கடும் புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெறநெடும் கயத்து அயல் அயல் அயிர் தோன்ற, அம்மணல்
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உகப்,
பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீயக், காதலர்ப்
புணர்ந்தவர் முகம் போலப் பொய்கை பூப் புதிது ஈன,
மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால்,
கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுதுமன் -
'பொய்யேம்' என்று, ஆய் இழாய்! புணர்ந்தவர் உரைத்ததை;
மயங்கு அமர் மாறு அட்டு, மண் வௌவி வருபவர்,
தயங்கிய களிற்றின் மேல், தகை காண விடுவதோ -
பயம் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு,
வயங்கு இழை தண்ணென, வந்த இவ் அசை வாடை?
தாள் வலம்பட வென்று, தகை நல் மா மேல் கொண்டு,
வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ -
நீள் கழை நிவந்த பூ நிறம் வாடத் தூற்றுபு,
தோள் அதிர்பு அகம் சேரத் துவற்றும் இச் சில் மழை?
பகை வென்று திறை கொண்ட பாய் திண்தேர் மிசையவர்
வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ -
புகை எனப் புதல் சூழ்ந்து பூ அம் கள் பொதி செய்யா
முகை வெண் பல் நுதி பொர, முற்றிய கடும் பனி?
என ஆங்கு
வாளாதி வயங்கு இழாய்! 'வருந்துவள் இவள்' என,
நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி,
மீளி வேல் தானையர் புகுதந்தார் -
நீள் உயர் கூடல் நெடு கொடி எழவே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework