357.
சிறத்த நுகர்ந்தொழுகும் செல்வம் உடையார்
அறஞ்செய்து அருளுடையர் ஆதல் - பிறங்கல்
அமையொடு வேய்கலாம் வெற்ப! அதுவே
'சுமையொடு மேல்வைப்ப மாறு'.
358.
வைத்ததனை வைப்பென்று உணரற்க தாமதனைத்
துய்த்து வழங்கி இருபாலும் - அத்தகத்
தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ
'எய்ப்பினில் வைப்பென் பது'.
359.
மல்லற் பெருஞ்செல்வம் மாண்டவர் பெற்றக்கால்
செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம் - மெல்லியல்
சென்றொசிந் தொல்கு நுசுப்பினாய்! - 'பைங்கரும்பு
மென்றிருந்து பாகு செயல்'.
360.
ஈனுலகத் தாயின் இசைபெறூஉம் அஃதிறந்
தேனுலகத் தாயின் இனிததூஉம் - தானொருவன்
நாள்வாயும் நல்லறம் செய்வார்க்கு இரண்டுலகும்
'வேள்வாய்க் கவட்டை நெறி'.
361.
மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினைய்வின்றிச் செய்யாதார் பின்னே வழிநினைந்து
நோய்காண் பொழுதின் அறஞ்செய்வார்க் காணாமை
'நாய்காணின் கற்காணா வாறு'.
362.
தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால் அப்பொருள்
தொக்க வகையும் முதலும் அதுவானால்
மிக்க வகையால் அறஞ்செய்க எனவெகுடல்
'அக்காரம் பால்செருக்கும் ஆறு'.
363.
உலப்பில் உலகத்து உறுதியை நோக்கிக்
குலைத்தடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல்
மலைத்தழு(து) 'உண்ணாக் குழவியைத் தாயார்
அலைத்துப்பால் பெய்து விடல்'.
364.
அறஞ்செய் பவருக்கும் அறிவுழி நோக்கித்
திறந்தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்றாம்
புறஞ்செய்யச் செல்வம் பெருகும் 'அறஞ்செய்ய
அல்லவை நீங்கி விடும்'.
365.
தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறஞ்செய்க ! - மாற்றின்றி
'அஞ்சும் பிணிமூப்(பு) அருங்கூற்(று) உடனியைந்து
துஞ்ச வருமே துயக்கு'.
366.
பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம்
முட்டுடைத் தாகி 'இடைதவிர்ந்து வீழ்தலின்
நட்டறான் ஆதலே நன்று'.
367.
பலநாளும் ஆற்றார் எனினும் அறத்தைச்
சிலநாள் சிறந்தவற்றாற் செய்க - கலைதாங்கி
நைவது போலும் நுசுப்பினாய் ! 'நல்லறம்
செய்வது செய்யாது கேள்'.
368.
நோக்கி யிருந்தார் இமைக்கும் அளவின்கண்
நோக்கப் படினும் உணங்கலைப் புட்கவரும்
போற்றிப் புறந்தந்(து) அகப்பட்ட ஒண்பொருட்கும்
'காப்பாரில் பார்ப்பார் மிகும்.'
369.
இன்றி யமையா இருமுது மக்களைப்
பொன்றினமை கண்டும் பொருள்பொருளாக் கொள்பவோ
ஒன்றும் வகையான் அறம்செய்க 'ஊர்ந்துருளின்
குன்று வழியடுப்ப தில்'.
370.
அற்றாக நோக்கி அறத்திற்கு அருளுடைமை
முற்ற அறிந்தார் முதலறிந்தார் - தெற்ற
முதல்விட் டஃதொழிந்தோர் ஓம்பா ஒழுக்கம்
'முயல்விட்டுக் காக்கை தினல்'.
371.
இம்மைத் தவமும் அறமும் எனஇரண்டும்
தம்மை யுடையார் அவற்றைச் சலமொழுகல்
இம்மைப் பழியேயும் அன்றி மறுமையும்
'தம்மைத்தாம் ஆர்க்குங் கயிறு.'

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework