அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் -
இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்கப்,
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்
விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள் இனி;
'உடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்' எனப், பல
இடை கொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய், ஆயினை;
கடைஇய ஆற்று இடை, நீர் நீத்த வறும் சுனை,
அடையொடு வாடிய அணி மலர் - தகைப்பன.
'வல்லை நீ துறப்பாயேல், வகை வாடும் இவள்' என,
ஒல்லாங்கு யாம் இரப்பவும், உணர்ந்து ஈயாய் ஆயினை;
செல்லு நீள் ஆற்று இடைச், சேர்ந்து எழுந்த மரம் வாடப்,
புல்லு விட்டு இறைஞ்சிய பூங் கொடி - தகைப்பன.
'பிணிபு நீ விடல் சூழின், பிறழ்தரும் இவள்' எனப்
பணிபு வந்து இரப்பவும், பல சூழ்வாய் ஆயினை;
துணிபு நீ செலக் கண்ட ஆற்று இடை, அம்மரத்து
அணி செல, வாடிய அம் தளிர் - தகைப்பன.
என ஆங்கு,
யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை;
ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி,
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும்
கானம் - தகைப்ப செலவு.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework