பொதியை மலைச்சாரலில் வேளாண்குடி என்றொரு அழகான கிராமம் இருக்கிறது. அதற்கருகே, ஒரு சிறிய நதி ஓடுகிறது. நான்கு திசைகளையும் நோக்கினால், நீல மலைச் சிகரங்களும் குன்றுகளும் தோன்றும். ஊரெங்கும் தோப்புக்கள். எனவே, காலையில் எழுந்தால் மாலைவரை எப்போதும் ரமணீயமான பட்சிகளின் ஒலிகள் கேட்டுக் கொண்டிருக்கும்.

இந்த ஊரில் மற்ற வீதிகளின்றும் ஒதுக்கமாக, மேற்றிசையில், நதிக்கருகே ஓர் அக்ரஹாரம் அதாவது பிராமணர் வீதி, இருந்தது. அந்த அக்ரஹாரத்தில் குழந்தைகளெல்லாம் எப்போதும் பட்சிகளின் நாதங்களுக்கிடையே வளர்ந்தது பற்றியோ, வேறு எந்தக் காரணத்தாலோ, மிகவும் இனிய குரலுடையனவாயிருந்தன. அக்குழந்தைகள்-விசேஷமாகப் பெண் குழந்தைகள்- பேசும்போது சாதாரணமாக நம்மைப் போலவே, மனுஷத் தமிழ் பாஷையே பேசுமெனினும், அந்த பாஷையைக் குயில்கள் போலவும் கிளிகள் போலவும் நாகணவாய்ப் புட்கள் போலவும் அற்புதமான குரலில் பேசின.

அந்த அக்ரஹாரத்தின் மேலோரத்திலே கிழக்கைப் பார்த்த ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்தது. கோயிலுக்கெதிரே புல் ஏராளமாக வளர்ந்து கிடக்கும். அங்கு பசுக்களும் ஒரு சில கழுதைகளும் மேய்ந்து கொண்டிருக்கும். அல்லது, சில பசுக்கள் கிருஷ்ணன் சந்நிதிக்கெதிரே படுத்துக்கொண்டு சுவாமியை நோக்கி ஜபம் பண்ணிக் கொண்டிருப்பது போல் அசைபோட்டுக் கொண்டிருக்கும். அவற்றின்மீது காக்கைகள் வந்து உண்ணிகளைக் கொத்தி இன்புறுத்தும். சில சமயங்களில் கண்ணோரத்தைக் கொத்துவது போல் விளையாடி மாட்டுக்குப் பொழுது போகச் செய்துகொண்டிருக்கும். இதையெல்லாம் மரக் கிளைகளின் மீதுள்ள பட்சிகள் பார்த்து வியப்புரை கூறிக்கொண்டிருக்கும்.

அன்புக்கும் அமைதிக்கும் சாந்திக்கும் அழகுக்கும் இலக்கியமாகத் திகழ்ந்தது அவ்வேளாண்குடியூர் அக்ரஹாரம். அங்கு, பெண்மக்கள் எல்லாரும் மகாசுந்தரிகள். ஆண்மக்கள் மிகவும் நல்ல குணமுடையோர், ஆனால் பெரும்பாலும் பரம ஏழைகள். பூர்வீக சொத்து, நிலம், தோட்டம் முதலியன-எல்லோருக்கும் சிறிது சிறிதுண்டு. ஆனால், அதிலிருந்து வரும் வரும்படி வெறுமே போஜனத்துக்குக் கூடக் காணாது. இதில் வேஷ்டிகள், புடவைகள், ரவிக்கைகள், பாவாடைகள், குடுமிக் கலியாணம், பூணூல் கலியாணம், விவாகங்கள், ருது ஸ்நானங்கள், ருதுசாந்திகள், சீமந்தங்கள், பல பல பண்டிகைகள், உற்சவங்கள், விழாக்கள் என்பன ஓயாமல் நிகழுமாதலால், அவ்வூர் கிருஹஸ்தர்கள், மேன்மேலும் தம் நில முதலியன சுருங்கவும் வறுமை மேன்மேலும் வளரவும், ஏக்கம் பிடித்து வாழ்ந்து வந்தனர். ஆனால், வயது முதிர்ந்தோரிடையே இத்தனை ஏக்கமும் மனக்குறைவும் குடிகொண்டிருந்தன என்ற செய்தி அவ்வூர்க் குழந்தைகளுக்குத் தெரியாது; பட்சிகளுக்குந் தெரியாது, கோயிலெதிரே எப்போதும் செழுமையாக வளர்ந்த புற்றரைகளில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கும், கழுதைகளுக்கும் தெரியாது. இவை எப்போதும் மகிழ்ச்சியிலும், ஆரவாரத்திலும், பாட்டிலும், ஆனந்தக் களியிலும் மூழ்கிக் கிடந்தன.

இந்த அக்ரஹாரத்தில் மற்றெல்லா பிராமணர்களைக் காட்டிலும் அதிக ஏழையான மகாலிங்கையர் என்பவர் ஒருவர் இருந்தார். அவருடைய குடும்பம் மிகப் பெரிது. வீடு மிகச் சிறிது. அவருடைய கிழத் தாய் தந்தையர் இருவர்; விதவையான தங்கை ஒருத்தி; சுமார் முப்பது வயதுள்ள மனைவி ஒருத்தி; அவளுக்கு ஐந்து பெண் குழந்தைகள். ஆறாவது பிரசவம் நெருங்கிய சமயம்.

இத்தனை பேருக்கும் ஆகாரம் வேண்டுமே? மகாலிங்கையருக்கு பூர்வ சொத்துக் கிடையாது. இளமையும், ஊக்கமும், எப்படியேனும் பணம் சம்பாதிக்கலாமென்ற நம்பிக்கையும் அவரை விட்டுப் பிரிந்து நெடுங்காலமாய் விட்டது. அவருக்கு சுமார் நாற்பது வயதுக்கு மேலாகவில்லை. அதற்குள்ளே குழந்தைகளின் தொகை வலியாலும், மனைவியின் வாய் வலியாலும், தாய் தந்தையரின் நோய் வலியாலும், விதவைத் தங்கையின் இளமை வலியாலும் மகாலிங்கையர் மனத்துயர் பெருகித் தலைமயிரெல்லாம் அன்னத் தூவிபோல் நரைத்துக் கூனிக்குறுகி மிகவும் மெலிந்து, கன்னங்கள் ஒட்டிக் கண்கள் குழி வீழ்ந்து முகம் சுருங்கித் திரை கொண்டு, இளமையிலே பாராட்டிய சிங்கார ரஸமிகுதியால் மேகநோய் கொண்டு, முகத்திலும் முதுகிலும் தோட்களிலும் பரந்த மேகப்படைகளுடையவராய் விளங்கினார்.

இப்படியிருக்கையில் ஒரு மார்கழி மாதத்திரவில், வானம் மைபோல் இருண்டிருந்தது. நட்சத்திரங்களெவையும் கண்ணுக்குப் புலப்படவில்லை. கிராமத்தாரெல்லாரும் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கிக் கிடந்தார்கள். வெளியே பெருமழையும் சூறைக் காற்றும் மிகவும் உக்ரமாக வீசத் தொடங்கின. இரண்டு கணத்துக்கு ஒரு முறை, உலகம் தகர்ந்து விடச் செய்வன போன்ற இடியோசைகள் செவிப்பட்டன. மரங்கள் ஒடிந்து விழும் ஒலி கேட்டது. தோப்புகளெல்லாம் சூறைபோகும் ஒலி பிறந்தது. பக்கத்துக் குன்றுகள் ஒன்றுக்கொன்று மோதிச் சிதறுவன போன்ற ஓசை தோன்றிற்று.

அக்ரஹாரத்தில் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கியிருந்த ஜனங்கள் இன்றுடன் உலகம் முடிந்து போய்விட்டது என்று தம் மனதில் நிச்சயப்படுத்திக்கொண்டார்கள். குழந்தைகளெல்லாம் பயமிகுதியால் கோ கோ என்று அலறின. மாதர்கள் புலம்பினர். ஆண்மக்கள் விம்மினர். சூறைக்காற்றின் ஆர்ப்பு மிகுதிப்பட்டது.

இப்படியிருக்கையில் பூகம்பம் தொடங்கிற்று. அந்த அக்ரஹாரத்திலுள்ள வீடுகளெல்லாம் பழைய வீடுகள். அத்தனை வீடுகளும் சிதறிப் போயின. அத்தனை ஜனங்களும் மடிந்து போயினர்.

மகாலிங்கையர் வீட்டு வாயிற் புறத்திலிருந்த குச்சிலொன்று மாத்திரம் விழவில்லை. வீட்டு ரேழியில் கூடியிருந்த கிழவர், கிழவி, மகாலிங்கையர், அவருடைய ஐந்து பெண் குழந்தைகள் - எல்லார்மீதும் வீடு விழுந்து, அவர்களத்தனை பேரும் பிணங்களாகக் கிடந்தனர். வாயிற் குச்சிலில் பிரசவ வேதனையிலிருந்த மகாலிங்கயைருடைய மனைவியும் அவளுக்குத் துணையாக அவருடைய விதவைத் தங்கையுமிருந்தனர்.

இரவு சுமார் ஏழு மணிக்குத் தொடங்கிய சூறைக்காற்றும், மழையும், காலை நான்கு மணி சுமாருக்கு, பூகம்பத்துடன் முடிவுபெற்றன. அரைமணி நேரத்துக்கெல்லாம் உலகம் அமைதி பெற்று விட்டது. மறுநாள் பொழுது விடிந்தது. விதவைத் தங்கை-அவள் பெயர் விசாலாட்சி-வெளியே வந்து பார்த்தாள்.

எல்லா வீடுகளும் விழுந்திருந்தன. எங்கும் மனிதருடல்களும், மிருக பட்சிகளின் உடம்புகளும் பிரேதங்களாக விழுந்து கிடந்தன. முழுக்காட்சியும் அவள் பார்க்க நேரமில்லை. காற்றினாலும் மழையினாலும் மோதுண்டு வீதியில் வந்து கிடந்த பிரேதங்களை மாத்திரமே அவள் கண்டாள். இடிந்த வீடுகளுக்குள்ளே செத்துக் கிடக்கும் ஜனங்களை அவள் காணவில்லை. எனினும், தன் வீட்டில் எல்லாரும் செத்தது அவளுக்குத் தெரியுமாதலால், மற்ற வீடுகளிலும் அப்படியே நடந்திருக்க வேண்டுமென்றும் அதுகொண்டே தெருவில் ஆட்களைக் காணவில்லையென்றும் அவள் ஊகித்துக் கொண்டாள். அப்பொழுது மீண்டும் அவளுடைய மனதில், சென்ற பயங்கரமான இரவில் நிகழ்ந்த பயங்கரமான செய்திகள் நினைப்புறலாயின. பூகம்பம் தோன்றினவுடனே மகாலிங்கையருடைய தந்தையாகிய கிழவர், ''ஐயையோ, பூமி ஆடுகிறதே! நாமெல்லாரும் வாயிற்புறத்திலுள்ள குச்சிலுக்குப் போய் விடுவோம். அதுதான் இவ்வீட்டில் சற்றே உறுதியான இடம். என்னை அங்கே கொண்டு விடுங்கள்'' என்று அலறினார். அந்தச் சத்தம் மாத்திரம் விசாலாட்சியின் செவியிற்பட்டது. அப்புறம் நடந்த பேச்சொன்றும் அவள் செவியிற் படவில்லை. வாயிற் குச்சிலுக்குள் வெளித் திண்ணை வழியாகத்தான் புகலாம். வீட்டுக்குள்ளிருந்தபடியே அங்குவர வழியில்லை. எனிலும், ஒரு சாளரப் பொந்து வழியாக அந்தக் கிழவருடைய பேரோலம் மாத்திரம் புயற் காற்றொலியையும் மிஞ்சி அவளுடைய செவியிற்பட்டது.

ஆனால், 'அங்ஙனம் அவர்கள் குச்சிலுக்குள் வருவது மாத்திரம் சாத்தியமில்லை' யென்பதை அவள் உடனே ஊகித்துக் கொண்டாள். ஏனெனில், உள்ளேயிருந்தவர்கள் வீட்டு வாயிற்கதவைத் திறந்தன்றோ, திண்ணையிலேறி அதன் வழியாகக் குச்சிலுக்குள் வரவேண்டும்? வாயிற்கதவைத் திறந்த மாத்திரத்திலே சப்த மேகங்களும், ஊழிக்காற்றும் வீட்டுக்குள் புகுந்து விடுமன்றோ? ஆதலால், அவர்கள் வெளியேற வில்லையென்று நினைத்துக் கொண்டாள். ஓரிரண்டு கணங்களில் திடீரென்று உள் வீட¦ல்லாம் இடிந்து விழுந்த ஒலியும், அங்கிருந்தோர் எல்லாம் கூடியலறிய பேரொலியும், அவள் செவியிற்பட்டன. எல்லோரும் செத்தார்கள் என்று நிச்சயித்துக் கொண்டாள். தானிருந்த குச்சிலும் விழுமென்று அவள் மிகவும் எதிர்பார்த்தாள். அது விழவில்லை. அதற்குள்ளே பூகம்பம் நின்று போய்விட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் புயற்காற்றும் மழையும் அடங்கிப் போயின.

இச்செய்திகளையெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டு விசாலாட்சி தன்னைச் சூழ இடிந்து கிடக்கும் வீடுகளையும் ஒடிந்து கிடக்கும் மரங்களையும் பார்த்து நிற்கையிலே, குச்சிலுக்குள்ளிருந்து ''குவா!குவா!'' என்ற சத்தம் வந்தது. உள்ளே போய்ப் பார்த்தாள். அண்ணன் மனைவியாகிய கோமதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து கிடந்தது. விசாலாட்சி அதற்கு வேண்டிய சிகிச்சைகளெல்லாம் செய்து கொண்டிருக்கையில், கோமதிக்கு மரணாவஸ்தை நேர்ந்துவிட்டது. அவள் சாகும்போது:-''விசாலாட்சி!விசாலாட்சி! நான் இரண்டு நிமிஷங்களுக்கு மேல் உயிருடனிருக்க மாட்டேன். என் பிராணன் போகு முன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன் பிராணன் உள்ளவரை மறந்து போகாதே! முதலாவது, நீ விவாகம் செய்து கொள். விதவா விவாகம் செய்யத்தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால், ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடியவேண்டிய அவசியமில்லை. ஆதலால், நீ ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாதத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக, நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு. இரண்டாவது, நீயுள்ளவரை என் குழந்தையைக் காப்பாற்று. அதற்கு சந்திரிகை என்று பெயர் வை'' என்றாள்.

விசாலாட்சி 'சரி' என்றாள். கோமதியின் உயிர் பரலோகஞ் சென்று விட்டது.

Add a comment


சென்ற அத்தியாயத்தில் கூறிய செய்திகள் நிகழ்ந்து சரியான மூன்று வருஷங்களாயின. 1904-ஆம் வருஷத்தின் இறுதி நடைபெற்றது. அப்பொழுது சென்னைப் பட்டணத்தில் 'சுதேசமித்திரன்' பத்திராதிபராகிய ஜீ.சுப்பிரமணிய அய்யர் சில தினங்களுக்கப்பால் பம்பாயில் நடைபெறப் போகிற 'காங்கிரஸ்' என்ற பாரத ஜன சபைக்கொரு பிரதிநிதியாகச் செல்ல வேண்டுமென்ற கருத்துடன் யாத்திரைக்கு வேண்டிய உடுப்புகள் தின்பண்டங்கள் முதலியன தயார் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் திருவல்லிக்கேணி வீரராகவ முதலித் தெருவில் ஜீ.சுப்பிரமணிய அய்யர் மகா கீர்த்தி பெற்று விளங்கினார். அவருக்குக் கொடிய ரோகமொன்றினால் உடம்பெல்லாம் முகமெல்லாம் சிதைந்து முள்சிரங்குகள் புறப்பட்டிருந்தன. இருந்தாலும் நிகரற்ற மனோ தைரியத்துடன் அவர் தேசப் பொதுக் காரியங்களை நடத்தி வந்தார். மேற்கூறிய 1904 டிசம்பர் மாதத்திடையே ஒரு நாள் காலையில் அவர் தம் வீட்டு மேடையின் மேல் தம்முடைய விஸ்தாரமான புத்தகசாலையினருகே ஒரு சாய் நாற்காலியின் மீது சாய்ந்து கொண்டு பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார்.

அவர் முன்னே ஒரு சுமங்கலிப் பெண்-அவருடைய இளைய மகள் ஒரு பிரமாண்டமான ஊறுகாய்ப் பரணியைக் கொண்டு வைத்தாள்.

''இதில் என்னம்மா, வைத்திருக்கிறாய்?'' என்று அய்யர் கேட்டார்.

''நெய்யிலே பொரித்த எலுமிச்சங்காய் ஊறுகாய்; நல்ல காரம் போட்டது'' என்று மகள் சொன்னாள்.

''இதையெல்லாம் எப்படிச் சுமந்து கொண்டு போகப் போகிறோம்? அந்த வேலைக்காரனோ பெரிய குருட்டு முண்டம்'' என்று அய்யர் முணுமுணுத்தார்.

இதற்குள், மேடையைவிட்டுக் கீழே இறங்கிச் சென்ற மகள் திரும்பி வந்து, ''அப்பா, வாயிலிலே ஒரு பிராமண விதவை ஒரு சிறு குழந்தையுடன் வந்து நிற்கிறாள். ஏதோ அவசரகாரிய நிமித்தமாக உம்மை உடனே பார்க்க வேண்டுமென்று சொல்லுகிறாள்'' என்றாள்.

''அவளுக்கு எத்தனை வயதிருக்கும்?'' என்று ஜீ.சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

''இருபது வயதிருக்கலாமென்று தோன்றுகிறது'' என்று மகள் சொன்னாள்.

''சரி, ஒரு நாற்காலியைக் கொணர்ந்து என் எதிரே போடு. அந்தப் பெண்ணை வரச்சொல்'' என்று அய்யர் சொன்னார்.

மகள் அங்ஙனமே ஒரு நாற்காலி எடுத்துக்கொண்டு வந்து அவரெதிரே போட்டாள். அப்பால் கீழே சென்றாள். சில கணங்களுக்குள்ளே, நம்முடைய விசாலாட்சி குழந்தை சந்திரிகையுடன் அந்த மேடைக்கு வந்து ஜீ.சுப்பிரமணிய அய்யருக்கெதிரே போட்டிருந்த நாற்காலியின் மேல் உட்கார்ந்தாள்.

எந்த விசாலாட்சி? சென்ற அத்தியாத்தில் பூகம்பத்திலே தப்பிப் பிழைத்த விசாலாட்சி. அங்ஙனமே பூகம்பத்தில் பிழைத்த சந்திரிகை என்ற குழந்தையுடன் வந்து ஜீ. சுப்பிரமணிய அய்யர் முடியசைப்பால் உணர்த்திய குறிப்பின்படி, அவரெதிரே ஆசனத்தில் அமர்ந்தாள்.

''எந்த ஊரம்மா?'' என்று அய்யர் கேட்டார்.

''பொதியை மலைச்சாரலில் குற்றாலத்துக்கருகே வேளாண்குடி என்ற கிராமம்'' என்று விசாலாட்சி சொன்னாள்.

''ஓஹோஹோ! மூன்று வருஷங்களுக்கு முன்பு ஏறக்குறைய இதே மாசத்தில் கிராமத்தில், சூத்திரத் தெருக்களெல்லாம் தப்பிப் பிழைக்க அக்ரஹாரம் மாத்திரம் பூகம்பத்தில் அழிந்து போனதாகக் கேள்விப்பட்டேன். அதே வேளாண்குடிதானா?'' என்று அய்யர் கேட்டார்.

விசாலாட்சி ''ஆம்'' என்றாள்.

''நீ மிகவும் யௌவனமுடையவளாகவும் அழகுடையவளாகவும் இருக்கிறாயே! உனக்கு இந்தக் கைம்பெண் நிலைமை நேர்ந்து எத்தனை காலமாயிற்று?'' என்று அய்யர் கேட்டார்.

''பதினைந்து வருஷங்களாயின'' என்று விசாலாட்சி சொன்னாள்.

''உனக்கு இப்போது எத்தனை வயது?'' என்று அய்யர் கேட்டார்.

''இருபத்தைந்து'' என்று விசாலாட்சி சொன்னாள்.

''பத்து வயதில் கன்னிப் பருவத்தில் விதவையாய் விட்டாயா?'' என்று அய்யர் கேட்டார்.

''ஆம்'' என்று விசாலாட்சி சொன்னாள்.

அதைக் கேட்டவுடனே தமது சொந்த மகளருத்தி இளம் பிராயத்திலே விதவையானதும், பிறகு தாம் அவளுக்கு பம்பாயிலே சென்று தென்னாட்டு வைதிக பிராமணரொருவருக்கு விவாகம் செய்து கொடுத்தும், அம் மகள் தன் கணவனுடன் நீடு சுகித்து வாழும் பாக்கியம் பெறாமல் மிக விரைவிலே மடிந்ததும், தம்முடைய தர்ம பத்தினி உயிர் துறந்ததும்-ஆகிய இச்செய்திகளெல்லாம் ஜீ.சுப்பிரமணிய அய்யரின் ஞாபகத்துக்கு வர, அப்போது, சிங்கத்துக்கும் இடிக்கும் அஞ்சாத அவருடைய வீர நெஞ்சம் இளகி, அவர் பச்சைக் குழந்தை போல் விம்மி விம்மி அழத் தலைப்பட்டார். சில கணங்களுக்குள்ளே தம்மைத் தாம் தேற்றிக்கொண்டு, ஜீ.சுப்பிரமணிய அய்யர் விசாலாட்சியை நோக்கி, ''நீ இங்கே வந்ததின் நோக்கம் யாது?'' என்று கேட்டார்.

''என்னைத் தக்க கணவனொருவனுக்கு வாழ்க்கைப்படுத்திக் கொடுக்க வேண்டும். என் கையில் ஒரு கொழும்புக் காசுகூடக் கிடையாது. ஆதலால், என் கணவன் பணமுடையவனில்லாவிட்டாலும் நல்ல படிப்பும், மாதந்தோறும் கொஞ்சம் பொருள் சம்பாதிக்கும் திறமும் உடையவனாக இருக்க வேண்டும். இந்தக் குழந்தையும் என்னோடுதான் இருக்கும்'' என்றாள்.

''இந்த குழந்தை ஏது?'' என்று ஜீ.சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

''இது என் தமையனாரின் குழந்தை. வேளாண்குடி அக்ரஹாரம் முழுமையும் பூகம்பத்தில் அழிந்தபோது, நானும் இக்குழந்தையின் தாயும் மாத்திரம் மழைக்கும் காற்றுக்கும் பூகம்பத்துக்கும் இரையாகாமல் உயிர் தப்பினோம். பூகம்பமும் புயற் காற்றும் பெருமழையும் அடங்கிச் சிறிது நேரத்துக்கப்பால் இக்குழந்தை பிறந்தது. இதைப் பெறும் கடமை தீர்ந்தவுடன் தாயும் பரலோகம் போய் விட்டாள். சாகும் போது இதன் காவலை என் மீது சுமத்திக் கட்டளையிட்டாள்'' என்று விசாலாட்சி சொன்னாள்.

''இந்த மூன்று வருஷங்களாக நீ ஆகாரத்துக்கு என்ன செய்கிறாய்?'' என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

''செம்புப் பிச்சை; உவாதானமெடுத்து வயிறு வளர்த்து இந்தக் குழந்தையையும் காப்பாற்றிக் கொண்டு வருகிறேன்'' என்றாள்.

ஜீ.சுப்பிரமணிய அய்யர் உடனே தம்முடைய கைப்பெட்டியைத் திறந்து நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து விசாலாட்சி கையில் கொடுத்தார். விசாலாட்சி கையில் கொடுத்தார். விசாலாட்சி அதனை எழுந்து நின்று வாங்கி, இரண்டு கண்களிலும் ஒற்றிக்கொண்டு, தன் புடவைத் தலைப்பில் முடித்து இடுப்பிலே சொருகிக் கொண்டாள்.

''சரி, அம்மா, நீ போய் வா'' என்று ஜீ.சுப்பிரமணிய அய்யர் சொன்னார். அப்போது விசாலாட்சி சொல்லுகிறாள்:- ''ஐயா நான் தங்களைப் பிதா ஸ்தானமாக பாவித்துத் தங்களிடம் பணம் வாங்க உடம்பட்டேன். எனினும், நான் இங்கு வந்தது தங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு போவதற்கன்று என்பதைத் தாங்கள் மறக்கக்கூடாது; கணவனை வேண்டி உங்களிடம் வந்தேன்'' என்றாள்.

அது கேட்டு ஜீ.சுப்பிரமணிய அய்யர்:-''அந்தக் காரியம் என்னால் செய்து கொடுக்க முடியாது'' என்றார்.

''தங்களைத் தவிர எனக்கு வேறு புகலுமில்லை'' என்று விசாலாட்சி வற்புறுத்தினாள்.

''என்னால் சாத்தியமில்லையே! நான் என்ன செய்வேன்?'' என்றார் அய்யர்.

''நீங்கள் தயவு வைத்தால் சாத்தியப்படும்'' என்று விசாலாட்சி சொன்னாள்.

''உன்னிடம் நல்லெண்ணமில்லாமலா, நீ கேட்காமலே உனக்கு நூறு ரூபா கொடுத்தேன்?'' என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

''அவ்வளவு தயவு போதாது. இன்னும் அதிக தயவு செலுத்த வேண்டும்'' என்று விசாலாட்சி மன்றாடினாள்.

ஜீ.சுப்பிரமணிய அய்யர் தலையைச் சொரிந்தார். சிலகணங்களுக்கப்பால் விசாலாட்சியை நோக்கிச் சொல்லுகிறார்:- ''ராஜமஹேந்திரபுரத்தில் என்னுடைய சிநேகிதர் ஒருவர் இருக்கிறார். அவருடைய பெயர் வீரேசலிங்கம் பந்துலு, அவர் விதவைகளுக்கு விவாகம் செய்து வைப்பதில் மிகவும் சிரத்தையுடன் உழைத்து வருகிறார். உன் வசம் ஒரு கடிதம் எழுதிக் கொடுக்கிறேன். அதை அவரிடத்தில் கொண்டு கொடு. அவர் உனக்கு வேண்டிய சௌகரியம் செய்து கொடுப்பார்'' என்றார்.

''சரி'' என்றாள் விசாலாட்சி.

உடனே, ஜீ.சுப்பிரமணிய அய்யர் தம்முடைய மேஜையின் மேல் வைத்திருந்த மணியைக் குலுக்கினார். கீழேயிருந்து அவருடைய மகள் வந்து, ''என்ன வேண்டுமப்பா?'' என்று கேட்டாள்.

''அந்த வேலைக்காரப் பயல் இன்னும் வரவில்லையோ?'' என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் உறுமினார்.

''அவன் பட்டணத்துக்கன்றோ போயிருக்கிறான், ஸ்மித் ஷாப்பிலே போய் மருந்து வாங்கிக் கொண்டு வர? இனி அவன் பன்னிரண்டு மணிக்கு மேலேதான் வருவான். உமக்கென்ன வேண்டும்?'' என்றாள்.

''என்னுடைய மேஜை மேலே, பேனா மைக்கூடு வைத்திருக்கிறேன். மேஜை திறந்துதான் இருக்கிறது. அதற்குள்ளே வலப்பக்கத்து அறையில் கடிதமெழுதுந் தாளும் உறைகளும் கிடக்கின்றன. ஒரு தாளும் ஒரு உறையும் கொண்டு வா. மையத்தும் தாளையும் எடுத்து வா'' என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் சொன்னார்.

அவர் வேண்டிய சாமான்களையெல்லாம் மகள் கொண்டு வந்து கொடுத்தாள். ஜீ.சுப்பிரமணிய அய்யர் ஒரு கடிதமெழுதி உறைக்குள்ளே போட்டு, அதை மகளிடம் கொடுத்து ''உறையை சரியாக ஒட்டிக் கொண்டு வா'' என்றார். அவள் அதை ஒட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள். கொடுத்துவிட்டு, மகள் மறுபடி பேனாவையும், மைக்கூட்டையும் மையத்தும் தாளையும் கொண்டு மேஜையில் வைத்துவிட்டுக் கீழே சென்றுவிட்டாள். ஜீ.சுப்பிரமணிய அய்யர் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டே விசாலாட்சியை நோக்கி, ''உனக்குத் தெலுங்கு தெரியுமா?'' என்று கேட்டார். ''தெரியும்'' என்றாள் விசாலாட்சி. ''எங்கே படித்தாய்?'' என்று அய்யர் கேட்டார்.

''எங்களூரில் நானிருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தெலுங்குப் பிராமணரொருவர் இருந்தார். நான் சிறு குழந்தைப் பிராய முதலாகவே அந்தக் குடும்பத்தாருடன் மிகவும் நெருக்கமாக பழகிக் கொண்டு வந்தபடியால் எனக்குத் தெலுங்கு பாஷை தெலுங்கர்களைப் போலவே பேச வரும்'' என்றாள்.

''சரி, உனக்குக் கூடிய சீக்கிரத்தில் நல்ல மணமகனுடன் விவாகம் நடைபெறும். நீங்கள் தம்பதிகளிருவரும் நெடுங்காலம் இன்புற்று வாழக் கடவீர்'' என்று சொல்லி, அய்யர் அவளிடம் காகிதத்தைக் கொடுத்தார். அவள் அக்கடித்தை வாங்கி கண்ணிலே ஒற்றிக்கொண்டு மடியில் வைத்துக் கட்டிக் கொண்டாள். பிறகு ஜீ.சுப்பிரமணிய அய்யரை நோக்கி சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிவிட்டு, அவரிடம் விடை பெற்றுக் கொண்டு, குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றனள். அக்குழந்தையும் ஜீ. சுப்பிரமணிய அய்யரை நோக்கிப் புன்னகை செய்து கொண்டே போயிற்று.

Add a comment


மோட்டார் வண்டியிலிருந்து டிப்டி கலெக்டர் கோபாலய்யங்காரைத் தக்க உபசார வார்த்தைகளுடன் கைகொடுத்தழைத்து வந்து வீரேசலிங்கம் பந்துலு வீட்டுக்குள் தமது படிப்பறையில் நாற்காலியில் உட்கார்த்தி காபி கொணர்ந்து கொடுத்தார். நெய்த் தேங்குழல் நான்கைத் தின்று, ஒரு பெரிய வெள்ளி ஸ்தாலி நிறையக் காபியும் குடித்துவிட்டு, கோபாலய்யங்கார் ''ஹோ'' என்று ஏப்பமிட்டுச் சாய்வு நாற்காலியின் மீது சாய்ந்து கொண்டார். அவரிடம் வீரேசலிங்கம் பந்துலு ஒரு வெற்றிலைத் தட்டு நிறைய வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வாசனைத் திரவியங்களுடன் கொண்டு வைத்தார். அது முழுதையும் அய்யங்கார் மென்று மென்று முக்கால்மணி நேரத்தில் ஹதம் பண்ணிவிட்டார்.

அப்பால் பந்துலு அவரிடம் ஒரு தெலுங்கு பத்திரிகையை நீட்டினார். அவர் அதை ஆதிமுதல் அந்தம் வரை, விளம்பரங்களுட்பட, ஒரு வரிகூட மிச்சமில்லாமல் வாசித்து முடித்தார். கோபாலய்யங்கார் இங்கிலீஷ், சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு நான்கு பாஷைகளிலும் உயர்ந்த பயிற்சியுடையவர். இவர் தெலுங்கு ஜில்லாக்களில் சில வருஷங்களில் வேலை பார்த்த சமயத்தில் தெலுங்கு பாஷையைத் தன் தாய் மொழிக்கு நிகராகப் பயின்று கொண்டார்.

இவர் பத்திரிகை வாசித்து முடித்தபின், இருவரும் வீட்டுக் கொல்லையிலே போய்ச் சிறிது நேரம் உலாவிக் கொண்டிருந்தனர்; பிறகு ஸ்நானம் பண்ணினார்கள்; போஜனம் பண்ண உட்கார்ந்தார்கள்.

தேவலோகத்து விருந்து போன்ற சமையல் பக்குவம். வீரேசலிங்கம் பந்துலுக்கு மூர்ச்சை போடத் தெரிந்தது. இத்தனை ருசியான உணவை அவர் தம்முடைய ஜன்மத்தில் உண்டதில்லை. கனவில் கண்டதில்லை. கற்பனையில் எட்டினதில்லை. தின்னத் தின்னத் தின்ன ருசி தெவிட்டவேயில்லை. கோபாலய்யங்காருடைய முகத்தைப் பந்துலு ஒரு முறை திரும்பிப் பார்த்தார். பந்துலுவின் முகத்தை அய்யங்கார் ஒரு முறை திரும்பிப் பார்த்தார்.

பந்துலுவின் மனைவி பரிமாறிக் கொண்டிருந்தாள்.

''யாருடைய சமையல் தெரியுமா?'' என்று பந்துலுவின் மனைவி கேட்டாள். ''காலையில் வந்தாளே, அந்தப் பெண்ணுடைய சமையலா?'' என்றார் பந்துலு.

''ஆம்'' என்றாள் பந்துலுவின் மனைவி.

''அந்தப் பெண்ணை இங்கு சற்றே வரச்சொல். நம்முடைய கோபாலய்யங்கார் அவளுடைய முகத்தின் அழகையும் அவள் சொல்லின் அழகையும் அவளறிவின் அழகையும் பார்க்க வேண்டும். சமையலழகை மாத்திரம் பார்த்தால் போதுமா? அந்த மகா சுந்தரியின் சகல சௌந்தர்யங்களையும் பார்க்க வேண்டாமா?'' என்றார் வீரேசலிங்கம் பந்துலு.

''அவளுக்கு பலமான தலைநோவு. சமையல் சிரமம் யாத்திரை சிரமம் எல்லாம் சேர்ந்து அவளுக்குத் தலைநோவு உண்டாக்கிவிட்டன. இராத்திரி அவளுக்கு உடம்பு நேராய் விடும். அப்போது அய்யங்கார் அவளைப் பார்க்கலாம்'' என்று பந்துலுவின் மனைவி சொன்னாள். அப்பால் நெடுநேரம் இருவரும் ஆகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். போஜனம் முடிந்து கைகழுவிவிட்டுப் பந்துலுவும் அய்யங்காரும் மறுபடி பந்துலுவின் படிப்பறையில் வந்து நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள். மேஜைமேல் பந்துலுவின் மனைவி கொண்டு வந்து வைத்த தாம்பூலத்தை எடுத்துப் போடத் தொடங்குகையில் ''இதுவே சுவர்க்கம்'' என்று பந்துலு சொன்னார்.

''எது?'' என்று பந்தலுவின் மனைவி கேட்டாள்.

''இப்போது செய்த போஜனம்'' என்று பந்துலு சொன்னார்.

''சமையல் ருசியாக இருந்ததா?'' என்று பந்துலுவின் மனைவி கோபாலய்யங்காரை நோக்கி வினவினாள்.

''மிகவும் ருசியாக இருந்தது'' என்று கோபாலய்யங்கார் சொன்னார். அந்த சமயத்தில் கோபாலய்யங்காருடைய மனம் அங்ஙனம் ருசியாகச் சமையல் செய்த பெண்ணின் அழகையும், புத்தி நுட்பத்தையும், சொல்லினிமையையுங் குறித்து வீரேசலிங்கம் பந்துலு செய்த வர்ணனைகளைப் பற்றிச் சிந்திக்கலாயிற்று. அவள், உண்மையாகவே அத்தனை அற்புதமான பெண்தானா? அல்லது பந்துலு நூலாசிரியராகையால் வெறுமே கற்பனை தான் சொன்னாரா?'' என்று அவருக்கு ஓர் ஐயமுண்டாயிற்று.

அப்போது பந்துலு தன் மனைவியை நோக்கி, ''அந்தப் பெண் தன்னுடன் கொண்டு வந்திருக்கும் குழந்தையை இங்கே கூட்டி வா'' என்றார். ''சரி'' என்று சொல்லிப் பந்துலுவின் மனைவி சமையலறைக்குள்ளே போனாள்.

அப்போது கோபாலய்யங்கார் வீரேசலிங்கம் பந்துலுவை நோக்கி:- ''அந்தப் பெண் அக்குழந்தைக்கு உறவெப்படி?'' என்று கேட்டார்.

''அந்தப் பெண்ணுடைய தமையனார் மகள் அக்குழந்தை. அவர்களுடைய கதை மிகவும் ரஸமானது. நான் அதை உங்களுக்குப் பின்பு சொல்லுகிறேன். முதலாவது, அக்குழந்தையைப் பார்த்து அதனுடன் சிறிது நேரம் சம்பாஷணை செய்யுங்கள். அத்தையின் புத்திக்கூர்மை அதற்கும் இருக்கிறது. அவளுடைய வயதாகும்போது அக்குழந்தையும் அவளைப் போலவே சரஸ்வதி ரூபமாக விளங்கும்'' என்று பந்துலு சொன்னார்.

பந்துலுவின் மனைவி குழந்தை சந்திரிகையை அழைத்துக் கொண்டு வந்தாள். செம்பட்டுப் பாவாடை; செம்பட்டுச் சட்டை; செம்பட்டு நாடாவிலே பின்னல், செய்ய குங்குமப் பொட்டு, அந்தக் குழந்தை விசாலாட்சியைப் போல் இருபத்தைந்து வயதாகும்போது சரஸ்வதி ஸ்வரூபமாக விளங்குமென்று பந்துலு சொன்னார். ஆனால் அதை இப்போது பார்க்கையில் அது சிறிய லட்சுமிதேவி விக்ரஹமாக விளங்கிற்று.

அது சிரித்தால் ரோஜாப்பூ நகைப்பது போலிருக்கும். அதன் கைகளும் கால்களும் தங்கத்தால் செய்யப்பட்டன போன்றிருந்தன. அதன் முகம் நிலவைக் கொண்டு சமைக்கப்பட்டது போன்றிருந்தது. அதன் மொழிகள் பொன் வீணையில் கந்தர்வர் வாசிக்கும் நாதம்போல் ஒலித்தன. அதன் கைகால் இயக்கங்கள் தேவஸ்திரீகளின் நாட்டியச் செயல்களையத்திருந்தன.

இந்தக் குழந்தையைப் பார்த்தவுடனே காலையில் இதன் முகத்தோடு முகமொற்றி முத்தமிட்டு நகைத்துக் கொண்டிருந்த பணிப்பெண்ணுடைய அழகிய தோற்றம் கோபாலய்யங்காரின் மனக்கண்ணுக்கு முன்னே எழுந்தது.

''குழந்தாய், உனக்குப் பாட்டுப் பாடத் தெரியுமா?'' என்று கோபாலய்யங்கார் கேட்டார். ''தெரியும்'' என்றாள் சந்திரிகை. ''எங்கே'', ஒன்று பாடு, கேட்போம்'' என்றார் கோபாலய்யங்கார்.

''அத்தை எனக்குக் கற்றுக் கொடுத்த நந்தலால் பாட்டுப் பாடலாமா?'' என்று சந்திரிகை கேட்டாள்.

''பாடு'' என்றார் கோபாலய்யங்கார்.

சந்திரிகை பாடத் தொடங்கினாள்:-

நந்தலால் பாட்டு
யதுகுல காம்போதி ராகம்-ஆதி தாளம்.

ஸஸ்ஸாஸா-ஸம்மாபதா-பததபபமபா-பாபா
பநீஸதபா-மாகா-ஸரிமகரீ-கெகரிரிஸஸா.

பார்க்கு மரத்திலெல்லாம், நந்தலாலா-நின்றன்
பச்சை நிறந்தோன்றுதடா, நந்தலாலா;
காக்கைச் சிறகினிலே, நந்தலாலா-நின்றன்
கரியவிழி தோன்றுதடா, நந்தலாலா;
கேட்க மொலியி லெல்லாம், நந்தலாலா-நின்றன்
கீத மிசைக்கு தடா, நந்தலாலா;
தீக்குள் விரலை வைத்தால், நந்தலாலா-நின்னைத்
தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்தலாலா.

இந்தப் பாட்டடை மிகவும் மெதுவாக, ஒவ்வோரடியையும் இரண்டு தரம் சொல்லி இசை தவறாமல், தாளந் தவறாமல், கந்தர்வக் குழந்தை பாடுவது போல் அக்குழந்தை மிகவும் அற்புதமாகப் பாடி முடித்தது. கோபாலய்யங்காருக்கு மூர்ச்சை போட்டுவிடத் தெரிந்தது. அவர் தம்முடைய ஜன்மத்தில் இவ்வித சங்கீதம் கேட்டதில்லை; கனவில் கண்டதில்லை; கற்பனையில் எட்டியதில்லை.

''இதுதான் சுவர்க்கம்'' என்று கோபாலய்யங்கார் சொன்னார்.

''எது?'' என்று பந்துலுவின் மனைவி கேட்டாள்.

''இந்தக் குழந்தையின் பாட்டு'' என்று அய்யங்கார் சொன்னார்.

''சங்கீதமா? கவிதையா? இந்தக் குழந்தையின் குரலா? இவற்றுள் எது சுவர்க்கம் போலிருக்கிறது?'' என்று பந்துலுவின் மனைவி கேட்டாள்.

அதற்கு கோபாலய்யங்கார்- ''மூன்றும் கலந்து சுவர்க்கம் போன்றிருந்தது. விசேஷமாக, இதன் குரல் மிகவும் தெய்வீகமானது. குரல்கூட அவ்வளவில்லை. இந்தக் குழந்தை பாடிய மாதிரியே ஆச்சரியம்'' என்றார்.

''குழந்தையின் அழகையும் பாடுகையில் அது காண்பித்த புத்திக்கூர்மையையும் சேர்த்துச் சொல்லுங்கள்'' என்று பந்துலு சொன்னார்.

''அவையும் சேர்ந்துதான்'' என்று அய்யங்கார் சொன்னார்.

இவர்கள் இங்ஙனம் வியப்புரை சொல்லிக் கொண்டிருக்கையில் அக்குழந்தை எழுந்து அறையை விட்டு வெளியே ஓடிப் போய்விட்டது. அதன் பிறகே பந்துலுவின் மனைவியும் சென்றுவிட்டாள்.

அப்போது கோபாலய்யங்கார் வீரேசலிங்கம் பந்துலுவை நோக்கி, ''இந்தக் குழந்தையையும் இதன் அத்தையையும் பற்றிய கதை சொல்வதாகத் தெரிவித்தீர்களே? இப்போது சொல்லுகிறீர்களா?'' என்று கேட்டார்.

பந்துலு பூகம்பம் முதலாக நாளதுவரை தாமறிந்து கொண்ட அளவில் அவ்விருவருடைய கதை முழுதையும் சாங்கோபாங்கமாக எடுத்துரைத்தார்.

''என் ஜன்மம் பலிதமாய் விட்டது'' என்றார் கோபாலய்யங்கார்.

''அதெப்படி?'' என்று பந்துலு கேட்டார்.

''இப்படிப்பட்ட பெண்ணொருத்தியை விவாகம் செய்யும் பொருட்டாகவே நான் நெடுங்காலமாகக் காத்திருந்தேன். இப்போது என் மனோரதம் நிறைவேறிவிட்டது'' என்றார் அய்யங்கார்.

இதைக் கேட்டு வீரேசலிங்கம் பந்துலு கலகலவென்று நகைத்தார்.

''ஏன் சிரிக்கிறீர்கள்?'' என்று அய்யங்கார் கேட்டார்.

''விவாகம் முடிந்து விட்டதுபோல் நீங்கள் பேசுகிறீர்களே! அதைக் கேட்டு நகைத்தேன். தங்களை மணம் புரிந்து கொள்ள அந்தப் பெண் சம்மதிப்பாளோ மாட்டாளோ? இன்று ராத்திரி அவள் போஜன காலத்தில் நம்மோடிருந்து விருந்துண்பாள். சாதாரணமாக, இந்து ஸ்திரீகளிடம் காணப்படும் பொய்ந்நாணம் அவளிடத்தில் சிறிதேனும் கிடையாது. அப்போது நீங்களிருவரும் பரஸ்பரம் சந்தித்து சம்பாஷணை செய்ய இடமுண்டாகும். நாளைக் காலையில் என் மனைவியின் மூலமாக அந்தப் பெண்ணுடைய சம்மதத்தை விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். அவள் சம்மதமுணர்த்துவாளாயின், பிறகு விவாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யலாம்'' என்று பந்துலு சொன்னார். இதைக் கேட்டு கோபாலய்யங்கார் ''அப்படியானால் இன்றைக்கும் நாளைக்கும் நான் இங்கேயே தங்களுடைய விருந்தாளியாக இருந்து விடுகிறேன். எனக்கு வேறெங்கும் எவ்விதமான காரியமுமில்லை'' என்றார்.

''அப்படியே செய்யுங்கள்'' என்றார் பந்துலு.

பிறகு வீரேசலிங்கம் பந்துலு தம்முடைய பேனா மைக்கூடு முதலிய கருவிகளை எடுத்து ஏதோ எழுத்து வேலை செய்யத் தொடங்கினார்.

கோபலய்யங்கார் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே நித்திரை போய்விட்டார்.

கோபலய்யங்கார் தூங்கிக் கொண்டிருக்கையில் சமையலறைக்குள் மாதரிருவரும் இராத்திரி போஜனத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். மிக விஸ்தாரமான சமையல்; அறுசுவைகளும் வியப்புறச் சமைந்தது. வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி சமையல் தொழிலில் மிகத் தேர்ச்சி ¦ப்றறவள். நமது விசாலாட்சியோ அவளிலும் ஆயிரமடங்கு அதிகத் தேர்ச்சி கொண்டவள். கோபாலய்யங்கார் பிராமண ஆசாரங்களைக் கைவிட்டுப் பாஷண்டராய் விட்டபோதிலும், ''பிராமணா: போஜனப்ரியா: '' (பிராமணர் உணவில் பிரியமுடையோர்) என்ற வாக்கியத்தை அனுசரிப்பதில் சாமான்ய வைதிக பிராமணர்களைக் காட்டிலும் நெடுந்தூரம் மேற்பட்டவர்.

பிராமணர்களை குற்றஞ் சொல்ல வேண்டுமென்ற கருத்துடன் மேற்படி வாக்கியத்தைப் பலர் உபயோகப்படுத்துகிறார்கள். 'பார்ப்பானுக்குச் சோற்று ருசியில் மோகம் அதிகம்' என்று மற்ற ஜாதியார் சாதாரணமாகச் சொல்லி வருகிறார்கள். பிராமணர்களே சில சமயங்களில் இதைத் தங்கள் ஜாதிக்கு இயற்கையில் அமைந்ததொரு குறை போல பேசிக்கொள்ளுகிறார்கள். சில சமயங்களில் தம்மைத் தாம் வியந்து கொள்ளும் நோக்கத்துடன் ஒரு பெருமையாக அவ்வசனத்தைக் கையாடுகிறார்கள். வேறு சில சமயங்களில் மற்ற ஜாதியாரிடமிருந்து பணங் கேட்பதற்கு முகாந்தரமாக இந்த வாக்கியத்தைத் தவிர்க்கொணாத விதியைப் புலப்படுத்துவது போல் எடுத்துரைக்கிறார்கள். ஆனால் இந்த வாக்கியம் வெறும் பிசகென்று நான் நினைக்கிறேன். ''ஸர்வோ ஜநா: போஜனப்பிரியா:'' எல்லா ஜனங்களும் போஜனத்தில் பிரியமுடையவர்கள் என்பது என்னுடைய அபிப்பிராயம். உணவின் அளவை எடுத்து நோக்கின் சாதாரண பிராமணனொருவனைக் காட்டிலும் சாதாரண சூத்திரன் - மறவன், அல்லது இடையன், அல்லது உழவன், எந்தத் தொழிலாளியும்-நாளன்றுக்குக் குறைந்த பட்சம் மூன்று மடங்கு அதிகமாகத் தின்னுகிறான். ஆங்கிலேயன் ஒன்பது மடங்கு அதிகமாக உண்கிறான். ஜெர்மானியன் இருபத்தேழு பங்கு அதிகமாகத் தின்கிறான். இனி, அளவை விட்டுவிட்டு, ஆகாரத்தின் பக்குவ பேதங்களை எண்ணுமிடத்தே அதில் பிராமணர், அல்லாதார் என்ற பாகுபாட்டுக்கிடமில்லை. செல்வர்கள் உணவைப் பலவகையாகப் பக்குவங்கள் செய்து புசிக்கிறார்கள். ஏழைகள் சிலவகைப் பக்குவங்களே செய்கிறார்கள். பரம ஏழைகளாய், ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லாத ஜனங்களே, இந்நாட்டில், லட்சகணக்காக மலிந்து கிடக்கிறார்கள். இவர்கள் கூழும் கஞ்சியும் ஒருகால் மிளகாயும் தவிர வேறுவிதமான பக்குவங்களை உண்ணுதல் அருமையிலும் அருமையிலும் அருமை. இத்தனை கொடிய ஏழ்மை நிலையில் பெரும்பாலும் பள்ளர் பறையர்களும் சூத்திரர்களில் தாழ்ந்த வகுப்பினருமே இருக்கிறார்கள். ஆனால் மற்ற வகுப்பாரிலும் பலர் அந்த ஸ்திதிக்கு மிக சமீபத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். பிராமணர்களிலும் அங்ஙனமே பலர் அந்தப் பரிதாபகரமான நிலையில் அகப்பட்டுத் தவிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்த தேசத்தில் மற்ற ஜாதி ஏழைகளைக் காட்டிலும் பிராமண ஏழைகளுக்கு முக்கியமாக வைதிக பிராமணர்களுக்கு, இனாம் சாப்பாடு அதிகமாகக் கிடைக்கும் வழியேற்பட்டிருக்கிறது. எனினும் இவ்விஷயத்தில் பிராமணரென்றும் அல்லாதரென்றும் பிரிவு செய்தல் பொருந்தாது. பொதுப்படையாக ஏழைகளின் வீட்டில் செய்வதைக் காட்டிலும் செல்வர் வீட்டில் கறி குழம்பு முதலிய பதார்த்தங்களில் அதிக வகுப்புக்கள் சமைக்கிறார்களென்று சொல்லாம். இந்த விதிக்குப் பல விளக்குகளுமல்லதால், 'பொதுப்படையாக' என்றேன். ஏனென்றால் செல்வமிருந்த போதிலும் லோப குணமுடையோரின் வீடுகளில் போஜன வகைகள் மிகக் குறைவாகத்தான் இருக்கும். தவிரவும், தொழில் செய்யாமல் சோம்பேறிகளாக வாழும் செல்வர்களுக்கும், பொருள் தேடுவதிலும் அதைக் காப்பதிலும் மிதமிஞ்சிய கவலை செலுத்தும் செல்வர்களுக்கும் ஜீர்ண சக்தி எப்போதும் பரம மோசமாகவே இருக்குமாதலால், அவர்கள் வீட்டில் எத்தனை வகையான பக்குவங்கள் செய்தபோதிலும் ஒன்றிலும் ருசியேற்படாது. ஏற்கெனவே, இத்தையோர் போஜனப்பிரியர் என்று சொல்லத்தகார். அன்னத் துவேஷமுடையோரை போஜனப்பிரியர் என்று கூறுவதெப்படி? இந்த விஷயத்தைக் குறித்து இன்னும் அதிக விஸ்தாரமாக எழுதலாம். எனினும், போஜனம் பண்ணுவதில் எல்லோரும் விருப்புடையோரெயெனிலும், போஜன விஷயத்தைக் குறித்து நீண்ட பிரஸ்தாபம் நடத்துவதில் தற்காலத்துப் படிப்புப் படித்தவர்களுக்கு அதிகச் சுவையேற்படாதாகையாலும், இந்நூல் படிப்போரில் எவ்வித ருசியுடையோருக்கும் அதிக அருசியேற்படாமல் கதையெழுத வேண்டுமென்பது என்னுடைய நோக்கமாதலாலும் எனது கருத்தை இங்கு சுருக்கமாகச் சொல்லி முடித்துவிடுகிறேன். எவ்வகையாக நோக்குமிடத்தும் பிராமணர் போஜனப்பிரியர் என்று கூறி அவ்வகுப்பினர் இவ்விஷயத்தில் பொது மனித ஜாதியின்றும் வேறுபட்ட குணமுடையோரென்று குறிப்பிடும் பழமொழி யுக்தமில்லையென்பதே என் அபிப்ராயம். இது நிற்க.

கோபாலய்யங்காருக்கு ஜீர்ண சக்தி அதிகம். வீமஸேனனுக்கு 'விருகோதரன்' ஓநாய் வயிறுடையோன்-என்ற பெயரொன்று உண்டு. ஓநாய்க்குப் பசி அதிகமாம். தின்னத் தின்ன-எவ்வளவு தின்றபோதிலும்-சாதாரணமாக அதன் பசி அடங்குவதில்லையாம். உழைக்கும்போது மிகவும் தீவிரத்துடனும் நிதானத்துடனும் சோம்பரென்பது சிறிதேனுமில்லாமலும் உழைத்தால், மனிதர் இப்படிப்பட்ட பசி பெறலாம். தொழில் செய்வதில் வலிமை செலுத்த வேண்டும். ஒருவனது முழு வலிமையையும் செலுத்திச் செய்யப்படும் தொழிலே தொழிலாம். ஆனால், எவ்வளவு தொழில் செய்த போதிலும், அதனால் உடம்புக்கு சிரமமுண்டாகாத வண்ணமாகச் செய்யவேண்டும். வேர்க்க வேர்க்க கஸ்ரத் எடுப்பவன் சமர்த்தனல்லன். எத்தனை கஸ்ரத் எடுத்தாலும் வேர்வை தோன்றாதபடி தந்திரமாக எடுப்பவனே சமர்த்தன். இதை ஒரு வேளை சாதாரண மல்லர் அங்கீகாரம் செய்யத் திகைக்கக்கூடும். ஆனால் நூறு கஸ்ரத் பண்ணின மாத்திரத்திலேயே உடம்பெல்லாம் வெயர்த்துக் கொட்டிப் போகும் மனிதனைக் காட்டிலும், ஆயிரம் கஸ்ரத் செய்தபின் வெயர்க்கும் மனிதன் அதிக சமர்த்தன் அதிக பலவான் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். இந்தக் கணக்கைத்தான் நான் இன்னும் சிறிது தூரம் எட்டிப் போடுகிறேன். கஸ்ரத் செய்யும் தொழிலாயினும், கதையெழுதும் தொழிலாயினும்-எல்லாவிதமான தொழிலுக்கும் தத்துவம் ஒன்றேயாம். அதாவது மனதில் சிரமந் தோன்றிய பிறகு தான் உடம்பில் சிரமந் தோன்றுகிறது. அசைக்க முடியாத பொறுமையுடன் தொழில் செய்தால் மேன்மேலும் புதிய ரத்தம் பெருகி, உடம்பில் மேன்மேலும் ஒளியும் வலியும் விருத்தியடைந்து கொண்டு வரும். இந்த வழியில் வீமசேனனுக்கு ஆயிரம் பொன் கொடுக்கலாமென்னில், கோபாலய்யங்காருக்குப் பத்துப் பொன் கொடுக்கலாம். அவ்வளவு பண்டிதர். எனவே மதுமாமிசப் பழக்கங்களால், வீரேசலிங்கம் பந்துலு எதிர்பார்த்தபடி, கோபாலய்யங்கார் அத்தனை விரைவாக இறந்து போவாரென்று எதிர்பார்க்க இடமில்லை. இது நிற்க.

கோபாலய்யங்கார் போஜன பிரியர்களிலே சிரேஷ்டர். இந்த விஷயம் பந்துலுவின் மனைவிக்கு மிகவும் நன்றாகத் தெரியும். எனவே, விசாலாட்சியின் விழிகளென்னும் வலைக்குள் கோபாலய்யங்காரின் இருதயமென்ற மானை வீழ்த்துவதற்கு இரை போடும் அம்சத்தில் கோபாலய்யங்காருடைய வயிற்றுக்கு ஸ்தூலமாகிய விருந்து போடுவதே தக்க இரையென்று தீர்மானித்துக் கொண்டு, வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி மிகவும் கோலாகலமாகச் சமையல் பண்ணினாள். முப்பது வகைக் கறி; முப்பது வகை சட்டினி; முப்பது வகை பொரியல்;-எல்லாம் பசு நெய்யில். இலை போட்டு ஜலந் தெளித்துப் பரிமாறுதல் தொடங்கிவிட்டது. நாலிலை; குழந்தைக்கொன்று;விசாலாட்சிக்கொன்று; பந்துலுவுக்கொன்று; கோபா-லய்யங்காருக்கொன்று. பந்துலுவின் மனைவி பரிமாறுகிறாள்.

பந்துலுவும் கோபாலய்யங்காரும் வந்து முதலாவதாக உட்கார்ந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் விசாலாட்சியும் குழந்தையும் வந்து உட்கார்ந்தனர். போஜனம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறிது நேரம் கழிந்தவுடனே கோபாலய்யங்கார் விசாலாட்சியை நோக்கி:- ''விசாலாட்சி எங்கே'' என்று கேட்டார். இவள்தான் விசாலாட்சியென்பது அவருக்குத் தெரியாது. பணிப்பெண்ணையும் குழந்தையையும் ஒன்றாக நோக்கியது முதலாக அப்பணிப் பெண்ணே விசாலாட்சி என்ற பிராந்தியில் அவர் மயங்கியிருந்தார்.

''நான்தான் விசாலாட்சி'' என்றாள் விசாலாட்சி.

''நீயா விசாலாட்சி?'' என்றார் கோபாலய்யங்கார்.

''ஆம்'' என்றாள் விசாலாட்சி.

''காலையில் இக்குழந்தையுடன் சோலையில் விளையாடிக் கொண்டிருந்த பெண் யார்?'' என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

''அவள் இக்குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கவில்லை. இந்தக் குழந்தைக்குக் காவல் காத்துக் கொண்டிருந்தாள். அவள் பந்துலு வீட்டு வேலைக்காரி'' என்று விசாலாட்சி சொன்னாள்.

கோபாலய்யங்காருக்கு நெஞ்சுக்குள் ஒரு பேரிடி விழுந்தது போலாயிற்று. காலையில் பூஞ்சோலையில் வேலைக்காரி சந்திரிகையை முத்தமிட்டபோது அச்செய்கையை இருவர் பார்த்ததாகவும் அவ்விருவருள் ஒருவர் அந்த வேலைக்காரியின் மீது காதல் கொண்டனரென்றும் சென்ற அத்தியாயத்தின் இறுதியில் சொல்லியிருக்கிறேன். அங்ஙனம் நோக்கிய இருவர் கோபாலய்யங்காரும் பந்துலுவும், காதல் கொண்டவர் கோபாலய்யங்கார். அந்த வேலைக்காரிக்கு இருபது வயதிருக்கும். மிகவும் அழகுடைய பெண். விசாலாட்சியின் அழகு அறிவும் பயிற்சியும் கலந்த அழகு. பணிப்பெண்ணுடைய அழகு கிராமியமானது.

எனிலும், இப்போது விசாலாட்சியை நோக்குமிடத்தே கோபாலய்யங்காருக்கு இவள் அதிக அழகா, அவள் அதிக அழகா என்ற சமுசயமேற்பட்டது. கண்களை மூடிக்கொண்டு மனவிழியால் பணிப்பெண்ணுடைய வடிவத்தை நோக்குவார். பிறகு கண்ணை விழித்து எதிரே நிற்கும் விசாலாட்சியின் முகத்தைப் பார்ப்பார். இப்படி இரண்டு மூன்று தரம் கண்ணை மூடி மூடி விழித்துச் சோதனை செய்து பார்த்ததில் அவருடைய புத்திக்கு இன்னார்தான் அதிக அழகென்பது நிச்சயப்படவில்லை. எனிலும், விசாலாட்சியை மணம் புரிந்து கொள்வதே பொருந்துமென்ற யோசனை ஒரு கணம் அவருக்குண்டாயிற்று. ஆயினும், காதல் வலியதன்றோ? காதலுக்கெதிரே எந்த சக்தி, எந்த யோசனை நிற்கவல்லது? காதல் இறுதியிலே வெற்றி பெற்றுத் திரும். கோபாலய்யங்காரே! உம்முடைய விதி உறுதியாய் விட்டது. உமக்கு விசாலாட்சியை மணம்புரிந்து கொள்ளும் பாக்கியம் இனிக் கிடையாது. காதலை எதிர்த்து யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதன் போக்கு காட்டுத் தீயின் போக்கையத்தது. அது தானாகவே எரிந்து தணியவேண்டும். அல்லது, தெய்வீகச் செயலாகப் பெருமழை பெய்து அதைத் தணிக்கவேண்டும். மற்றபடி, மனிதர் தண்ணீர்விட்டு அவிப்பது என்பது சாத்தியமில்லை.

நெடுநேரம் போஜனத்தில் செலவிட்டார்கள். பல விஷயங்களைக் குறித்து சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கோபாலய்யங்கார் நாவிலிருந்த ரசம் போய்விட்டது. அவர் அந்த அற்புதமான பக்குவங்களை ருசியின்றி உண்டார். பந்துலுவின் மனைவியும் பந்துலுவும் எதிர்பார்த்த வண்ணம் அவர் நிறைய உண்ணவுமில்லை. ஒவ்வொரு வகையிலும் சிறிது சிறிதுண்டார். பேச்சிலும் அவருக்கு அதிக ரசமேற்படவில்லை. ஆகாரம் முடிவு பெற்றது. படுக்கைக்குப் போகுமுன்னர் கோபாலய்யங்காரும் பந்துலுவும் படிப்பறையில் தனியே இருந்து வெற்றிலை போட்டுக் கொண்டார்கள். அப்போது பந்துலுவை நோக்கி கோபாலய்யங்கார்-''பந்துலுகாரு, நான் விசாலாட்சியை விவாகம் செய்து கொள்ளப் போவதில்லை'' என்றார். ''ஏன்? அவளிடம் என்ன குறை கண்டீர்?'' என்று பந்துலு கேட்டார்.

அதற்கு கேபாலய்யங்கார் -''அவளிடம் நான் என்ன குற்றம் கற்பிக்க முடியும்? விசாலாட்சி சர்வ சுப லட்சணங்களும் பொருந்தியவளாகவே இருக்கிறாள். எனிலும், மற்றொருத்திக்கு எனது நெஞ்சை நான் காணிக்கை செலுத்திவிட்டேன். மற்றொருத்தியின் மீது காதலுடையேன்'' என்றார்.

''அதை நீங்கள் என்னிடம் காலையில் சொல்லவில்லையே? காலையில் விசாலாட்சியை மணம் புரிந்து கொள்ள மிகவும் ஆவலுடனிருப்பது போல் வார்த்தை சொன்னீர்களே? இப்போது திடீரென்று தங்களுடைய மனம் மாறியிருப்பதன் காணரம் யாது?'' என்று பந்துலு வினவினார்.

''எனக்குக் காலையில் தெரியாத, எனது நெஞ்சை மற்றொருத்திக்குப் பறிகொடுத்துவிட்டேன் என்ற செய்தி எனக்கிப்போதுதான் தெரிந்தது'' என்றார் அய்யங்கார்.

''அ·தெங்ஙனம்'' என்ற பந்துலு கேட்டார். அப்போது கோபாலய்யங்கார் காலையிலே பூஞ்சோலையில் பணிப்பெண்ணும் குழந்தை சந்திரிகையுமிருப்பது கண்டு தாம் பணிப்பெண் மீது காமுற்ற செய்தியையும், அப்பால் அந்தக் குழந்தையின் அத்தை என்ற பேச்சு வரும்போதெல்லாம் தாம் அந்தப் பணிப்பெண்ணே அக்குழந்தையின் அத்தையென்று தவறாகக் கருதி வந்த செய்தியையும், அப்பால் இராத்திரி போஜன சமயத்தில் தமது தவறு தமக்கு விளங்கிய செய்தியையும் பந்துலுவிடம் விரிவாகக் கூறினார். அதைக் கேட்டவுடனே பந்துலு நகைத்தார். ''காதலாவது, உருளைக்கிழங்காவது! அய்யங்கார் ஸ்வாமிகளே, பணிப்பெண்ணை எங்ஙனம் மணம் புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?'' என்று பந்துலு கேட்டார்.

இது கேட்டு கோபாலய்யங்கார்-''அந்தக் காரியம் அவ்வளவு தூரம் சிரமமென்று என் புத்திக்குத் தோன்றவில்லை. நாளைக்குக் காலையில் பொழுது விடிந்தவுடனே அவளையழைத்து அவளுடைய சம்மதத்தை அறிந்து கொள்வோம். அவள் சம்மதப்படுவாளாயின், அப்பால் அவளுடைய பந்துக்களைக் கண்டு பேசி வேண்டிய ஏற்பாடுகள் செய்து முடித்துவிட்டு இன்னும் ஒரு வாரத்துக்குள் விவாகத்தை நடத்திவிடலாம். இதில் சிரமமெங்கேயிருக்கிறது?'' என்றார்.

அப்போது பந்துலு-''தங்களைப் போன்ற ஸ்தானமும் மதிப்புடைய மனிதரை அந்தப் பெண் மணம் செய்துகொள்ள மிக விரைவில் சம்மதப்படுவாள். அவளுடைய பந்துக்களும் கேட்டமாத்திரத்தில் இணங்கிவிடுவார்கள். இதிலெல்லாம் அதிகக் கஷ்டமில்லை. ஆனால் நீங்கள் அந்தப் பணிப்பெண்ணை மணம் புரிந்து கொண்டால் அதை உலகத்தார் கண்டு திகைப்படைந்து தங்களைப் புத்தி சுவாதீனமற்றவரென்று நினைப்பார் தங்களுக்கு மதிப்பு மிகவும் குறைந்துபோய்விடும்'' என்றார்.

''சர்க்கார் வேலை போகாதே! அதற்கு யாதொரு ஹானியும் வராது. இங்கிலீஷ் ராஜ்யம்! தஞ்சாவூர் சரபோஜி மஹாராஜாவின் ஆட்சியில்லை! எந்த ஜாதியார் எந்த ஜாதிப் பெண்ணை மணம் புரிந்து கொண்ட போதிலும், இங்கிலீஷ் ராஜ்யத்தில் தண்டனை கிடையாது' என்று கோபாலய்யங்கார் சொன்னார்.

அதற்குப் பந்துலு-''அவ்விஷயம் எனக்குத் தெரியாததன்று. தாங்கள் வேலைக்காரியை மணம் புரிந்து கொள்வதால் உங்கள்மீது ராஜாங்க அதிருப்தி ஏற்படாது. உங்கள் உத்தியோகத்துக்கு யாதொரு தீங்கும் நேராது. ஆனால், உங்களுடைய சிநேகிதர்களும் உங்களுடன் சமபதவியுடைய பிறரும் உங்களை இகழ்ச்சியாகப் பேசுவார்கள். 'மதிப்புடன் வாழ்ந்தவனுக்கு நேரும் அபகீர்த்தி மரணத்தைக் காட்டிலும் கொடியது என்று கண்ணன் பகவத் கீதையில் சொல்லுகிறார். அந்த அபகீர்த்தியைக் குறித்தே நான் அஞ்சுகிறேன்'' என்றார்.

இதுகேட்டு கோபாலய்யங்கார்-''வெறுமே விதவா விவாகம் செய்து கொண்டாலும் பந்துக்களும் சிநேகிதர்களும் அபகீர்த்தி சாற்றத்தான் செய்வார்கள். அதற்குத் துணிந்த நான் இதற்குத் துணிதல் பெரிதன்று. பந்துக்களும் சிநேகிதர்களும் சிறிது காலம் வரை வாய் ஓயாமல் பழி தூற்றிக் கொண்டிருப்பார்கள். பிறகு அவர்களுக்கே சலிப்புண்டாய்விடும். ஒரே சங்கதியைப் பற்றி எத்தனை நாள் பேசுவது? ஒரே மனிதனை எத்தனை காலம் தூற்றிக் கொண்டிருப்பது? நாளடைவில் எல்லாம் சரியாய்விடும். ஜாதிப்பிரஷ்டம் இருக்கத்தான் செய்யும். சாகும்வரை பந்தக்களுடன் பந்தி போஜனமும் சம்பந்தமும் செய்ய முடியாமல் போகும். ஆனால் இந்த சிரமம் விசாலாட்சியை மணம்புரிந்து கொண்டாலும் ஏற்படத்தான் செய்யும். ஜாதிப் பிரஷ்டம் எப்போதுமுண்டு. ஆனால் அதை நான் பொருட்டாக்கவில்லை. உலகம் விசாலமானது. பிராமணர்கள் நம்மைக் கைவிட்ட போதிலும் சூத்திரர்கள் கைவிட மாட்டார்கள். பிராமணரின் தொகை குறைவு. சூத்திரர்களின் ஜனத்தொகை இந்த நாட்டில் அதிகம். ஆதலால், ஒருவனுக்கு ஜாதிப் பிரஷ்டத்திலிருந்து நேரும் கஷ்டம் அதிகமிராது. சிநேகிதர்களும் இந்த விஷயத்தின் புதுமை மாறி இது பழங் செய்தியாய் விட்ட மாத்திரத்தில் முன்போலவே என்னுடன் பழகத் தொடங்கிவிடுவார்கள். ஊர்வாயை மூட ஒரு உலை மூடியுண்டு. அதன் பெயர் காலம். பழைய சிநேகிதர்கள் கைவிட்ட போதிலும், புதிய சிநேகிதர் ஏற்படுவார்கள். பணம் உள்ளவரை ஒருவனுக்கு சிநேகிதரில்லையென்ற குறைவு நேரிடாது. சர்க்கார் உத்தியோக முள்ளவரை சிநேகிதரில்லையென்ற குறைவு நேராது'' என்றார்.

''இருந்தாலும் தாங்கள் அந்த வேலைக்காரியை மணம்புரிந்து கொள்வதில் எனக்கு சம்மதில்லை. உலகத்தாரின் அபவாதத்தைப் பொருட்படுத்தாமல் நமது மனச்சாட்சியின்படி நடப்பதே தகும் என்பதே நான் அங்கீகாரம் செய்து கொள்ளுகிறேன். உலகத்தின் அபவாதம் பெரிதில்லை. ஆனால், நீங்கள் விரும்புகிறபடி விவாகம் செய்துகொள்ளக் கூடாதென்பதற்கு வேறு காரணங்களுமிருக்கின்றன'' என்று வீரேசலிங்க பந்துலு சொன்னார்.

''அந்தக் காரணங்களையெடுத்து விளக்குங்கள்'' என்றார் கோபாலய்யங்கார்.

''முதலாவது, அந்தப் பணிப்பெண் சிறிதேனும் கல்விப்பயிற்சியில்லாதவள். கல்விப் பயிற்சியில்லாவிடினும் மேற்குலத்துப் பெண்களிடம் பரம்பரையாக ஏற்படக்கூடிய நாகரிக ஒழுக்கங்களும் நடைகளும் தர்ம ஞானமும் கீழ்க்குலத்துப் பெண்களிடம் இரா. இதையெல்லாம் உத்தேசிக்குமிடத்தே, நீங்கள் அந்தப் பணிப்பெண்ணை மணம் புரிந்து கொள்ளுதல் மிகவும் தகாத காரியம்'' என்று பந்துலு சொன்னார்.

அதற்கு கோபாலய்யங்கார்-''நல்ல படிப்பு, நல்ல பயிற்சி, சிறந்த ஒழுக்கம், நல்ல சங்கீத ஞானம் - இன்னும் எத்தனையோ லட்சணங்களுடைய பெண்ணைத்தான் மணம்புரிந்து கொள்ளவேண்டுமென்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் அதுவெல்லாம் என் மனதில் உண்மையான காதல் தோன்று முன்னர் நினைத்த நினைப்பு. இப்போது மன்மதன் என் நெஞ்சில் சிங்காதனமிட்டு வீற்றிருந்து வேறொரு பாடஞ் சொல்லுகிறான். படிப்புப் பெரிதில்லை. பயிற்சி பெரிதில்லை. ஒழுக்கம் பெரிதில்லை. காதல் தன்னிலேயேதான் இனிது. மற்றதெல்லாம் பதர். காதலொன்றே பொருள். மேலும், கீழ்க்குலத்துப் பெண்கள் தக்க தர்ம ஞானமில்லாமலிருப்பார்களென்று நினைப்பது தவறு. எல்லா ஜாதியாருக்குள்ளும் தர்மவுணர்ச்சியுடைய ஆண்களும் பெண்களும் இருப்பார்கள். அ·தற்றவரும் எல்லா ஜாதிகளிலும் இருப்பார்கள். மேற்குலத்துக்குரிய நாகரிக நடைகளைக் கீழ்க்குலத்துப் பெண்கள் மிக விரைவிலே கற்றுக் கொள்ள முடியும். அந்த நாகரிக நடைகளென்பன செல்வத்தாலும் ஸ்தானத்தாலும் ஏற்படுவன. அவை பரம்பரையாலே தான் விளைய வேண்டுமென்ற அவசியமில்லை. பழக்கத்தால் உண்டாய்விடும். என்னுடன் ஒரு வருஷம் குடியிருந்தால் போதும். அந்தப் பணிப்பெண்ணுக்கு நாகரிக நடைகளெல்லாம் வெகு சாதாரணமாக ஏற்பட்டுவிடும். படிப்பு முதலியனவும் நான் விரைவிலே அவளுக்குக் கற்றுக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்துவிடுவேன்'' என்று அய்யங்கார் சொன்னார்.

''உலக அனுபவமில்லாத பதினாலு வயதுப் பச்சைப் பிள்ளைகள் சொல்லக்கூடிய வார்த்தை இது. முப்பது வயதாய், உயர்ந்த சர்க்கார் வேலையிலிருந்து சகலவித லௌகிக அனுபவங்களுமுடைய தாங்கள் இந்த வார்த்தை சொல்வது கேட்டு எனக்கு மிக வியப்புண்டாகிறது. காதல் மூன்று நாள் நிற்கும் பொருள். வெறுமே புதுமையை ஆதாரமாகக் கொண்டது. புதுமை மாறிப் போனவுடன் காதல் பறந்து போய்விடும். அப்பால் கனமான அறிவுப் பயிற்சியாலும் ஒழுக்கத்தாலும் தம்பதிகளுக்குள் ஏற்படும் பற்றுதலே நிலையுடையது'' என்று வீரேசலிங்கம் பந்துலு சொன்னார்.

''மூன்று நாட்களில் மாறக்கூடிய புதுமையுணர்ச்சிக்கு காதலென்று பெயரில்லை. அதன் பெயர் பிராந்தி. அந்த பிராந்தி என் உள்ளத்தில் எழக்கூடியதன்று. அவ்வித மயக்கங்கள் தோன்றாதபடி என் உள்ளத்தை நான் நன்றாகத் திருத்திப் பண்படுத்தி வைத்திருக்கிறேன். காதலென்பது தேவலோகத்து வஸ்து. இவ்வுலகத்துக்கு வாழ்க்கை மாறியபோதிலும் அது மாறாது. சாவித்திரியும் சத்யவானும்; லைலாவும் மஜ்னூவும்; ரோமியோவும் ஜூலியெத்தும் கொண்டிருந்தார்களே, அந்த வஸ்துக்குக் காதலென்று பெயர். அது அழியாத நித்ய வஸ்து. இமயமலை கடலில் மிதந்தபோதிலும், காதல் பொய்த்துப் போகாது. அத்தகைய காதல் நான் அந்தப் பணிப்பெண் மீது கொண்டிருக்கிறேன்'' என்று அய்யங்கார் சொன்னார்.

செவிடன் காதில் சங்கூதுவது போல் வீரேசலிங்கம் பந்துலு பலபல நியாயங்கள் கூறி அந்தப் பணிப்பெண் மீது கோபாலய்யங்கார் கொண்டிருக்கும் மையலை அகற்றிவிட முயற்சி செய்தார். இவர் பாதி பேசிக் கொண்டிருக்கும்போதே கோபாலய்யங்கார் கொட்டாவி விடத் தொடங்கி விட்டடார். அவருக்குப் பந்துலுவின் வார்த்தைகளில் ருசியில்லை. இதையுணர்ந்த பந்துலு-'' சரி இந்த விஷயத்தைக் குறித்து விஸ்தாரமாக நாளைக்குக் காலையில் பேசிக்கொள்ளலாம். இப்போது நித்திரை செய்யப் போவோம்'' என்றார்.

அப்போது கோபாலய்யங்கார்-''அங்ஙனமே செய்வோம். ஆனால் தூங்கப் போகுமுன் தாங்கள் தயவு செய்து எனக்கொரு விஷயந் தெரிவிக்க வேண்டும். அந்தப் பணிப்பெண் யார்? அவளுடைய பெயர் யாது? அவளென்ன ஜாதி? அவளுடைய பேற்றோர் அல்லது சுற்றத்தார் எங்கிருக்கிறார்கள்?'' என்று கேட்டார்.

அதற்கு வீரேசலிங்கம் பந்துலு-''அப்பணிப்பெண்ணுக்குப் பெயர் மீனாட்சி. அவள் ஜாதியில் இடைச்சி. அவளுடைய சுற்றத்தார் எங்கிருக்கிறார்களென்பது தெரியாது. ஓஹோஹோ! இதில் ஒரு முக்கியமான விஷயத்தை யோசிக்க மறந்து விட்டீர்களே! ஒருவேளை ஏற்கெனவே அவளுக்கு விவாகம் ஆய்விட்டதோ என்னவோ?'' என்றார்.

''அதைக் குறித்துத் தங்களுக்கு சம்சயம் வேண்டியதில்லை. நான் காலையிலேயே அவளுடைய கழுத்தை நன்றாக கவனித்தேன். அவளுடைய கழுத்தில் தாலியில்லை'' என்று கோபாலய்யங்கார் சொன்னார்.

''தாலி ஒரு வேளை ரவிக்கைக்குள்ளே மறைந்து கிடந்திருக்கக்கூடும். தங்கள் கண்ணுக்கு அகப்படாமலிருந்திருக்கலாம்'' என்றார் பந்துலு.

''அதைக் குறித்தும் சம்சயம் வேண்டியதில்லை. காதலுக்குக் கண் கிடையாதென்று சிலர் தப்பான பழமொழி சொல்லுகிறார்கள். காதலுக்கு மிகவும் கூர்மையான கண்களுண்டு. நான் மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்தேன். தாலியில்லையென்பது எனக்குப் பரம நிச்சயம். அவளுக்கு விவாகமாகவில்லை. அவள் முகத்தைப் பார்த்ததிலேயே அவள் விவாகமாகாதவளென்பது எனக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. எனக்கு இவ்விஷயத்தில் அனுபவம் அதிகம். ஒரு ஸ்த்ரீயின் முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே இவள் விவாகமானவள் அல்லது ஆகாதவள் என்பது எனக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்துவிடும். இது நிற்க. அவளுடைய சுற்றத்தார் எங்கிருக்கிறார்களென்பது தெரியாவிடினும், வேறு அவளுடைய விருத்தாந்தங்கள் அவளைப் பற்றித் தங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியனவற்றை எனக்குச் சொல்லுங்கள்'' என்று கோபாலய்யங்கார் வேண்டினர்.

''எனக்கு அவளுடைய பூர்வோத்தரங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவள் என்னுடைய சொந்த வேலைக்காரியுமன்று. இங்கு எழும்பூரில் இதே தெருவில் நாலைந்து வீடுகளுக்கப்பால் என் நண்பர் வேங்கடாசலநாயுடு என்றொருவர் இருக்கிறார். அவர் பிரமஸமாஜத்தைச் சேர்ந்தவர். இந்த வீடும் அவருக்குச் சொந்தமானதே. இந்த வேலைக்காரி அவருடைய குடும்பத்தில் வேலை செய்பவள். இங்கு நான் தாமதிக்கும் சில தினங்களுக்கு என் மனைவிக்குத் துணையாக வீடு பெருக்கி, மாடு கறந்து, விளக்கேற்றி, இன்னும் வேறு சிறு தொழில்கள் செய்யுமாறு இவளை வேங்கடாசல நாயுடு எங்களிடம் அனுப்பியிருக்கிறார். நாங்கள் ராஜ மஹேந்திரபுரத்துக்குப் போகும்போது அப்பெண் மறுபடி நாயுடு வீட்டில் வேலைக்குப் போய்விடுவாள்'' என்று பந்துலு சொன்னார்.

''நாளைக்குக் காலையில் நான் வேங்கடாசல நாயுடுவைப் பார்க்கவேண்டும். அவர் இங்கு வருவாரா? நாம் அவருடைய வீட்டுக்குப் போகவேண்டுமா?'' என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

''அவரையே இங்கு வரச் சொல்லலாம். நாம் போகவேண்டாம். எனிலும், இந்தப் பணிப்பெண்ணை மணம் புரிந்து கொள்ளும் விஷயத்தைத் தாங்கள் மறந்து விடுவதே யுக்தமாகத் தோன்றுகிறது'' என்று வீரேசலிங்கம் பந்துலு கூறினார்.

இதுகேட்டு கோபாலய்யங்கார்:- ''எதற்கும் நாளைக்குக் காலையில் நாயுடுவை இங்கு தருவியுங்கள். மற்ற சங்கதி பிறகு பேசிக்கொள்வோம்'' என்றார்.

அப்பால் இருவரும் நித்திரை செய்யப் போய்விட்டனர். இரவிலேயே வீரேசலிங்கம் பந்துலு தமக்கும் அய்யங்காருக்கும் நடந்த சம்பாஷணையைத் தமது மனைவியிடம் தெரிவித்தார். அவள் மறுநாட் பொழுது விடிந்தவுடனே அச்செய்தியையெல்லாம் விசாலாட்சியிடம் கூறினாள். அது கேட்டு விசாலாட்சி பந்துலுவின் மனைவியுடைய பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து, ''இது போனால் போகட்டும். வேறு தக்க வரன் பார்த்து நீங்களே எனக்கு விவாகம் செய்து வைக்க வேண்டும். உங்களை விட்டால் எனக்கு வேறு புகல் கிடையாது'' என்றாள்.

அப்போது பந்துலுவின் மனைவி:- ''பயப்படாதே, அம்மா. உனக்கு நல்ல புருஷன் கிடைப்பான். உன்னுடைய குணத்துக்கும் அழகுக்கும் ராஜாவைப் போன்ற புருஷன் அகப்படுவான். நான் உனக்கு மணஞ்செய்து வைக்கிறேன்'' என்றாள்.

Add a comment

ராஜமஹேந்திரபுரத்தில் வீரேசலிங்கம் பந்துலு வீட்டைத் தேடிப் போய் விசாலாட்சி விசாரித்தாள். அவர் அங்கில்லையென்றும், அவள் வந்த நாளுக்கு முதல் நாள்தான் புறப்பட்டுச் சென்னைப் பட்டணத்துக்குப் போனாரென்றும் தெரியவந்தது. சென்னை எழும்பூரில் பண்டித வீரேசலிங்கம் பந்துலு ஒரு தனி வீட்டில் தம் மனைவியுடன் வந்து தங்கியிருந்தார்.

விசாலாட்சி சென்னைப்பட்டணத்துக்கு வந்து, மறுநாட் காலையில் எழும்பூரில் அவர் இருந்த வீட்டிற்குப் போனாள். உள்ளே அவர் மாத்திரம் நாற்காலி மேஜை போட்டு உட்கார்ந்து கொண்டு ஏதோ நூலெழுதிக் கொண்டிருந்தார்.

விசாலாட்சி அவரை நமஸ்காரம் பண்ணினாள். ஜீ.சுப்பிரமணிய அய்யரிடமிருந்து தான் வாங்கிக்கொண்டு வந்த கடிதத்தைக் கொடுத்தாள். வீரேசலிங்கம் பந்துலு தன் எதிரேயிருந்த நாற்காலியின் மீது விசாலாட்சியை உட்காரச் சொன்னார். அவள் தன் மடியில் சந்திரிகையை வைத்துக் கொண்டு அந்நாற்காலியின் மீது உட்கார்ந்தாள். வீரேசலிங்கம் பந்துலு அவள் கொணர்ந்த கடிதம் முழுதையும் வாசித்துப் பார்த்துவிட்டு, அவளை நோக்கி, ''இன்றைக்கென்ன கிழமை?'' என்று தமிழில் கேட்டார். அவள் 'புதவாரமு' என்று தெலுங்கில் மறுமொழி சொன்னாள்.

''மீரு தெலுகு வச்சுனா?'' என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.

''அவுனு சால பாக வச்சுனு'' என்றாள் விசாலட்சி.

இங்கு நமது கதை வாசிப்போரிலே பலருக்குத் தெலுங்கு பாஷை தெரிந்திருக்க வழியில்லையாதலால், அவ்விருவருக்குள் தெலுங்கில் நடைபெற்ற சம்பாஷணையை நான் தமிழில் மொழிபெயர்த்துத் தருகிறேன்.

''உனக்குத் தாய் தந்தையர் இருக்கிறார்களா?'' என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.

''இல்லை'' என்றாள் விசாலாட்சி.

''அண்ணன், தம்பி, அக்காள், தங்கை-?''

''எனக்கு யாருமே இல்லை. அதாவது, என்னுடைய விவகாரங்களிலே கவனம் செலுத்தி என்னைக் காப்பாற்றக்கூடிய பந்துக்கள் யாருமில்லை. அப்படியே சிலர் இருந்தபோதிலும், நான் இப்போது விவாகம் செய்துகொள்ளப் போவதினின்றும் அவர்கள் என்னை ஜாதிக்குப் புறம்பாகக் கருதி விடுவார்கள்'' என்று விசாலாட்சி சொன்னாள்.

''உனக்கு என்னென்ன பாஷைகள் தெரியும்?'' என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார்.

''எனக்குத் தமிழ் தெரியும். தெலுங்கு தெரியும். இரண்டு பாஷைகளும் நன்றாக எழுதவும் வாசிக்கவும் பேசவுந் தெரியும்'' என்று விசாலாட்சி சொன்னாள்.

''இங்கிலீஷ் தெரியுமா?' என்று பந்துலு கேட்டார்.

''தெரியாது'' என்றாள் விசாலாட்சி.

''கொஞ்சங் கூட?'' என்று கேட்டார்.

''கொஞ்சங்கூடத் தெரியாது'' என்றாள்.

''சங்கீதம் தெரியுமா?'' என்று பந்துலு கேட்டார்.

''எனக்கு நல்ல தொண்டை. என் பாட்டை மிகவும் நல்ல பாட்டென்று என் சுற்றத்தார் சொல்வார்கள்'' என்று விசாலாட்சி சொன்னாள்.

''வீணை, பிடில், ஹார்மோனியம்-ஏதேனும் வாத்தியம் வாசிப்பாயா?'' என்று பந்துலு கேட்டார்.

''ஒரு வாத்தியமும் நான் பழகவில்லை'' என்றாள் விசாலாட்சி.

''தாளந் தவறாமல் பாடுவாயா?'' என்று பந்துலு கேட்டார்.

''தாளம் கொஞ்சங்கூடத் தவறமாட்டேன்'' என்று விசாலாட்சி சொன்னாள்.

''எங்கே? ஏதேனும் ஒரு பாட்டுப் பாடிக்காட்டு, பார்ப்போம்'' என்று பந்துலு கேட்டார்.

அந்த சமயத்தில் சமையலறைக்குள் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவளாகிய வீரேசலிங்கம் பந்துலுவின் கிழமனைவி உள்ளேயிருந்து இவர்கள் பேசிக் கொண்டிருந்த கூடத்துக்கு வந்து ஒரு நாற்காலியின் மீது உட்கார்ந்தாள். அவளைக் கண்டவுடன், விசாலாட்சி எழுந்து நமஸ்காரம் பண்ணினாள். அவள் ஆசீர்வாதங் கூறி வீற்றிருக்க விடை கொடுத்து விசாலாட்சியின் மடியிலிருந்த குழந்தையை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொண்டாள்.

குழந்தை வீறிட்டு அழத் தொடங்கிற்று.

''என்னிடம் கொடு, நான் அழாதபடி வைத்துக் கொள்ளுகிறேன்'' என்று பந்துலு சொன்னார். அவள் அக்குழந்தையைத் தன் கணவனிடம் கொடுத்தாள். அவர் மடிக்குப் போனவுடனே குழந்தையாகிய சந்திரிகை அழுகையை நிறுத்தியது மட்டுமன்றி வாயைத் திறந்து புன்னகை செய்யத் தொடங்கினாள்.

''கிழவருக்கு வேறொன்றுந் தெரியாவிட்டாலும், குழந்தைகளை அழாதபடி வைத்துக் கொள்வதில் மிகவும் சமர்த்தர்'' என்றாள் கிழவி.

''ஆமாம்! எனக்கென்ன தெரியும்? படிப்புத் தெரியுமா, இழவா? நீ தான் சகலகலா பண்டிதை'' என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலு முறுவலித்தார்.

அப்பால், வீரேசலிங்கம் பந்துலு தமக்கு ஜீ.சுப்பிரமணிய அய்யர் எழுதிய கடிதத்தில் கண்டபடி விசாலாட்சியின் விருத்தாந்தங்களையெல்லாம் விரித்துக் கூறினார்.

அவருடைய மனைவி இதைக் கேட்டு:- ''சென்ற வாரம் தங்களைப் பார்க்கும் பொருட்டுத் தஞ்சாவூர் டிப்டி கலெக்டர் ஒரு அய்யங்கார் வந்திருந்தாரன்றோ? அவர் தமக்கு ஒரு விதவைப் பெண் பார்த்து விவாகம் செய்து வைக்கவேண்டுமென்று தங்களை வேண்டினாரன்றோ? அவருக்கு இந்தப் பெண்ணைக் கொடுக்கலாம். இவளுடைய முதல் புருஷன் இவள் ருது ஆவதற்கு முன்னேயிறந்தானா? பிந்தி இறந்தானா?'' என்று வினவினாள்.

அப்போது வீரேசலிங்கம் பந்துலு:- ''அந்த விஷயம் உனக்குச் சொல்லத் தவறிவிட்டேனா? இதோ சொல்லுகிறேன் கேள். இவளுக்குப் பத்தாம் வயதிலே அந்தப் புருஷன் இறந்து போனான். அவன் இறந்து போய் இப்போது பதினைந்து வருஷங்களாயின'' என்றார்.

''சரி, அப்படியானால் அந்த டிப்டி கலெக்டர் யாதோர் ஆட்சேபமின்றி இவளை மணம் புரிந்து கொள்வார். முதற் புருஷனுடன் கூடியனுபவிக்காமல் கன்னிப் பருவத்திலே தாலியறுத்த பெண் தமக்கு வேண்டுமென்று அவர் சொன்னாரன்றோ?'' என்று கிழவி கேட்டாள்.

''ஆம், இவள்தான் அவர் விரும்பிய லட்சணங்களெல்லாம் பொருந்தியவளாக இருக்கிறாள். இவளை அவர் அவசியம் மணம் புரிந்துகொள்ள விரும்புவார். நீ சொல்லுமுன்பே, நான் இந்தக் கடிதத்தை வாசித்துப் பார்த்த மாத்திரத்தில், டிப்டி கலெக்டர் கோபலாய்யங்காரை நினைத்தேன். ஆனால் 'இந்தப் பெண் அவரை மணம் புரிந்து கொள்ள உடன்படுவாளோ' என்பதுதான் சந்தேகம்'' என்று பந்துலு சொன்னார்.

இதைக் கேட்டவுடனே கிழவி:- ''ஏன்? அவரிடத்தில் என்ன குற்றங் கண்டீர்? எலுமிச்சம் பழம் போலே நிறம்; ராஜபார்வை; பருத்த புஜங்கள்; அகன்ற மார்பு; ஒரு மயிர் கூட நரையில்லை; நல்ல வாலிபப் பருவம் டிப்டி கலெக்டர் உத்தியோகம் பண்ணுகிறார். எத்தனை கோடி தவம் பண்ணியோ, அவளுக்கு அப்படிப்பட்ட புருஷன் கிடைக்க வேண்டும்'' என்றாள்.

அப்போது வீரேசலிங்கம் பந்துலு:- ''அந்த கோபலாய்யங்கார் நீ சொன்ன லட்சணங்களெல்லாம் உடையவரென்பது மெய்யே. ஆனால் சாராயம் குடிக்கிறார். மாமிச போஜனம் பண்ணுகிறார். கட்குடியர் வேறென்ன நல்ல லட்சணங்களுமுடையவராக இருப்பினும் அவற்றை விரைவில் இழந்து விடுவார்கள். அவர்களுடைய செல்வமும் பதவியும் விரைவில் அழிந்து போய் விடும்'' என்றார்.

இது கேட்டு விசாலாட்சி:- ''சரி. அவர் என்னை விவாகம் செய்து கொள்ளும்படி ஏற்பாடு செய்யுங்கள். அவருடைய கெட்ட குணங்களையெல்லாம் நான் மாற்றி விடுகிறேன்'' என்றாள்.

''குடி வழக்கத்தை மாற்ற பிரம தேவனாலேகூட முடியாது'' என்று வீரேசலிங்கம் பந்துலு சொன்னார்.

அதற்கு விசாலாட்சி:- ''என்னால் முடியும். சாவித்திரி தன் கணவனை யமனுலகத்திலிருந்து மீட்டுக் கொண்டு வரவில்லையா? பெண்களுடைய அன்புக்கு சாத்தியப்படாது யாதொன்றுமில்லை. நான் அவருடைய மாமிச போஜன வழக்கத்தை உடனே நிறுத்தி விடுவேன். மது வழக்கத்தை ஓரிரண்டு வருஷங்களில் நிறுத்தி வைப்பேன். மற்ற லட்சணங்களெல்லாம் அவரிடம் நல்லனவாக இருப்பதால் இவ்விரண்டு குற்றங்களிருப்பது பெரிதில்லை. நான் அவரை மணம் புரிந்து கொள்ள முற்றிலும் சம்மதப்படுகிறேன்'' என்றாள்.

இது கேட்டு வீரேசலிங்கம் பந்துலு:- ''சரி. பாட்டுப் பாடத் தெரியும் என்றாயே? ஏதேனும் கீர்த்தனம் பாடு, கேட்போம்'' என்றார்.

''சுருதிக்குத் தம்பூர் இருக்கிறதோ?'' என்று விசாலாட்சி கேட்டாள்.

''ஹார்மோனியம் இருக்கிறது'' என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவி உள்ளே போய் ஒரு நேர்த்தியான சிறிய அழகிய 'மோஹின்' பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து விசாலாட்சியிடம் கொடுத்தாள்.

பெட்டியை மடிமீது வைத்து விசாலாட்சி முதற்கட்டை சுருதி வைத்துக்கொண்டு மிகவும் சன்னமான அற்புதமான குரலில் தியாகய்யர் செய்த ''மாருபல்கு கொன்னா லேமிரா'' (மறுமொழி சொல்லாதிருப்பதென்னடா?) என்ற தெலுங்குக் கீர்த்தனையைப் பாடினாள். கால் விரல்களினால் தாளம் போட்டாள்.

அப்போது அந்த வீட்டு வாசலில் ஒரு மோட்டார் வண்டி நின்ற சத்தம் கேட்டது. சேவகனொருவன் ஒரு சீட்டைக் கொண்டு வந்து வீரேசலிங்கம் பந்துலுவிடம் கொடுத்தான். அதைப் பார்த்தவுடனே வீரேசலிங்கம் பந்துலு எழுந்து தன் கையிலிருந்த குழந்தை சந்திரிகையை விசாலாட்சியிடம் நீட்டினார். அவள் கீர்த்தனத்தில் பல சங்கதிகளுடன் அனுபல்லவி பாடி முடித்து மறுபடி ''மாரு பல்க'' என்ற பல்லவியெடுக்குந் தறுவாயிலிருந்தாள்.

வீரேசலிங்கம் பந்துலு குழந்தையை நீட்டினவுடனே, விசாலாட்சி தன் கையிலிருந்த ஹார்மோனியப் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு எழுந்து நின்று குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டாள்.

''என்ன விசேஷம்? யார் வந்திருக்கிறார்கள்? என்ற பந்துலுவை நோக்கி அவருடைய மனைவி கேட்டாள்.

''கோபாலய்யங்காரே வந்து விட்டார். பழம் நழுவிப் பாலில் விழுந்தது'' என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலு மேல் வேஷ்டியை எடுத்துப் போர்த்துக் கொண்டு, மடமடவென்று வெளியே சென்றார்.

இவர் வெளியே போனவுடன், கிழவி விசாலாட்சியை நோக்கி, ''அவர்களிருவரும் வந்தால் தமக்குள்ளே பேசிக்கொண்டிருப்பார்கள். நாம் சமையறைக்குப் போய்விடுவோம். இன்று பகலில் கோபலாய்யங்கார் இங்கேயே போஜனம் பண்ணுவார். அவர் பந்துலுவைப் பார்க்க வந்தால், ஒரு வேளை ஆகாரமாவது இங்கு செய்யாமல் போவது வழக்கமில்லை. மேலும் இப்போது அவருக்கு ரஜாக்காலம். ஆதலால் நாம் விருந்துக்கு அழைத்தால் மறுத்துச் சொல்ல வேண்டிய ஹேது இராது. நீயும் இங்கேயே இரு. நாளைக்குப் போகலாம். பந்துலுவுக்கும் எனக்கும் மாத்திரமென்று ஒரு ரஸம், அன்னம், சட்னி, அப்பளம் பண்ணிவைக்கக் கருதியிருந்தேன். இப்போது விருந்து வந்து விட்டது. நேற்று வாங்கிக்கொண்டு வந்த வெங்கயாமும் புடலங்காயும் நிறைய மிஞ்சிக் கிடக்கின்றன. வெங்காய சாம்பார், தேங்காய் சட்னி, மைசூர் ரசம், புடலங்காய் பொடித்தூவல் , வடை, பாயசம் இவ்வளவும் போதும். அப்பளத்தை நிறையப் பொரித்து வைப்போம். கோபாலய்யங்காருக்குப் பொரித்த அப்பளத்தில் மோகம் அதிகம். சரி. நீ காலையிலே ஸ்நானம் பண்ணிவிட்டு தான் வந்திருக்கிறாய். குழந்தையை வேலைக்காரியிடம் கொடுத்தால் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருப்பாள். நீ கைகால் அலம்பிவிட்டு என்னுடன் சமையலுக்கு வா'' என்றாள்.

விசாலாட்சி ''அப்படியே சரி'' என்றாள். மாதர் இருவரும் சமையலறைக்குள்ளே புகுந்தனர். வேலைக்காரியும் குழந்தை சந்திரிகையும் அவ்வீட்டுக் கொல்லையிலிருந்த விஸ்தாரமான பூஞ்சோலையில் மர நிழலில் வீற்றிருந்த பட்சிகளின விளையாட்டுக்களையும் அற்புதமான பாட்டுகளையும் ரசித்துக் கொண்டிருந்தனர்.

குழந்தை சந்திரிகைக்கு வயது இப்போது மூன்று தானாயிற்று. எனினும், அது சிறிதேனும் கொச்சைச் சொற்களும் மழலைச் சொற்களும் இல்லாமல் அழுத்தந்திருத்தமாக வார்த்தை சொல்லும். அந்தக் குழந்தையின் குரல் சிறிய தங்கப் புல்லாங்குழலின் ஓசையைப் போன்றது. குழந்தையின் அழகோ வர்ணிக்குந் தரமன்று. தெய்விக ரூபம்; வனப்பின் இலக்கியம்.

சோலைப் பறவைகளெல்லாம் இக்குழந்தையின் அழகைக் கண்டு மயங்கிக் களிகொண்டு இதன் தலையைச் சுற்றிச் சுற்றி வட்டமிடலாயின. பலவிதக் குருவிகளும், குயில்களும், கிளிகளும், நாகணவாய்களும் தங்களுக்குத் தெரிந்த நாதங்களில் மிகவும் அழகிய நாதங்களைப் பொறுக்கியெடுத்து, இக்குழந்தையின் முன்னே வந்து நின்றொலித்தன. வானரங்கள் தமக்குத் தெரிந்த பாய்ச்சல்களிலும் நாட்டியங்களிலும் மிகவும் வியக்கத்தக்கனவற்றை இக்குழந்தைகளுக்குக் காண்பித்தன.

புன்னகை செய்த மலர்ச் சிறு வாயைச் சந்திரிகை மூடவேயில்லை. வானமும், சூரியனும், ஒளியும், மேகங்களும், மரங்களும், செடிகளும், கொடிகளும், மலர்களும், சுந்தரப் பட்சிகளும் கூடிக் காலை நேரத்தில் விளைவித்த அற்புதக் காட்சியிலும், பறவைகளின் ஒலிகளிலும் சந்திரிகை சொக்கிப் போய்விட்டாள்.

ஒரு சமயம் அவள் தன்னை மறந்து எழுந்து வானத்தை நோக்கி நின்று இரண்டு கைகளையும் கொட்டிக்கொண்டு கூத்தாடுவாள். ஒரு சமயம் பட்சிகளின் ஒலிகளை அனுசரித்துத் தானும் கூவுவாள்.

இங்ஙனமிருக்கையில், வேலைக்காரி குழந்தையை நோக்கி:- ''நீ ஒரு பாட்டுப்பாடு'' என்றாள். ''அத்தை கற்றுக் கொடுத்த 'நந்தலால்' பாட்டுப் பாடலாமா?'' என்று சந்திரிகை கேட்டாள்.

''அந்த அம்மா உனக்குத் தாயில்லையா? அத்தையா?'' என்று வேலைக்காரி கேட்டாள்.

அதற்குச் சந்திரிகை:- ''என் தந்தையும், தாயும் நான் பிறந்தன்றைக்கே செத்துப் போய்விட்டார்கள். இந்த சங்கதி எனக்கு அத்தை சொன்னாள். நடுராத்திரி வேளையாம், பூமி நடுங்கிற்றாம், பேய்க் காற்றடித்ததாம். சோனை மழை பெய்ததாம். எங்கள் ஊர் முழுதும், எல்லா வீடுகளும் இடிந்து விழுந்து, அத்தனை ஜனங்களும் செத்துப் போய்விட்டார்களாம். எங்கள் வீடும் இடிந்து அப்பா, தாத்தா, பாட்டி, என்னுடைய அக்காமார் ஐந்து குழந்தைகள் ஆகிய எல்லாரும் செத்துப் போய்விட்டார்கள். அம்மாவும் அத்தையுமிருந்த குச்சில் மாத்திரம் இடிந்து விழவில்லை. அம்மா வயிற்றுக்குள்ளே நான் இருந்தேன். அப்பால் நான் அந்த இராத்திரியிலேயே பிறந்தேன். நான் பிறந்தவுடனே அம்மா செத்துப் போனாள். இதுவெல்லாம் அத்தை எனக்குச் சொன்னாள். அது முதல் எனக்குப் பசுவின் பாலும் சாதமும் கொடுத்து, அத்தைதான் காப்பாற்றிக் கொண்டு வருகிறாள்'' என்று தன் குழந்தைப் பாஷையில் கால்மணி நேரத்தில் சொல்லி முடித்தது. ஆனால் உடைந்த சொற்களும், நிறுத்தி, நிறுத்தி, யோசித்து, யோசித்து, மெல்ல மெல்லப் பேசுவதும் இருந்தனவேயல்லாது, பொருள் விளங்காததும் உருச் சிதைந்ததுமாகிய குதலைச் சொல் ஒன்றுகூடக் கிடையாது.

இங்ஙனம் அந்த அழகிய குழந்தை பேசிக்கொண்டு வருகையில் அதன் விழிகளிலும் இதழ்களிலும் பொறி வீசியெழுந்த அன்புச் சுடரையும் அறிவுச் சுடரையும் பணிப்பெண் மிகவும் உற்று நோக்கி கவனித்துக் கொண்டு வந்தாள். அவள் அதன் அழகில் மயங்கிப் போய் அதனை எடுத்து மார்பாரத் தழுவிக் கொண்டு முகத்தோடு முகமொற்றி முத்தமிட்டாள்.

அந்த சமயம் காலை பதினொரு மணியிருக்கும். சுகமான காற்று வீசிக்கொண்டிருந்தது. அந்தப் பணிப்பெண் அவளை முத்தமிடும் செய்கையை இருவர் பார்த்துக் கொண்டு நின்றனர். அவ்விருவரில் ஒருவர் அவள் மீது காதல் கொண்டார்.

Add a comment


மறுநாட் காலையில் வீரேசலிங்கம் பந்துலு ஒரு ஆளுனுப்பி வேங்கடாசல நாயுடுவைத் தமது வீட்டுக்கு வரவழைத்தார். நாயுடு, பந்துலு, அய்யங்கார் மூவருமிருந்து பரியாலோசனை செய்யத் தொடங்கினார்கள். நாயுடுவும் பந்துலுவும், பணிப்பெண்ணாகிய மீனாட்சியை அய்யங்கார் விவாகம் செய்ய நினைப்பது தகாதென்றும், விசாலாட்சியை மணம் புரிவதே தகுமென்றும் பல காரணங்களுடன் எடுத்துரைத்தனர். அய்யங்காரின் மனதில் அக்காரணங்கள் தைக்கவேயில்லை. சுயநலத்துக்- கனுகூலமாக இருக்கும் காரணங்களை அங்கீகரிப்பதும் பிறர்க்குரைப்பதும் மனித இயற்கை. சுயநலத்துக்கு விரோதமாக நிற்கும் நியாயங்களை சாதாரணமாகப் புறக்கணித்து விடுதலும் அல்லது அவற்றுக்கு எதிர் நியாயங்கள் கண்டு பிடிக்க முயல்வதும் மனித இயல்பாம். நியாய சாஸ்திரமோ வாதி பிரதிவாதி என்ற இரண்டு வகையினரின் கொள்கைகளுக்கும் இடங் கொடுக்கத்தக்கது. திருவாங்கூரில் சிறிது காலத்துக்கு முன்பு 'தர்மசங்கடம் சங்கரய்யர்' என்றொரு நியாயாதிபதி இருந்தாராம். அவர் தம்முன் விசாரணைக்கு வரும் வழக்குகளில் அனேகமாக ஒவ்வொன்றிலும் எந்தக் கட்சி சொல்வது நியாயமென்று தெரியாமல் மிகவும் சங்கடப்படுவாராம். 'நியாயம் எப்படி வேண்டுமானாலும் போகுக' என்றெண்ணி, சௌகர்யப்படிக்கும் மனம் போனபடிக்கும் தீர்ப்புச் செய்யுங் குணம் அவரிடம் கிடையாது. எப்படியேனும் உண்மையைக் கண்டுபிடித்து நீதி செலுத்த வேண்டுமென்பது அவருடைய கொள்கை. ஆனால், அங்ஙனம் செய்யப் புகுமிடத்தே, ''வாதி சொல்வதைக் கேட்டால் வாதி கட்சி உண்மையென்று தோன்றுகிறது. பிரதிவாதி சொல்வதைக் கேட்டால் பிரதிவாதி கட்சி மெய்யென்று தோன்றுகிறது. நான் எந்தத் கட்சிக்குத் தீர்ப்புச் சொல்வேன்?'' என்று அவர் தம்முடைய நண்பரிடங் கூறி வருத்தப்படுவாராம். இது பற்றி அவருடைய நண்பர்கள் அந்த நியாயாதிபதிக்கு 'தர்மஸங்கடம் சங்கரய்யர்' என்று பட்டப் பெயர் சூட்டினார்கள்.

இவ்வுலகத்தில் வெறுமே நீதி ஸ்தலத்து வழக்குக்களின் விஷயத்தில் மாத்திரமேயன்றி, ஜன சமூக சம்பந்தமாகவும், மத சம்பந்தமாகவும், பிற விஷயங்களைப் பற்றியும் தோன்றும் எல்லா வழக்குகளிலும் இங்ஙனமே நடு உண்மை கண்டு பிடித்தல் சாலவும் சிரமமென்று நான் நினைக்கிறேன். அளவற்ற தவமும் அதனால் விளையும் ஞானத்தெளிவுமுடையோரை எதிலும் பட்சபாதமற்ற மயக்கமற்ற நடு உண்மை கண்டு தேரவல்லார். மற்றப்படி உலகத்து வழக்குக்கள் பெரும்பான்மையிலும், வலிமையுடைய மனிதருக்கும் வகுப்புக்களுக்கும் சார்பாகவே நியாயந் தீர்க்கப்படுகின்றது.

''பொய்யுடை யருவன் சொல்வன்மையினால்
மெய்போலும்மே; மெய்போலும்மே
மெய்யுடை யருவன் சொல்லமாட்டாமையால்
பொய்போலும்மே பொய்போலும்மே''.

இங்ஙனம் சொல்வலிமை மட்டுமேயன்று; ஆள் வலிமை, தோள் வலிமை, பொருள் வலிமை-எல்லாவித வலிமைகளும் நியாயத்தராசைத் தமது சார்பாக இழுத்துக் கொள்ளவல்லன.

எனவே, அய்யங்கார் தம்முடைய உயர்ந்த கல்வியாலும், உயர்ந்த உத்தியோகத்தின் வலிமையாலும் தம்முள்ளத்திலமைந்த பேராவலின் வலியாலும் நாயுடுவையும் பந்துலுவையும் எளிதாகத் தமது சார்பில் திருப்பிக் கொண்டார். அப்பால் நாயுடுவிடம் பனிப்பெண்ணின் பூர்வோத்தரங்களைக் குறித்து விசாரிததார். அவள் இடையர் வீட்டுப் பெண்ணென்றும், அவளுடைய தந்தை பல மாடுகள் வைத்துக் கொண்டு ஊராருக்குப் பால் விற்று ஜீவனம் செய்வாராய்ப் பக்கத்துத் தெருவில் வசிக்கிறாரென்றும், அந்தப் பெண்ணுக்கு இரண்டு மூத்த சகோதரர் இருக்கிறார்களென்றும், அவர்கள் ஆலையில் வேலை செய்கிறார்களென்றும், தலைக்குப் பதினைந்து ரூபாய் சம்பளமென்றும், அவளுக்குத் தாய் இறந்து போய்விட்டாளென்றும், தமையன்மாரின் மனைவிகளே அவர்களுடைய வீட்டில் சமையல் செய்கிறார்களென்றும், ஆதலால் மீனாட்சிக்குத் தன் வீட்டில் எவ்விதமான வேலையுங் கிடையாதென்றும், நாயுடுவின் வீட்டிலும், அவளுக்குக் குழந்தைகளை மேற்பார்த்தல், சாமான்கள் வாங்கிக் கொண்டு வருதல் முதலிய கௌரவமான காரியங்களே கொடுபட்டிருக்கின்றனவென்றும், வீடு வாயில் பெருலுக்குதல், பாத்திரங் கழுவுதல், துனி தோய்த்தல் முதலிய கீழ்க்காரியங்கள் அவள் செய்வது கிடையாதென்றும், அவள் கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் படித்து நன்றாகத் தமிழ் எழுத வாசிக்கக் கற்றுக் கொண்டு இருக்கிறாள் என்றும், அமைதி பொறுமை இன்சொல் பணிவு முதலிய நல்ல குணங்களுடையவளென்னும், அவளுக்கு மாதம் நாயுடு வீட்டில் பன்னிரண்டு ரூபாய் சம்பளமென்றும், அதை அவள் வீட்டில் கொடுக்கவில்லையென்றும், நாட்டுக்கோட்டை ம.சி. மாணிக்கஞ் செட்டியார் கடையில் தன் பெயருக்கு வட்டிக்குக் கொடுத்து விடுகிறாளென்றும், அந்தத் தொகை இதுவரை வட்டியுடன் ஐந்நூறு ரூபாய் இருக்குமென்றும், அவளுக்கு வயது இருபதென்றும், இன்னும் விவாகம் ஆகவில்லையென்றும், விவாகத்துக்கு அவள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறாளென்றும் நாயுடு விஸ்தாரமாகத் தெரிவித்தார்.

''அவளுடைய தந்தையின் பெயரென்ன? அவர் இப்போது வீட்டிலிருப்பாரா?'' என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

''அவளுடைய தந்தையின் பெயர் சுப்புசாமிக் கோனார். அவர் இப்போது வீட்டிலிருப்பார்'' என்று நாயுடு சொன்னார். உடனே கோபாலய்யங்காரின் வேண்டுகோளுக்கிணங்கி அவருடன் நாயுடு, பந்துலு இருவரும் சேர்ந்து மூவருமாகப் பக்கத்துத் தெருவிலிருந்த சுப்புசாமிக் கோனாருடைய வீட்டுக்குப் போனார்கள். அங்கு சுப்புசாமிக் கோனார் காலையிலெழுந்து பழையது சாப்பிட்டுவிட்டு, வெற்றிலை பாக்கு புகையிலை போட்டுக் கொண்டிருந்தார். நாயுடுவையும் அவருடைய நண்பரிருவரையும் கண்டவுடன் அவர் எழுந்து நின்று, உள்ளேயிருந்து ஒரு நீளப்பலகை கொண்டு போட்டார். வந்தவர் மூவரும் அதன்மீது உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு, நாயுடு தாங்கள் வந்த நோக்கத்தை சாங்கோபாங்கமாகக் கோனாரிடம் எடுத்துரைத்தார். செக்கச்செவேலென்ற முகமும் கன்னங்கரேலென்ற சுருள் சுருளான கத்தரித்த முடிமயிரும், அகன்ற தெளிந்த அறிவுசுடர்கின்ற விழிகளும், துருக்கமீசையும், விரித்த மார்பும் திரண்ட தோளும், வயிரப் பொத்தான் போட்ட பட்டுச் சட்டையும், தங்க கடிகாரமுமாகத் தமக்கு டிப்டி கலெக்டர் கோபாலய்யங்கார் மாப்பிள்ளையாக வருவதைக் கண்டு சுப்புசாமிக் கோனார் பரவசமாய் விட்டார். அவருள்ளத்தில் ஆனந்தக்களி ததும்பலாயிற்று. ஆயினும் பிராமணருக்கு பெண் கொடுத்தால் பாவம் நேருமென்ற ஒரு விஷயம் மாத்திரம் அவர்மனதை மிகச் சஞ்சலப்படுத்திற்று.

''நான் என்ன செய்வேன். சாமி? வயதானவன். எனக்கு இனிமேல் இவ்வுலகத்தாசை ஒன்றுமேயில்லை. எனக்கினிப் பரலோக்ததைப் பற்றிய ஆசைகளே மிஞ்சியிருக்கின்றன. அதனால் சிறீமந் நாராயணனையும் ஆழ்வார்களையும் எம்பெருமானாரையும் சிறீ வைஷ்ணவர்களையும் சரணாகதியடைந்திருக்கிறேன். எப்போதும் இவர்களையே ஸ்மரித்துக் கொண்டும் இவர்களுக்கு என்னாலியன்ற கைங்கர்யங்கள் செய்து கொண்டும் என் வாழ்நாளைச் செலவிடுகிறேன். நான் சாஸ்திரங்களில் நம்பிக்கையுடையவன். பிராமணருக்கு நான் சூத்திரப் பெண்ணைக் கலியாணம் செய்து கொடுப்பதனால் எனக்குப் பாவம் நேரும். ஆதலால், நான் இந்த விஷயத்துக்கு சம்மதப்பட வழியில்லை'' என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார்.

இதைக் கேட்டு கோபாலய்யங்கார்-''கோனாரே, முதலாவது, நான் பிராமணனில்லை. நான் பிராமண தர்மத்துக்குரிய ஆசாரங்களைத் துறந்து சூத்திரனாகிவிட்டேன். ஆதலால் தாங்கள் என்னைத் தங்கள் ஜாதியானாகவே பாவித்து, எனக்குத் தங்கள் மகளை மணம் புரிவிக்க வேண்டுகிறேன். மேலும் நிஷமான பிராமணனே பிராமண குலத்தில் மாத்திரமின்றி மற்ற நான்கு வர்ணங்களிலும் பெண்ணெடுக்கலாமென்று சாஸ்திரம் சொல்லுகிறது. இந்த விஷயத்தில் உங்களுக்கு சந்தேகமிருந்தால், என்னிடம் தமிழில் மனு ஸ்ம்ருதி இருக்கிறது; உங்களிடம் அந்த நூலைக் காட்டுகிறேன். அதை நீங்களே வாசித்துப் பாருங்கள். உங்களுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியுமோ, தெரியாதோ? தெரியுமா? அப்படியானால் நீங்கள் நான் சொல்வது மெய்யென்பதைக் கண்கூடாகப் பார்த்தறிந்து கொள்ளலாம். இதில் எவ்விதமான பாவத்துக்கும் இடமில்லை'' என்றார்.

''அங்ஙனம் சாஸ்திரமிருப்பது மெய்தான்'' என்று வேங்கடாசல நாயுடு சொன்னார்.

''ஆமாம்; அதுவே மனு ஸ்ம்ருதியின் கொள்கை'' என்று வீரேசலிங்கம் பந்துலு கூறினார்.

''எனினும், உலக ஆசாரத்தில் அவ்விதம் வழங்குவதைக் காணோமே?'' என்று சுப்புசாமிக் கோனார் ஆட்சேபித்தார்.

''நமது தேசத்தில் பூர்வ சாஸ்திரங்களுக்கும் நடைகளுக்கும் விரோதமான ஆசாரங்கள் பல பிற்காலத்தில் வழக்கமாய்விட்டன. அவற்றுள் இந்த விஷயமும் ஒன்றாம். இவ்ஷியத்தில் நமக்குத் தற்கால ஆசாரம் அதிகப் பிரமாணமன்று. முற்காலத்து சாஸ்திரமே அதிகப் பிரமாணம்'' என்று கோபாலய்யங்கார் சொன்னார்.

அப்போது வேங்கடாசல நாயுடு சொல்லுகிறார்:- ''கேளும், சுப்புசாமிக் கோனாரே! பாவம் என்பதெல்லாம் வீண் பேச்சு. இது சாஸ்த்ரோக்தமான விஷயம். இதில் யாதொரு பாவமும் கிடையாது. அப்படியே பாவமிருந்த போதிலும், அது மாப்பிள்ளையையும் பெண்ணையும் சாருமேயன்றி, உம்மைச் சாராது. அது தவறி, உமக்கும் சிறிது பாவம் வந்து நேரக்கூடுமென்றாலும், அதற்குத் தகுந்த பிராயச்சித்தங்கள் பண்ணிவிடலாம். பெருமாள் கோயிலுக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தினால் போதும். அதில் எவ்வளவு கொடிய பாவமும் வெந்து சாம்பலாய்ப் போய்விடும். உமக்கு எத்தனை பணம் வேண்டுமானாலும், அய்யங்காரவர்கள் கொடுப்பார்'' என்றார்.

பணம் என்ற மாத்திரத்திலே பிணமும் வாயைத் திறக்கும் என்பது பழமொழி. சுப்புசாமிக் கோனார் ஏறக்குறையக் கொட்டாவியளவுக்கு வாயைப் பிளந்தார்.

''எனக்குக் கொஞ்சம் கடன் பந்தங்களும் இருக்கின்றன. அவற்றையுந் தீர்த்துவைக்க ஏற்பாடு செய்தால் நல்லது'' என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார்.

''தங்களுக்கு எத்தனை ரூபாய்க்குக் கடன் இருக்கிறது?'' என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

''ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது'' என்றார் கோனார்.

''மூவாயிரம் ரூபாய் கொடுக்கிறேன்; போதுமா?'' என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

''ஓ! யதேஷ்டம்! இந்த வாரத்துக்குள்ளே விவாகத்தை முடித்துவிடலாம்'' என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார். அப்பால் மீனாட்சியை அழைத்து அவளுடைய சம்மதத்தையும் தெரிந்து கொண்டால் நல்லதென்று கோபாலய்யங்கார் கூறினார்.

''அவள் இப்போது வீட்டிலில்லை. நானே அவளிடம் சொல்லி விடுகிறேன்: அவள் சிறு குழந்தை. அவள் பிறந்ததுமுதல் இதுவரை என் வார்த்தையை ஒருமுறை கூடத் தட்டிப் பேசியது கிடையாது. இப்போது இத்தனை உயர்ந்த, இத்தனை மேன்மையான சம்பந்தம் கிடைக்குமிடத்தில் அவள் என் சொல்லைச் சிறிதேனும் தட்டிப் பேசமாட்டாள்'' என்றார் கோனார்.

''எதற்கும் அவளை அழைத்து ஒருமுறை அவளிடமும் கேட்டால் தான் என் மனம் சமாதானமடையும். நாங்கள் இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறோம். அவளை அழைப்பியுங்கள்'' என்று கோபாலய்யங்கார் சொன்னார். அங்ஙனமே கோனார் ஒரு ஆளைவிட்டு மீனாட்சியை அழைத்து வரும்படி செய்தார். மீனாட்சி வந்தாள். அவளைத் தனியாக அழைத்துப் போய் சுப்புசாமிக் கோனார் விஷயங்களைத் தெரிவித்தார். மாப்பிள்ளையின் படிப்பையும், செல்வத்தையும், பதவியையும் மிகவும் உயர்வாக்கி வர்ணித்தார். மாப்பிள்ளையின் அழகை அவள் பார்க்கும்படி அவரையும் காண்பித்தார். அவள் அவருக்கு வாழ்க்கைப்பட சம்மதமுற்றாள். சிறிது நேரத்துக்குள் மகளையும் அழைத்துக்கொண்டு சுப்புசாமிக் கோனர் புறத்து திண்ணைக்கு வந்து சேர்ந்தார். அவளுடைய விழிகளை கோபாலய்யங்கார் நோக்கினார். அவள் எதிர் நோக்களித்தாள். 'கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின், வாய்ச்சொற்கள் என்ன பயனுமில'' என்றார் திருவள்ளுவ நாயனார். அவளைப் பார்த்த மாத்திரத்திலே தம்மை மணம் புரிய சம்மதப்பட்டு விட்டாளென்று கோபாலய்யங்காருக்குத் தெளிவாகப் புலப்பட்டு விட்டுது. எனினும், பரிபூர்ணநிச்சயமேற்படுத்திக் கொள்ளுமாறு அவர் சுப்புசாமிக் கோனாரை நோக்கி, ''மீனாட்சி என்ன சொல்லுகிறாள்?'' என்று கேட்டார்.

''அவளிடத்திலே நேராகக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே'' என்றார் கோனார்.

''என்ன மீனாட்சி? என்ன சொல்லுகிறாய்? என்னை மணம் புரிந்து கொள்ள சம்மதந்தானா?'' என்று கோபாலய்யங்கார் கேட்டார்.

மீனாட்சி ''சம்மதம்'' என்று மெதுவாகக் கூறித் தலைக்கவிழ்ந்தாள். கோபலயங்காருக்கு ஜீவன் மறுபடி உண்டானது போல் ஆயிற்று. அவர் முகத்தில் புன்னகை தோன்றிற்று.

அந்த வாரத்திலேயே கோபாலய்யங்காரும் மீனாட்சியும் பிரமஸமாஜத்தில் சேர்ந்து கொண்டார்கள். அவ்விருவருக்கும் பிரம ஸமாஜ விதிகளின்படி, சென்னப்பட்டணத்தில் ஸமாஜக் கோயிலிலே விவாகம் நடைபெற்றது. விவாகம் முடிந்தவுடனே கோபாலய்யங்கார் தமது மனைவியை அழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்குப் போய் அங்கு தம் உத்தியோகத்தில் சேர்ந்து கொண்டார்.

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework