புன வளர் பூங் கொடி அன்னாய்! கழியக்கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே!
முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி,
மயங்கி, மற்று ஆண்டு ஆண்டுச் சேறலும் செல்லாது,
உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும்,
அரிதின் அறம் செய்யா, ஆன்றோர் உலகும்,
உரிதின் ஒருதலை எய்தலும் - வீழ்வார்ப்
பிரிதலும், ஆங்கே புணர்தலும், தம்மில்
தருதல் தகையாதால் மற்று;
நனவினால் போலும், நறு நுதால்! அல்கல்
கனவினால் சென்றேன் - கலி கெழு கூடல்
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையைக்
கரை அணி காவின் அகத்து;
உரை, இனி - தண்டாத் தீம் சாயல் நெடுந்தகாய்! அவ் வழிக்
கண்டது எவன் மற்று நீ?
கண்டது - உடன் அமர் ஆயமொடு, அவ் விசும்பு ஆயும்
மட நடை மா இனம், அந்தி அமையத்து,
இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால்,
இறைகொண்டு இருந்தன்ன - நல்லாரைக் கண்டேன்;
துறை கொண்டு உயர் மணல் மேல் ஒன்றி நிறைவதை
ஓர்த்தது இசைக்கும் பறை போல், நின் நெஞ்சத்து
வேட்டதே கண்டாய் கனா;
கேட்டை, விரையல் நீ; மற்று வெகுள்வாய்! - உரை - ஆண்டு
இது ஆகும், இன் நகை நல்லாய்! பொது ஆகத்,
தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர்
பூங் கொடி வாங்கி, இணர் கொய்ய, ஆங்கே
சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத
முனை அரண் போல உடைந்தன்று, அக் காவில்
துனை வரி வண்டின் இனம்;
மற்று ஆங்கே, நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அவ் வழிக்
காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச,
அவருள்,
ஒருத்தி, செயல் அமை கோதை நகை,
ஒருத்தி, இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப,
ஒருத்தி, தெரி முத்தம் சேர்ந்த திலகம்,
ஒருத்தி, அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க,
ஒருத்தி, வரி ஆர் அகல் அல்குல் காழகம்,
ஒருத்தி, அரி ஆர் ஞெகிழத்து அணி சுறாத் தட்ப,
ஒருத்தி, புலவியால் புல்லாது இருந்தாள், அலவுற்று
வண்டு இனம் ஆர்ப்ப, இடை விட்டுக் காதலன்
தண் தார் அகலம் புகும்;
ஒருத்தி, அடி தாழ் கலிங்கம் தழீஇ, ஒரு கை
முடி தாழ் இரும் கூந்தல் பற்றிப், பூ வேய்ந்த
கடி கயம் பாயும், அலந்து;
ஒருத்தி, கணம் கொண்டு அவை மூசக், கை ஆற்றாள், பூண்ட
மணம் கமழ் கோதை பரிபு கொண்டு, ஓச்சி
வணங்கு காழ் வங்கம் புகும்;
ஒருத்தி, இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள்,
பறந்தவை மூசக் கடிவாள், கடியும்
இடம் தேற்றாள் சோர்ந்தனள், கை;
ஆங்க, கடி காவில் கால் ஒற்ற, ஒல்கி ஒசியாக்
கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல்,
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார் வண்டிற்கு
வண்டலவர்; கண்டேன், யான்;
நின்னை நின் பெண்டிர் புலந்தனவும், நீ அவர்
முன் அடி ஒல்கி உணர்த்தினவும், பல் மாண்
கனவின் தலையிட்டு உரையல்; சினைஇ யான்
செய்வது இல் என்பதோ? கூறு;
பொய் கூறேன் - அன்ன வகையால் யான் கண்ட கனவு தான்
நல் வாயாக் காண்டை - நறு நுதால்! பல் மாணும்
கூடிப் புணர்ந்தீர்! பிரியன்மின்; நீடிப்
பிரிந்தீர்! புணர் தம்மின், என்பன போல
அரும்பு அவிழ் பூஞ் சினை தோறும் இரும் குயில்
ஆனாது அகவும் பொழுதினான், மேவர,
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்
தேன் இமிர் காவில் புணர்ந்து இருந்து ஆடுமார்,
ஆனா விருப்போடு அணி அயர்ப, காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework