முதுமொழிக் காஞ்சி
- விவரங்கள்
- மதுரைக் கூடலூர் கிழார்
- தாய்ப் பிரிவு: சங்க இலக்கியம்
- பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- சிறந்த பத்து
- அறிவுப்பத்து
- பழியாப் பத்து
- துவ்வாப் பத்து
- அல்ல பத்து
- இல்லைப் பத்து
- பொய்ப் பத்து
- எளிய பத்து
- நல்கூர்ந்த பத்து
- தண்டாப் பத்து
1. சிறந்த பத்து
1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை
2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்
3. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை
4. வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை
5. இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை
6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று
7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று
8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
9. செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று
10. முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று
2. அறிவுப்பத்து
11. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப
12. ஈரம் உடைமை ஈகையின் அறிப
13. சேரா நல்நட்(பு) உதவியின் அறிப
14. கற்றது உடைமை காட்சியின் அறிப
15. ஏற்ற முடைமை எதிர்கொளின் அறிப
16. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப
17. குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப
18. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப
19. அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப
20. சீருடை யாண்மை செய்கையின் அறிப
3. பழியாப் பத்து
21. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
யாப்பி லோரை இயல்குணம் பழியார்
22. மீப்பி லோரை மீக்குணம் பழியார்
23. பெருமை உடையதன் அருமை பழியார்
24. அருமை யுடையதன் பெருமை பழியார்
25. நிறையச் செய்யாக் குறைவினை பழியார்
26. முறையில் அரசர்நாட் டிருந்து பழியார்
27. செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்
28. அறியாத் தேசத்து ஆசாரம் பழியார்
29. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்
30. சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.
4. துவ்வாப் பத்து
31. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது
32. கழிதறு கண்மை பேடியின் துவ்வாது
33. நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது
34. பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது
35. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது
36. பொய்வே ளாண்மை புலைமையின் துவ்வாது
37. கொண்டுகண் மாறல் கொடுமையின் துவ்வாது
38. அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது
39. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது
40. தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது.
5. அல்ல பத்து
41. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நீரறிந்து ஒழுகாதான் தாரம் அல்லன்
42. தார(ம்)மா ணாதது வாழ்க்கை யன்று
43. ஈரலில் லாதது கிளைநட் பன்று
44. சோராக் கையன் சொன்மலை யல்லன்
45. நேரா நெஞ்சத்தோன் நட்டோ ன் அல்லன்
46. நேராமற் கற்றது கல்வி யன்று
47. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று
48. அறத்தாற்றின் ஈயாத(து) ஈனை யன்று
49. திறத்தாற்றின் நேர்லா ததுநோன் பன்று
50. மறுபிறப் பறியா ததுமூப் பன்று.
6. இல்லைப் பத்து
51. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
மக்கட் பேற்றின் பெறும்பே(று) இல்லை
52. ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை
53. வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை
54. வாயா விழைச்சின் தீவிழைச்சு இல்லை
55. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை
56. உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை
57. நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை
58. இசையின் பெரியதோர் எச்ச மில்லை
59. இரத்தலின் ஊஉங்கு இளிவரவு இல்லை
60. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை
7. பொய்ப் பத்து
61. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பேரறவி னோன்இனிது வாழா மைபொய்
62. பெருஞ்சீர் ஒன்றன் வெகுளியின் மைபொய்
63. கள்ளுண் போன்சோர்வு இன்மை பொய்
64. காலம்அறி யாதோன் கையுறல் பொய்
65. மேல்வரவு அறியாதோன் தற்காத் தல்பொய்
66. உறுவினை காய்வோன் உயர்வுவேண் டல்பொய்
67. சிறுமைநோ னாதோன் பெருமைவேண் டல்பொய்
68. பெருமைநோ னாதோன் சிறுமைவேண் டல்பொய்
69. பொருள்நசை வேட்கையோன் முறைசெயல் பொய்
70. வாலியன் அல்லாதோன் தவம்செய் தல்பொய்.
8. எளிய பத்து
71. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
புகழ்வெய் யோர்க்குப் புத்தேள்நா(டு) எளிது
72. உறழ்வெய் யோருக்கு உறுசெரு எளிது
73. ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை எளிது
74. குறளைவெய் யோர்க்கு மறைவிரி எளிது
75. துன்பம்வெய் யோர்க்கு இன்பம் எளிது
76. இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது
77. உண்டிவெய் யோர்க்குப் உறுபிணி எளிது
78. பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி எளிது
79. பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண் எளிது
80. சார்பு இலோர்க்கு உறுகொலை எளிது
9. நல்கூர்ந்த பத்து
81. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
முறையில் அரச(ன்) நாடு நல்கூர்ந் தன்று
82. மிகமூத்தோள் காமம் நல்கூர்ந் தன்று
83. செற்றுடன் உறவோனைச் சேர்தல்நல் கூர்ந்தன்று
84. பிணிகிடந்தோன் பெற்ற இன்பம்நல் கூர்ந்தன்று
85. தன்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று
86. முதிர்வுடை யோன்மேனி அணிநல் கூர்ந்தன்று
87. சொற்சொல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று
88. அகம்வறி யோன்நண்ணல் நல்கூர்ந் தன்று
89. உட்(கு)இல் வழிச்சினம் நல்கூர்ந் தன்று
90. நட்(பு)இல் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று.
10. தண்டாப் பத்து
91. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்
92. வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான்
93. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்
94. நிற்றல் வேண்டுவோன் தவஞ்செயல் தண்டான்
95. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்
96. மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான்
97. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்
98. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்
99. ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான்
100. காமம் வேண்டுவோன் குறிப்புச்சொல் தண்டான்.