ஆழியான் ஊர்திப் புள்ளின் அம் சிறகு ஒலியின் நாகம்
மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும்
சூழ்துகள் மயக்கத்தானும் புளிஞர் உள் சுருங்கிச் சேக்கைக்
கோழி போல் குறைந்து நெஞ்சின் அறம் என மறமும் விட்டார்.
449

 

புள் ஒன்றே சொல்லும் என்று இப் புன்தலை வேடன் பொய்த்தான்
வெள்ளம் தேர் வளைந்த நம்மை வென்றி ஈங்கு அரிது வெய்தா
உள்ளம் போல் போது நாம் ஓர் எடுப்பு எடுத்து உய்ய என்னா
வள்ளல் மேல் அப்பு மாரி ஆர்ப்பொடு சிதறினாரே.
450

 

மால் வரைத் தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னை
கால் இரைத்து எழுந்து பாறக் கல் எனப் புடைத்ததே போல்
மேல் நிரைத்து எழுந்த வேடர் வெம் நுனை அப்பு மாரி
கோல் நிரைத்து உமிழும் வில்லால் கோமகன் விலக்கினானே.
451

 

கானவர் இரிய வில்வாய்க் கடுங் கணை தொடுத்தலோடும்
ஆன்நிரை பெயர்ந்த ஆயர் ஆர்த்தனர் அணி செய் திண் தோள்
தான் ஒன்று முடங்கிற்று ஒன்று நிமிர்ந்தது சரம் பெய் மாரி
போல் நின்ற என்ப மற்று அப் பொருவரு சிலையினார்க்கே.
452

 

ஐந்நூறு நூறு தலை இட்ட ஆறாயிரவர்
மெய்ந் நூறு நூறு நுதி வெம் கணை தூவி வேடர்
கைந் நூறு வில்லும் கணையும் அறுத்தான் கணத்தின்
மைந் நூறு வேல் கண் மடவார் மனம் போல மாய்ந்தார்.
453

 

வாள் வாயும் இன்றி வடி வெம் கணை வாயும் இன்றிக்
கோள் வாய் மதியம் நெடியான் விடுத்த ஆங்கு மைந்தன்
தோள் வாய் சிலையின் ஒலியால் தொறு மீட்டு மீள்வான்
நாள் வாய் நிறைந்த நகை வெண் மதி செல்வது ஒத்தான்.
454

 

ஆள் அற்றம் இன்றி அலர் தார் அவன் தோழ ரோடும்
கோள் உற்ற கோவன் நிரை மீட்டனன் என்று கூற
வாள் உற்ற புண்ணுள் வடி வேல் எறிந்திற்றதே போல்
நாள் உற்று உலந்தான் வெகுண்டான் நகர் ஆர்த்தது அன்றே.
455
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework