ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப்பால் அன்ன மேனியான் அணிபெறத் தைஇய
நீல நீர் உடை போலத், தகைபெற்ற வெண் திரை
வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப!
ஊர் அலர் எடுத்து அரற்ற, உள்ளாய், நீ துறத்தலின்,
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன் -
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு, ஆங்கே
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால்;
இணைபு இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் மன் -
துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து, இனி,
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லாக்கால்;
இன்று இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் மன் -
வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து, இனி,
நின்று நீர் உகக் கலுழும் நெடும் பெரும் கண் அல்லாக்கால்;
அதனால்;
பிரிவு இல்லாய் போல, நீ தெய்வத்தின் தெளித்தக் கால்,
அரிது என்னாள், துணிந்தவள் ஆய் நலம் பெயர்தரப்,
புரி உளைக் கலி மான் தேர் கடவுபு -
விரி தண் தார் வியல் மார்ப! - விரைக நின் செலவே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework