இரவி தோய் கொடி கொள் மாடத்து இடுபுகை தவழச் சுண்ணம்
விரவிப் பூந் தாமம் நாற்றி விரை தெளித்து ஆரம் தாங்கி
அரவு உயர் கொடியினான் தன் அகன் படை அனுங்க வென்ற
புரவித் தேர்க் காளை அன்ன காளையைப் பொலிக என்றார்.
456

 

இன் அமுது அனைய செவ்வாய் இளங் கிளி மழலை அம் சொல்
பொன் அவிர் சுணங்கு பூத்த பொங்கு இள முலையினார் தம்
மின் இவர் நுசுப்பு நோவ விடலையைக் காண ஓடி
அன்னமும் மயிலும் போல அணி நகர் வீதி கொண்டார்.
457

 

சில்லரிச் சிலம்பின் வள் வார்ச் சிறுபறை கறங்கச் செம்பொன்
அல்குல் தேர் அணிந்து கொம்மை முலை எனும் புரவி பூட்டி
நெல் எழில் நெடுங் கண் அம்பாப் புருவவில் உருவக் கோலிச்
செல்வப் போர்க் காமன் சேனை செம்மல் மேல் எழுந்தது அன்றே.
458

 

நூல் பொர அரிய நுண்மை நுசுப்பினை ஒசிய வீங்கிக்
கால் பரந்து இருந்த வெம்கண் கதிர் முலை கச்சின் வீக்கிக்
கோல் பொரச் சிவந்த கோல மணிவிரல் கோதை தாங்கி
மேல் வரல் கருதி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார்.
459

 

ஆகமும் இடையும் அஃக அடி பரந்து எழுந்து வீங்கிப்
போகமும் பொருளும் ஈன்ற புணர் முலைத் தடங்கல் தோன்றப்
பாகமே மறைய நின்ற படை மலர்த் தடங் கண் நல்லார்
நாகம் விட்டு எழுந்து போந்த நாகர் தம் மகளிர் ஒத்தார்.
460

 

வாள் அரம் துடைத்த வைவேல் இரண்டு உடன் மலைந்தவே போல்
ஆள் வழக்கு ஒழிய நீண்ட அணிமலர்த் தடங்கண் எல்லாம்
நீள் சுடர் நெறியை நோக்கும் நிரை இதழ் நெருஞ்சிப் பூப் போல்
காளைதன் தேர் செல் வீதி கலந்து உடன் தொக்கது அன்றே.
461

 

வடகமும் துகிலும் தோடும் மாலையும் மணியும் முத்தும்
கடகமும் குழையும் பூணும் கதிர் ஒளி கலந்து மூதூர்
இடவகை எல்லை எல்லாம் மின் நிரைத்து இட்டதே போல்
பட அரவு அல்குலாரைப் பயந்தன மாடம் எல்லாம்.
462

 

மாது உகு மயிலின் நல்லார் மங்கல மரபு கூறிப்
போதக நம்பி என்பார் பூமியும் புணர்க என்பார்
தோதகம் ஆக எங்கும் சுண்ணம் மேல் சொரிந்து தண் என்
தாது உகு பிணையல் வீசிச் சாந்து கொண்டு எறிந்து நிற்பார்.
463

 

கொடையுளும் ஒருவன் கொல்லும் கூற்றினும் கொடிய வாள் போர்ப்
படையுளும் ஒருவன் என்று பயம் கெழு பனுவல் நுண் நூல்
நடையுளார் சொல்லிற்று எல்லாம் நம்பி சீவகன்கண் கண்டாம்
தொடையல் அம் கோதை என்று சொல்லுபு தொழுது நிற்பார்.
464

 

செம்மலைப் பயந்த நல் தாய் செய்தவம் உடையாள் என்பார்
எம் மலைத் தவம் செய்தாள் கொல் எய்துவம் யாமும் என்பார்
அம் முலை அமுதம் அன்னார் அகம் புலர்ந்து அமர்ந்து நோக்கித்
தம் உறு விழும வெம் நோய் தம் துணைக்கு உரைத்து நிற்பார்.
465

 

சினவுநர்க் கடந்த செல்வன் செம் மலர் அகலம் நாளைக்
கனவினில் அருளி வந்து காட்டி யாம் காண என்பார்
மனவு விரி அல்குலார் தம் மனத்தொடு மயங்கி ஒன்றும்
வினவுநர் இன்றி நின்று வேண்டுவ கூறுவாரும்.
466

 

விண் அகத்து உளர் கொல் மற்று இவ் வென்றி வேல் குருசில் ஒப்பார்
மண் அகத்து இவர்கள் ஒவ்வார் மழ களிறு அனைய தோன்றல்
பண் அகத்து உறையும் சொல்லார் நல் நலம் பருக வேண்டி
அண்ணலைத் தவத்தில் தந்தார் யார் கொலோ அளியர் என்பார்.
467

 

வட்டு உடைப் பொலிந்த தானை வள்ளலைக் கண்ட போழ்தே
பட்டு உடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் அடியைச் சூழ
அட்ட அரக்கு அனைய செவ்வாய் அணி நலம் கருகிக் காமக்
கட்டு அழல் எறிப்ப நின்றார் கை வளை கழல நின்றார்.
468

 

வார் செலச் செல்ல விம்மும் வனமுலை மகளிர் நோக்கி
ஏர் செலச் செல்ல ஏத்தித் தொழுது தோள் தூக்க இப்பால்
பார் செலச் செல்லச் சிந்திப் பைந்தொடி சொரிந்த நம்பன்
தேர் செலச் செல்லும் வீதி பீர் செலச் செல்லும் அன்றே.
469

 

வாள் முகத்து அலர்ந்த போலும் மழை மலர்த் தடங்கண் கோட்டித்
தோள் முதல் பசலை தீரத் தோன்றலைப் பருகுவார் போல்
நாள் முதல் பாசம் தட்ப நடுங்கினார் நிற்ப நில்லான்
கோள் முகப் புலியோடு ஒப்பான் கொழுநிதிப் புரிசை புக்கான்.
470

 

பொன் நுகம் புரவி பூட்டி விட்டு உடன் பந்தி புக்க
மன்னுக வென்றி என்று மணிவள்ளம் நிறைய ஆக்கி
இன்மதுப் பலியும் பூவும் சாந்தமும் விளக்கும் ஏந்தி
மின் உகு செம் பொன் கொட்டில் விளங்கு தேர் புக்கது அன்றே.
471

 

இட்ட உத்தரியம் மெல்லென்று இடை சுவல் வருத்த ஒல்கி
அட்ட மங்கலமும் ஏந்தி ஆயிரத்து எண்மர் ஈண்டிப்
பட்டமும் குழையும் மின்னப் பல்கலன் ஒலிப்பச் சூழ்ந்து
மட்டு அவிழ் கோதை மாதர் மைந்தனைக் கொண்டு புக்கார்.
472

 

தாய் உயர் மிக்க தந்தை வந்து எதிர் கொண்டு புக்குக்
காய் கதிர் மணி செய் வெள் வேல் காளையைக் காவல் ஓம்பி
ஆய் கதிர் உமிழும் பைம் பூண் ஆயிரச் செங் கணான்தன்
சேய் உயர் உலகம் எய்தி அன்னது ஓர் செல்வம் உற்றார்.
473
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework