விசாலாட்சிக்கு நேர்ந்த சங்கடங்கள்
- விவரங்கள்
- சி.சுப்ரமணிய பாரதியார்
- தாய்ப் பிரிவு: சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
- சந்திரிகையின் கதை
கோபாலய்யங்காருக்குத் தன்னை மணம் புரிந்து கொள்ள சம்மதமில்லையென்று தெரிந்த மாத்திரத்தில், விசாலாட்சி வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவியிடம் தனக்கு வேறெங்கேனும் நல்ல வரன் தேடி வாழ்க்கைப்படுத்த வேண்டுமென்று மேன்மேலும் மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தாள். அதற்குப் பந்துலுவின் மனைவி ''நீ எங்களுடன் இங்கேயே இன்னும் பத்துப் பதினைந்து நாள் இரு. இன்னும் சில தினங்கள் வரை பந்துலு கோபாலய்யங்காரின் விவாகத்துக்கு வேண்டிய காரியங்களிலேயே கருத்துச் செலுத்த நேரும். உன் விஷயத்தைக் கவனிக்க அவருக்கு அவகாசம் இராது. பத்து நாள் ஆன பின்பு நாங்கள் ராஜமஹேந்திரபுரத்துக்குப் போவோம். நீயும் எங்களுடன் வா. எப்படியாவது உனக்கு நான் வரன் தேடிக் கொடுக்கிறேன். ஆனால் அவசரப்படுவதில் யாதொரு காரியமும் நடக்காது. சிறிது காலம் பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்'' என்றாள்.
இதுகேட்டு விசாலாட்சி:- ''மயிலாப்பூரில் என்னுடைய அம்மங்கார் (மாமன் மகள்) இருக்கிறாள். அவளுடைய புருஷன் ஹைகோர்ட் வக்கீல் உத்தியோகம் பார்க்கிறார். பந்துலுகாரு கோபாலய்யங்கரின் விஷயத்தை கவனித்துக் கொண்டிருக்கையில், நான் இங்கு சும்மா ஏன் இருக்க வேண்டும்? இந்தப் பத்து நாளும் நான் போய் மயிலாப்பூரிலே தாமஸிக்கிறேன். பத்து நாள் கழிந்தவுடன் இங்கு வருகிறேன்'' என்றாள்.
பிறகு அவர்கள் இவ்விஷயத்தைக்குறித்து வீரேசலிங்கம் பந்துலுவிடம் ஆலோசனை செய்தார்கள். அவர் விசாலாட்சி தன் இஷ்டப்படி செய்வதைத் தடுக்கத் தமக்கு சம்மதமில்லையென்றும், அவள் மயிலாப்பூரில் பத்து நாள் இருந்துவிட்டு வரலாமென்றும், இதற்கிடையில் அவசரம் நேர்ந்தால் தாம் மயிலாப்பூருக்குக் கடிதமனுப்பி விசாலாட்சியைத் தருவித்துக் கொள்ளக் கூடுமென்றும் தெரிவித்தார்.
''மயிலாப்பூரில் உன் பந்துவின் விலாசமெப்படி?'' என்று பந்துலு கேட்டார்.
அதற்கு விசாலாட்சி:- ''என் அம்மங்காருடைய ( மாமன் மகளுக்கு அம்மங்கார் என்றும் அத்தை மகளுக்கு அத்தங்கார் என்றும் பிராமணர்களக்குள்ளே பெயர்கள் வழங்கி வருகின்றன. சிலருக்கு ஒரு வேளை இச் சொற்கள் தெரியாமலிருக்கக்கூடுமாதலால் அவற்றை இங்கு விளக்கிக் கூறினேன்.) புருஷன் மயிலாப்பூரில் லஸ் சர்ச் ரஸ்தாவிலிருக்கிறார். அவருடைய பெயர் சோமநாதய்யர். ஆனால் அவரும் என் அம்மங்காரும் அவர் வீட்டிலிருக்கும் அவருடைய தாயாரும் மிகவும் வைதிக நம்பிக்கைகளுடையவர்கள். நான் மறுபடி விவாகம் செய்துகொள்வதில் அவர்களுக்கு சம்மதம் இராது. விவாகம் நடந்து முடியும்வரை. நான் விவாகம் செய்துகொள்ளப் போகிறேனென்ற விஷயத்தை என் பந்துக்களுக்கு அநாவசியமகாத் தெரிவிப்பிதில் எனக்கு சம்மதமில்லை. ஆதலால், தாங்கள் நான் இருக்குமிடத்துக்கு ஆளேனும் கடிதமேனும் அனுப்ப வேண்டியதில்லை. இன்ன தேதியன்று நான் இங்கு வரவேண்டுமென்று இப்பொழுதே சொல்லிவிடுங்கள். அந்தத் தேதியில் நான் இங்கு வருகிறேன். அதற்கிடையே என்னை மறந்து போய்விடாமல் என் காரியத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருங்கள்'' என்றாள்.
அப்போது பந்துலு, ''நான் உன்னை மறக்கவே மாட்டேன். உன் விவாகம் நடப்பதற்குரிய யோசனை என் புத்தியில் அகலாதே நிற்கும். நீ அதைக் குறித்துக் கவலைப்பட வேண்டா. ஜனவரி மாதம் இருபதாந் தேதி நான் இங்கிருந்து ராஜமஹேந்திரபுரத்துக்குப் புறப்படப் போகிறேன். நீ ஜனவரி மாதம் பதினெட்டாந்தேதி இங்கு வா'' என்றார்.
இது கேட்டு விசாலாட்சி:- ''தாங்கள் இந்த ஊரிலிருக்கும்போதே எனக்கொரு வரன் தேடிக் கொடுக்க முயற்சி பண்ணுவதே உசிதமென்று நினைக்கிறேன். இது ராஜதானிப் பட்டணம். இங்கு கிடைக்காத வரன் ஒதுக்கமான கோதாவரிக் கரையில் எங்ஙனம் கிடைக்கப் போகிறான்?'' என்றாள்.
அதற்குப் பந்துலு:- ''அப்படியில்லையம்மா. இங்கிருந்தாலும் ராஜமஹேந்திரபுரத்திலிருந்தாலும் ஒன்று போலேதான். இவ்விஷயத்தில் சிரத்தையெடுக்கக்கூடிய நண்பர்கள் எனக்குப் பல ஊர்களிலே இருக்கிறார்கள். அவர்களுக்குக் கடிதமெழுதுவேன். அவர்கள் அவ்வவ்விடங்களில் விசாரித்து விடையெழுதுவார்கள். பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்வேன்'' என்றார்.
''பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கும்போது என் பெயர் போடக்கூடாது'' என்றாள் விசாலாட்சி.
''சரி. பெயர் போடாமல் பொதுப்படையாக எழுதுகிறேன். இந்த கோபாலய்யங்காரின் விவாகம் இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிந்து போய் விடும். பிறகு, உன் காரியத்தை முடிக்கு முன்பு நான் வேறெந்த வேலையையும் கவனிக்க மாட்டேன். எத்தனை சிரமப்பட்டேனும் உன் நோக்கத்தை நான் நிறைவேற்றிக் கொடுக்கிறேன். பயப்படாதே'' என்று பந்துலு சொன்னார்.
''அப்படியானால், என்னை ஜனவரி பதினெட்டாந் தேதியா இங்கு வரச் சொல்லுகிறீர்கள்?'' என்று விசாலாட்சி கேட்டாள்.
''இன்னும் ஏழெட்டு நாளில் கோபாலய்யங்கார் விஷயம் முடிந்து போய்விடும். எனவே ஜனவரி பத்தாந் தேதி இங்கு வந்துவிடு'' என்றார் பந்துலு.
அப்பால் பந்துலுவிடமும் அவர் மனைவியிடமும் விடைபெற்றுக் கொண்டு விசாலாட்சி, சந்திரிகை சகிதமாக, மயிலாப்பூர் லஸ் சர்ச் ரஸ்தாவில் ஹைகோர்ட் வக்கீல் சோமநாதய்யர் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
வக்கீல் சோமநாதய்யரின் மனைவிக்குப் பெயர் முத்தம்மா. நமது விசாலாட்சியை கண்டவுடன் இவள் மிகுந்த ஆவலுடன் நல்வரவு கூறி உபசாரம் பண்ணினாள். இவ்விருவரும் அத்தங்கார் அம்மங்கார் என்ற உறவு மாத்திரமேயன்றி பால்ய முதலாகவே மிகவும் நெருங்கிய நட்புடன் பழகி வந்தவர்கள்.
முத்தம்மா திருநெல்வேலியில் தெப்பக் குளத்தெருவில் பிறந்து வளர்ந்து வந்தவள். திருநெல்வேலியிலிருந்து வேளாண்குடி மிகவும் சமீபமாதலால் இவ்விருவரும் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. சுற்றுப் பக்கங்களிலுள்ள கிராமங்களில் எங்கு எந்த பந்துக்கள் வீட்டில் என்ன விசேஷம் நடந்த போதிலும், அங்கு விசாலாட்சியும் வருவாள்; முத்தம்மாளும் வந்துவிடுவாள். வந்தால், இவ்விருவர் மாத்திரம் எப்போதும் இணைபிரிவதே கிடையாது. சாப்பாட்டுக்கு உட்கார்வதென்றால், இருவருமே கூடவே தொடை மேல் தொடை போட்டுக்கொண்டு உட்கார்வார்கள். விளையாட்டிலும் பிரிய மாட்டார்கள். விளையாட்டு முடிந்தால் இருவரும் கைகோத்த வண்ணமாகவே சுற்றித் திரிவார்கள். இராத்திரி, இருவரும் ஒரே பாயில் கட்டிக் கொண்டு படுத்திருப்பார்கள். மேலும், ஒரு சமயத்தில் முத்தம்மாளை அவளுடைய தந்தை வேளாண்குடியில் தன் தமக்கை வீட்டிலேயே, அதாவது, விசாலாட்சியின் தாய் வீட்டிலேயே, ஆறேழு மாதம் இருக்கும்படி விட்டிருந்தார். அது எப்போதென்றால், பத்தாம் வயதில் விசாலாட்சி தாலியறுத்த சமயத்தில், அப்போது முத்தம்மா வந்து வேளாண்குடியில் சில மாதங்களிருந்தால்தான் தன் மகளுக்கு ஒருவாறு ஆறுதலேற்படுமென்று கருதி விசாலாட்சியின் தாய் தன் தம்பிக்கு அவசரமாகச் சொல்லியனுப்பினான்.
தமக்கையின் வார்த்தையைத் தட்ட மனமில்லாமல், அவர் அங்ஙனமே முத்தம்மாளை வேளாண்குடியில் கொண்டு விட்டிருந்தார். ஒரே வீட்டில் ஒன்றாகக் குடியிருந்தபோது அவ்விருவரின் உளங்களும் ஒட்டியே போய்விட்டன. வேளாண்குடியிலிருந்து திரும்பித் திருநெல்வேலிக்குச் சென்ற பிறகுங்கூட நெடுங்காலம் வரை இரா வேளைகளில் கனவிலெல்லாம் முத்தம்மா விசாலாட்சியுடன் சம்பாஷணை நடத்துவது போலவே பேசிக் கொண்டிருப்பாள்.
விசாலாட்சியோவெனில், அப்பிரிவு நிகழ்ந்து நெடுங்காலம் வரை பகலிலேயே தன்னுடைய மற்றத் தோழிப் பெண்களைக் கூப்பிடும்போது 'முத்தம்மா, முத்தம்மா' என்று கூப்பிடுவாள். இப்படி அளவு கடந்த பால்ய சிநேகமுடைய இவ்விருவரும், முத்தம்மா புக்கத்துக்கு வந்த பிறகு ஒருவரையருவர் சந்திக்கவேயில்லை. சோமநாதய்யர் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்து கும்பகோணம் காலேஜிலேயே பீ.ஏ. பரீட்சை தேறினார். முத்தம்மாளுடைய தந்தை அவளுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு மதுரை, திருச்சினாப்பள்ளி, காலேஜ்களைப் பரிசோதனை செய்து முடித்துக் கடைசியாகக் கும்பகோணம் காலேஜுக்கு வந்து சோமநாதய்யரைக் கண்டு தக்க மாப்பிள்ளையென்று நிச்சயித்தார். அந்தக் காலத்தில் வரசுல்கம்-அதாவது மாப்பிள்ளையைப் பெண் வீட்டார் பணங் கொடுத்துக் கிரயத்துக்கு வாங்குதல்-என்ற வழக்கம் கிடையாது. கன்யா சுல்கம்-அதாவது பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் கிரயங் கொடுத்து வாங்குதல்-என்ற வழக்கமே நடைபெற்று வந்தது. எனவே, சோமநாதய்யர் ஏழைகளுடைய பிள்ளையாதலால், கன்யாசுல்கம் கொடுத்து விவாகம் செய்து கொள்ள வழி தெரியாமல் ''என்னடா, செய்வோம்!'' என்று தத்தளித்துக் கொண்டிருந்தார். அவருடைய உருவ லட்சணங்களையும் படிப்புத் திறமையையும் உத்தேசித்து அவருக்கே தமது மகளைக் கன்யா சுல்கம் வாங்காமல், அதாவது இனாமாக, மணம்புரிந்து கொடுத்து விடலாமென்று முத்தம்மாளின் தந்தை தீர்மானித்தார்.
சோமநாதய்யர் திருநெல்வேலிக்கு வந்து பெண்ணுடைய அழகையும் புத்திக் கூர்மையையும் கண்டு வியந்து அவளை மணம்புரிந்து கொள்ள உடம்பட்டார். தனக்கு விவாகம் முடிந்த பின்னர் முத்தம்மா விசாலாட்சியை ஓரிரண்டு முறைதான் சந்திக்க நேர்ந்தது. முத்தம்மா ருதுவாய், அவளுக்கு ருது சாந்தியாய் அவள் புக்ககத்துக்குச் சென்ற பின்னர் அவளும் விசாலாட்சியும் ஒருமுறைகூட சந்திக்க நேரமில்லை. அவள் கும்பகோணத்துக்கு வந்துவிட்டாள். பி.ஏ., பி.எல். பரீட்சை தேறி, சோமநாதய்யர், ஹைகோர்ட் வக்கீலாய் கும்பகோணத்தில் சில வருஷங்கள் உத்தியோகம் பண்ணிவிட்டு, அப்பால் பணம் ஏறிப்போய் அதினின்றும் அதிகப் பணத்தாசை கொண்டு மயிலாப்பூரில் வந்து ஒரு பெரிய பங்களா வாடகைக்கு வாங்கி அதில் குடியிருந்து சென்னை ஹைகோர்ட்டிலேயே வக்கீல் உத்தியோகம் பண்ணிக்கொண்டு வருகிறார்.
ஆதலால், இப்போது, பல வருஷங்களுக்குப் பின் புதிதாக சந்தித்ததில், முத்தம்மாளும் விசாலாட்சியும் சிநேக பரவசமாய் ஆனந்த சாகரத்தில் அழுந்திப் போயினர். முத்தம்மாளுக்கு இருபத்தைந்து வயது தானிருக்கும். அவளுக்கு மூன்று ஆண் குழந்தைகளிருந்தன. மூத்தவனுக்கு ஒன்பது வயதிருக்கும். அவன் பெயர் ராமநாதன். அடுத்த பிள்ளைக்கு ஆறு வயதிருக்கும். அவன் பெயர் ராமகிருஷ்ணன். அடுத்த குழந்தைக்கு மூன்று வயது. அதன் பெயர் அனந்தகிருஷ்ணன்.
முத்தம்மாளுடைய மாமியார் ஒருத்தி அந்த வீட்டிலேயே இருந்தாள். அவளுக்கு அறுபது வயதிருக்கும். அவள் விதவை. அவள் பெயர் ராமுப்பாட்டி. அவளுக்கு ‡யரோகம், அன்று, காசரோகம், அதாவது, சீக்கிரத்தில் கொல்லுகிற கொடூரமான ‡யமில்லை. நோயாளியை நெடுங்காலம் உயிருடன் வதைத்து வதைத்துக் கடைசியில் கொல்லும் மாதிரி. இராத்திரி ஏழு மணியாய் விட்டால் அவள் இருமத் தொடங்கிவிடுவாள். பாதி ராத்திரி. ஒரு மணி, காலை இரண்டு மணி வரை மகா பயங்கரமாக இருமிக் கொண்டேயிருப்பாள். அந்த இருமலைக் கேட்டால், கேட்பவருடைய பிராணன் இரண்டு நிமிஷத்துக்குள்ளே போய்விடும் போலிருக்கும். ஆனால், ராமுப்பாட்டி சென்ற முப்பது வருஷங்களாக அப்படித்தான் இருமிக்கொண்டு வருகிறாள். அவளுடைய பிராணன் அணுவளவுகூட அசையவில்லை.
இப்படியிருக்கையில், விசாலாட்சி சோமநாதய்யர் வீட்டுக்கு வந்து சேர்ந்து சில தினங்கள் கழிந்தவுடனே, ஒரு நாள் ஏகாதசி இரவு. ராமுப்பாட்டிக்கு அன்று முழுவதும் போஜனம் கிடையாது. ஆதலால், அவள் அன்று வழக்கப்படி இரவில் இரும முடியவில்லை. அயர்ந்து தூங்கிப் போய்விட்டாள். அவள் கீழ்த்தளத்தில் வெளியோரத் தலையில் ஒரு கட்டில் மெத்தை போட்டுப் படுத்துக் கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் ஒரு 'புயற்காற்று' விளக்கும் ஒரு தீச்சட்டியும் கட்டிலுக்கருகில் இருபுறங்களிலும் பாரிசத்துக்கொன்றாக, இரண்டு நாற்காலிகளின்மீது, அதாவது சாய்விடமில்‘த நாற்காற் பலகைகளின்மீது, வைக்கப்ப்டடிருந்தன.
அதற்கு மேற்கே மூன்றரை கழித்து நான்காமறையில் விசாலாட்சி ஒரு கட்டில் மெத்தை போட்டுப் படுத்திருக்கிறாள். அவளுடைய கட்டிலின் அருகே கட்டிலைக் காட்டிலும் சிறிதளவு உயரமான ஒரு நாற்காற் பலகையின்மீது ஒரு புயற்காற்று விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அவள் கையில் வைத்து வாசித்துக் கொண்டிருந்த ஒரு நாவல் தானே நழுவி வெள்ளை வெளேரென்ற உரையின் மீது விழுந்து கிடந்தது. அவளுடைய கரிய நீண்ட கூந்தல் அத்தகைய வெள்ளைத் தலையணையின்மீது கன்னங்கரேலென்று விழுந்து கிடந்ததை நோக்குககையில், பனிக்குன்றின் மீது கரிய மேகம் கிடப்பது போலிருந்தது. விசாலாட்சி விதவையாயினும் அவள் தலையை மொட்டையடிக்கவில்லை. சாகும்பொழுது தம் தமையன் மனைவி ''அடீ, விசாலாட்சி! நீ எப்படியேனும் மறு விவாகம் செய்துகொள்'' என்று சொல்லிவிட்டுப் போன வார்த்தையில் அவளுக்கிருந்த நம்பிக்கையாலும், திடீரென்று பூகம்பமும் புயற்காற்றும் விளைவித்த, எதிர்பார்க்கப்படாத, கோர மரணப் பெருங்கோலத்தைக் கண்டும் பின் ஆவி பிழைத்ததனால் அவளுக்கேற்பட்ட பெரிய தைரியத்தாலும் அவள் தலை மயிர் வளர்க்கத் தொடங்கிவிட்டாள்.
தலைமயிர் வளர்த்துக் கொண்டே ஓரிரண்டு வருஷம் நாங்கனேரி அவளுடைய தாயுடன் பிறந்த மற்றொரு மாமன் வீட்டில் சந்திரிகையுடன் வந்து குடியிருந்தாள். அந்த ஊரில் அந்தணர்கள் அவள் மீது அபாரமான பழிதூற்றத் தொடங்கிவிட்டார்கள். அந்தத் தூற்றுதல் பொறுக்க மாட்டாதபடியாலேதான் அவள் அவ்வூரை விட்டுப் புறப்பட்டு வழி நெடுகத் தீர்த்த யாத்திரை செய்து கொண்டு சென்னப் பட்டணம் வந்து சேர்ந்திருக்கிறாள். ''இந்த ஊரில் எனக்குப் பழி பொறுக்க முடியவில்லை. மாமா, நான் காசிக்குப் புறப்பட்டுப் போய் கங்கைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்து நாளடைவில் என் பிராணனை விட்டு விடுகிறேன். எனக்கு வழிச்செலவுக்கு ஏதேனும் பணம் கொடும்; நான் அங்கே சென்று பிச்சையெடுத்து இந்தக் குழந்தை சந்திரிகையையும் காப்பாற்றி நானும் பிழைத்துக் கொள்கிறேன்'' என்று அவள் நாங்கனேரியை விட்டுப் புறப்படுமுன் தன் மாமனிடம் பிரார்த்தனை செய்து கொண்டாள்.
''இந்தக் குழந்தைக்கு விவாகம் பண்ணவேண்டிய பருவம் நேர்ந்தால் அப்போதென் செய்வாய்?'' என்று மாமா கேட்டார்.
''அங்கே நம்முடைய தமிழ்த் தேசத்துப் பிராமணர் அனேகர் குடியேறியிருக்கிறார்கள். இனி மேன்மேலும் அதிகமாகக் குடியேறி வருவார்கள். யாத்திரைக்காக வேறு, வருஷந்தோறும் நம்மவர் அனேகர் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அத்தனை ஜனங்களில் என் சந்திரிகைக்கொரு மாப்பிள்ளை கிடைக்காமலா போகிறான்?'' என்று விசாலாட்சி கேட்டாள்.
உடனே அவர் விசாலாட்சியின் கையில் ஐந்நூறு ரூபாய் வெள்ளி நாணயங்களாக ஒரு பையில் கட்டிக்கொடுத்து, ''இதைக் கொண்டுபோய், ரயில் செலவு போக மிஞ்சியதை அங்கு யாரேனும் ஸாஹ¥கார் கையில் வட்டிக்குக் கொடுத்து வட்டி வாங்கி ஜீவனம் செய்து கொண்டிரு. அடிக்கடி இங்கு வந்து போய்க் கொண்டிரு. உனக்கு அப்போதப்போது என்னாலான உதவிகளைச் செய்துகொண்டு வருகிறேன். பயப்படாதே!'' என்று சொல்லி மாமா இவளையனுப்பி விட்டார். ஊராருடைய தூற்றல் பொறுக்க மாட்டாமையால் அவருக்கும் இவளை எப்படியேனும் அந்த ஊரை விட்டனுப்பி விடுவதில் சம்மதமாகவேயிருந்தது. அவளுடைய இஷ்டத்துக்கு விரோதமாக அவளை மொட்டையடித்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்த அவருக்கு மனம் இல்லை. அவர் அப்படியே கட்டாயப்படுத்தியிருந்தாலும், அவள் அதற்குக் கட்டுப்பட்டிருக்க மாட்டாள். அவள் கட்டுப்பட்டு மொட்டையிட்டுக் கொண்டாலும் அதைப் பார்க்க அவருக்கு மனமிருந்திராது. அவருக்கு விசாலாட்சியின் மீது அத்தனை தூரம் பிரியம். அவளைத் தன் சொந்த மகள் போலவே கருதினார்.
எனவே, அவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு விசாலாட்சி புறப்பட்டு வழி நெடுக ஸ்தல யாத்திரை செய்த சமயத்தில் அவளுடைய கற்பையழிக்கவும், அவள் கையிலிருந்த பணத்தை அபகரித்துக் கொள்ளவும். அல்லது அவ்விரண்டு வகைப் பாதகச் செயல்களையும் கலந்து செய்யவும் பல ஆண்மக்கள் முயன்றனர். ஆனால் அவளை சாஸ்த்ரோக்தமாக விவாகம் செய்துகொண்டு அவளுடன் சதிபதியாக வாழக்கூடியவனாக அவளுக்கு எவனும் தென்படவில்லை. எனவே முழுதும் ஆசாபங்கமுற்றவளாய், அதனால் ஒருவித முரட்டுத் தைரியம் அதிகப்பட்டுத்தான் இவள் ஜீ. சுப்பிரமணிய அய்யரிடத்திலும், அப்பால் வீரேசலிங்கம் பந்துலுவிடத்திலும், இத்தனை பெருந் துணிவுடன் தனக்கு வரன் தேடிக் கொடுக்கும்படி வற்புறுத்தக் கூடியவளாயினாள். அப்பால், மேலே கதையை நடத்துவோம்.
இப்போது, அதாவது 1905-ம் வருஷ ஆரம்பத்தில் கார்காலத்தில் ஏகாதசி இரவில், மயிலாப்பூர் வக்கீல் சோமநாதய்யர் வீட்டில் தரைப்பகுதியில் ஓரறையில் விசாலாட்சி சந்திரிகையுடன் படுத்திருந்த கதையை மேலே சொல்லுவோம்.
அவளுடைய கரிய கூந்தல் அந்த நேர்த்தியான விளக்கொளியில் மிக அழகாகப் பரந்துகிடந்தது. அவளுடைய முகம் பூர்ணசந்திரனைப் போலே ஒளி வீசிற்று. அவளுடைய மார்பு மெல்லிய பச்சைப்பட்டு ரவிக்கையின் மீது வனப்புறப் பூரித்து நின்றது. அவளுடைய மார்புத்துணி தூக்கத்திலே கழன்று போய்விட்டது. தேவ ஸ்திரீயோ, கந்தர்வ ஸ்திரீயோ என்று தேவ கந்தர்வர் கண்டாலும் மயங்கத்தக்கவாறு அத்தனை எழிலுடன் படுத்திருந்தாள்.
அவள் அறைக்கதவைத் தாழ்ப் போடவில்லை. கிழவி ராமுப்பாட்டியின் இருமல் சத்தம் காதில் விழாதபடி, சோமநாதய்யர் தம் பத்தினியுடன் மாடிமேல் கொல்லைப் புறத்திலிருந்த அறையில்-அதாவது கிழவியினுடைய அறையிலிருந்து எத்தனை தூரம் தள்ளியிருக்க சாத்தியப்படுமோ, அத்தனை தூரத்தில்-இராத்திரிகளிலே படுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் அன்று அந்த ஏகாதசி இரவில் சோமநாதய்யரின் மனைவி முத்தம்மா அவருடன் படுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், அவள் அன்று மாதவிடயாதலால் வீட்டுக்கு விலக்குற்றவளாய், வெளித் திண்ணையில் ஒரு மூங்கிலறை கட்டி அதற்குள் நேர்த்தியான திரைகள் கட்டி ஒரு கட்டில் மெத்தை போட்டு அதன்மீது படுத்திருந்தாள். அவளுடைய மூன்றாங் குழந்தையாகிய அனந்தகிருஷ்ணன் மாத்திரம் அவளுடன் படுத்திருந்தான். ராமநாதனும் ராமகிருஷ்ணனும் மேலே சோமநாதய்யரின் கட்டிலுக்கும் அவருடைய மனைவியின் கட்டிலுக்கும் புறத்தே குழந்தைகளுக்கென்று போட்டிருந்த மூன்றாங் கட்டிலின்மீது படுத்திருந்தனர்.
நள்ளிரவு, சோவென்று மழை கொட்டுகிறது. அந்த மழையாகிய தாயின் பாட்டின் குரலில் மயங்கிப் போன குழந்தைகளைப் போல் ராமுப்பாட்டியும், தோட்டத்தில் வெளிக் குச்சிலில் படுத்திருந்த தோட்டக் காவலனும், திண்ணையில் படுத்திருந்த முத்தம்மாளும், அவளருகே அனந்த கிருஷ்ணனும், உள்ளே விசாலாட்சியும் சந்திரிகையும், மேலே ராமநாதனும் ராமகிருஷ்ணனும் எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கி விட்டனர். அப்போது ஒரு ஆள் மாத்திரம் நித்திரை செய்யவில்லை. அது நம்முடைய சோமநாதய்யர். சோமநாதய்யருக்கு வயது அப்போது சுமார் முப்பதிருக்கும். ஆள் நல்ல அழகன். 'ஸாண்டோ' இரும்பு குண்டு போட்டு அவருடைய இரண்டு புஜங்களும் அழகாகப் பருத்திருந்தன. தோட்சதைகள் நன்கு திரண்டிருந்தன. முன்னங்ககைகள் செவ்வனே உருட்சி பெற்றிருந்தன. விரல்கள் உறுதி பெற்றிருந்தன. மார்பு நேர்த்தியாகப் படுத்திருந்தது. வயிறு நன்கு படிந்திருந்தது. மேலும் பலவித அப்யாஸங்களையும் அவருடைய தொடைகளும் கால்களும் வலிமையும் உறுதியும் அழகுறச் சமைந்திருந்தன. ஆனால் அவருக்குத் தலைமயிர் மாத்திரம் கொஞ்சம் நரைக்கத் தொடங்கிவிட்டது. கொஞ்சம் வழுக்கையுமுண்டு. கண் பார்வை கொஞ்சம் சொற்பம். அதற்காக ஐரோப்பியக் கண் சோதனை வைத்தியரிடமிருந்து உயர்ந்த விலையில் மூக்குக் கண்ணாடி வாங்கி அதற்குத் தங்கக் கம்பி போட்டு மாட்டிக் கொண்டிருந்தார். முகம் நன்றாக சவரம் பண்ணி மிகவும் தளதளப்பாகவும் அழகாகவுமிருந்தது. அவர் மாத்திரம் அன்றிரவு நித்திரை புரியவில்லையென்றேன். ஏன்? என்ன செய்து கொண்டிருந்தார்? மெல்ல மாடியை விட்டுக் கீழே இறங்கினார். விசாலாட்சி படுத்திருந்த அறைக்குப் புறம்பே வந்து நின்றார். கதவை மெல்ல அசைத்துப் பார்த்தார். கதவு விசாலாட்சியின் சூதற்ற தன்மையால் திறந்து கிடந்தது. உள்ளே நுழைந்தார். விசாலாட்சி படுத்திருந்த கட்டிலின் பக்கத்தே போய் நின்று கொண்டு அந்த திவ்யமான ஒளியில் அவளுடைய திவ்ய விக்ரஹத்தைக் கண்டார். தன்னை மறந்து போய் அவள் மேலே கையைப் போட்டார். அவள் திடுக்கிட்டு விழித்து இவரைப் பார்த்தவுடன் அஞ்சி மார்புத் துணியை நேரே போர்த்துக் கொண்டாள். அப்பால் இவரை நோக்கி மிகவும் கோபத்துடன்:- ''இங்கு எதன் பொருட்டாக இந்த நேரத்தில் வந்தீர்?'' என்று கேட்டாள். இவர் ஏதோ வழவழவென்று மறுமொழி சொன்னார். இவருடைய சொற்களின் ஒலியாலும் முகக் குறிகளாலும் இவருடைய இருதயம் சுத்தமில்லையென்பதை அவள் உணர்ந்துகொண்டு தன் இடுப்பில் சொருகியிருந்த கூரிய கத்தியன்றை எடுத்து இவருடைய மார்புக்கு நேரே நீட்டினாள். இவர் பயந்து போய் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார். இவர் இங்ஙனம் நிற்பதைக் கண்டு விசாலாட்சி இடிபோன்ற உரத்த குரலில் ''இங்கிருந்து வெளியேறிப்போம்'' என்றலறினாள்.
''குழந்தையை எழுப்பிவிடாதே'' என்று சோமநாதய்யர் மெல்ல ஜாடைகள் பேசுவது போலே கிளுகிளுத்துச் சொன்னார். முன்னைக் காட்டிலும் உரப்பாக விசாலாட்சி முப்பத்து மூன்று இடிகள் சேர்ந்து இடிக்கும் குரலில் ''போம்; இங்கிருந்து வெளியேறி!'' என்று மற்றொரு முறை கர்ஜித்தாள். சோமநாதய்யர் வெலவெலத்துப் போய் வெளியேறி மாடிக்குச் சென்று தன் அறைக்குள்ளே போய், அறைக் கதவைச் சார்த்தித் தாழிட்டு, விளக்கையணைத்துவிட்டு உள்ளே கட்டில் மீது படுத்துக் கொண்டு மேலெல்லாம் போர்வை போட்டு மூடிக் கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்க முயன்றார். ஆனால் அவருக்குத் தூக்கம் வரவில்லை. உடம்பெல்லாம் வியர்த்தது. போர்வையைக் கழற்றியெறிந்தார். குளிரெடுத்தது. மறுபடி போர்வையை எடுத்து மூடிக்கொண்டார். கைகால் உளைச்சல் சகிக்க முடியவில்லை. நரம்புகளைத் துண்டு துண்டாக வெட்டுவது போன்ற வேதனையுண்டாயிற்று. அவருடைய இருதயத்தில் ஆயிரம் பிசாசுகள் சேர்ந்து நர்த்தனம் செய்வது போன்ற பலவகைப்பட்ட வேதனை ஏற்பட்டது. அவருக்குத் தூக்கமெப்படி வரும்?
கீழே விசாலாட்சி, இவர் வெளியேறியவுடன் அறைக்கதவைத் தாழிட்டுக் கொண்டு மறுபடி கட்டிலின்மேல் வந்து படுத்துச் சில கணங்களுக்கெல்லாம் ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்து விட்டாள். மழை சரசரவென்று பொழிந்து கொண்டிருக்கிறது.