காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய ... 5

செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை,
நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும்
வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை; -
அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே, ... 10

வேடர் வாராத விருந்துத் திருநாளில்,
பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்
வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற,
ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,
சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க் ... 15

காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,
இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்,
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள்
இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல், ... 20

இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைதனை
முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப்
பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே - கண்டேன் யான்.
கன்னிக் குயிலொன்று காவிடத்தே பாடியதோர் ... 25

இன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய்,
''மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாரோதோ?
இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,
காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?
நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ?'' ... 30

என்றுபல வெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால்.
அன்றுநான் கேட்டது அமரர்தாங் கேட்பாரோ?
குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே
தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே;
அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்; ... 35
விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்கேன்!

Add a comment

ராகம் - சங்கராபரணம் தாளம் - ஏக தாளம்)

ஸ்வரம்: ''ஸகா - ரிமா - காரீ
பாபாபாபா - மாமாமாமா
ரீகா - ரிகமா - மாமா''

சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்க.

காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். ... (காதல்)

1.
அருளே யாநல் லொளியே;
ஒளிபோ மாயின், ஒளிபோ மாயின்,
இருளே, இருளே, இருளே. ... (காதல்)

2.
இன்பம், இன்பம், இன்பம்;
இன்பத் திற்கோ ரெல்லை காணில்,
துன்பம், துன்பம், துன்பம். ... (காதல்)

3.
நாதம், நாதம், நாதம்;
நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
சேதம், சேதம், சேதம். ... (காதல்)

4.
தாளம், தாளம், தாளம்;
தாளத் திற்கோர் தடையுண் டாயின்,
கூளம், கூளம், கூளம். ... (காதல்)

5.
பண்ணே, பண்ணே, பண்ணே;
பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்.
மண்ணே, மண்ணே, மண்ணே. ... (காதல்)

6.
புகழே, புகழே, புகழே;
புகழுக் கேயோர் புரையுண் டாயின்,
இகழே, இகழே, இகழே. ... (காதல்)

7.
உறுதி, உறுதி, உறுதி;
உறுதிக் கேயோர் உடைவுண் டாயின்,
இறுதி, இறுதி, இறுதி. ... (காதல்)

8.
கூடல், கூடல், கூடல்
கூடிப் பின்னே குமரன் போயின்,
வாடல், வாடல், வாடல். ... (காதல்)

9.
குழலே, குழலே, குழலே;
குழலிற் கீறல் கூடுங்காலை,
விழலே, விழலே, விழலே. ... (காதல்)

Add a comment

கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன்,
எண்ணுதலுஞ் செய்யேன், இருபதுபேய் கொண்டவன்போல்
கண்ணும் முகமும் களியேறிக் காமனார்
அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க,
கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய் ... 5

ஒன்றே யாதுவாய் உலகமெலாந் தோற்றமுற
சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி,
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ? தறுபடுமோ? யார் படுவார்?
நாளொன்று போயினது; நானு மெனதுயிரும், ... 10

நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்
மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும்,
சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா
மிஞ்சி நின்றோம். ஆங்கு மறுநாள் விடிந்தவுடன்,
(வஞ்சனை நான் கூறவில்லை) மன்மதனார் விந்தையால், ... 15

புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல்,
வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மை யென
காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே
நீலிதனைக் காண வந்தேன், நீண்ட வழியினிலே
நின்றபொருள் கண்ட நினைவில்லை. சோலையிடைச் ... 20

சென்றுநான் பார்க்கையிலே, செஞ்ஞாயிற் றொண்கதிரால்
பச்சைமர மெல்லாம் பளபளென என்னுளத்தின்
இச்சை யுணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெல்லாம்
வேறெங்கோ போயிருப்ப வெம்மைக் கொடுங்காதல்
மீறலெனைத் தான்புரிந்த விந்தைச் சிறுகுயிலைக் ... 25

காணநான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன்
கோணமெலாஞ் சுற்றிமரக் கொம்பையெலாம் நோக்கி வந்தேன்.

Add a comment

மோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும்
ஏக மவுன மியன்றதுகாண்; மற்றதிலோர்
இன்ப வெறியுந் துயரும் இணைந்தனவால்.
பின்புநான் பார்க்கப் பெடைக்குயிலஃ தொன்றல்லால்
மற்றைப் பறவை மறைந்தெங்கோ போகவுமிவ் ... 5

ஒற்றைக் குயில் சோக முற்றுத் தலைகுனிந்து
வாடுவது கண்டேன். மரத்தருகே போய்நின்று,
''பேடே! திரவியமே! பேரின்பப் பாட்டுடையாய்!
ஏழுலகம் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையாய்!
பீழையுனக் கெய்தியதென்? பேசாய்!'' எனக் கேட்டேன். ... 10

மாயக் குயிலதுதான் மானுடவர் பேச்சினிலோர்
மாயச்சொல் கூற மனந் தீயுற நின்றேன்.
''காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லை யெனில்
சாதலை வேண்டிக் தகிக்கின்றேன்'' என்றதுவால்,
''வானத்துப் புள்ளெல்லாம் மையலுறப் பாடுகிறாய். ... 15

ஞானத்திற் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய்,
காதலர்நீ யெய்துகிலாக் காரணந்தான் யா'' தென்றேன்.
வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே
கானக் குயிலிக் கதைசொல்ல லாயிற்று:-
''மானக் குலைவும் வருத்தமுநான் பார்க்காமல், ... 20

உண்மை முழுதும் உரைத்திடுவேன் மேற்குலத்தீர்!
பெண்மைக் கிரங்கிப் பிழைபொறுத்தல் கேட்கின்றேன்
அறிவும் வடிவுங் குறுகி, அவனியிலே
சிறியதொரு புள்ளாய்ச் சிறியேன் பிறந்திடினும்,
தேவர் கருணையிலோ தெய்வச் சினத்தாலோ ... 25

யாவர் மொழியும் எளிதுணரும் பேறு பெற்றேன்;
மானுடவர் நெஞ்ச வழக்கெல்லாந் தேர்ந்திட்டேன்:
கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
ஆற்று நீரோசை அருவி யொலியினிலும், ... 30

நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
மானுடப் பெண்கள் வளமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங் ... 35

கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
கண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும், ... 40

வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.
நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளைப் ... 45

பாவிமனந் தானிறுகப் பற்றிநிற்ப தென்னையோ?
நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர்.
மஞ்சரே, என்றன் மனநிகழ்ச்சி காணீரோ?
காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில்,
சாதலைத் வேண்டித் தவிக்கின்றேன்'' என்றதுவே. ... 50

சின்னக் குயிலிதனைச் செப்பியவப் போழ்தினிலே,
என்னைப் புதியதோர் இன்பச் சுரங்கவர,
உள்ளத் திடையும் உயிரிடையும் ஆங்கந்தப்
பிள்ளைக் குயிலினதோர் பேச்சன்றி வேறற்றேன்;
''காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேல் ... 55

சாதலோ சாதல்'' எனச் சாற்றுமொரு பல்லவியென்
உள்ளமாம் வீணைதனில், உள்ளவீ டத்தனையும்
விள்ள ஒலிப்பதால் வேறொர் ஒலியில்லை.
சித்தம் மயங்கித் திகைப்பொடுநான் நின்றிடவும்,
அத்தருணத் தேபறவை யத்தனையுந் தாந்திரும்பிச் ... 60

சோலைக் கிளையிலெலாந் தோன்றி யொலித்தனவால்,
நீலக் குயிலும் நெடிதுயிர்த்தாங் கிஃதுரைக்கும்,
'காதல் வழிதான் கரடுமுர டாமென்பார்;
சோதித் திருவிழியீர்! துன்பக் கடலினிலே
நல்லுதுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்திட்டீர்; ... 65

அல்லலற நும்மோ டளவாளாய் நான்பெறுமிவ்
வின்பத் தினுக்கும் இடையூறு மூண்டதுவே;
அன்பொடு நீரிங்கே அடுத்தநான் காநாளில்
வந்தருளல் வேண்டும், மறவாதீர், மேற்குலத்தீர்!
சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல், ... 70

ஆவி தரியேன், அறிந்திடுவீர், நான் காநாள்.
பாவியந்த நான்குநாள் பத்துயுகமாகக் கழிப்பேன்,
சென்று வருவீர், என்சிந்தை கொடுபோகின்றீர்,
சென்று வருவீர்'' எனத் தேறாப் பெருந்துயரங்
கொண்டு சிறுகுயிருங் கூறி மறைந்ததுகாண். ... 75

Add a comment

மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை,
சுற்றுமுற்றும் பார்த்தும் துடித்து வருகையிலே -
வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே!
நெஞ்சகமே! தொல்விதியின் நீதியே! பாழுலகே!
கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்! ... 5

பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெலாங் கேண்மினோ!
காதலைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ!
மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ!
மாயக் குயிலோர் மரக்கிளையின் வீற்றிருந்தே
பாயும் விழி நீர் பதைக்குஞ் சிறியபுடல் ... 10

விம்மிப் பரிந்து சொலும் வெந்துயர்ச்சொல் கொண்டதுவாய்
அம்மவோ! மற்றாங்கோர் ஆண்குரங்கு தன்னுடனே
ஏதேதோ கூறி இரங்கும் நிலைகண்டேன்.
தீதேது? நன்றேது? செய்கைத் தெளிவேது?
அந்தக் கணமே அதையுங் குரங்கினையும் ... 15

சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்த்தேன்,
கொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை
நின்று சற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும்,
ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறாருகே
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே, ... 20

பேடைக் குயிலிதனைப் பேசியது: - ''வானரரே!
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத்
தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?
மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே, ... 25

எண்ணிநின்றார் தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல்,
கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில
வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம்.
மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே, ... 30

வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ?
ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம் ... 35

ஆசை முகத்தினைப் போல லாக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குதிக்கும் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும் வேகமுறப் பாய்வதிலே ... 40

வானரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?
பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு கந்தைபோல்;
வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ? ... 45

சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும் -
வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?
வானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன்,
பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும்,
நிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால் ... 50

தேவரீர் காதல்பெறுஞ் சீர்த்தி கொண்டேன்; தம்மிடத்தே
ஆவலினாற் பாடுகின்றேன். ஆரியரே கேட்டருள்வீர்!''
(வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதை
யானறிந்து கொண்டுவிட்டேன், யாதோ ஒரு திறத்தால்)
காதல், காதல் காதல்;
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்.
முதலியன (குயிலின் பாட்டு)
நீசக்குயிலும் நெருப்புச் சுவைக்குரலில் ... 55

ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே: -
காட்டின் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்,
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்.
வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ஙனே ... 60

தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும்
''ஆவி யுருகுதடி, ஆஹா ஹா'' என்பதுவும்,
கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும்
மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரியிறைப்பதுவும்
''ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே! ... 65

பேச முடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன்,
காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;
காதலினாற் சாகுங் கதியினிலே தன்னை வைத்தாய்,
எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன்,
இப்போதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்'' ... 70

என்றுபல பேசுவதும் என்னுயிரைப் புண்செயவே,
கொன்றுவிட எண்ணிக் குரங்கின்மேல் வீசினேன்
கைவாளை யாங்கே! கனவோ? நனவுகொலோ?
தெய்வ வலியோ? சிறு குரங்கென் வாளுக்குத்
தப்பி முகஞ்சுளித்துத் தாவி யொளித்திடவும், ... 75

ஒப்பிலா மாயத் தொருகுயிலுந் தான்மறைய,
சோலைப் பறவை தொகைதொகையாத் தாமொலிக்க,
மேலைச் செயலறியா வெள்ளறிவிற் பேதையேன்
தட்டுத் தடுமாறிச் சார்பனைத்துந் தேடியுமே,
குட்டிப் பிசாசக் குயிலையெங்கும் காணவில்லை. ... 80

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework