குறிஞ்சி - பேரி சாத்தனார்
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- நற்றிணை
பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே
துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக்
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும்
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்
யானே அன்றியும் உளர்கொல் பானாள்
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர
உருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு நீர்
போக்கு அற விலங்கிய சாரல்
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே
தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது