காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்தாமரைக் கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான்
நீள் நாக நறும் தண் தார் தயங்கப் பாய்ந்து, அருளினால்,
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகல் அகலம்,
வரு முலை புணர்ந்தன என்பதனால், என் தோழி
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே;
அவனும் தான், ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும்
வான் ஊர் மதியம் வரை சேரின், அவ் வரைத்,
'தேனின் இறால்' என, ஏணி இழைத்திருக்கும்
கான் அகல் நாடன் மகன்;
சிறுகுடியீரே! சிறுகுடியீரே! -
வள்ளி கீழ் வீழா; வரை மிசைத் தேன் தொடா;
கொல்லை குரல் வாங்கி ஈனா - மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான்;
காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இரும் சிலம்பின்
வாங்கு அமை மென் தோள் குறவர் மட மகளிர்
தாம் பிழையார்; கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்;
என ஆங்கு,
அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
என்னையர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்;
அவரும், தெரி கணை நோக்கிச் சிலை நோக்கிக், கண் சேந்து
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து, ஆறி,
'இருவர் கண் குற்றமும் இல்லையால்' என்று,
தெருமந்து சாய்த்தார் தலை;
தெரி இழாய்! நீயும் நின் கேளும் புணர,
வரை உறை தெய்வம் உவப்ப, உவந்து
குரவை தழீஇ யாம் ஆடக் குரவையுள்
கொண்டு நிலை பாடிக் காண்;
நல்லாய் -
நன்னாள் தலை வரும் எல்லை, நமர் மலைத்
தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர் கொல்?
புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில்
நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?
நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே,
கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ?
விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொல்லோ?
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன் கொல்லோ?
மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்,
கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ?
என்னைமன், நின் கண்ணால் காண்பென்மன், யான்;
நெய்தல் இதழ் உண் கண், நின் கண் ஆக, என் கண் மன;
என ஆங்கு,
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇத்,
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக,
வேய் புரை மென் தோள் பசலையும், அம்பலும்,
மாய புணர்ச்சியும், எல்லாம் உடன் நீங்கச்,
சேய் உயர் வெற்பனும் வந்தனன்;
பூ எழில் உண் கணும் பொலிக மா இனியே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework