காப்பு


மணியும்நல் கந்தமுத்தும் மலிந்த முக்குடை இலங்க
அணிமலர்ப் பிண்டியின்கீழ் அமர்ந்த நேமீசர் பாதம்
பணியவே வாணிபாதம் பண்ணவர் தமக்கும் எந்தம்
இணைகரம் சிரசில் கூப்பி இயல்புறத் தொழுதும் அன்றே.

முதல் சருக்கம்


தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்


1) செந்தளிர்ப் பிண்டியின்கீழ்ச் செழுமணி மண்டபத்துஉள்
இந்திரன் இனிதின் ஏத்தும் ஏந்துஅரிஆசனத்தின்
அந்தமாய் அமர்ந்த கோவின் அருள்புரிதீர்த்த காலம்
கொந்தலராசன் நாக குமரன்நல் கதை விரிப்பாம்.


2) திங்கள் முந்நான்கு யோகம் தீவினை அரிய நிற்பர
அங்கபூ ஆதி நூலுள் அரிப்புஅறத் தௌ¤ந்த நெஞ்சில்
தங்கிய கருணை ஆர்ந்த தவமுனி அவர்கள் சொன்ன
பொங்குநல் கவிக்கடல்தான் புகுந்துநீர்த்து எழுந்தது அன்றே.

அவைஅடக்கம்

3) புகைக்கொடி உள்உண்டு என்றே பொற்புநல் ஒளிவிளக்கை
இகழ்ச்சியின் நீப்பார் இல்லை ஈண்டுநல் பொருள் உணர்ந்தோர்
அகத்துஇனி மதியில் கொள்வார் அரியரோ எனது சொல்லைச்
செகத்தவர் உணர்ந்து கேட்கச் செப்புதல் பாலது ஆமே.

கேட்போர் பெறு பயன்

4) வெவ்வினை வெகுண்டு வாரா விக்கிநன்கு அடைக்கும் வாய்கள்
செவ்விதில் புணர்ந்து மிக்க செல்வத்தை ஆக்கும் முன்னம்
கவ்விய கருமம் எல்லாம் கணத்தினில் உதிர்ப்பை ஆக்கும்
இவ்வகைத் தெரிவுறுப்பார்க்கு இனிதுவைத்து உரைத்தும் அன்றே.

மகத நாட்டுச் சிறப்பு

5) நாவலந் தீப நூற்றை நண் ணுதொண்ணூறு கூறில்
ஆவதன் ஒருகூறு ஆகும் அரியநல் பரத கண்டம்
பாவலர் தகைமை மிக்கோர் பரம்பிய தரும பூமி
மேவுமின் முகில்சூழ் சோலை மிக்கதுஓர் மகதநாடு.

இராசமாகிரிய நகரம்

6) திசைகள் எங்கெங்கும் செய்யாள் செறிந்துஇனிது உறையும் நாட்டுள்
இசையுநல் பாரிசாத இனமலர்க் காவும் சூழ்ந்த
அசைவிலா அமர லோகத்து அதுநிகரான மண்ணுள்
இசைஉலா நகரம் மிக்க இராசமாகிரியம் ஆமே.


7) கிடங்குஅரு இஞ்சி ஓங்கிக் கிளர்முகில் சூடிச் செம்பொன்
கடங்கள்வைத்து இலங்கு மாடம் கதிர்மதி சூட்டினால்போல்
படம்கிடந்த அல்குலார்கள் பாடலோடு ஆடலாலே
இடம்கொண்ட இன்பம் உம்பர் இடத்தையும் மெச்சும் அன்றே.

சிரேணிக ராசனின் செங்கோல்ஆட்சி

8) பாரித்த தன்மை முன்னம் பாலித்தற்கு ஐம்மடங்காம்
பூரித்த தார்கள் வேய்ந்த பொற்குடை எழுந்த மேகம்
வாரித்து அசைந்து இளிக்கும் வண்கைஅம்பொன்திண் தோளான்
சீரித்தது அலங்கல் மார்பன் சிரேணிக ராசன்ஆமே.


9) ஆறில்ஒன்று இறைகொண்டு ஆளும் அரசன்மாதேவி அன்னப்
பேறுடை நடைவேல் கண்ணாள் பெறற்குஅரும் கற்பினாள்பேர்
வீறுடைச் சாலினீதா மிடைதவழ் கொங்கை கொண்டை
நாறுடைத் தார்அணிந்த நகைமதி முகத்தினாளே.


10) மற்றும் எண்ணாயிரம்பேர் மன்னனுக்கு இனிய மாதர்
வெற்றிவேல் விழியினாரும் வேந்தனும் இனிய போகம்
உற்றுஉடன் புணர்ந்து இன்பத்து உவகையுள் அழுந்தி அங்குச்
செற்றவர்ச் செகுத்துச் செங்கோல் செலவிய காலத்து அன்றே.

வரவீரநாதரின் வருகையை வனபாலன் தெரிவித்தல்


11) இஞ்சிசூழ் புரத்து மேற்பால் இலங்கிய விபுலம் என்னும்
மஞ்சிசூழ் மலையின் மீது வரவீரநாதர் வந்து
இஞ்சிமூன்று இலங்கும் பூமி ஏழிறை இருக்கை வட்டம்
அஞ்சிலம்பார்கள் ஆட அமரரும் சூழ்ந்த அன்றே.


12) வனமிகு அதிசயங்கள் வனபாலன் கண்டுவந்து
நனைமது மலர்கள் ஏந்தி நன்நகர் புகுந்துஇராசன்
மனைஅது மதில்கடந்து மன்னனை வணங்கிச் செப்ப
மனமிக மகிழ்ந்து இறைஞ்சி மாமுரசு அறைக என்றான்.

மன்னன் தன் சுற்றம் சூழச் சென்று முனிவரை வணங்குதல்


13) இடிமுரசு ஆர்ப்பக் கேட்டும் இயம்பிய அத்தினத்தின்
படுமத யானை தேர்மா வாள்நால் படையும் சூழக்
கடிமலர் சாந்தும் ஏந்திக் காவலன் தேவியோடும்
கொடிநிரை பொன் எயிற்குக் குழுவுடன் சென்ற அன்றே.


14) பொன்எயில் குறுகிக் கைம்மாப் புரவலன் இழிந்துஉள்புக்கு
நன்நிலத்து அதிசயங்கள் நரபதி தேவியர்க்குப்
பன்உரை செய்து காட்டிப் பரமன்தன் கோயில் தன்னை
இன்இயல் வலங்கொண்டு எய்தி ஈசனை இறைஞ்சினானே.


15) நிலமுறப் பணிந்து எழுந்து நிகர்இலஞ் சினையின் முற்றிக்
கலன்அணி செம்பொன் மார்பன் கால்பொரு கடலில் பொங்கி
நலமுறு தோத்திரங்கள் நாதன்தன் வதனம் நோக்கிப்
பலமனம் இன்றி ஒன்றிப் பலதுதி செப்பல் உற்றான்.

வர்த்தமானரை மன்னன் துதித்துப் போற்றுதல்

வேறு


16) பொறியொடு வல்வினைவென்ற புனிதன் நீயே
பூநான்கு மலர்ப்பிண்டிப் போதன் நீயே
புறவிதழ்சேர் மரைமலர்மேல் விரனால் விட்டுப்
பொன்எயிலுள் மன்னிய புங்கவனும் நீயே
அறவிபணி பணஅரங்கத்து அமர்ந்தாய் நீயே
ஐங்கணைவில் மன்மதனை அகன்றாய் நீயே
செறிபுகழ்சேர் சித்திநகர் தன்னை ஆளும்
சிரீவர்த்த மானம்எனும் தீர்த்தன் நீயே.

17) கஞ்சமலர் திருமார்பில் தரித்தாய் நீயே
காலம்ஒரு மூன்றுஉணர்ந்த கடவுள் நீயே
பஞ்சாத்தி தான்உரைத்த பரமன் நீயே
பரமநிலை ஒன்றுஎனவே பணித்தாய் நீயே
துஞ்சாநல் உலகுதொழும் தூயன் நீயே
தொல்வினை எல்லாம்எரித்த துறவன் நீயே
செஞ்சொல் பாவையை நாவில் சேர்த்தாய் நீயே
சிரீவர்த்தமான் எனும் தீர்த்தன் நீயே.


18) அறவன்நீ அமலன்நீ ஆதி நீயே
ஆரியன்நீ சீரீயன்நீ அனந்தன் நீயே
திரிலோக லோகமொடு தேயன் நீயே
தேவாதி தேவன்எனும் தீர்த்தன் நீயே
எரிமணிநல் பிறப்புடைய ஈசன் நீயே
இருநான்கு குணம்உடைய இறைவன் நீயே
திரிபுவனம் தொழுதுஇறைஞ்சும் செல்வன் நீயே
சிரீவர்த்த மானம்எனும் தீர்த்தன் நீயே.


19) முனிவர்தமக்கு இறையான மூர்த்தி நீயே
மூவா முதல்வன்எனும் முத்தன் நீயே
இனிமை ஆனந்தசுகத்து இருந்தாய் நீயே
இயல்ஆறு பொருள்உரைத்த ஈசன் நீயே
முனிவுமுதல் இல்லாத முனைவன் நீயே
முக்குடையின் கீழ்அமர்ந்த முதல்வன் நீயே
செனித்துஇறக்கும் மூப்பு இறப்பும் தீர்த்தாய் நீயே
சிரீவர்த்த மானன்எனும் தீர்த்தன் நீயே.


20) நவபத நன்னயம்ஆறு நவின்றாய் நீயே
நன்முனிவர் மனத்துஇசைந்த நாதன் நீயே
உவமைஇலா ஐம்பதமும் உரைத்தாய் நீயே
உத்தமர்தம் இருதயத்துள் உகந்தாய் நீயே
பவமயமாம் இருவினையைப் பகர்ந்தாய் நீயே
பரம நிலைஅமர்ந்த பரமன் நீயே
சிவமயமாய் நின்றதிகழ் தேசன் நீயே
சிரீவர்த்தமானன்எனும் தீர்த்தன் நீயே.

வேறு


21) துதிகள் செய்துபின் தூய்மணி நன்நிலத்து
அதிகொள் சிந்தையின் அம்பிறப் பணிந்து உடன்
நெதி இரண்டுஎன நீடிய தோளினான்
யதிகொள் பண்ணவர் பாவலன் புக்கதே.


22) சிறந்து கோட்டத்துச் செல்வக கணதரர்
இறைவன் நன்மொழி இப்பொருள் உள்கொண்டு
அறைஅமர்ந்து உயிர்க்கு அறமழையைப்பெயும்
துறவன் நற்சரண் தூய்தின் இறைஞ்சினான்.

தவராசராம் கௌதமர் பாதம் பணிந்து தருமம் கேட்டல்


23) மற்றுஅம் மாமுனி ஏர்மல ராம்பதம்
உற்றுடன்பணிந்து ஓங்கிய மன்னவன்
நற்றவர்க்கு இறையானநற் கௌதமர்
வெற்றி நற்சரண் வேந்தன் இறைஞ்சினான்.


24) இருகரத்தின் இறைஞ்சிய மன்னனும்
பொருகயல்கணிப் பூங்குழை மாதரும்
தரும தத்துவம் சனமுனிவர்க்குஉரை
இருவரும்இயைந்து இன்புறக் கேட்டபின்.

நாக பஞ்சமி கதைஉரைக்க மன்னன் வேண்டுதல்


25) சிரிநல் பஞ்சமி செல்வக் கதையினை
செறிகழல் மன்னன் செப்புக என்றலும்
அறிவு காட்சி அமர்ந்துஒழுக் கத்துஅவர்
குறிஉ ணர்ந்துஅதன் கூறுதல் உற்றதே.

மகத நாட்டு மன்னன் சயந்தரனும் அவன் சுற்றத்தாரும்


26) நாவலந் தீவின் நற்பரதத்துஇடை
மாவலர் மன்னர் மன்னு மகதம்நல்
கூவும் கோகிலம் கொண்மதுத் தாரணி
காவும் சூழ்ந்த கனக புரம்அதே.


27) அந்நகர்க்கு இறையான சயந்தரன்
நன்மனைவி விசாலநன் நேத்திரை
தன்சுதன்மதுத் தாரணி சீதரன்
நன்கு அமைச்சன் நயந்தரன் என்பவே.


28) மற்றும் தேவியர் மன்னும்எண்ணாயிரர்
வெற்றி வேந்தன் விழைந்துஉறுகின்றநாள்
பற்ற வாணிகன் பல்பொருள் பொற்கலத்து
உற்றமாதர் படத்து உருக்காட்டினான்.


29) மன்னன் நோக்கி மயங்கி மகிழ்ந்தபின்
கின்னரியோ கிளர்கார் மாதரோ
இன்ன ரூபம்மிக்கார்இது என்றலும்
மன்னும் வாசவன் வாக்குஉரை செய்கின்றான்.

வாசவன் மறுமொழி


30) சொல்அரிய சுராட்டிர தேசத்துப்
பல்சனம்நிறை பரங்கிரியாநகர்
செல்வன் சிரீவர்மன் தேவியும் சிரீமதி
நல்சுதையவள் நாமம் பிரிதிதேவி.

சயந்தரன் பிரிதிதேவியை மணந்து பட்டத்துஅரசி ஆக்குதல்


31) அவ்வணிகன் அவளுடை ரூபத்தைச்
செவ்விதில் செப்பச் சீருடை மன்னனும்
மௌவல் அம்குழல் மாதரைத் தான்அழைத்துத்
தெய்வ வேள்வியில் சேர்ந்து புணர்ந்தனன்.


32) மன்னன் இன்புற்று மாதேவி ஆகவே
நன்மைப் பட்டம் நயந்து கொடுத்தபின்
மன்னும் மாதர்கள் வந்து பணிந்திட
இன்ன ஆற்றின் இயைந்துடன் செல்லுநாள்.

பிரிதிதேவி-விசாலநேத்திரை சந்திப்பு


33) வயந்தம் ஆடவே மன்னனும் மாதரும்
நயந்து போந்தனர் நன்மலர்க் காவினுள்
பெயர்ந்து பல்லக்கின் ஏறிப் பிரிதிதேவி
கயந்தம் நீர்அணி காண்டற்குச் சென்றநாள்.


34) வாரணத்தின்முன் மார்க்கத்து நின்றவள்
வார்அணி கொங்கை யார்அவள் என்றலும்
ஏர்அணிம்முடி வேந்தன்மாதேவிஎன்று
தார்அணிகுழல் தாதி உரைத்தனள்.

பிரிதிதேவி பரமன் ஆலயம் சென்று தொழுதல்


வேறு

35) வேல்விழி மாது கேட்டு விசாலநேத்திரையோ என்னைக்
கால்மிசை வீழ எண்ணிக் காண்டற்கு நின்றாள் என்று
பால்மொழி அமிர்தம் அன்னாள் பரமன் ஆலையம் அடைந்து
நூல்மொழி இறைவன் பாதம் நோக்கிநன்கு இறைஞ்சினாளே.

ஆலயத்து அமர்ந்திருந்த முனிவனை அவள் பணிதல்


வேறு

36) கொல்லாத நல்விரதக் கோமான்நினைத் தொழுதார்
பொல்லாக் கதிஅறுத்துப் பொற்புடைய முத்திதனைச்
செல்லற்கு எளிதென்றே சேயிழையாள் தான்பரவி
எல்லா வினைசெறிக்கும் இயன்முனியைத் தான்பணித்தாள்.

முனிவனின் வாழ்த்துரை கேட்ட பிரிதிதேவி மகிழ்தல்


37) பணிபவள்கு நன்குஉரையில் பரமமுனி வாழ்த்த
அணிபெறவே நல்தவமும் ஆமோ எனக்குஎன்றாள்
கணிதம்இலாக் குணச்சுதனைக் கீர்த்திஉடனேபெறுவை
மணிவிளக்கமே போன்ற மாதவனும் தான்உரைத்தான்,


38) நின்றசனம் தன்னுடனே நீடுபோய்த் தவம்பட்டுப்
பின்றை அறஉரைகள் பெருமிதமாய்க் கேட்டுவிதி
வென்ற பரமன்அடி விமலமாய்த் தான்பணிந்து
அன்றுதான் புத்திரனை அவதரித்தால் போல்மகிழ்ந்தாள்.

வேறு

39) நல்தவன் உரைத்த சொல்லை நறுமலர்க் கோதை கேட்டு
பற்றுடன் உணர்ந்து நல்ல பாசுஇழைப் பரவை அல்குல்
உற்றதன் குழலினாரோடு உறுதவன் பாதம் தன்னில்
வெற்றியின் இறைஞ்சி வந்து வியன்மனை புகுந்து இருந்தாள்.

இரண்டாம் சருக்கம்

சயந்தரன்-பிரிதிதேவி உரையாடல்


40) வனவிளையாடல் ஆடி மன்னன் தன்மனை புகுந்து
மனமகிழ் கோதை தன்னை மருவிய காதலாலே
புனலின்நீ ஆடல் இன்றிப் போம்பொருள் புகல்க என்ன
கனவரை மார்பன் கேட்¢பக் காரிகை உரைக்கும் அன்றே.

41) இறைவன் ஆலயத்துஉள் சென்று இறைவனை வணங்கித் தீய
கறைஇலா முனிவன் பாதம் கண்டுஅடி பணிந்து தூய
அறவுரை கேட்டேன் என்ன அரசன்கேட்டு உளம் மகிழ்ந்து
பிறைநுதல் பேதை தன்னால் பெறுசுவைக் கடலுள் ஆழ்ந்தார்.

பிரிதிதேவி கண்ட கனவு


42) இருவரும் பிரிதல் இன்றி இன்புறு போகம் துய்த்¢து
மருவிய துயில்கொள்கின்றார் மனோகரம் என்னும் யாமம்
இருள்மனை இமில் ஏறுஒன்றும் இளங்கதிர் கனவில் தோன்றப்
பொருஇலாள் கண்டுஎழுந்து புரவலர்க்கு உணர்த்தினாளே.

சினாலய முனிவரிடம் மன்னனும் தேவியும் கனாப்பயன் கேட்டல்


43) வேந்தன்கேட்டு இனியன் ஆகி விமலன் ஆலயத்துஉள் சென்று
சேந்தளிர்ப் பிண்டியின்கீழ்ச் செல்வனை வணங்கி வாழ்த்தி
காந்திய முனிக்கு இறைஞ்சிக் கனாப்பயன் நுவல என்றான்
ஏந்துஇள முலையினாளும் இறைவனும் மிகுந்து கேட்டார்.

புத்திரன் பிறப்பான் என்றார் முனிவர்


44) அம்முனி அவரை நோக்கி அருந்துநல் கனவு தன்னைச்
செம்மையின் இருவர்கட்கும் சிறுவன்வந்து உதிக்கும் என்றும்
கம்பம்இல் நிலங்கள் எல்லாம் காத்துநல் தவமும் தாங்கி
வெம்பிய வினைஅறுத்து வீடுநன்கு அடையும் என்றார்.

புதல்வன் பிறந்தபின் நிகழ்வன மன்னன் கேட்டல்


45) தனையன்வந்து உதித்த பின்னைத் தகுகுறிப்பு உண்டோ என்று
புனைமலர் அலங்கல் மார்பன் புரவலன் மற்றுங் கேட்ப
நினைமின்அக் குறிகள் உண்டுஎன்நேர்மையில் கேட்பிர் ஆயின்
தினைஅனைப் பற்றும் இல்லாத் திகம்பரன் இயம்புகின்றான்.

திகம்பர முனிவரின் மறுமொழி


வேறு

46) பொன்எயில்உள் வீற்றுஇருக்கும் புனிதன் திருக்கோயில்
நின்சிறுவன் சரணத்தான் நீங்கும் திருக்கதவம்
நன்நாக வாவிதனில் நழுவப் பதமும்உண்டாம்
மன்னாக மாவினொடு மதம்அடக்கிச் செலுத்திடுவான்.


47) அருள்முனி அருளக்கேட்டு அரசன்தன் தேவிதன்னோடு
இருவரும் இறைஞ்சிஏத்தி எழில்மனைக்குஎழுந்துவந்து
பருமுகில் தவழும்மாடப் பஞ்சநல் அமளிதன்னில்
திருநிகர்மாது மன்னன் சேர்ந்துஇனிது இருக்கும்அந்நாள்.

பிரிதிதேவி கருக் கொள்ளுதல்


வேறு

48) புண்தவழ் வேல்கண் கோதை பூரண மயற்கைச் சின்னம்
மண்இனிது உண்ண எண்ணும் மைந்தன்பூவலயம் ஆளும்
பண்ணுகக் கிளவி வாயில் பரவிய தீரும் சேரும்
கண்ணிய மிச்சம் மின்னைக் கழித்திடும் உறுப்பு இதுஆமே.

புதல்வன் பிரதாபந்தன் பிறத்தல்


49) திங்கள் ஒன்பான் நிறைந்து செல்வன்நல் தினத்தில் தோன்றப்
பொங்குநீ¢ர்க் கடல்போல் மன்னன் புரிந்துநல் உவகை ஆகித்
தங்குபொன் அறைதிறந்து தரணிஉள்ளவர்க்குச் சிந்திச்
சிங்கம்நேர் சிறுவன் நாமம் சீர்பிரதாபந்தன் என்றார்.

பிரிதிவிதேவி குழந்தையுடன் பரமன் ஆலயம் அடைதல்


50) பிரிதிவி தேவி ஓர்நாள் பெருங்குழுத் தேவி மாரும்
அரியநல் பரமன் கோயில் அன்புடன் போக எண்ணி
விரிநிற மலரும் சாந்தும் வேண்டிய பலவும் ஏந்திப்
பரிவுள தனையன் கொண்டு பாங்கினால் சென்ற அன்றே.

ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதங்கள்


51) சிறுவன்தன் சரணம் தீண்டச் சினாலயம் கதவு நீங்கப்
பிறைநுதல் தாதிதானும் பிள்ளைவிட்டு உள்புகுந்தாள்
நறைமலர் வாவி தன்னுள் நல்சுதன் வீழக் காணாச்
சிறைஅழி காதல்தாயும் சென்றுஉடன் வீழ்ந்தாள் அன்றே.


52) கறைகெழு வேலினான் தன் காரிகை நீர்மேல் நிற்பப்
பிறைஎயிற்று அரவின் மீது பெற்றிருந் தனையன் கண்டு
பறைஇடி முரசம் ஆர்ப்பப் பாங்கினால் எடுத்து வந்து
இறைவனை வணங்கி ஏத்தி இயன்மனை புகுந்தான் அன்றே.

நாககுமாரன் எனப் பெயர் பெற்றது


53) நாகத்தின் சிரசின் மீது நன்மையில் தரித்தென்று எண்ணி
நாகநல் குமரன் என்று நரபதி நாமம் செய்தான்
நாகம்நேர் அகலத்தானை நாமகள் சேர்த்தி இன்ப
நாகஇந்திரனைப் போல நரபதி இருக்கும் அந்நாள்.

கின்னரி-மனோகரியரின் இசைத் திறம் அறிதல்


54) கின்னரிமனோகரீஎன் கெணிகைநல் கன்னிமாரும்
அன்னவர் தாயும் வந்தே அரசனைக் கண்டு உரைப்பார்
என்னுடைச் சுதையர் கீதம் இறைவநின் சிறுவன் காண்க
என்றுஅவள் கூற நன்றுஎன்று இனிதுடன் கேட்கின்றாரே.


55) இசைஅறி குமரன் கேட்டே இளையவள் கீதம் நன்றுஎன்று
அசைவிலா மன்னன் தானும் அதிசய மனத்தன் ஆகித்
திசைவிளக்கு அனையாள் மூத்தாள் தெரிந்துநீ என்கொல் என்ன
வசைஇன்றி மூத்தாள் தன்னை மனோகரிநோக்கக் கண்டேன்.

நாககுமாரன் அம் மங்கையரை மணத்தல்


56) பலகலம் அணிந்த அல்குல் பஞ்சநல் சுகந்தநீயும்
துலங்குதன் சுதையர் தம்மை தூய்மணிக் குமரன்கு ஈந்தாள்
அலங்கல்வேல் குமரன் தானும் ஆயிழை மாதர் தாமும்
புலங்களின் மிகுத்த போகம் புணர்ந்துஇன்பக் கடலுள் ஆழ்ந்தார்.

நாககுமாரன் யானையையும் குதிரையையும் அடக்குதல்


57) நாகம்மிக் கதம்கொண்டு ஓடி நகர்மாடம் அழித்துச் செல்ல
நாகநல் குமரன் சென்று நாகத்தை அடக்கிக் கொண்டு
வேகத்தின்¢ விட்டுவந்து வேந்தநீ கொள்க என்ன
வாகுநல் சுதனை நோக்கி யானைநீ கைக்கொள் என்றான்.


58) மற்றுஓர்நாள் குமரன் துட்ட மாவினை அடக்கி மேற்கொண்டு
உற்றஊர் வீதிதோறும் ஊர்ந்துதீக் கோடி ஆட்டி
வெற்றிவேல் வேந்தன் காட்ட விழைந்துநீ கொள்க என்றான்
பற்றியே கொண்டு போகிப் பவனத்தில் சேர்த்தினானே.

நாககுமாரன் பெருமைத் திருமகனாக விளங்குதல்


59) அறஉரை அருளிச் செய்த அம்முனி குறித்த நான்கும்
திறவதின் எய்தி நல்ல சீர்கலைக் கடலை நீந்திப்
படுமதக் களிறும் தேர்மா புகழ்பெற ஊர்ந்து மூன்றாம்
பிறையது போல்வளர்ந்து பீடுஉடைக் குமரன் ஆனான்.

விசாலநேத்திரை பொறாமையால் மகன் சிரீதரனிடம் சொன்ன சொற்கள்


60) தூசுநீர் விசாலக்கண்ணி சுதனைக்கண்டு இனிது உரைப்பாள்
தேசநல் புரங்கள் எங்கும் திகழ்பணி குமரன் கீர்த்திப்
பேசஓணா வகையில் கேட்டேன் பெருந்தவம் இல்லை நீயும்
ஏசுற இகழ்ஒன்று இன்றி இனிஉனைக் காக்க என்றாள்.

சிரீதரன் நாககுமாரனைக் கொல்லச் சமயம் பார்த்திருத்தல்


61) சிரிதரன் கேட்டு நெஞ்சில் செய்பொருள் என்என்று ஏகி
குறிகொண்டு ஆயிரத்தினோரைக் கொன்றிடும் ஒருவனாகச்
செறியும்ஐந்நூறு பேரும் சீர்மையில் கரத்தினாரை
அறிவினில் கூட்டிக் கொண்டு அமர்ந்துஇனிது இருக்கும் அந்நாள்.

நாககுமாரன் நீர்விளையாடலும் பிரிதிவிதேவி அவண் போதலும்

வேறு

62) குமரனும்நன் மாதரும் குச்சம்என்னும் வாவிஉள்
மமரநீரில் ஆடவே வன்னமாலை குங்குமம்
சுமரஏந்திப் பட்டுடன் தோழிகொண்டு போகையில்
சமையும்மாட மீமிசைச் சயந்தரன் இருந்ததே.

விசாலநேத்திரை சயந்தரனிடம் பொய்யுரை பகர்தல்


63) வேந்தன் பக்கம்கூறுநல் விசாலநேத்திரையவள்
போந்தனள் மனைவியால் புணரும்சோரன் தன்னிடம்
பூந்தடத்தைச் சுற்றிய பொற்புடைக் கரைமிசை
ஏந்திழையாள் நிற்பக்கண்டு இனிச்சுதன் பணிந்ததே.

பொய்பேசிய மூத்த மனைவியை மன்னன் கடிதலும், நாககுமாரன் சுற்றம்சூழ மனை திரும்புதலும்


64) பொய்உரை புனைந்தவளைப் புரவலனும் சீறினான்
நையும்இடை மாதரும் நாகநல் குமரனும்
செய்யமாலை சாந்துபட்டுச் செம்மையுடன் தாங்கியே
வெய்யவேல்கண் தாயுடன் வியன்மனை அடைந்தனன்.

பிரிதிவிதேவிக்கு மன்னன் இட்ட கட்டளை


65) மன்னன் தேவியை மாதேஎங்கு போனதுஎன்
நின்னுடைப் புதல்வன் நீராடல்காணப் போனதுஎன்
நின்உடன் மனைதனில் ஈண்டுஇனிதின் ஆடல்என்
நந்நகர்ப் புறத்தனைய நாடல்நீங்க என்றனன்.

தேவியின் சோர்வும் நாககுமாரன் உலாப்போதலும்


66) அரசன்உரைத்து ஏகினான் அகமகிழ்வும் இன்றியே
சிரசுஇறங்கித் துக்கமாய்ச் சீர்கரத்து இருந்தனள்
விரகுநல் குமரனும் வியந்துவந்து கேட்டனன்
அரசன்உரை சொல்லக்கேட்டு ஆனைமிசை ஏறினான்.


67) வாத்தியம் முழங்கவும் மதவாரணம் அடக்கவும்
ஏத்துஅரிய வீதிதொறும் ஈடுஇல்வட்ட சாரியும்
பார்த்துஅரிய நடனமும் பல்இயங்கள் ஆர்ப்பவே
சீற்றமொடு உலாச்செலச் சீர்அரசன் கேட்டனன்.

அரசன் சினந்து நாககுமாரனின் நற்பொருள் கவரச்செய்தல்


68) நன்அடியார் சொல்லினர் நாகநல் குமரன்என்
இன்உரையை மீறினன் இனிஅவன் மனைபுகுந்து
பொன்அணிகள் நற்பொருள் நாடிமிக் கவர்கொள
என்றுஅரசன் கூறலும் இனப்பொருள் கவர்ந்தனர்.

நாககுமாரன் அரசர்களுடன் சூதாடிப் பொருள் மிகக் கொணர்தல்


69) ஆடு வாரணமிசை அண்ணல்வந்து இழிதர
நீடுமாளிகைஅடைய நீர்மைநற்றாய் கூறலும்
ஆடும்சூது மனைபுகுந்து அரசர்தம்மை வென்றபின்
கூடும் ஆபரணமே குமரன் கொண்டு ஏகினான்.

அரசர்கள் சயந்தரனிடம் முறையிடுதல்


70) அரசர்கள் அனைவரும் அதிகராசனைத்தொழ
அரவமணி ஆரமும் ஆன முத்து மாலையும்
கரம்அதில் கடகமும் காய்பொன் கேயூரமும்
எரிமணிகள் இலதைவேந்து என்னஇக் கூற்றென.

நாககுமாரனுடன் ஆடிய சூதில் தந்தை இருமுறை தோற்றல்


71) சூதினால் செயித்துநின் சுதன்அணிகள் கொண்டனன்
சூதில்ஆட என்னுடன் சுதன்அழைப்ப வந்தபின்
சூதினில் துடங்கிநல் சுதனும்தந்தை அன்பினில்
சூதுஇரண்டு ஆட்டினும் சுதன்மிகச் செயித்தனன்.

தாயின் மனையில் கவர்ந்துசென்ற பொருளைமட்டும் கொண்டு ஏனைய பொருள்களை உரியவர்க்கே அளித்தல்


72) இனியசூதில் ஆடலுக்கு இசைந்ததேச மன்னரை
இனியதாயப் பொருள்களை இயல்பினால் கொடுத்துஉடன்
தனையனும் மனைபுகுந்து தாய்பொருள் கொடுத்தபின்
அணிஅரசர் ஆரமும் அவர்அவர்க்கு அளித்தனன்.

புதிய மாளிகையில் நாககுமாரன் குடிபுகுதல்


73) மன்னவன்தன் ஏவலால் மாநகர்ப் புறத்தினில்
நன்நகர் சமைத்துஇனிதின் நற்சுதன் இருக்கஎன்று
அந்நகரின் நாமமும் அலங்கரிய புரம்எனத்
தன்நகரின் மேவும்பொன்தார் அணிந்த காளையே.

மூன்றாம் சருக்கம்

கவிக்கூற்று


74) அரிவையர் போகம் தன்னில் ஆனநல் குமரன் தானும்
பிரிவுஇன்றி விடாது புல்லிப் பெருமலர்க் காவு சேர்ந்து
பரிவுடன் இனிதின் ஆடிப் பாங்¢கினால் செல்லும் நாளில்
உரிமையால் தோழர்வந்து சேர்ந்தது கூறல் உற்றேன்.

நாககுமாரனின் தோழர் வரலாறு


75) பார்அணி சூர சேனம் பண்ணுதற்கு அரிய நாட்டுள்
ஊர்அணி கொடிகள் ஓங்கும் உத்தர மதுரை தன்னில்
வார்அணி கொங்கை மார்க்கு மாரன்நேர் செயவர்மாவின்
சீர்அணி தேவிநாமம் செயவதி என்பது ஆகும்.

வியாள-மாவியாளரின் தோற்றம்


76) வேய்ந்தவெம் முலையாள் பக்கல் வியாள மாவியாளர் என்னும்
சேர்ந்துஇரு புதல்வர் தோன்றிச் செவ்வியால் செல்லும் நாளில்
காந்திநல் தவத்தோர் வந்தார் கடவுள்நேர் தூம சேனர்
வேந்தன்வந்து அடி வணங்கி விரித்துஒன்று வினவினானே.


77) என்னுடையப் புதல்வர் தாமும் இனிஅரசு ஆளும் ஒன்றோ
அன்னியன் சேவை ஒன்றோ அடிகள் நீர்அருளிச் செய்மின்
துன்னிய புதல்வர் தாமும் ஒருவனைச் சேவை பண்ணும்
என்றுஅவர் குறியும் சொல்ல எழில்முடி புதல்வர்க்கு ஈந்தான்.

வியாள-மாவியாளர் தம் நாடுவிட்டுப் பாடலிபுரம் சார்தல்


78) மன்னன்போய் வனம் அடைந்து மாமுனியாகி நிற்பப்
பின்னவர் அமைச்சன் தன்மேல் பெருநிலப் பாரம் வைத்துத்
தன்இறை தேடிப் போந்தார் தரைமகள் திலதம் போலும்
பன்னக நகரம் நேர்ஆம் பாடலிபுரமது ஆமே.

பாடலிபுர மன்னன் மகளிரை அவ்விருவரும் மணத்தல்


79) நன்னகர்க்கு இறைவன் நல்ல நாமம் சிரீவர்மன் ஆகும்
தன்னவன் றேவி பேரும் தக்கசிரீமதியாம் அம்பொன்
கிண்ணம்போல் முலையாள் புத்ரிகேணிகாசுந் தரிஎன்பாள்ஆம்
விண்உறை தேவர் போல வியாள மாவியாளர் வந்தார்.


80) மன்னனைக்கண்டு இருப்ப மாவியாளன் தகமை கண்டு
தன்உடையப் புதல்வி தன்னைத் தான்அவன் கொடுத்துத் தாதி
துன்னிய மகளி தன்னைச் சுந்தரிவியாளனுக்கு
மன்இயல் கொடுப்ப மன்னர் இருவரும் இன்புற்றாரே.

நாககுமாரனை வியாளன் காண, அவன் நெற்றிக்கண் மறைதல்


81) சிறுதினம் சென்ற பின்பு சீருடன் வியாளன் போந்து
நறுமலர்க் கோதை வேலான் நாகநல் குமரன் கண்டு
சிறுமலர் நெற்றிக் கண்ணும் சேரவே மறையக் கண்டு
சிறியன்யான் இன்னான் என்றான் செல்வனும் மகிழ்உற்றானே.

சீதரன் ஏவிய சேனையை வியாளன் கம்பத்தால் அடித்து மாய்த்தல்


82) செல்வனைக் கொல்வது என்று சிரீதரன் சேனை வந்து
பல்சன மனையைச் சூழப் பண்புடை வியாளன் கண்டு
வல்லைநீர் வந்தது என்ன வள்ளலை வதைக்க என்றார்
கொல்களி யானைக் கம்பம் கொண்டுஉடன் சாடினானே.

சீதரன் வந்து நாககுமாரனை எதிர்த்தலும், அமைச்சர் வேண்டுதலால் போர் விடுத்தலும்


83) சேனைதன் மரணம் கேட்டு சிரீதரன் வெகுண்டு வந்தான்
ஆனைமேல் குமரன் தோன்றி அவனும்வந்து எதிர்த்த போது
மானவேல் மன்னன் கேட்டு மந்திரிதன்னை ஏவ
கோன்அவர் குமரன் கண்டு கொலைத் தொழில் ஒழித்தது அன்றே.

மன்னனின் ஆணை கேட்ட நாககுமாரனின் மறுமொழி


84) நாகநல் குமரன் கண்டு நயந்தரன் இனிய கூறும்
வேகநின் மனைக்குச் சூரன் வெகுண்டுஅவன் வந்தான் என்ன
போகநீ தேசத்து என்று புரவலன் சொன்னான் என்ன
ஆகவே அவன்முன் போகில் அவ்வண்ணம் செய்வன் என்றான்.

நயந்தரன் அறிவுரையால் சீதரன் மனை புகுதல்


85) நயந்தரன் சென்று உரைப்பான் நல்லறிவு இன்றி நீயே
செயந்தனில் ஒருவன் கையில் சேனைதன் மரணம் கண்டும்
நயந்து அறியாத நீயே நன்மனை புகுக என்றான்
பயந்துதன் சேனை யோடும் பவனத்தில் சென்ற அன்றே.

நாககுமாரன் தேவிமாரோடு தன் தோழன் வியாளனின் ஊருக்குச் செல்லுதல்


86) தந்தையால் அமைச்சன் சொல்லத் தானும் தன்தாய்க்கு உரைத்து
தந்திமேல் மாதர் கூடத் தோழனும் தானும் ஏறி
நந்திய வியாளன் நன்ஊர் மதுரையில்புக்கு இருந்து
அந்தம்இல் உவகைஎய்தி அமர்ந்துஇனிது ஒழுகும் நாளில்.

மதுரையில் வீணைத் தலைவன் குழுவுடன் எதிர்ப்படல்


வேறு

87) மன்னவ குமரனும் மன்னனும் தோழனும்
அந்நகர்ப் புறத்தினில் ஆடல் மேவலின்
இன்இசை வீணைவேந்து இளையர் ஐஞ்நூற்றுவர்
அன்னவர்க் கண்டுமிக்கு அண்ணல் உரைத்தனன்.


88) எங்குஉளிர் யாவர்நீர் எங்குஇனிப் போவதுஎன்று
அங்குஅவர் தம்முளே அறிந்துஒருவன்சொலும்
தங்கள்ஊர் நாமமும் தந்தைதாய் பேர்உரைத்து
இங்குஇவர் என்கையின் வீணைகற்பவர்களே.

வீணைத் தலைவன் சொன்ன காம்பீர நாட்டுச் செய்தி


வேறு

89) நந்துகாம் பீரநாட்டின் நகரும் காம்பீரம் என்னும்
நந்தன ராசன்தேவி நாமம் தாரணியாம் புத்திரி
கந்தம்ஆர் திரிபுவனாரதி கைவீணை அதனில் தோற்று
என்தமரோடும் கூட எங்கள்ஊர்க்கு ஏறச்சென்றோம்.

திரிபுவனாரதியை வீணையினால் வென்று நாககுமாரன் நன்மணங் கொள்ளல்


90) வெற்றிவேல் குமரன் கேட்டு வியாளனும் தானும் சென்று
வில்புரு வதனத்தாளை வீணையின் வென்று கொண்டு
கற்புடை அவள்தன் காமக் கடல்இடை நீந்து நாளில்
உற்றதுஓர் வணிகனைக்கண்டு உவந்துஅதிசயத்தைக் கேட்டான்.

வேற்றுநாட்டு வணிகன் சொன்ன அற்புதச் செய்தி


91) தீதுஇல்பூந் திலகம் என்னும் சினாலயம் அதனின் முன்னில்
சோதிமிக் கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம்
ஓதிய குரலன் ஆகி ஒருவன்நின்று அலறுகின்றான்
ஏதுஎன்று அறியேன் என்றான் எரிமணிக் கடகக் கையான்.

வணிகன் சொன்ன சினாலயத்தை நாககுமாரன் சேர்ந்திருத்தல்


92) குன்றுஎனத் திரண்ட தோளான் குமரனும் கேட்டுஉவந்து
சென்றுஅந்த ஆலயத்தில் சினவரன் பணிந்து நின்று
வென்றுஅந்த விமலன் மீது விரவிய துதிகள் சொல்லி
முன்அந்த மண்டபத்தின் முகமலர்ந்து இனிது இருந்தான்.

வேடனின் மனைவியை நாககுமாரன் மீட்டுத்தருதல்

93) பூசல்இட்டு ஒருவன் கூவப் புரவல குமரன் கேட்டு
ஓசனிக்கின்றது என்ன ஒருதனி நின்ற நீயார்
ஆசைஎன் மனைவி தன்னை அதிபீம அசுரன் கொண்டு
பேசஒணா மலைமுழஞ்சுள் பிலத்தினில் வைத்துஇருந்தான்.


94) இரம்மிய வனத்துள் வாழ்வேன் இரம்மிய வேடன் என்பேன்
விம்முறு துயர்சொல் கேட்டு வீரன்அக் குகைகாட்டு என்னச்
செம்மையில் சென்று காட்டச் செல்வனும் சிறந்து போந்து
அம்மலைக் குகைவாய் தன்னில் அண்ணலும் உவந்து நின்றான்.

வியந்தரதேவன் நாககுமாரனுக்கு வாள் முதலியன கொடுத்தல்

95) வியந்தர தேவன் வந்து வந்தனை செய்து நிற்ப
விந்தநல் கிராதன் தேவிதனை விடுவித்த பின்புச்
சந்திரகாந்தி வாளும் சாலமிக்கு அமளி தானும்
கந்தநல் காமம் என்னும் கரண்டகம் கொடுத்தது அன்றே.

வேடன் உரைத்த மலைக்குகை நாலாயிரவர் நாககுமாரனுக்கு அடிமையாதல்

96) அங்குநின்று அண்ணல் போந்து அதிசயம் கேட்ப வேடன்
இங்¢குஉள மலைவாரத்தில் இரணிய குகைஉண்டு என்னக்
குங்குமம் அணிந்த மார்பன் குமரன்கேட்டு அங்குச் சென்றான்
அங்குள இயக்கி வந்து அடிபணிந்து இனிது சொல்வாள்.


97) இனிஉனக்கு ஆளர் ஆனோம் ஈர்இரண்டு ஆயிரவர்
எனஅவள் சொல்ல நன்றுஎன்று இனிஒரு காரியத்தின்
நினைவன்யான் அங்கு வாஎன் நீங்கிநற் குமரன் வந்து
வனசரன் தன்னைக் கண்டு அதிசயம் கேட்பச் சொல்வான்.

வேடன் சொற்படி வேதாளத்தை வதைத்தல்

98) வாள்கரம் சுழற்றி நிற்பான் வியந்தரன் ஒருவன் என்னக்
காலினைப் பற்றி ஈர்ப்பக் கனநிதி கண்டு காவல்
ஆள்எனத் தெய்வம் வைத்து அருகன்ஆலையத்துள் சென்று
தோள்அன தோழன் கூடத் தொல்கிரிபுரத்தைச் சேர்ந்தான்.

கிரிகூடபுரத்தில் நாககுமாரன் கணைவிழியை மணத்தல்

99) அந்நகர்க்கு அதிபன் ஆன வனராசன் தேவிதானும்
மன்னிய முலையினாள்பேர் வனமாலை மகள்நன் நாமம்
நன்நுதல் கணைவிழியை நாகநல் குமரனுக்குப்
பன்அரும் வேள்வி தன்னால் பார்த்திபன் கொடுத்தது அன்றே.

புண்டரபுரத்தை வனராசற்கு அளித்தல்

100) தாரணி வனராசன்குத் தாயத்தான் ஒருவன் தன்னைச்
சீரணி குமரன் தோழன் சிறந்துஅணி மாமன் கூடப்
பார்அணி வெற்றி கொண்டு புண்டர புரத்தை வாங்கி
ஏர்அணி வனரா சன்கு எழில்பெறக் கொடுத்த அன்றே.

நாடிழந்த சோமப்பிரபன் நற்றவம் செய்தல்

101) சொல்அரும் நாடு இழந்து சோமநல் பிரபன் போகி
எல்லையில் குணத்தின் மிக்க எமதரர் அடிவணங்கி
நல்லருள் சுரந்துஅளிக்கும் நற்றவ முனிவன் ஆகி
ஒல்லையின் வினைகள் தீர யோகத்தைக் காத்து நின்றான்.

நான்காம் சருக்கம்

சுப்பிரதிட்ட மன்னன் செயவர்மன் பரம முனிவரைப் பணிந்து வேண்டுதல்

102) சுப்பிரதிட்டம் எனும்புரம் ஆள்பவன்
செப்பு வன்மை செயவர்மராசன்தன்
ஒப்புஇல் பாவையும் ஓவியம் போல்செம்பொன்
செப்பு நேர்முலையாள்நல் செயவதி.


103) மக்கள் சேத்திஅ பேத்தியர் என்றுஇவர்
மிக்க செல்வத்தின் மேன்மையில் செல்லுநாள்
பக்க நோன்புடை பரம முனிவரர்
தொக்க ராசன் தொழுதிட்டு இறைஞ்சினான்.


104) இருவர் என்சுதர் என்னுடை ராச்சியம்
மருவி ஆளுமோ மற்றுஒரு சேவையோ
திருவுளம் பற்றித் தேர்ந்துஅறிவிக்கஎனத்
திருமுடி மன்ன செப்புவன் கேள்என்றார்.

முனிவர் மன்னனுக்கு உரைத்தவை

105) புண்டிரம் எனும்புரப் புரவலன்தனைக்
கண்திறந்து உந்திடும் காவலன்தனை
அண்டிநல் சேவையார் ஆவராம்எனப்
பண்திறத்தவத்தவர் பண்உரை கேட்டபின்.

செயவர்மன் புதல்வரின் அரசாட்சி

106) மக்கள் மிசைநில மன்னவன் வைத்துஉடன்
மிக்கு நத்துவம் வீறுடன் கொண்டுதன்
நிற்கும் செவ்வினை நீங்க நின்றனர்
தக்க புத்திரர் தாரணி ஆளும்நாள்.

சோமப்பிரபர் வழி அக்குமரர் நாககுமாரன் புகழை அறிதல்

107) நல்அருந்தவச் சோமப் பிரபரும்
எல்லை இல்குண இருடிகள் தம்முடன்
தொல்புகழ்ப்புரம் சுப்பிர திட்டத்தின்
நல்ல காவின் நயந்துஇருந்தார்களே.


108) செயவர்மன் சுதர் சீர்நல் தவர்களை
நயம் அறிந்துசேர் நன்அடியைப்பணிந்து
இயம்பும் இம்முனி இப்ப துறந்ததுஎன்
செயந்தரன்சுதன் சீற்றத்தின் ஆனதே.

செயவர்மன் புதல்வரிருவரும் நாககுமாரனை வந்தடைதல்

வேறு

109) என்றவர் உரையைக் கேட்டு இருவரும் துறந்து போந்து
சென்றுநல் குமரன் தன்னைச் சீர்பெற வணங்கிச் சொன்னார்
இன்றுமக்காளர் ஆனோம் என்றுஅவர் கூற நன்றுஎன்
குன்றுசூழ் வனசாலத்துக் குமரன்சென்று இருந்த அன்றே.


110) அடிமரத்து இருப்ப அண்ணல் அந்நிழல் திரிதல் இன்றித்
கடிகமழ் மார்பன் தன்னைக் காத்துஉடன் இருப்பப் பின்னும்
விடமரப் பழங்கள் எல்லாம் வியந்து நன்துய்த்து இருந்தார்
கொடிமலர்க் காவு தன்னுள் கோமகன் இருந்த போழ்தில்.

ஆலநிழலிருந்தபோது ஐந்நூற்றுவர் வந்து குமரனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளல்

111) அஞ்சுநூற்றுவர்கள் வந்தே அடிபணிந்து இனிய கூறும்
தஞ்சமாய் எங்கட்கு எல்லாம் தவமுனி குறிஉரைப்ப
புஞ்சிய வனத்துஇருந்தோம் புரவலன் நின்இடத்தின்
நெஞ்சிலில் குறியன் காணாய் எமக்குநீ இறைவன் என்றார்.

கிரிநகரில் குணவதியை நாககுமாரன் மணத்தல்

112) அரியநல் உரையைக் கேட்டு அவ்வணம் களிசிறந்து
உரியநல் அவர்களோடும் உவந்துஉடன் எழுந்து சென்று
கிரிநகர் தன்னைச்சேரக் கேட்டுநன் நகரைச் சென்றான்
அரிவரன் எதிர்க்கொண்டு ஏக அவன்மனை புகுந்துஇருந்தான்.


113) அரிவர ராசன் தேவி அருந்ததி அனைய கற்பின்
மிருகலோசனைஎன் பாளாம் மிக்கநன் மகள்தன் பேரும்
சுரிகுழல் கருங்கண் செவ்வாய்த் துடிஇடைக் குணவ தீயைப்
பிரவிச் சோதனன் இச்சித்துப் பெருநகர் வளைந்தது அன்றே.


114) நாகநல் குமரன் கேட்டு நால்படையோடும் சென்று
வேகநல் போர்க்களத்தில் வெற்றிகொண்டு அவனை ஓட்டி
நாகநல் எருத்தின் வந்து நகர்புகுந்து இருப்ப மிக்க
போகம்மிக் குணவ தீயைப் புரவலன் கொடுத்தது அன்றே.

நாககுமாரன் குணவதியுடன் கூடிப் போகந் துய்த்தல்

115) வேல்விழி அமிர்துஅன்னாளை வேள்வியால் அண்ணல் எய்திக்
கால்சிலம்பு ஓசை செய்யக் காமனும் ரதியும் போலப்
போனமும் போகம் எல்லாம் பருகிஇன்புற்று நாளும்
நூல்நெறி வகையில் துய்த்தார் நுண்இடை துவள அன்றே.


116) கலைஅணி அல்குல் பாவை கங்குலும் பகலும் எல்லாம்
சிலைஉயர்ந்து இனிய திண்தோள் செம்மலும் பிரிதல் இன்றி
நிலைபெற நெறியில் துய்த்தார் நிகர்இன்றிச் செல்லும் நாளுள்
உலைதல்இல் உறுவலீயான் ஊர்ச்சயந்தகிரிஅடைந்தான்.

நாககுமாரன் சயந்தகிரியடைந்து சினாலயம் தொழுதல்

117) வாமன் ஆலையத்து மூன்று வலம்கொண்டு உட்புகுந்து இறைஞ்சி
தாமம்ஆர் மார்பன் மிக்க தக்கநல் பூசை செய்து
சேமமாம் முக்குடைக்கீழ் இருந்துஅரியாசனத்தின்
வாமனார் துதிகள் சொல்ல வாழ்த்துபு தொடங்கினானே.

முக்குடைக்கீழ் விளங்கும் மூர்த்தியை வாழ்த்துதல்

வேறு

118) முத்துஇலங்கு முக்குடைக்கீழ் மூர்த்தி திருந்துஅடியை
வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்உலகம் ஆண்டுவந்து
இத்தலமும் முழுதுஆண்டு இருங்களிற்று எருத்தின்மிசை
நித்தில வெண்குடைக்கீழ் நீங்காது இருப்பவரே.


119) கமலமலர் மீதுஉறையும் காட்சிக்கு இனிமூர்த்தி
அமலமலர்ப் பொன்சரணை அன்பாய்த் தொழுபவர்கள்
இமையவர்கள் உலகத்து இந்திரராய்ப் போய்உதுதித்து
இமையவர்கள் வந்துதொழ இன்புற்று இருப்பாரே.


120) அரியாசனத்தின்மிசை அமர்ந்த திருமூர்த்தி
பரிவாக உன்னடியைப் பணிந்து பரவுவர்கள்
திரிலோகமும்தொழவே தேவாதி தேவருமாய்
எரிபொன் உயிர்விளங்கி இனியமுத்தி சேர்பவரே.

வில்லாளன் ஒருவனின் தூதுச் செய்தி

121) இணைஇலா இறைவனை ஏத்திஇவ்வகையினால்
துணைஇனிய தோழன்மார் சூழ்ந்¢து உடன்இருந்தபின்
கணைசிலை பிடித்துஒருவன் கண்டுஒர்ஓலை முன்வைத்து
இணைகரமும் கூப்பிநின்று இனிதுஇறைஞ்சிக் கூறுவான்.


122) வற்சைஎனும் நாட்டின்உள் வான்புகழும் கௌசம்பி
செற்றவரினும்மிகு சூரன்சுபசந்திரன்
வெற்புநிகர் கற்பினாள் வேந்தன்மகா தேவியும்
நற்சுகாவதிஎனும் நாமம்இனிது ஆயினாள்.


123) அன்னவர்தம் புத்திரிகள் ஆனஏழு பேர்களாம்
நன்சுயம்பிரபையும் நாகசுப்பிரபையும்
இன்பநல் பிரபையும் இலங்குசொர்ணமாலையும்
நங்கைநல் பதுமையும் நாகதத்தை என்பரே.


124) வெள்ளியின் மலையில் மேகவாகனன்துரந்திடக்
கள்அவிழ் மாசுகண்டன்அவன் வந்துஉடன்
கிள்ளைஅம் மொழியினாரைக் கேட்டுஉடன் பெறுகிலன்
வெள்ளைஅம் கொடிநகர வேந்தனை வதைத்தனன்.


125) வேந்தனுக்கு இளையன்உன்னை வேண்டிஓலையேதர
சேர்ந்தவன் அளித்தஓலை வாசகம் தௌ¤ந்தபின்
நாந்தக மயிற்கணை நலம்பெறத் திரித்துஉடன்
போந்தவனைக் கொன்றனன் பூஅலங்கல் மார்பனே.

நாககுமாரனின் வெற்றியும் நங்கையர் பலரை மணத்தலும்

126) அபிசந்திரன்தன்புரம் அத்தினாகம் ஏகியே
சுபமுகூர்த்த நல்தினம் சுபசந்திரன் சுதைகளும்
அபிசந்திரன் தன்மகளாம்சுகண்டன் சுதையுடன்
செபமந்திர வேள்வியால் செல்வன்எய்தி இன்புற்றான்.


127) நங்கைமார்கள் தன்உடன் நாகநல் குமரனும்
இங்கிதக் களிப்பினால் இசைந்துஇனிப் புணர்ந்துஉடன்
பொங்குநகர்ப் புறத்தினில் பூவளவன் மேவியே
திங்கள்சேர் செய்குன்றினும் சேர்ந்துஇனிது ஆடுநாள்.

அவந்திநாட்டு மேனகியை நாககுமாரன் அடைதல்

128) அவந்திஎன்னும் நாட்டினுள் ஆனஉஞ்சை நீள்நகர்
உவந்தமன்னன் நாமமும் ஓங்கும்செய சேனனாம்
அவன் தனன் மனைவியர் ஆனநல் செயசிரீ¢யாம்
சிவந்தபொன் நிறமகள் சீருடைய மேனகி.


129) பாடலீ புரத்துஇருந்த பண்புமாவியாளனும்
நாடிவந்து இருந்தனன் நன்குஉஞ்சை நகர்தனில்
சேடிகண்டு மேனகிக்குச் செப்பவந்து கண்டுஅவள்
நாடிஅவள் போயினள் நன்நிதிப் புரிசையே.


130) அந்நகர்விட்டு ஏகினன் ஆனமாவியாளனும்
சென்றுதன் தமையனைச் சேவடி பணிந்தபின்
நன்றுடன் வணங்கினன் நாகநல் குமரனை
இன்றிலன்தான் யார்என என்தம்பிஅவன் என்னலும்.


131) மின்னின்இடை நேர்இழை மேனகி எனஒரு
மன்மதனை இச்சியாள் மாவியாளன் சொல்லலும்
அந்நகரில் செல்லலும் அரிவையர் தரித்திட
மன்னன்அம்பு வேள்வியால் மன்னிநல் புணர்ந்தனன்.

மதுரையில் சிரீமதியை இசைப்போட்டியில் வென்று நாககுமாரன் பெறுதல்

132) மற்றும்ஒன்று உரைத்தனன் மதுரைமா நகரியில்
உற்றுஇருந்த சிரீமதி ஓர்ந்துநாடகம்தனில்
வெற்றிமுழவு ஏழ்இயம்ப வீறுடைய வல்லவன்
பற்றுடன் அவள்பதியாம் பார்மிசைமேல் என்றனன்.

மதுரை வந்த வணிகனிடம் நாககுமாரன் அவன் கண்ட அதிசயம் இயம்பக் கேட்டல்

133) அங்குசென்றுஅவ் அண்ணலும் அவளைவென்று கொண்டனன்
பொங்கும்இக் குழலியர்ப் புணர்ந்துஉடன் இருந்தபின்
வங்கமீது வந்தஓர் வணிகனை வினவுவான்
எங்குஉள அதிசயம் இயம்புகநீ என்றனன்.

வணிகன் பூதிலகமாபுரத்து அதிசயம் கூறல்

134) பொங்கும்ஆழியுள்ஒரு பூதிலகமாபுரம்
புங்கவன்தன் ஆலையம் பொங்குசொன்ன வண்ணமுன்
நங்கைமார் ஐஞ்நூற்றுவர் நாள்தொறும் ஒலிசெய்வார்
அங்குஅதற்குக் காரணம் யான்அறியேன் என்றனன்.

நாககுமாரன் அந்நகரம் சென்று சினாலயம் பணிந்து இருந்தமை

135) தனதுவித்தை தன்னையே தான்நினைக்க வந்தபின்
மனத்துஇசைந்த தோழரோடு வள்ளல்தீ பஞ்சுஎன்றுநல்
கனகமய ஆலையங் கண்டுவலங் கொண்டுஉடன்
சினன்அடி பணிந்துமுன் சிறந்துமிக்கு இருந்தனர்.

ஆலயத்தின் முன்வந்து ஐந்நூறு மங்கையர் அலற, அதன் காரணம் குமாரன் வினாவுதல்

136) ஒருநிரையாய் மங்கையர் ஓசைசெய்யக் கேட்டபின்
திருஅலங்கல் மார்பினான் சேரஅழைத்து அவர்களை
அருகன்ஆலையத்துமுன் அலறும்நீங்கள் யார்எனத்
தரணிசுந்தரியவள் அவன்கு இதுஎன்று கூறுவாள்.

ஐந்நூற்றுவருள் தரணி சுந்தரி தங்கள் நிலையெடுத்துரைத்தல்

137) அரியவெள்ளி மாமலை ஆடும்கொடி யேமிடை
பிரிதிவி திலகம்எங்கள் பேருடைய நன்நகர்
வரதிரட்சகன்எமர் தந்தையை மருகனுக்குக்
கருதிஎம்மைக் கேட்டனன் கண்ணவாயுவேகனே.


138) எந்தையும் கொடாமையால் எரிஎன வெகுண்டனன்
எந்தையை வதைசெய்து எங்களையும் பற்றியே
இந்தநல் வனத்துஇருந்தான் என்றவளும் கூறலும்
அந்தவாயுவேகனை அண்ணல்வதை செய்தனன்.

வாயுவேகனைக் கொன்ற நாககுமாரன் நங்கையர் ஐந்நூற்றுவரை மணந்து இன்புறுதல்

139) அஞ்சுநூற்று மங்கையரை அண்ணல்வேள்வியால்எய்தி
நெஞ்சில்அன்பு கூரவே நிரந்தரம் புணர்ந்தபின்
அஞ்சுநூற்றுவர்படர்கள் ஆளர்ஆகி வந்தனர்
தஞ்சமாய் அவர்தொழுது அகமகிழ்ந்து செல்லுநாள்.

கலிங்கநாட்டு அரசகுமாரி மதனமஞ்சிகையை நாககுமாரன் கூடி மகிழ்தல்

140) கலிங்கம்என்னும் நாட்டின்உள் கனகமய இஞ்சிசூழ்ந்து
இலங்குரத்னபுரம் இந்நகர்க்கு மன்னவன்
துலங்குசந்திரகுப்தன் தோகைசந்திரம்மதி
பெலங்கொள்இவர் நன்மகள் பேர்மதனமஞ்சிகை.


141) நாகநல் குமரன் சென்று நன்மந்திர வேள்வியால்
வாகனம் இனிதின்இன்று மதன்மஞ்சிகையொடும்
தாகமிக்கு உடையனாய்த் தான்லயப் பருகினான்
நாகநல் புணர்ச்சிபோல் நன்குஉடன் இருந்துஅரோ.

கங்காளநாட்டு அரசகுமாரி இலக்கணையை நாககுமாரன் பெற்றுப் போகந் துய்த்தல்

142) கங்கைநீர் அணிந்துஇலங்கும் கங்காளநன் நாட்டின்உள்
திங்கள்தவழ் மாடம்நல் திலகபுர மன்னவன்
பொங்குமகுடம் முடி பொற்புவிசையந்தரன்
இங்கித மனைவிபேர் இயல்விசையை என்பளே.


143) இலக்கணை எனும்மகள் இலக்கணம் உடையவள்
மிக்கஅண்ண லும்சென்று மெய்ம்மைவேள்வி தன்மையால்
அக்கணத்து அவன்எய்தி அவள்தன்போகம் துய்த்தபின்
தொக்ககாவு தன்உளே தொல்முனிவர் வந்துஅரோ.

நாககுமாரன் அங்கு வந்த முனிவரைப் பணிந்து தன் மனக் கருத்திற்கு விளக்கம் கேட்டல்

144) ஊற்றினைச் செறித்திடும் உறுதவனுடைச் சாரணை
நாற்றமிக் குமரனும் நன்புறப் பணிந்தபின்
ஏற்றஅறங் கேட்டுஉடன் இருந்துஇலக்கணையின்மேல்
ஏற்றமோகம் என்என இயன்முனி உரைப்பரே.

ஐந்தாம் சருக்கம்

நாககுமாரனின் முந்திய பிறப்பு வரலாறு

145) நாவலந் தீவு தன்னுள் நன்குஅயிராவதத்தின்
மேவுமின் முகில்சூழ் மாட வீதசோகப்புரத்துக்
காவிநன் விழிமாதர்க்குக் காமன்விக்கிரமராசன்
தாவில் சீர் வணிகன் நாமம் தனதத்தன் என்பது ஆமே.


146) மனைவிதன் தனதத்தைக்கு மகன்நாகதத்தன் ஆகும்
வனைமலர் மாலை வேலான் மற்றுஒரு வணிகன் தேவிப்
புனைமலர்க் கோதை நல்லாள் பொற்புடை வசுமதிக்கு
மனையின்நன்மகள்தன் நாமம் இயன்நாகவசுஎன் பாள்இம்.


147) நண்புறு நாகதத்தன் நாகநல்வசுஎன்பாளை
அன்புறு வேள்வி தன்னால் அவளுடன் புணர்ந்து சென்றான்
பண்புறு நல்தவத்தின் பரமுனி தத்த நாமர்
இன்புறும் புறத்தின் வந்தார் இறைவன் ஆலையத்தின் உள்ளே.


148) நாகதத்தன்சென்று அந்த நன்முனி சரண்அடைந்து
வாகுநல் தருமம் கேட்டு அனசன நோன்பு கொண்டான்
போகபுண்ணியங்கள் ஆக்கும் பூரண பஞ்சமீயில்
ஏகநல் தினத்தின் நன்று இடர்பசி ஆயிற்று அன்றே.


149) தருமநல் தியானம் தன்னால் தன்னுடை மேனி விட்டு
மருவினான் அசோத மத்தின் வானவன் ஆகித் தோன்றி
வருகயல் விழியாள் நாக வசுவும்வந்து அமரனுக்கு
மருவிய தேவி ஆகி மயல்உறுகின்ற அன்றே.


150) அங்குஐந்து பல்ல மாயு அமரனாய்ச் சுகித்து விட்டு
இங்குவந்து அரசன் ஆனாய் இனிஅந்தத் தேவி வந்து
தங்குநின் மனைவி ஆனாள் தவமுனி உரைப்பப் பின்னும்
எங்களுக்கு அந்த நோன்பு இனிதுவைத்து அருள என்றான்.

நாககுமாரன் வேண்ட முனிவர் நாகபஞ்சமி நோன்பினை விளக்குதல்

151) திங்கள் கார்த்திகையில் ஆதல் சேர்ந்தபங்குனியில் ஆதல்
பொங்குஅனல் ஆடி ஆதல் பூரண பக்கம் தன்னில்
அங்குறு பஞ்சமியின் அனசன நோன்பு கொண்டு
தங்கும்ஆண்டு ஐந்து நோற்றான் தான்ஐந்து திங்கள் அன்றே.


152) இந்தநல் கிரமம் தன்னில் இனிமையின் நோன்பு நோற்று
அந்தம்இல் அருகர் பூசை அருள்முனி தானம் செய்தால்
இந்திர பதமும் பெற்று இங்குவந்து அரசர் ஆகிப்
பந்ததீவீனையை வென்று பஞ்சமகதியும் ஆமே.

முனிவர் உரைப்படி நாககுமாரன் பஞ்சமி நோன்புகொள்ள அவன் தந்தை ஏவலால் அமைச்சன் நயந்தரன்வந்து அழைத்தல்

153) என்றுஅவர்உரைப்பக் கேட்டு இறைஞ்சிக் கைக்கொண்டு நோன்பை
சென்றுதன் பவனம் புக்கான் சேயிழையோடு மன்னன்
நன்றுடன் செல்லும் நாளுள் நயந்தரன் வந்துஇறைஞ்சி
உன்னுடைத் தந்தை உன்னை உடன் கொண்டு வருக என்றான்.

நாககுமாரன் தன் நகருக்கு மனைவி இலக்கணையோடும் பிறரோடும் திரும்புதல்

154) அமையும்நன்கு அமைச்சன் சொல்லை அருமணி மார்பன் கேட்டு
சமையும்நால் படையும் சூழச் சாலலக் கணையினோடும்
இமையம்போல் களிற்றின்ஏறி இனியநல் தோழன் மாரும்
இமையவர்க்கு இறைவன் போல எழில்பெறப் புக்க அன்றே.

மகன் நாககுமாரனைத் தந்தை தழுவி வரவேற்றல்

வேறு

155) தாதைஎதிர் கொள்ளஅவன் தாழ்ந்துஅடி பணிந்தான்
ஆதரவினன் நன்மகனை அன்புற எடுத்தும்
போதமிகப் புல்லியபின் போந்தனர் மனைக்கே
ஏதம்இல்சீர் இன்புற இனிதுடன் இருந்தார்.

நாககுமாரன் தான் மணந்த மனைவியரை யெல்லாம் அழைப்பித்து அவருடன் சேர்ந்திருத்தலும், தந்தை அவனுக்கு முடிசூட்டித் துறவு பூணுதலும்

156) வெற்றியுடன் வேள்விசெய்த வேல்விழியினாரை
உற்றுஉடனே மாதரை ஒருங்குஅழைக்க வந்தார்
சித்திரநல் பாவையரைச் சேர்ந்துஉடன் இருந்தான்
பற்றுஅறச் செயந்¢தரனும் பார்மகன்மேல் வைத்தான்.


157) நாககுமரன்தனக்கு நன்மகுடம் சூட்டிப்
போகஉப போகம்விட்டுப் புரவலனும் போகி
யாகமன் அடைக்குமுனியவர் அடிபணிந்து
ஏகமனம் ஆகியவன் இறைவன் உருக்கொண்டான்.

பிரிதிதேவியும் துறவுபூண்டு நற்பேறு பெறுதல்

158) இருவினை கெடுத்தவனும் இன்பஉலகு அடைந்தான்
பிரிதிவிநல் தேவியும்தன் பெருமகனை விட்டு
சிரிமதி எனும்துறவி சீர்அடி பணிந்து
அரியதவம் தரித்துஅவளும் அச்சுதம் அடைந்தாள்.

நாககுமாரன் வியாளன் முதலிய தோழர்களுக்குத் தேயங்கள்அளித்தலும், தன் மனைவியருள் இலக்கணையைப் பட்டத்தரசி யாக்குதலும்


159) வேந்தன்அர்த்த ராச்சியம் வியாளனுக்கு அளித்தான்
ஆய்ந்தபல தோழர்களுக்கு அவனிகள் அளித்துக்
சேர்ந்ததன் மனைவியருள் செயலக்கணைதன்னை
வாய்ந்த மகாதேவிபட்டம் வன்மைபெற வைத்தான்.

இலக்கணையார் வயிற்றில் புதல்வன் பிறத்தல்


160) இலக்கணையார் தன்வயிற்றில் நல்சுதன் பிறந்தான்
மிக்கவன்தன் நாமமும் மிகுதேவகுமாரன்
தொக்ககலை சிலைஅயில் பயின்றுமிகு தொல்தேர்
ஒக்கமிக் களிறுஉடனே ஊர்ந்துதினம் சென்றான்.

நாககுமாரன் மன்னர் புடைசூழ அரியாசனத்து வீற்றிருத்தல்


161) புரிசைஎழ நிலத்தின்மிசை பொற்புஉற விளங்கும்
அரியஅரியாசனத்தில் அண்ணல் மிகஏறி
எரிபொன்முடி மன்னர்கள் எண்ஆயிரவர் சூழ
இருகவரிவீசஇனி எழில்பெற இருந்தான்.

மகன் தேவகுமாரனுக்கு முடி சூட்டி நாககுமாரன் துறவு பூணவே அவன் தேவி இலக்கணையும் துறவு மேற்கொள்ளல்


162) அரசுஇனிது இயல்பினின் அமர்ந்துஇருக்கும் அளவில்
பரவுமுகில் மாய்ந்திடப் பார்த்திபன் விரத்தி
விரவிமிகு குமரன்மிசை வீறுமுடி சூட்டி
அரியதவம் தாங்கஅவன் அன்புடன் எழுந்தான்.


163) அமலமதி கேவலியின் அடிஇணை வணங்கி
விமலன்உருக் கொண்டனன்நல் வேந்தர்பலர் கூட
கமலமலராள் நிகர்நல் காட்சிஇலக்கணையும்
துமிலமனைப் பதுமைஎனும் துறவர்அடிபணிந்தாள்.

நாககுமாரனும் அவன் தோழர் முதலியோரும் சித்தியும் முத்தியும் பெறுதல்


வேறு

164) நறுங்குழல் இலக்கணையும் நங்கைமார்தம் கூட
உறுதவம் தரித்துக்¢ கொண்டு உவந்துஅவர் செல்லும் நாளுள்
மறுவில்சீர் முனிவன் ஆய நாககுமாரன் தானும்
இறுகுவெவ் வினைகள் வென்று இனிச்சித்தி சேர்ந்தது அன்றே.


165) வியாள மாவியாளர் தாமும் விழுத்தவத்து அனயை என்னும்
நயாஉயிர் தியானம் தன்னால் நால்இரு வினைகள் வென்று
செயத்துதி தேவர் கூறிச் சிறந்த பூசனையும் செய்ய
மயாஇறப் பிறப்பும் இன்றி மருவினார் முத்தி அன்றே.


166) அருந்தவ யோகம் தன்னால் லச்சேத் தியபேத் தியர்தம்
இருவினை தம்மை வென்று இன்புறும் சித்தி சேர்ந்தார்
மருவுநல் தவத்தி னாலே மற்றும் உள்ளோர்கள் எல்லாம்
திருநிறைச் சோதம் ஆதி சேர்ந்துஇன்பம் துய்த்தார் அன்றே.


167) நாகநல் குமரன்கு ஆயு நான்குஆண்டு ஐஞ்நூற்று இரட்டி
ஆகுநல் குமார காலம் ஐந்து முப்பத்து இரட்டி
போகபூமிஆண்ட பொருவில் எண்நூறு ஆண்டு
ஆருநல் தவத்தில் ஆண்டு அறுபத்து நான்குஅது ஆமே.


168) மறுஅறு மனையவர்க்கும் மாதவர் தமக்கும் ஈந்த
பெறும்இரு நிலங்கள் எங்கும் பெயர்ந்து நல்கேவலியாய்
அறமழை பொழிந்த காலம் அறுபத்து ஆறாண்டு சென்றார்
உறுதவர் தேவர் நான்கும் உற்றுஎழு குழாத்தி னோடே.

நூற் பயன்



169) இதன்கதை எழுதி ஓதி இன்புறக் கேட்பவர்க்கும்
புதல்வர்நல் பொருளும் பெற்றுப் புரந்தரன் போல வாழ்ந்து
கதம்உறு கவலை நீங்கிக் காட்சிநல் அறிவு முன்பாய்ப்
பதமிகும் அமர யோகம் பாங்குடன் செல்வர் அன்றே.

உலகிற்கு அறவுரை



170) அறம்இன்றிப் பின்னை ஒன்றும் உயிர்க்குஅரண் இல்லைஎன்றும்
மறம்இன்றி உயிர்க்கு இடர்செய் மற்றுஒன்றும் இல்லை என்றும்
திறம்இது உணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக்கு அஞ்சி
மறம்இதை விட்டு அறத்தில் வாழுமின் உலகத் தீரே.


நாக குமார காவியம் முற்றிற்று.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework