நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள்
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள்அலமரல் அமர் உண் கண், அம் நல்லாய்! நீ உறீஇ,
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல்.
பேர் ஏமுற்றார் போல, முன் நின்று, விலக்குவாய்
யார் - எல்லா! நின்னை அறிந்ததூ உம் இல் வழி?
தளிர் இயால்! என் அறிதல் வேண்டின், பகை அஞ்சாப்
புல் இனத்து ஆயர் மகனேன், மற்று யான்.
ஒக்கும் மன்;
புல் இனத்து ஆயனை நீ ஆயின், குடம் சுட்டு
நல் இனத்து ஆயர், எமர்.
எல்லா!
நின்னொடு சொல்லின், ஏதமோ இல்லை மன்;
ஏதம் அன்று எல்லை வருவான் விடு.
விடேன்,
உடம்பட்டு நீப்பார் கிளவி மடம் பட்டு.
மெல்லிய ஆதல் அறியினும், மெல்லியால்!
நின் மொழி கொண்டு, யானோ விடுவேன்? - மற்று என் மொழி கொண்டு
என் நெஞ்சம் ஏவல் செயின்?
'நெஞ்சு ஏவல் செய்யாது' என நின்றாய்க்கு, 'எஞ்சிய
காதல் கொள் காமம் கலக்குற' ஏதிலார்
பொய்ம் மொழி தேறுவது என்?
தெளிந்தேன், தெரி இழாய்! யான்.
பல் கால், யாம் கான் யாற்று அவிர் மணல் தண் பொழில்,
அல்கல் அகல் அறை, ஆயமொடு ஆடி,
முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து, எல்லை
இரவு உற்றது; இன்னும் கழிப்பி; அரவு உற்று
உருமின் அதிரும் குரல் போல், பொரு முரண்
நல் ஏறு நாகு உடன் நின்றன,
பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே.