காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய ... 5

செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை,
நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும்
வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை; -
அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே, ... 10

வேடர் வாராத விருந்துத் திருநாளில்,
பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்
வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற,
ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,
சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க் ... 15

காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,
இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்,
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள்
இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல், ... 20

இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைதனை
முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப்
பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே - கண்டேன் யான்.
கன்னிக் குயிலொன்று காவிடத்தே பாடியதோர் ... 25

இன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய்,
''மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாரோதோ?
இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,
காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?
நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ?'' ... 30

என்றுபல வெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால்.
அன்றுநான் கேட்டது அமரர்தாங் கேட்பாரோ?
குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே
தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே;
அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்; ... 35
விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்கேன்!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework