கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் மராத்து
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் மராத்துநெடு மிசைச் சூழும் மயில் ஆலும் சீர,
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்பத்,
தொடி மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர,
இயன் எழீஇயவை போல, எவ்வாய்யும் 'இம்' மெனக்
கயன் அணி பொதும்பருள் கடி மலர்த் தேன் ஊத,
மலர் ஆய்ந்து வயின் வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப,
இரும் குயில் ஆலப், பெரும் துறை கவின் பெறக்
குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும்
சீரார் செவ்வியும் வந்தன்று;
வாரார் தோழி நம் காதலோரே;
பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று, நுதல்;
சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன தோள்;
நனி அறல் வாரும் பொழுது என, வெய்ய
பனி அறல் வாரும், என் கண்;
மலை இடை போயினர் வரல் நசைஇ நோயொடு
முலை இடைக் கனலும், என் நெஞ்சு;
காதலின் பிரிந்தார் கொல்லோ? வறிது, ஓர்
தூதொடு மறந்தார் கொல்லோ? நோதகக்,
காதலர் காதலும் காண்பாம் கொல்லோ?
துறந்தவர் ஆண்டு ஆண்டு உறைகுவர் கொல்லோ? யாவது -
'நீள் இடைப்படுதலும் ஒல்லும், யாழ நின்
வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி!
நாள் அணி சிதைத்தலும் உண்டு' என நயவந்து
கேள்வி அந்தணர் கடவும்
வேள்வி ஆவியின் உயிர்க்கும், என் நெஞ்சே.