348.
தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க்(கு) உற்ற(து)
எமக்குற்ற தென்றுணரா விட்டாக்கால் என்னாம்
இமைத்தருவி பொன்வரன்றும் ஈர்ங்குன்ற நாட !
'உமிக்குற்று கைவருந்து மாறு'.
349.
சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர்
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும் - தேர்ந்தவர்க்குச்
செல்லாமைக் காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்
'எல்லாம்பொய் அட்டூணே வாய்'.
350.
அல்லல் ஒருவர் அடைந்தக்கால் மற்றவர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல
வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே
'மனைமர மாய மருந்து'.
351.
மெய்யா உணரின் பிறர்பிறர்க்குச் செய்வதென்?
மையார் இருங்கூந்தல் பைந்தொடி ! எக்காலும்
செய்யார் எனினும் தமர்செய்வர் 'பெய்யுமாம்
பெய்யா தெனினும் மழை'.
352.
முன்னின்னார் ஆயினும் மூடும் இடர்வந்தால்
பின்னின்னார் ஆகிப் பிரியார் ஒருகுடியார்
பொன்னாச் செயினும் புகாஅர் புனலூர !
'துன்னினார் அல்லார் பிறர்'.
353.
உளைய உரைத்து விடினும் உறுதி
கிளைகள்வாய்க் கேட்பதே நன்றாம் - விளைவயலுள்
பூமிதித்துப் புட்கலாம் பொய்கைப் புனலூர !
'தாய்மிதித்து ஆகா முடம்'.
354.
தன்னை மதித்துத் தமரென்று கொண்டக்கால்
என்ன படினும் அவர்செய்வ செய்வதே
இன்னொலி வெற்ப! இடரென்னை 'துன்னூசி
போம்வழி போகும் இழை'.
355.
கருவினுட் கொண்டு கலந்தாரும் தம்முள்
ஒருவழி நீடும் உறைதலோ துன்பம்
பொருகடல் தண்சேர்ப்ப ! பூந்தா மரைமேல்
'திருவோடும் இன்னாது துச்சு'.
356.
பாரதத் துள்ளும் பணையம்தம் தாயமா
ஈரைம் பதின்மரும் போரெதிர்ந்(து) ஐவரோடு
ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால்
'காதலோ(டு) ஆடார் கவறு'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework