கார் ஆரப் பெய்த கடி கொள் வியன் புலத்துப்பேராது சென்று, பெரும் பதவப் புல் மாந்தி,
நீர் ஆர் நிழல குடம் சுட்டு இனத்து உள்ளும்
போர் ஆரா ஏற்றின், பொரு நாகு, இள பாண்டில்
தேர் ஊரச் செம்மாந்தது போல், மதைஇனள் -
பேர் ஊரும் சி(ற்)று ஊரும் கௌவை எடுப்பவள் போல்,
மோரோடு வந்தாள் - தகை கண்டை; யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு!
பண்ணித் தமர் தந்து ஒரு புறம் தைஇய
கண்ணி எடுக்கல்லாக் கோடு ஏந்து அகல் அல்குல் -
புண் இல்லார் புண் ஆக நோக்கும்; முழு மெய்யும்
கண்ணளோ? - ஆய மகள்!
இவள் தான் திருத்தாச் சுமட்டினள், ஏனைத் தோள் வீசி
வரிக் கூழ வட்டி தழீஇ, அரிக் குழை
ஆடல் தகையள்; கழுத்தினும் வாலிது
நுண்ணிதாத் தோன்றும், நுசுப்பு.
இடை தெரியா ஏஎர் இருவரும் தம் தம்
உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார் கொலோ?
படை இடுவான் மன் கண்டீர், காமன் - மடை அடும்
பாலொடு கோட்டம் புகின்,
இவள் தான், வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால், மருந்து அல்லள் -
'யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள்' என்று ஊர்ப் பெண்டிர்,
'மாங்காய் நறும் காடி கூட்டுவேம், யாங்கும்
எழு நின் கிளையொடு போக' என்று, தம் தம்
கொழுநரைப் போகாமல் காத்து, முழு நாளும்,
வாயில் அடைப்ப, வரும்.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework