புரிவு உண்ட புணர்ச்சிஉள் புல் ஆரா மாத்திரைஅருகுவித்து ஒருவரை அகற்றலின், தெரிவார் கண்
செய நின்ற பண்ணின்உள் செவி சுவை கொள்ளாது,
நயம் நின்ற பொருள் கெடப் புரி அறு நரம்பினும்
பயன் இன்று மன்ற அம்ம, காமம் - இவள் மன்னும்,
ஒள் நுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்,
முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு, அடக்கித், தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள்; பெண் இன்றி
யாவரும் தண் குரல் கேட்ப, நிரை வெண் பல்
மீ உயர் தோன்ற, நகாஅ, நக்காங்கே,
பூ உயிர்த்தன்ன புகழ் சால் எழில் உண் கண்
ஆய் இதழ் மல்க அழும்.
ஓஒ! அழிதகப் பாராதே, அல்லல் குறுகினம்;
காண்பாம் - கனம் குழை பண்பு.
என்று, எல்லீரும் என் செய்தீர்? என்னை நகுதிரோ?
நல்ல நகாஅலிர் மன் கொலோ - யான் உற்ற
அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு
புல்லிப் புணரப் பெறின்.
'எல்லா! நீ உற்றது எவனோ மற்று? என்றீரேல், என் சிதை
செய்தான் இவன்' என, 'உற்றது இது' என,
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின்,
பைதல ஆகி பசக்குவ மன்னோ - என்
நெய்தல் மலர் அன்ன கண்?
கோடு வாய் கூடாப் பிறையைப், பிறிது ஒன்று
நாடுவேன், கண்டனென்; சிற்றில்உள் கண்டு, ஆங்கே,
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன்; சூடிய,
காணான், திரிதரும் கொல்லோ - மணி மிடற்று
மாண் மலர் கொன்றையவன்?
'தெள்ளியேம்' என்று உரைத்துத், தேராது, ஒரு நிலையே,
'வள்ளியை ஆக!' என நெஞ்சை வலி உறீஇ,
உள்ளி வருகுவர் கொல்லோ? வளைந்து யான்
எள்ளி இருக்குவேன்மன் கொலோ? நள்இருள்
மாந்தர் கடி கொண்ட கங்குல், கனவினால்,
தோன்றினன் ஆகத், தொடுத்தேன்மன், யான்; தன்னைப்
பையெனக் காண்கு விழிப்ப, யான் பற்றிய
கை உளே மாய்ந்தான், கரந்து.
கதிர் பகா ஞாயிறே! கல் சேர்தி ஆயின்,
அவரை நினைத்து, நிறுத்து என் கை நீட்டித்
தருகுவை ஆயின், தவிரும் - என் நெஞ்சத்து
உயிர் திரியா மாட்டிய தீ.
மை இல் சுடரே! மலை சேர்தி நீ ஆயின்,
பௌவ நீர்த் தோன்றிப் பகல் செய்யும் மாத்திரை,
கை விளக்கு ஆகக் கதிர் சில தாராய்! என்
தொய்யில் சிதைத்தானைத் தேர்கு.
சிதைத்தானைச் செய்வது எவன் கொலோ? எம்மை
நயந்து, நலம் சிதைத்தான்.
மன்றப் பனை மேல் மலை மாந் தளிரே! நீ
தொன்று இவ் உலகத்துக் கேட்டும் அறிதியோ?
மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால், யான் காணேன் -
நன்று தீது என்று பிற.
நோய் எரி ஆகச் சுடினும், சுழற்றி, என்
ஆய் இதழ் உள்ளே கரப்பன் - கரந்தாங்கே
நோய் உறு வெந் நீர்; தெளிப்பின், தலைக்கொண்டு
வேவது, அளித்து இவ் உலகு.
மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் - சான்றீர்! -
நலிதரும் காமமும் கௌவையும் என்று, இவ்
வலிதின் உயிர் காவாத் தூங்கி, ஆங்கு, என்னை
நலியும் விழுமம் இரண்டு.
எனப் பாடி,
இனைந்து நொந்து அழுதனள்; நினைந்து நீடு உயிர்த்தனள்;
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி, எல் இரா
நல்கிய கேள்வன் இவன் - மன்ற, மெல்ல
மணிஉள் பரந்த நீர் போலத் துணிவாம் -
கலம் சிதை இல்லத்துக் காழ் கொண்டு தேற்றக்
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம்பெற்றாள்,
நல் எழில் மார்பனைச் சார்ந்து!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework