நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடு ஊர்
கோளொடு குளிர் மதி வந்து வீழ்ந்து எனக்
காளக உடையினன் கந்து நாமனும்
வாளொடு கனை இருள் வந்து தோன்றினான்.
320

 

வாள் கடைந்து அழுத்திய கண்ணினார்கள் தம்
தோள் கடைந்து அழுத்திய மார்பன் தூங்கு இருள்
நீள் சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான்
ஆள் கடிந்து அணங்கிய அணங்கு காட்டுளே.
321

 

அருப்பு இள முலையவர்க்கு அனங்கன் ஆகிய
மருப்பு இளம் பிறை நுதல் மதர்வை வெம் கதிர்
பரப்புபு கிடந்து எனக் கிடந்த நம்பியை
விருப்பு உள மிகுதியின் விரைவின் எய்தினான்.
322

 

புனை கதிர்த் திருமணிப் பொன் செய் மோதிரம்
வனை மலர்த் தாரினான் மறைத்து வண் கையால்
துனை கதிர் முகந்து என முகப்பத் தும்மினான்
சினை மறைந்து ஒரு குரல் சீவ என்றதே.
323

 

என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய
அன்பு எழுந்து அரசனுக்கு அவலித்து ஐயனை
நுன் பழம் பகை தவ நூறுவாய் என
இன்பழக் கிளவியின் இறைஞ்சி ஏத்தினாள்.
324

 

ஒழுக்கியல் அரும் தவத்து உடம்பு நீங்கினார்
அழிப்பரும் பொன் உடம்பு அடைந்தது ஒப்பவே
வழுக்கிய புதல்வன் அங்கு ஒழிய மாமணி
விழுத் தகு மகனொடும் விரைவின் ஏகினான்.
325

 

மின் அடு கனை இருள் நீந்தி மேதகு
பொன் உடை வள நகர் பொலியப் புக்கபின்
தன் உடை மதிசுடத் தளரும் தையலுக்கு
இன் உடை அருள் மொழி இனிய செப்பினான்.
326

 

பொருந்திய உலகினுள் புகழ் கண் கூடிய
அருந்ததி அகற்றிய ஆசு இல் கற்பினாய்
திருந்திய நின் மகன் தீதின் நீங்கினான்
வருந்தல் நீ எம் மனை வருக என்னவே.
327

 

கள் அலைத்து இழி தரும் களி கொள் கோதை தன்
உள் அலைத்து எழு தரும் உவகை ஊர்தர
வள்ளலை வல் விரைந்து எய்த நம்பியை
வெள் இலை வேலினான் விரகின் நீட்டினான்.
328

 

சுரிமுக வலம்புரி துவைத்த தூரியம்
விரிமுக விசும்பு உற வாய் விட்டு ஆர்த்தன
எரிமுக நித்திலம் ஏந்திச் சேந்த போல்
கரிமுக முலையினார் காய் பொன் சிந்தினார்.
329

 

அழுகுரல் மயங்கிய அல்லல் ஆவணத்து
எழுகிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான்
கழிபெரும் காதலான் கந்து நாமன் என்று
உழிதரு பெருநிதி உவப்ப நல்கினான்.
330

 

திருமகன் பெற்று எனச் செம் பொன் குன்று எனப்
பெரு நல நிதி தலை திறந்து பீடு உடை
இரு நிலத்து இரவலர்க்கு ஆர்த்தி இன்னணம்
செருநிலம் பயப்பு உறச் செல்வன் செல்லுமே.
331
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework