தோள் துறந்து அருளாதவர் போல் நின்று,வாடை தூக்க, வணங்கிய தாழை
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை,
நளி இரும் கங்குல், நம் துயர் அறியாது,
அளி இன்று, பிணி இன்று, விளியாது, நரலும்
கானல் அம் சேர்ப்பனைக் கண்டாய் போலப்
புதுவது கவினினை' என்றி ஆயின்,
நனவின் வாரா நயன் இலாளனைக்
கனவில் கண்டு, யான் செய்தது கேள், இனி:
'அலந்தாங்கு அமையலென்' என்றானைப் பற்றி, 'என்
நலம் தாராயோ?' எனத், தொடுப்பேன் போலவும்,
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கிப்
'புலம்பல் ஓம்பு' என, அளிப்பான் போலவும் -
'முலை இடைத் துயிலும் மறந்தீத்தோய்' என,
நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும்,
'வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது' எனத்
தலையுற முன் அடிப் பணிவான் போலவும் -
கோதை கோலா இறைஞ்சி நின்ற
ஊதை அம் சேர்ப்பனை, அலைப்பேன் போலவும்,
'யாது என் பிழைப்பு?' என நடுங்கி, ஆங்கே,
'பேதையை பெரிது' எனத் தெளிப்பான் போலவும்
ஆங்கு;
கனவினால் கண்டேன் - தோழி! - 'காண்தகக்
கனவின் வந்த கானலம் சேர்ப்பன்
நனவின் வருதலும் உண்டு' என,
அனை வரை நின்றது, என் அரும் பெறல் உயிரே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework