இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல -அகல் அல்குல் தோள் கண் என மூ வழிப் பெருகி,
நுதல், அடி, நுசுப்பு என மூ வழி சிறுகிக்,
கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு,
அகல் ஆங்கண் அளை மாறி, அலமந்து பெயரும்கால்,
'நகை வல்லேன் யான்' என்று என் உயிரோடு படை தொட்ட
இகலாட்டி! நின்னை எவன் பிழைத்தேன், எல்லா! யான்?
அ·து அவலம் அன்று மன;
ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிகக்;
காயாம் பூம் கண்ணிக் கரும் துவர் ஆடையை,
மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய், ஓர்
ஆயனை அல்லை; பிறவோ அமரர் உள்
ஞாயிற்றுப் புத்தேள் மகன்?
அதனால் வாய்வாளேன்;
முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன
பல்லும் பணைத் தோளும் பேர் அமர் உண் கண்ணும்,
'நல்லேன், யான்,' என்று, நலம் தகை நம்பிய
சொல்லாட்டி! நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார்?
சொல்லாதி;
'நின்னை தகைத்தனென்,' அல்லல் காண்மன்.
மண்டாத கூறி, மழ குழக்கு ஆகின்றே,
கண்ட பொழுதே கடவரைப் போல, நீ
பண்டம் வினாய படிற்றால் தொடீஇய, நின்
கொண்டது எவன் - எல்லா! - யான்?
கொண்டது;
அளை மாறிப் பெயர் தருவாய்! - அறிதியோ? - அஞ்ஞான்று
தளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றாற்று அயல்,
இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினா, என் நெஞ்சம்
களமாக் கொண்டு ஆண்டாய், ஓர் கள்வியை அல்லையோ?
நின் நெஞ்சம் களமாக் கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும்
புனத்து உளான் என்னைக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ?
இனத்து உளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ?
தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ?
அனைத்து ஆக
வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால், சேய்த்து அன்றி,
அண்ண அணித்து ஊர் ஆயின், நன்பகல் போழ்து ஆயின்,
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
மயில் எருத்து வண்ணத்து மாயோய்! மற்று இன்ன
வெயிலொடு, எவன், விரைந்து சேறி? உது காண்.
பிடி துஞ்சு அன்ன அறை மேல, நுங்கின்
தடி கண் புரையும் குறும் சுனை ஆடிப்,
பனிப் பூம் தளவொடு முல்லை பறித்துத்,
தனிக் காயாம் தண் பொழில், எம்மொடு வைகிப்,
பனிப் படச் செல்வாய், நும் ஊர்க்கு.
இனிச் செல்வேம் யாம்;
மா மருண்டன்ன மழைக் கண் சி(ற்)று ஆய்த்தியர்
நீ மருட்டும் சொல்க் கண் மருள்வார்க்கு உரை, அவை;
ஆ முனியா ஏறு போல் வைகல், பதின்மரைக்
காமுற்றுச் செல்வாய்; ஓர் கண் குத்தி கள்வனை;
நீ எவன் செய்தி, பிறர்க்கு?
யாம் எவன் செய்தும், நினக்கு?
கொலை உண் கண் கூர் எயிற்றுக் கொய் தளிர் மேனி,
இனை வனப்பின், மாயோய்! நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி; நீ வருதி;
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத்
தலையினால் தொட்டு உற்றேன், சூள்.
ஆங்கு உணரார் நேர்ப; அது பொய்ப்பாய் நீ; ஆயின் -
தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர்
வேந்து ஊட்டு அரவத்து, நின் பெண்டிர் காணாமை,
காஞ்சித் தாது உக்கன்ன தாது எரு மன்றத்துத்
தூங்கும் குரவையுஉள் நின் பெண்டிர் கேளாமை,
ஆம்பல் குழலால் பயிர் பயிர் - எம் படப்பைக்
காஞ்சிக் கீழ் செய்தேம் குறி.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework