மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல்,
சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கை சேர்த்த
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப்
பூ மலர்ந்தவை போலப், புள் அல்கும் துறைவ! கேள்:
'ஆற்றுதல்' என்பது, ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
'போற்றுதல்' என்பது, புணர்ந்தாரை பிரியாமை;
'பண்பு' எனப்படுவது, பாடு அறிந்து ஒழுகுதல்;
'அன்பு' எனப்படுவது, தன் கிளை செறாஅமை;
'அறிவு' எனப்படுவது, பேதையார் சொல் நோன்றல்;
'செறிவு' எனப்படுவது, கூறியது மறாஅமை;
'நிறை' எனப்படுவது, மறை பிறர் அறியாமை;
'முறை' எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்;
'பொறை' எனப்படுவது, போற்றாரை பொறுத்தல்.
ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி
நல் நுதல் நலன் உண்டு துறத்தல் - கொண்க! -
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்;
நின்தலை வருந்தியாள் துயரம்
சென்றனை களைமோ, பூண்க, நின் தேரே!