கற்றாழைமுள்ளுக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ 2

காலுப் பொசுக்கினாலும் -ஏதில்லலோ லேலோ
கற்றாழைமுள்ளுக் குத்தினாலும் -ஏதில்லலோ லேலோ 3

காலாக் கொடுமையாலே -ஏதில்லலோ லேலோ
கஷ்டப் படக் காலமாச்சு -ஏதில்லலோ லேலோ 4

கஞ்சிக் கலயங்கொண்டு -ஏதில்லலோ லேலோ
காட்டுவழி போறபொண்ணே -ஏதில்லலோ லேலோ 5

கல்உனக்குக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ
கல்லளுத்தி வந்திடாதோ -ஏதில்லலோ லேலோ 6

கல்எனக்குக் குத்திட்டாலும் -ஏதில்லலோ லேலோ
கல்லளுத்தி வந்திட்டாலும் -ஏதில்லலோ லேலோ 7

விதிவசம்போ லாகணுமே -ஏதில்லலோ லேலோ
வெயிலிலேயும் நடக்கணுமே -ஏதில்லலோ லேலோ 8

மத்தியான வேளையிலே -ஏதில்லலோ லேலோ
வளைகுலுங்கப் போறபொண்ணே -ஏதில்லலோ லேலோ 9

கஞ்சி குடிக்கையிலே -ஏதில்லலோ லேலோ
கடித்துக்கொள்ள என்னசெய்வாய் -ஏதில்லலோ லேலோ 10

கஞ்சிகண்டு குடிக்கிறதே -ஏதில்லலோ லேலோ
கடவுள்செய்த புண்ணியமே -ஏதில்லலோ சாமி 11

கம்பஞ்கஞ்சிக் கேற்றாப்போல -ஏதில்லலோ லேலோ
காணத்துவையல் அரைச்சிருக்கேன் -ஏதில்லலோ சாமி 12

கஷ்டப்பட்டு பட்டுப்பட்டு -ஏதில்லலோ லேலோ
கழுத்தொடியச் சுமக்கும்பொண்ணே -ஏதில்லலோ லேலோ 13

எங்கேபோய் விறகொடித்து -ஏதில்லலோ லேலோ
என்னசெய்யப் போறாய்பெண்ணே -ஏதில்லலோ லேலோ 14

காட்டுக்குள்ளே விறகொடித்து -ஏதில்லலோ
சாமி வீட்டுக்கதைச் சுமந்துவந்து -ஏதில்லலோ சாமி 15

கால்ரூபாய்க்கு விறகுவிற்று -ஏதில்லலோ லேலோ
கஞ்சிகண்டு குடிக்கணுமே -ஏதில்லலோ சாமி 16
 

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework