தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி ஞாயிறு
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி ஞாயிறுவல்லவன் கூறிய வினை தலை வைத்தான் போல்,
கல் அடைபு, கதிர் ஊன்றி, கண் பயம் கெடப் பெயர,
அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல,
மல்லல் நீர்த் திரை ஊர்பு, மால் இருள் மதி சீப்ப,
இல்லவர் ஒழுக்கம் போல் இரும் கழி மலர் கூம்ப,
செல்லும் என் உயிர் புறத்து இறுத்தந்த மருள் மாலை!
மாலை நீ -
இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்மன்;
அன்புற்றார் அழ, நீத்த அல்லலுள், கலங்கிய
துன்புற்றார்த் துயர் செய்தல் தக்கதோ, நினக்கு?
மாலை நீ -
கலந்தவர் காமத்தை கனற்றலோ செய்தாய்மன்;
நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின் கண்
அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ, நினக்கு?
மாலை நீ -
எம் கேள்வன் தருதல் உம் தருகல்லாய்; துணை அல்லை!
பிரிந்தவர்க்கு நோய் ஆகிப் புணர்ந்தவர்க்குப் புணை ஆகித்
திருந்தாத செயின் அல்லால் இல்லையோ, நினக்கு?
என ஆங்கு,
ஆய் இழை மடவரல் அவலம் அகல,
பாய் இருள் பரப்பினை பகல் களைந்தது போலப்
போய் அவர் மண் வௌவி வந்தனர் -
சேய் உறை காதலர் செய் வினை முடித்தே.