பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரைமாஅல் யானையொடு மறவர் மயங்கித்
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ்சுரம்,
இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் நுமக்குச்
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின்,
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக்,
கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம்?
நாளும் கோள்மீன் தகைத்தலும் தகைமே;
கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின்,
புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு, அமைவாளோ?
ஆள்பவர் கலக்குற அலை பெற்ற நாடு போல்,
பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு, அமைவாளோ?
ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள்
நீர் நீத்த மலர் போல, நீ நீப்பின், வாழ்வாளோ?
என ஆங்கு,
பொய் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு,
எந்நாளோ, நெடுந்தகாய்! நீ செல்வது,
அந்நாள் கொண்டு இறக்கும், இவள் அரும்பெறல் உயிரே.