போது அவிழ் பனிப் பொய்கைப் புதுவது தளைவிட்டதாது சூழ் தாமரைத் தனி மலர் புறம் சேர்பு -
காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக,
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல்,
ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு -
மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர!
தெள் அரிச் சிலம்பு ஆர்ப்பத், தெருவின் கண் தாக்கி, நின்
உள்ளம் கொண்டு, ஒழித்தாளைக் குறை கூறிக் கொள நின்றாய்;
துணிந்தது பிறிது ஆகத், 'துணிவு இலள் இவள்' எனப்,
பணிந்தாய் போல் வந்து, ஈண்டுப், பயன் இல மொழிவாயோ?
பட்டுழி அறியாது, பாகனைத் தேரொடும்
விட்டு, அவள் வரல் நோக்கி, விருந்து ஏற்றுக்கொள நின்றாய்;
நெஞ்சத்த பிற ஆக, 'நிறை இலள் இவள்' என,
வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்து ஈவாயோ?
இணர் ததை தண் காவின், இயன்ற நின் குறி வந்தாள்
புணர்வினில் புகன்று, ஆங்கே புனல் ஆடப் பண்ணியாய்;
தருக்கிய பிற ஆகத், 'தன் இலள் இவள்' எனச்
செருக்கினால் வந்து, ஈங்குச் சொல் உகுத்து ஈவாயோ?
என ஆங்கு,
தருக்கேம் பெரும! நின் நல்கல் விருப்புற்றுத்
தாழ்ந்தாய் போல் வந்து, தகவு இல செய்யாது,
சூழ்ந்தவை செய்து, மற்று எம்மையும் உள்ளுவாய் -
வீழ்ந்தார் விருப்பு அற்றக் கால்.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework