களவழி நாற்பது

 

(பாட வேறுபாடுகள் @, %, & குறிகள் கொண்டு காட்டப்பட்டுள்ளன)

நாண்ஞாயி றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர்
வாண்மாய் குருதி களிறுழக்கத் - தாண்மாய்ந்து
முன்பசு@ லெல்லாங் குழம்பாகிப் பின்பகல்%
துப்புத் துகளிற் கெழூஉம் புனனாடான்
தப்பியா ரட்ட களத்து. 1
@முற்பகல் %பிற்பகல்

ஞாட்பினு ளெஞ்சிய ஞாலஞ்சேர் யானைக்கீழ்
போர்ப்பி லிடிமுரசி னூடுபோ மொண்குருதி
கார்ப்பெயல் பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ்
நீர்த்தூம்பு நீருமிழ்வ போன்ற புனனாடன்
ஆர்த்தம ரட்ட களத்து. 2

ஒழுக்குங் குருதி யுழக்கித் தளர்வார்
இழுக்குங் களிற்றுக்கோ டூன்றி யெழுவர்@
மழைக்குரன் மாமுரசின் மல்குநீர் நாடன்
பிழைத்தாரை யட்ட களத்து. 3
@ எழூஉம்

உருவக் கடுந்தேர் முருக்கிமற் றத்தேர்ப்
பரிதி சுமந்தெழுந்த யானை - யிருவிசும்பிற்
செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால்
புல்லாரை யட்ட களத்து. 4

தெரிகணை யெஃகந் திறந்தவர் யெல்லாம்
குருதி படிந்துண்ட காகம் - உருவிழந்து
குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால்
தப்பியா ரட்ட களத்து. 5

நானாற் றிசையும் பிணம்பிறங்க யானை
யடுக்குபு வேற்றிக் கிடந்த - இடித்துரறி
யங்கண் விசும்பி னுருமெறித் தெங்கும்
பெருமலை தூறெறிந்@ தற்றே யருமணிப்
பூணேந் தெழின்மார் பியறிண்டேர்ச் செம்பியன் தெவ்
வேந்தரை யட்ட களத்து. 6
@தூவெறிந்து

அஞ்சனக் குன்றேய்க்கும் யானை யமருழக்கி
இங்கு லிகக்குன்றே போற்றோன்றுஞ் - செங்கண்
வரிவரான் மீன்பிறழுங் காவிரி நாடன்
பொருநரை யட்ட களத்து. 7

யானைமேல் யானை நெரிதர வானாது
கண்ணேர் கடுங்கணை மெய்ம்மாய்ப்ப @ - எவ்வாயும்
எண்ணருங் குன்றிற் குரீஇயினம் போன்றவே
பண்ணா ரிடிமுரசிற் பாய்ப்புன னீர்நாடன்
நண்ணாரை யட்ட களத்து. 8
@ மெய்ம்மறைப்ப

மேலோரைக் கீழோர் குறுகிக் குறைத்திட்ட
காலார்சோ டற்ற கழற்கா லிருங்கடல்
ஊணில் சுறபிறழ்வ @ போன்ற புனனாடன்
நேராரை யட்ட களத்து. 9
@இருங்கடலுணீலச்சுறாப்பிறழ்வ

பல்கணை யெவ்வாயும் பாய்தலிற் செல்கலா
தொல்கி யுயங்குங் களிறெல்லாந் - தொல்சிறப்பிற்
செவ்வலங் குன்றம்போற் றோன்றும் புனனாடன்
தெவ்வரை யட்ட களத்து. 10

கழுமிய ஞாட்பினுண் மைந்திகந்தா ரிட்ட@
ஒழிமுரச மொண்குருதி யாடித் - தொழின்மடிந்து
கண்காணா யானை யுதைப்ப விழுமென
மங்குன் மழையி னிதிரு மதிராப்போர்ச்
செங்கண்மா லட்ட களத்து. 11
@மைந்திழந்தாரிட்ட

ஒவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந்
தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப்
பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவெ
காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக்
கூடாரை யட்ட களத்து. 12

நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர்
வரைபுரை யானைக்கை நூற - வரைமேல்
உருமெறி பாம்பிற் புரளுஞ் செருமொய்ம்பிற்
செஎய்பொரு தட்ட களத்து. 13

கவளங்கொள் யானையின் கைதுணிக்கப் பட்டுப்@
பவளஞ் சொரிதரு பைபோற் றிவளொளிய%
வொண்செங் குருதி யுமிழும் புனனாடன்
கொங்கரை யட்ட களத்து. 14
@கைகடுணிக்க %திகழொளிய

கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும்
புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன்
வினைபடு பள்ளிறிய் றோன்றும் செங்கட்
சினமால் பொருத களத்து. 15

பரும வினமாக் கடவித் தெரிமறவர்
ஊக்கி யெடுத்த வரவத்தி னார்ப்பஞ்சாக்
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன குன்றிவரும்
வேங்கை யிரும்புலி போன்ற புனனாடன்
வேந்தரை யட்ட களத்து. 16

ஆர்ப்பெழுந்த ஞாட்பினு ளாளா ளெதிர்த்தோடித்
தாக்கி யெறிதா வீழ்தரு மொண்குருதி
கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கைப் போன்றனவே@
ஆர்த்தம ரட்ட களத்து. 17
@விளக்குப்போன்றனவே

நளிந்த கடலுட் டிமிறிசை போலெங்கும்
விளிந்தார் பிணங்குருதி யீர்க்குந் - தெளிந்து
தடற்றிடங் கொள்வாட்@ டளையவிழுந் தார்ச்சே(ய்)
உடற்றியா ரட்ட களத்து. 18
@ தடற்றிலங்கொள்வாள்

இடைமருப்பின்விட்டெறிந்தவெஃகங்கான்@ மூழ்திக்
கடைமணி காண்வரத் தோற்றி% - நடைமெலிந்து
முக்கோட்ட போன்ற களிறெல்லா நீர்நாடன்
புக்கம ரட்ட களத்து. 19
@எஃகங்காழ் % தோன்றி

இரிசிறக ரீர்க்குப் பரப்பி யெருவை
குருதி பிணங்கவருந் தோற்றம் - அதிர்விலாச்@
சீர்முழாப் பண்ணமைப்பான் போன்ற புனனாடன்
நேராரை யட்ட களத்து. 20
@தோற்றந்திரலிலா

இணைவே லெழின்மருமத் திங்கப்புண் கூர்ந்து
கணையலைக் கொல்கிய யானை - துணையிலவாய்த்
தொல்வலி யாற்றித்@ துளங்கினவாய் மெல்ல
நிலங்கால் கவரு மலைபோன்ற செங்கட்
சினமால் பொருத களத்து. 21
@ தொல்வலியிற்றீர

இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல்
ஆடியல் யானைத் தடக்கை யொளிறுவாள்
ஓடா மறவர் துணிப்பத் துணிந்தவை
கோடுகொ ளொண்மதியை நக்கும்பரம் பொக்குமே
பாடா ரிடிமுரசிற் பாய்ப்புன னீர்நாடன்
கூடாரை யட்ட களத்து. 22

ஏற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து
நெய்த்தோர்ப் புனலு ணிவந்தகளிற் றுடம்பு
செக்கர்கொள் வானிற் கருங்கொண்மூப் போன்றவே
கொற்றவேற் றானைக் கொடித்திண்டோ ர்ச் செம்பியன்
செற்றாரை யட்ட களத்து. 23

திண்டோ ண் மறவ ரெறியத் திசைதோறும்
பைந்தலை பாரிற் புரள்பவை - நன்கெனைத்தும்
பெண்ணையந் தோட்டம் பெருவளி புக்கேற்ற
கண்ணார் கமழ்தெரியற் காவிரி நீர்நாடன்
நண்ணாரை யட்ட களத்து. 24

மலைகலங்கப் பாயு மலைபோ னிலைகொள்ளாக்
குஞ்சரம் பாயக் கொடி யெழுந்து பொங்குபு
வானந் துடைப்பன போன்ற புனனாடன்
மேவாரை யட்ட களத்து. 25

எவ்வாயு மோடி வயவர் துணித்திட்ட
கைவாயிற் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல்
ஐவாய் வயநாகங் கவ்வி விசும்பிவருஞ்
செவ்வா யுவணத்திற் றோன்றும் புனனாடன்
தெவ்வாரை யட்ட களத்து. 26

செஞ்சேற்றுட் செல்யானை சீறி மிதித்தலால்
ஒண்செங் குருதிகள் தொக்கீண்டி நின்றவை
பூநீர் வியன்றமிடாப்@ போன்ற புனனாடன்
மேவாரை யட்ட களத்து. 27
@பூவியன்ற நீர்மிடா

ஓடா மறவ ருருத்து மதஞ்செருக்கிப்
பீடுடை வாளார்@ பிறங்கிய ஞாட்பினுட்
கேடகத்தோ டற்ற தடக்கைகொண்% டோ டி
இகலன்வாய்த் துற்றிய& தோற்ற மயலார்க்குக்
கண்ணாடி காண்பாரிற் றோன்றும் புனனாடன்
நண்ணாரை யட்ட களத்து. 28
@வாளர் % ஒரி இகலனயா & வாய்துற்றிய

கடிகாவிற் காற்றுற் றெறிய வெடிபாட்டி
வீற்றுவீற் றோடு மயிலினம்போல் - நாற்றிசையும்
கேளி ரிழந்தா ரலறுபவே செங்கட்
சினமால் பொருத களத்து. 29

மடங்க வெறிந்து மலையுருட்டு நீர்போல்
தடங்கொண்ட வொண்குருதி கொள்களி றீர்க்கு
மடங்கா மறமொய்ம்பிற்@ சினமால்
அடங்காரை யட்ட களத்து. 30
@ மடங்கள் மறமொய்ம்பின்

ஓடா மறவ ரெறிய நுதல்பிளந்த
கோடேந்து கொல்களிற்றுக் கும்பத் தெழிலோடை
மின்னுக் கொடியின் மிளிரும் புனனாடன்
ஒன்னாரை யட்ட களத்து. 31

மையின்மா மேனி நிலமென்னு நல்லவள் [தீர்ந்த
செய்யது போர்த்தாள்போற் செவ்வந்தாள்@ - பொய்
பூந்தார் முரசிற் பொருபுன னீர்நாடன்
காய்ந்தாரை யட்ட களத்து. 32
@ செவ்வென்றாள்

பொய்கை யுடைந்து புனல்பாய்ந்த வாயெல்லா
நெய்த லிடையிடை வாளை பிறழ்வனபோல்
ஐதிலங் கெஃகி னவிரொளிவா டாயினவே
கொய்சுவன் மாவிற் கொடித்திண்டோ ர் செம்பியன்
தெவ்வரை யட்ட களத்து. 33

இணரிய ஞாட்பினு ளேற்றெழுந்த மைந்தர்
சுடரிலங் கெஃக மெறியச் சோர்ந் துக்க
குடர்கொண்டு@ வாங்குங் குறுநரி கந்தில்
தொடரொடு கோணாய் புரையு மடர்பைம்பூட்
சேய்பொரு தட்ட களத்து. 34
@ குடர் கொடு

செவ்வரைச் சென்னி யரிமானோ டவ்வரை
ஒல்கி யுருமிற் குடைந்தற்றான் - மல்கிக்
கரைகொண் றிழிதரூஉம் காவிரி நாடன்
உரைசா லுடம்பிடி மூழ்க வரசோ(டு)
அரசுவா வீழ்ந்த களத்து. 35

ஓஓ உவம னுறழ்வின்றி யொத்ததே
காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலா
ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன்
மேவாரை யட்ட களத்து. 36

அரசர் பிணங்கான்ற நெய்த்தோர் முரசொடு
முத்தடைக் கோட்ட களிறீர்ப்ப - எத்திசையும்
பெளவம் புணரம்பி போன்ற புனனாடன்
தெவ்வரை யட்ட களத்து. 37

பருமப் பணையெருத்திற் பல்யானை புண்கூர்ந்(து)
உருமெறி பாம்பிற் புரளுஞ் - செருமொய்ம்பிற்
பொன்னார மார்பிற் புனைசுழற்காற் செம்பியன்
துன்னாரை யட்ட களத்து. 38

மைந்துகால் யாத்து மயங்கிட ஞாட்பினுட்
புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை
பஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன்
வஞ்சிக்கோ வட்ட களத்து. 39

வெள்ளிவெண் ணாஞ்சிலான் ஞால முழுவனபோல்
எல்லாக் களிறு நிலஞ்சேர்ந்த - பல்வேற்
பணைமுழங்கு போர்த்தானைடச் செங்கட் சினமால்
கணைமாரி பெய்த களத்து. 40

வேனிறத் திங்க வயவரா லேறுண்டு
கானிலங் கொள்ளாக் கலங்கிச் செவிசாய்த்து
மாநிலங் கூறு மறைகேட்ப போன்றவே
பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன்
கூடாரை யட்ட களத்து.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework