வெல் புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால்,நல் ஆற்றின் உயிர் காத்து, நடுக்கு அறத் தான் செய்த
தொல் வினைப் பயன் துய்ப்ப, துறக்கம் வேட்டு எழுந்தாற்போல் -
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர,
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து, மற்று அவன்
ஏனையான் அளிப்பான் போல், இகல் இருள் மதி சீப்பக்,
குடை நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும்
இடை நின்ற காலம் போல், இறுத்தந்த மருள் மாலை!
மாலை நீ - தூ அறத் துறந்தாரை நினைத்தலின், கயம் பூத்த
போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய்;
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப, சினைப் பூ போல் தளை விட்ட
காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்.
மாலை நீ - தை எனக் கோவலர் தனிக் குழல் இசை கேட்டு
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்;
செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும்,
பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய்.
மாலை நீ - தகை மிக்க தாழ் சினைப் பதி சேர்ந்து புள் ஆர்ப்பப்
பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்;
தகை மிக்க புணர்ச்சியார் தாழ் கொடி நறு முல்லை
முகை முகம் திறந்தன்ன, முறுவலும் கடிகல்லாய்.
என ஆங்கு;
மாலையும் அலரும் நோனாது, எம் வயின்
நெந்ஜ்சமும் எஞ்சும்மன் தில்ல - எஞ்சி,
உள்ளாது அமைந்தோர், உள்ளும்,
உள் இல் உள்ளம் உள் உள் உவந்தே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework