கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண்.இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி,
ஒழுகிய கொன்றைத் தீம் குழல் முரற்சியர்,
வழூஉ சொல் கோவலர், தம் தம் இன நிரை
பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார்.
அவ் வழி
நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,
மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்த்
துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல - களம் புகும்
மள்ளர் வனப்பு ஒத்தன.
தாக்குபு தம் உள் பெயர்த்து ஒற்றி, எவ் வாயும்,
வை வாய் மருப்பினால் மாறாது குத்தலின்,
மெய் வார் குருதிய ஏறு எல்லாம் - பெய் காலைக்
கொண்டல் நிரை ஒத்தன.
அவ் ஏற்றை
பிரிவு கொண்டு, இடைப் போக்கி, இனத்தோடு புனத்து ஏற்றி,
இரு திறனா நீக்கும் பொதுவர் -
உரு கெழு மா நிலம் இயற்றுவான்,
விரி திரை நீக்குவான், வியன் குறிப்பு - ஒத்தனர்.
அவரைக் கழல உழக்கி, எதிர் சென்று சாடி,
அழல் வாய் மருப்பினால் குத்தி, உழலை
மரத்தைப் போல் தொட்டன - ஏறு.
தொட்ட தம், புண் வார் குருதியால் கை பிசைந்து, மெய் திமிரித்
தங்கார் - பொதுவர் - கடலுள் பரதவர்
அம்பி ஊர்ந்தாங்கு, ஊர்ந்தார், ஏறு.
ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரிக் குடர்
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ,
ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட
மாலை போல், தூங்கும் சினை.
ஆங்கு,
தம் புல ஏறு பரத்தர உய்த்த தம்
அன்பு உறு காதலர் கை பிணைந்து, ஆய்ச்சியர்
இன்புற்று அயர்வர், தழூஉ.
முயங்கிப் பொதிவேம்; முயங்கிப் பொதிவேம்;
முலை வேதின் ஒற்றி முயங்கிப் பொதிவேம் -
கொலை ஏறு சாடிய புண்ணை - எம் கேளே!
பல் ஊழ் தயிர் கடையத் தாஅய புள்ளி மேல்
கொல் ஏறு கொண்டான் குருதி மயக்குறப்
புல்லல் எம் தோளிற்கு அணியோ! எம் கேளே!
ஆங்கு, போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர்
காரிகை தோள் காமுறுதலும் இவ் இரண்டும்
ஓராங்குச் சேறல் இலவோ? - எம் கேளே!
'கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன்' என்று ஊரார்
சொல்லும் சொல் கேளா, அளை மாறி யாம் வரும்
செல்வம் எம் கேள்வன் தருமோ? - எம் கேளே!
ஆங்க,
அரும் தலை ஏற்றொடு காதலர்ப் பேணிச்,
சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும்;
ஏற்றவர் புலம் கெடத் திறை கொண்டு,
மாற்றாரைக் கடக்க, எம் மறம் கெழு கோவே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework