கந்துக் கடன் குழந்தையைத் தன் இல்லத்திற்கு எடுத்துச் சென்று வளர்த்தல்
- விவரங்கள்
- திருத்தக்கதேவர்
- தாய்ப் பிரிவு: ஐம்பெருங்காப்பியங்கள்
- சீவக சிந்தாமணி
நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடு ஊர் கோளொடு குளிர் மதி வந்து வீழ்ந்து எனக் காளக உடையினன் கந்து நாமனும் வாளொடு கனை இருள் வந்து தோன்றினான். |
320 |
வாள் கடைந்து அழுத்திய கண்ணினார்கள் தம் தோள் கடைந்து அழுத்திய மார்பன் தூங்கு இருள் நீள் சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான் ஆள் கடிந்து அணங்கிய அணங்கு காட்டுளே. |
321 |
அருப்பு இள முலையவர்க்கு அனங்கன் ஆகிய மருப்பு இளம் பிறை நுதல் மதர்வை வெம் கதிர் பரப்புபு கிடந்து எனக் கிடந்த நம்பியை விருப்பு உள மிகுதியின் விரைவின் எய்தினான். |
322 |
புனை கதிர்த் திருமணிப் பொன் செய் மோதிரம் வனை மலர்த் தாரினான் மறைத்து வண் கையால் துனை கதிர் முகந்து என முகப்பத் தும்மினான் சினை மறைந்து ஒரு குரல் சீவ என்றதே. |
323 |
என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய அன்பு எழுந்து அரசனுக்கு அவலித்து ஐயனை நுன் பழம் பகை தவ நூறுவாய் என இன்பழக் கிளவியின் இறைஞ்சி ஏத்தினாள். |
324 |
ஒழுக்கியல் அரும் தவத்து உடம்பு நீங்கினார் அழிப்பரும் பொன் உடம்பு அடைந்தது ஒப்பவே வழுக்கிய புதல்வன் அங்கு ஒழிய மாமணி விழுத் தகு மகனொடும் விரைவின் ஏகினான். |
325 |
மின் அடு கனை இருள் நீந்தி மேதகு பொன் உடை வள நகர் பொலியப் புக்கபின் தன் உடை மதிசுடத் தளரும் தையலுக்கு இன் உடை அருள் மொழி இனிய செப்பினான். |
326 |
பொருந்திய உலகினுள் புகழ் கண் கூடிய அருந்ததி அகற்றிய ஆசு இல் கற்பினாய் திருந்திய நின் மகன் தீதின் நீங்கினான் வருந்தல் நீ எம் மனை வருக என்னவே. |
327 |
கள் அலைத்து இழி தரும் களி கொள் கோதை தன் உள் அலைத்து எழு தரும் உவகை ஊர்தர வள்ளலை வல் விரைந்து எய்த நம்பியை வெள் இலை வேலினான் விரகின் நீட்டினான். |
328 |
சுரிமுக வலம்புரி துவைத்த தூரியம் விரிமுக விசும்பு உற வாய் விட்டு ஆர்த்தன எரிமுக நித்திலம் ஏந்திச் சேந்த போல் கரிமுக முலையினார் காய் பொன் சிந்தினார். |
329 |
அழுகுரல் மயங்கிய அல்லல் ஆவணத்து எழுகிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான் கழிபெரும் காதலான் கந்து நாமன் என்று உழிதரு பெருநிதி உவப்ப நல்கினான். |
330 |
திருமகன் பெற்று எனச் செம் பொன் குன்று எனப் பெரு நல நிதி தலை திறந்து பீடு உடை இரு நிலத்து இரவலர்க்கு ஆர்த்தி இன்னணம் செருநிலம் பயப்பு உறச் செல்வன் செல்லுமே. |
331 |