யாரை நீ எம் இல் புகுதர்வாய்? ஓரும்புதுவ மலர் தேரும் வண்டே போல் - யாழ
வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் -
மாட்டு மாட்டு ஓடி, மகளிர் தரத் தரப்,
பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம்
பாட்டு ஆதல் சான்ற நின் மாயப் பரத்தைமை -
காட்டிய வந்தமை கைப்படுத்தேன் - பண்டு எலாம்
கேட்டும் அறிவேன்மன், யான்;
தெரி கோதை அம் நல்லாய்! தேறீயல் வேண்டும் -
பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை
வரு புனல் ஆடத் தவிர்ந்தேன்; பெரிது என்னைச்
செய்யா மொழிவது எவன்?
ஓஒ! புனல் ஆடினாய் எனவும் கேட்டேன்; புனல் ஆங்கே
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக,
மாண் எழில் உண் கண், பிறழும் கயல் ஆகக்,
கார் மலர் வேய்ந்த கமழ் பூம் பரப்பு ஆக
நாணுச் சிறை அழித்து நன்பகல் வந்த அவ்
யாணர் புதுப் புனல் ஆடினாய், முன் மாலைப்
பாணன் புணை ஆகப் புக்கு;
ஆனாது, அளித்து அமர் காதலோடு அப் புனல் ஆடி,
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சிக்,
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன்; குளித்தாங்கே,
போர்த்த சினத்தான் புருவத் திரை இடா,
ஆர்க்கும் ஞெகிழத்தான் நன் நீர் நடை தட்பச்
சீர்த் தக வந்த புதுப் புனல் நின்னைக் கொண்டு
ஈர்த்து உய்ப்பக் கண்டார் உளர்;
ஈர்த்தது, உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்கப்,
புரை தீர் புதுப் புனல் வெள்ளத்தின் இன்னும்
கரை கண்டதூ உம் இலை;
நிரை தொடீஇ! பொய்யா வாள் தானைப், புனை கழல் கால் தென்னவன்
வையைப் புதுப் புனல் ஆடத் தவிர்ந்ததைத்
தெய்வத்தின் தேற்றித் தெளிப்பேன்; பெரிது என்னைச்
செய்யா மொழிவது எவன்;
மெய்யதை, மல்கு மலர் வேய்ந்த மாயப் புதுப் புனல்
பல் காலும் ஆடிய செல்வுழி, ஒல்கிக்
களைஞரும் இல் வழிக் கால் ஆழ்ந்து தேரோடு
இள மணலுள் படல் ஓம்பு - முளை நேர்
முறுவலார்க்கு ஓர் நகை செய்து.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework