அரி மான் இடித்தன்ன அம் சிலை வல் வில்புரி நாண், புடையின், புறம் காண்டல் அல்லால் -
இணைப் படைத் தானை அரசோடு உறினும் -
கணைத் தொடை நாணும், கடும் துடி ஆர்ப்பின்,
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி,
உருத்த கடும் சினத்து, ஓடா மறவர்,
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, அன்போடு
அருள் புறம் மாறிய ஆர் இடை அத்தம் -
புரிபு நீ புறம் மாறிப், போக்கு எண்ணிப், புதிது ஈண்டிப்
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ -
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம்
பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக் கால்?
பொய் அற்ற கேள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ -
தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம்,
பாம்பு சேர் மதி போலப் பசப்பு ஊர்ந்து தொலைந்தக் கால்?
பின்னிய தொடர் நீவிப், பிறர் நாட்டுப் படர்ந்து, நீ
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ -
புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனாத்,
திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்கும்கால்?
என ஆங்கு,
அனையவை போற்ற, நினைஇயன நாடிக் காண்;
வளமையோ வைகலும் செயல் ஆகும்; மற்று இவள்
முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த
இளமையும் தருவதோ, இறந்த பின்னே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework