உதயண குமார காவியம்
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: இயல்
- ஐஞ்சிறு காப்பியங்கள்
உஞ்சைக் காண்டம்
கடவுள் வாழ்த்து
மணியுடன் கனக முத்த மலிந்த முக்குடை இலங்க
அணிமலர்ப் பிண்டியின் கீழ அமர்ந்த நேமிநாதர் பாதம்
பணிபுபின் வாணிபாதம் பண்ணவர் தாள்களுக்கு எம்
இணைகரம் சிரத்தில் கூப்பி இயல்புறத்தொழுதும் அன்றே. 1
பொன்னெயில் நடுவண் ஓங்கும் பூநிறை அசோக நீழல்
இன்னியல் ஆலயத்துள் ஏந்தரி ஆசனத்தின்
மன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி
உன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம். 2
அவையடக்கம்
மணிபொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில்
மணிபொதி கிழிய தன்னை மணியுடன் நன்கு வைப்பார்
துணிவினில் புன்சொலேனும் தூய நற்பொருள் பொதிந்தால்
அணியெனக் கொள்வார் நாமும் அகத்தினுள் இரங்கல் செல்லாம். 3
பயன்
ஊறுந் தீவினை வாய் தன்னையுற்றுடன் செறியப் பண்ணும்
கூறுநல் விதி புணர்ந்து குறைவின்றிச் செல்வம் ஆமுன்
மாநுறு கருமம் தன்னை வரிசையின் உதிர்ப்பை யாக்கும்
வீறுறு முறுப்பின் தன்மை விளம்புதற் பால தாமோ. 4
நூல்
நாட்டுச் சிறப்பு
இஞ்சி மூன்றுடைய கோமான் எழில் வீரநாதன் இந்தப்
புஞ்சிய நிலத்தோர்க் கெல்லாம் பொற்பு நல்லற நன்மாரி
விஞ்சவே சொரியுங் காலம் வெண்மதிக் குடைக்கீழ் வாழும்
எஞ்சலில் காட்சி மன்னனிருக்கை நாடு உரைத்தும் அன்றே. 5
நாவந்தீவு
பூவும் நற்றளிரும் செற்றிப் பொழில் மிகச் சூழ்ந்து இலங்கும்
நாவலர் மரத்தினாலே நாமமாய்த் துலங்கி நின்று
தீவுநற்கடல் கடாமும் ஒன்றிற்கொன்று இரட்டி சூழ்ந்த
நாவலந்தீவு நந்தினன் மணி போன்ற தன்றே. 6
வத்தவநாடு
வேதிகை சிலைவளைத்து வேதண்ட நாணேறிட்டுப்
போதவும் வீக்கினாற்போல் பொற்புடைப் பரதந் தன்னில்
ஓதியதரும கண்டத்து ஓங்கிய காவு நின்று
வாதத்தால் சுகந்தம் வீசுன் வத்தவநாடதாமே. 7
கோ நகரம்
இஞ்சிமிக் கெழுந்தே யோங்கி யிலக்கிய அமர லோகம்
எஞ்சலில் எல்லை காணா எழில்பெற நிற்றனோக்கி
அஞ்சல் இல்வருக என்றே அணிபெற விலங்கி நீண்ட
குஞ்சி நன் கொடிகரத்தால் கூவியிட்டு அழைக்குமன்றே. 8
முகில்தவழ் மாடமீதின் முத்தணி மாலை நான்றே
இகலுறும் அமளியின்மேல் எழின் மங்கை மைந்தர் தாமும்
பகலிரவு இன்றிப் போகம் பண்பினால் துய்த்திருப்பார்
நகரி கௌசாம்பி என்னும் நாம மார்ந்து இலங்குமன்றே. 9
அரசன்
ஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் உன்னத முகில் எழுந்து
வான் உமிழ் வாரியன்ன வண்கையன் வண்டு அரற்றும்
தேன் உமிழ் இலங்கற்றோளான் செல்வத்தில் குபேரன் அன்னான்
தானுமிழ் கிரண மார்பன் சதானிகன் அரசனாமே. 10
கோப்பெருந்தேவி
மன்னன் உள்ளத்துள்ளான் மாமணி மயிலஞ் சாயல்
அன்ன மென்னடை வேற் கண்ணாள் அருந்தது அனைய நங்கை
பொன்னணி சுணங்கு பூத்த புணர்முலை அமிர்தம் அன்னாள்
மின்னு நுண் இடையாள் நாம மிகாவதி என்று மிக்காள். 11
கற்புடைத் திருவினங்கை காரிகை தன் வயிற்றில்
சற்புருடன் ஒருவன் வந்து சார்ந்து அவதரித்து மிக்க
நற்புடைத் திங்கள் ஒன்பா னன்கு அமைந்திருக்கும் ஓர் நாள்
பொற்புடை மஞ்ச மீதில் பொலிவுடன் இருந்த போழ்தில். 12
மிருகாபதியை பறவை தூக்கிச் செல்லல்
செந்துகின் மூடிக்கொண்டு திருநிலா முற்றந்தன்னில்
அந்தமாய்துயில் கொள்கின்ற ஆயிழை தன்னைக் கண்டே
அந்தரத்தோடுகின்ற அண்ட பேரண்டப்புள் ஒன்று
அந்தசையென்று பற்றியன்று வான் போயிற்று அன்றே. 13
மற்றவடந்தை தானுமாமுனியாகி நிற்கும்
சற்கிரி விபுல மன்னும் சாரலவ் வனத்திற் சென்று
நற்றவனருகில் வைப்ப நற்றுயில் விட்டெழுந்தாள்
பற்றுயிர் உண்ணாப்புள்ளும் பறந்து வான் போயிற்றன்றே. 14
அரசி கருவுயிர்த்தல்
நிறைமதி முக நன் மங்கை நிரம்பிய கெர்ப்பமாதல்
பொறைவயினோய் மீக்கூரப்பொருவில் வான் கோள்கள் எல்லாம்
முறையினல் வழியை நோக்க மொய்ம்பன் அத்தினத்தில் தோன்ற
அறையலை கடலில் சங்க மாணி முத் தீன்ற தொத்தாள். 15
பொருகயற் கண்ணினால் தான்போந்ததை யறிந்தழுங்கித்
திருமணி கிடந்த தென்னச் செழுமகன் கிடப்பக்கண்டு
பெருகிய காதலாலே பெருந்துயர் தீர்த்திருப்ப
மருவு நற்றாதையான மாமுனி கண்டு வந்தான். 16
குழந்தைக்குப் பெயரிடல்
தவமுனி கொண்டு சென்று தாபதப்பள்ளி சேர்த்தி
அவண் இனிது ஓம்பவப்பால் அருக்கனன் உதயகாலத்து
உவமையின்று உதித்தானாம் உதயணன் ஆக என்றார்
இவணமத் தாயும் சேயும் இருடிபாலிருந்தார் அன்றே. 17
உதயணன் பெற்ற பேறுகள்
பிரமசுந்தர யோகிக்குப் பிறந்தவன் யூகியோடும்
இருவரும் வளர்ந்தே இன்பக்கடல் நீந்திக் காணக்
கரிணமும் புள்ளு மற்றுங் கண்டடி வீழுங் கீதப்
புரந்தரன் கொடுத்த யாழும் பொறை முனியருளிற் பெற்றான். 18
உதயணன் கோடபதியின் உதவியால் தெய்வ யானை பெறுதல்
மைவரை மருங்கினின்ற மலையென விலங்குகின்ற
தெய்வ நல்லியானை கண்டு சென்றுதன் வீணை பாடப்
பையெனக்களிறுங் கேட்டுப் பணிந்தபடி யிறைஞ்சி நின்று
கையது கொடுப்ப ஏறிக் காளையும் பள்ளி சேர்ந்தான். 19
தெய்வ யானை உதயணன் கனவில் கூறுதல்
நன்றிருட் கனவினாக நயமறிந்து இனிது உரைக்கும்
பன்னிடும் பாகன் வந்து பற்றியே யேறினாலும்
இன்றை நாள் முதலா நீ நானின்றியே முன் உண்டாலும்
அன்று உன்பானில்லேன் என்றே அக்கரி உரைப்பக் கேட்டான். 20
உதயணன் மாமனாகிய விக்கிரமன் அந்த தவப் பள்ளிக்கு வருதல்
செல்லும் அக்காலம் தன்னில் செறிந்தவன் புதல்வனான
வெல்களிற்றி யானை வேந்தன் விக்கிரன் தனக்கு மக்கள்
இல்லையென்று எவ்வல் கூர்ந்தே இனிமையின் வந்து நல்ல
சொல்லருண் முனிவன்பாதம் தொழுது நன்கிருந்தான் அன்றே. 21
விக்கிரமன் உதயணன் யூகியைப் பற்றி முனிவரிடம் வினவுதல்
புரவலனில் இனியராம் இப்புதல்வர்கள் யார்கொலென்ன
வரமுனியருளக் கேட்டு மகிழ்ந்து தன் ஆயமெல்லாம்
சிரசணி முடியும் சூட்டிச் செல்வற்குக் கொடுத்துப்போக்கி
விரவிய தவத்தனாக வேண்டுவது எண்ணம் என்றான். 22
உதயணன் அரசுரிமை பெறுதல்
முனியொடு தங்கை தன்னை முயன்றிரந் தெய்தி நாகம்
தனையன வெங்கயத்திற் றனயனையேற்றிப் போய்த்தன்
மனனிறை நாட்டை அந்த மருகனுக்கீந்து போந்து
முனிவனம் புகுந்து மாமன் முனிவனாய் நின்றானன்றே. 23
சாதானிகன் மிருகாபதியைக் காணல்
இளமையை இகந்து மிக்க இனிய நற்குமரனாகி
வளமையில் செங்கோல் தன்னை வண்மையினடத்தினானாங்
இளமயில் அனைய தேவிக்கு இரங்கிய சாதானிகன் தான்
உளமலி கொள்கை யான்ற வொருதவற்கண்டு உரைத்தான். 24
மிருகாபதி மீண்டும் மக்களைப் பெறுதல்
தேவியின் வரவு நல்ல திருமகன் செல்வுங் கேட்டு
மாவலன் மனமகிழ்ந்து வந்தூர் புக்கிருக்கு நாளில்
தேவியும் வந்து கூடிச் சிறந்த நற்புதல்வர் தம்மைத்
தேவிளங்குமரர் போலச் செவ்வியிற் பயந்தாளன்றே. 25
பிங்கல கடகரென்று பேரினிதிட்டு மன்னன்
தங்கிய காதலாலே தரணியாண்டினிது செல்லக்
குங்கும மணிந்த மார்பக் குமரனும் யூகியும் போய்
அங்குள தேசமெல்லா மடிப்படுத் தினிதிருந்தார். 26
சதானிகன் துறவியாதல்
உதயணகுமரன் தன்னை யுற்றுடனழைத்துப் பூமிப்
பதமுனக்காக வென்று பார்த்திபன் கொடுத்துப் போகிக்
கதமுறு கவலை நீங்குங் காட்சி நற்றவத்தனாகி
இதமுறு யோகந்தன்னில் எழில் பெற நின்றான் அன்றே. 27
உதயணனுடைய அமைச்சர்கள்
மணிமுடி கவித்த போழ்தின் வத்தவர்க் கிறைவனானான்
அணியும் நாற்படையும் சூழ்ந்த அமைச்சரு நால்வர் நாமம்
தணிவில் சீர் யூகியோடு சாருரு மண்ணுவாவும்
துணை வயந்தகனும் தொல்சீர் இடபகனும் என்பவாமே. 28
உதயணன் யானையின் அறிவுரையைக் கடத்தல்
அரசனுக் கினியராகி அமைச்சியனடத்திச் செற்றே
வருபகை பலவுந்தேய வரச்செங்கோல் உய்க்குங்காலை
அரிய நாடகங்கள் கண்டே அரசனும் உளமாழாந்து
கரிணத்தை மறந்து விட்டுக் காதலினடிசிலுண்டான். 29
தெய்வ யானை மறைந்து போதல்
மன்னிய தெய்வயானை மாயமாய் மறைந்துபோக
மன்னனும் மனம் தளர்ந்து மணி இழந்த அரவு போலத்
துன்னிய சோக மேவுத்துயரெய்தித் தேடுக என்றான்
பன்னருஞ் சேனை சென்று பாரெங்கும் தேடித்தன்றே 30
உஞ்சை நகர்
சிந்து கங்கை நீர் சேர்ந்து வளம்படும்
அந்த மாகும் அவந்தி நன்னாட்டினுள்
இந்து சூடிய விஞ்சி வளநகர்
உந்து மாளிகை யுஞ்சயினிப் பதி. 31
பிரச்சோதன மன்னன்
உரைப்பரும் படையோர் பிரச் சோதனன்
நிரைத்த மன்னர் நிதி மிக்களப்பவே
தரித்த நேமியுருட்டித் தரணியாண்டு
உரைத்த மாக்களி ற்றே றேறோடு மன்னுவான். 32
பொருவின் மன்னவன் பொன் திறை கேட்புழித்
திருவமன்னர் திறை தெரியோ லையுள்
ஒரு மகன் புள்ளியிட்ட தறிந்திலன்
மருவிக் கூறலும் மன்னன் வெகுண்டனன். 33
பிரச்சோதனன் அமைச்சரை வினாதல்
தாமரைக் கண்டழல் எழ நோக்கியத்
தீமை செய்த திறைக் கடன் மன்னனை
நாமறந்திட நன்கு மறைத்த தென்
ஆமமைச்ச ரென்று அண்ணல் வினவினான். 34
அமைச்சர் விடை
உறு களத்தினில் உன்னிய ஆண்மையும்
பெறு பொருள்செறி பீடுடைக் கல்வியும்
தறுகண் வேழம் தசைக்குறு பெற்றியும்
மறுவில் வீணையின் வாய்த்தநல் விஞ்சையும். 35
வளமையின் வந்த மன்னிய செல்வமும்
இளமை இன்பம் எழில் நல நற்குலம்
உளவன் ஆதலின் உற்ற கடனென
அளவு நீதி அமைச்சர் உரைத்தனர் 36
பிரச்சோதனன் சினவுரை
வேந்தன் கேட்டு வெகுண்டுரை செய்தனன்
போந்தவற் பற்றிப் போதரு வீரெனச்
சேர்ந்த மைச்சரகள் செய்பொருள் என்னென்று
மாந்தி மற்றவர் மற்றொன்று செய்கின்றார். 37
அமைச்சர் சூழ்ச்சி
ஊன மாற்றர்மேல் யூகிபோர் போனதும்
ஆனை போக அரசன் இரக்கமும்
கான யானையைக் காட்டிப் பிடிப்பதும்
மான வேலவர் மந்திரித்து ஒன்றினார். 38
அமைச்சர் மாய யானை செய்தல்
அரக்கினும் மெழு காக்கிய நூலினும்
மர த்தினுங்கிழி மாவின் மயிரினும்
விரித்த தோலினும் வேண்டிய வற்றினும்
தரித்த யானையைத் தாமிக் கியற்றினார். 39
அமைச்சர்கள் யானையை செலுத்துதல்
பொறியமை சுரிப் பொங்கும் உதரத்தில்
உறையும் மாந்தர் ஓர் தொண்ணூற்றறுவரை
மறையு மாயுதம் வைத்த தனோருடல்
நெறி கண்டூர்ந்தனர் நீல மலையென. 40
சாலங்காயன் அதனை ஊர்ந்து காட்டல்
கார்முழங்கில் களிறொலி செய்யவே
போர் மிக்க ஆனையைப் பொற்புடை மன்னன்முன்
ஊர்ந்து காட்டினான் உற்ற அமைச்சருள்
சார்ந்த மந்திரி சாலங்காயன் என்பவன். 41
சாலங்காயன் உதயணனைச் சிறைப் பிடிக்கச் செல்லல்
சாலங் காயநீ சார்ந்து தருகென
ஞாலம் காக்கு நரபதி செப்பலும்
வேலுங் கொண்டு நல் வேந்தர்கள் வெண்குடைக்
கோலும் பிச்சமுங் கொண்டு பறந்தனன். 42
நாற்பெரும் படையின் அளவு
ஈரெண் ணாயிரம் எண்வரை யானையும்
ஈரெண் ணாயிரம் ஈடில் புரவியும்
ஈரெண் ணாயிரமின் மணித் தேருடன்
ஈரெண் ணாயிர விற்படை யாளரே. 43
இத்தனையும் இயல்புடன் கூடியே
மெத்தெ னாவரு கென்று விடுத்துடன்
ஒத்த நற்பொறி யோங்கிய யானையும்
வத்தவன் தன் வனத்திடை வந்ததே. 44
பொய் யானையை வேடர்கள் கண்டு உதயணனுக்கு அறிவித்தல்
அவ்வ னத்தினி லான் பிடிகளும்
கவ்வு கைத்தழைக் காரிடி யானைதன்
மவ்வ லம்மத வண்டெழ வீசலும்
அவ்வ னச்சரர் அன்புடன் கண்டனர். 45
எம்மி றையது வேழமென எண்ணித்
தம்மில் ஓடி உதையற்கு ரைத்தலும்
கொம்மை வண்மணிக் கோலக் கலினமாச்
செம்மலும் சிறந் தேறி நடந்தனன். 46
உதயணன் தேவ யானை என்று கருதி யாழ் மீட்டல்
புள்ளிடை தடுப்பத்தீய பொய்குறி செய்யக்கண்டும்
வள்ளலும் நடப்பானாக வயந்தகன் விலக்கப்போந்து
கள்ளவிழ் மலர்க்கானத்துக்கள்ள நல்லியானை கண்டே
உள்ளமெய்மொழி கடம்மால் உணர்ந்தவன் இனியனானான். 47
நக்க ணத்தை நயந்துடன் நோக்கிலன்
அக்க ணத்தி லகமகிழ் வெய்தித் தன்
மிக்க வீணையை மெய்ந்நரம் பார்த்துடன்
தக்க ராகத்திற்றான் மிக வாசித்தான். 48
பொய்யானை உதயணன் பால் வருதல்
பொறியின் வேழத்தின் பொங்கு செவியுற
உறுமனத் துடனூர்ந்து முன்னே வர
மறையு மாந்தர் கைம்மாவை அழித்திடப்
பொறி கழன்றது போர்ப்படை யானதே. 49
போர் நிகழ்ச்சி
செறுநர் செய்தது சித்திர மாமென
முறுவல் கொண்ட முகத்தினனாகத் தன்
உறு வயந்த கனுற்றவைந் நூற்றுவர்
மறுவில் வீரியர் வந்துடன் கூடினார். 50
கரந்திருந்த களிற்றுனுட் சேனையும்
பரந்து முன்வந்து பாங்கில் வளைத்தபின்
விரிந்து வத்தவன் வெகுண்டுவில் நூறினான்
முரிந்து சேனை முனையின் மடிந்ததே. 51
சாலங் காயனும் சார்ந்து வெகுண்டிட
நாலு மாப்படை வந்துநாற் றிக்கிலும்
மேலெ ழுந்து மிகவும் வளைத்தன
காலன்போல் மன்னன் கண்கள் சிவந்தவே. 52
புல்வாய்க் கூட்டத்துப் புக்க புலியெனக்
கொல்வா ளோச்சியே கூற்றம் விருந்துண
வில்வாள் தம்முடன் வீரர் அழிந்திட
வல்வாள் வத்தவன் வாட்கிரை யிட்டனன். 53
கொன்ற போரில் குருதிஆறு ஓடவும்
நின்ற மாந்தர்கள் நீங்கி விட்டோ டவும்
கன்றிஉள் சாலங் காயனும் மேல்வர
மன்றன் வாளவன் சென்னியில் வைத்தனன். 54
மந்திரீகளை மன்னர் வதை செயார்
புந்தி மிக்கோருரை பொருட் டேறித்தன்
செந்தி வாளை அழுத்திலன் செல்வனும்
அந்த அமைச்சனை அன்பின் விடுத்தனன். 55
உதயணன் எதிரி யானை, குதிரைப் படை அழித்தல்
திரளுடைக்கரி சேர்ந்து வளைத்தலும்
வரைகள் வீழ்வென வாரணம் வீழவும்
நிரை மணித்தேர் நிலத்திற் புரளவும்
புரவிகள் பொங்கிப் பூமியில் வீழவும். 56
வெஞ்சினம் மனன் வேறணி நூறலும்
குஞ்சரத்தினற் கோட்டின் வாளொடியவத்
தஞ்ச மின்றிய தாருடை வேந்தனை
வெஞ்சொல் மாந்தர் வெகுண்டு உடன்பற்றினார். 57
நங்கை மார்சூழ னாண்மலர் சூட்டுங்கை
திங்கள் போலத் திலத மெழுதுங்கை
பொங்கு கொங்கையிற் குங்குமம் பூசுங்கை
பங்க யத்தடிப் பாடகம் பூட்டுங்கை. 58
கீத வீணை செங்கெந்தம் அனையுங்கை
ஈதன் மேவியிர வலர்க்கு ஆற்றுங்கை
ஏதமில் குணத்து என்முடி மன்னன்கை
போத வெண்டு கிலாற்புறத் தார்த்தனர். 59
உதயணன் வயந்தகனுக்கு ஓலையனுப்புதல்
சிலந்தி நூலிற் செறித்தநற் சிங்கம்போல்
அலங்கல் வேலினான் அன்புடை யூகிக்கே
இலங்க ஓலை எழுதி வயந்தகன்
நலங்கொள் கையின வின்று கொடுத்தனன். 60
பிரச்சோதனன் மகள் வாசவதத்தையின் கனவு
காசிறேர் மிசைக் காவலுடன் செலப்
பேசரும் பெருமைப் பிரச் சோதனன்
ஆசையின் மகள் ஆடகப்பா வைபோன்ம்
வாசவ தத்தை வண்மைக் கனவிடை. 61
பொங்கி ளங்கதிர் போந்த தமளியில்
கொங்கையைத் தழீஇக் கொண்டுடன் செல
நங்கை கண்டு நற்றாதைக்கு உரைந்தனள்
அங்கந் நூலின் அறிந்தவர்க் கேட்டனன். 62
இவன்முலைக் கியைந்த நல்லெழின் மணம்மகன் வந்தே
துவளிடை இளமுலை தோய்ந்து கொண்டுபோமென
அவள் கனவுரைப்பக் கேட்ட அண்ணலும் மகிழ்ந்தபின்
திவளுமாலைத் தேர்மிசைச் செம்மல் வந்தடைந்தனன். 63
உதயணன் சிறைப் புக, வயந்தகன் யூகியைக் காணல்
மன்னனை மிகவு நொந்து மாநகரிரங்கவும்
துன்னிவெஞ்சிறை மனையிற் றொல்வினை துரப்பவும்
இன்ன நற்படியிருப்பவியல் வயந்தகனும் தான்
சென்றுயூகி தன்னிடைத் திருமுகத்தைக் காட்டினான். 64
ஓலையைக் கண்டு யூகி துன்புறுதல்
அண்ணன்கோயில் எங்கணும் அரற்றினும் புலம்பினும்
கண்ணினீரருவிகள் கால் அலைத் தொழுகவும்
அண்ணல் ஓலைவந்த செய்திமான யூகிகேட்டுடன்
புண்ணில் வேலெறிந்தெனப் பொற்பழிந்து வீழ்ந்தனன். 65
யூகியின் கோட்பாடு
தேறினன் எழுந்திருந்து தீயவர்கள் யானையை
மாறுதரக்காட்டி எம் மன்னனைப் பிடித்தனர்
வீறுதர அந்நகரை வெங்கயத் தழித்துப் பின்
கூறுமன் மகளுடன் கொற்றவனை மீட்குவம். 66
மீள்குலம் யாமென்றெணி வெகுண்டு போர்க்களத்தினில்
வாண்முனை கடந்தவர்க்கு வஞ்சனை செய்வோமென
நீள்விழிநன் மாதரோடு நின்ற சுற்றத்தோர்களைக்
கோள்களைந்து புட்பகத்திற் கொண்டுவந்து வைத்தனன். 67
உருமண்ணு வாவினுடன் இடபகன் சயந்தியும்
திருநிறைந்த புட்பகமும் சேர்ந்து இனிது இருக்கவெண்
பெருமகன்கணிகை மைந்தர் பிங்கலக் கடகரை
அரசுநாட்டி ஆள்கவென்றே அன்புடன் கொடுத்தனன். 68
யூகியின் சூழ்ச்சி
மன்னவற்கு இரங்கி யூகிமரித்தனன் என்வார்த்தையைப்
பன்னியெங்கணும் முரை பரப்பி வையகந்தனில்
அன்னதன தொப்புமை அமைந்ததோர் சவந்தனை
உன்னியூகி கான்விறகில் ஒள்ளெரிப் படுத்தினன். 69
யூகி அவந்தி நாடு ஏக பகை மன்னன் நாட்டினை கைப்பற்றுதல்
தன்னகர் புலம்பவெங்கும் தன்னையுங் கரத்தலின்
உன்னிவந்து மாற்றரசர் ஓங்குநாடு பற்றினர்
என்றறிந்து யூகியும் இனிச்சிறையின் மன்னனைச்
சென்று அவனைக்காண்டு மென்றுதேச முன்னிச் சென்றனன். 70
துன்னருநற் கானமோடு தொன்மலையிற் சார்தலும்
செந்நெல்கள் விளைவயற் செழும்புனனதிகளும்
மன்னுநாடுந் தான்கடந்து மாகொடி நிறைந்திலங்கு
நன்னகருஞ்சேனையின்நன்கு அமைச்சன் சென்றனன். 71
உஞ்சையில் யூகியின் செயல்கள்
ஒலிகடலன்ன வோசையுஞ் சேனை தன்
புலிமுக வாயிற் பொற்புடைத் திலங்கும்
மலிகுடிப் பாக்க மதின் மறைந்திருக்க
வலியதன் சேனை வைத்தனன் அன்றே. 72
யூகி மாறுவேடத்தில் நகர் வீதியில் வருதல்
இன்னவை கேட்கின் இன்னவை தருக என
மன்னவன் அறியும் அருளுரை பயிற்றி
மன்னிய வேடம் வகுத்துடன் கொண்டு
நன்னகர் வீதிநடுவினில் வந்தான். 73
இருள்படு குஞ்சி யியல்படத் தூற்றி
மருள் செயமாலை வகுத்துடன் சுற்றி
உருணிறச் சுண்ணம் உடலினிற் பூசிப்
பொருணலச் சுட்டி பொருந்துறச் சேர்த்தி. 74
செம்பொற் பட்டம் சேர்த்தினன் நுதலில்
அம்பொற்சாந்த மனிந்த நன் மார்பன்
செம்பொற் கச்சைச் சேர்த்தினன் அரையில்
அம்படக் கீறி அணிந்த உடையான். 75
கோதை யுத்தரியங் கொண்ட கோலத்தன்
காதிற் குழையினன் காலிற் சதங்கையன்
ஊதுங் குழலினன் உனுலரிய உடுக்கையன்
போதச் சிரசிற் பொருநீர்க் கலசன். 76
கொடியணி மூதூர்க் கோல நல்வீதி
நடுவட் டோ ன்றி நாடக மாடிப்
படிமிசைக் கரணம் பாங்கிற் றாண்டி
இடியென முழக்கி இனிதினின் வந்தான். 77
யூகியின் கூற்று
இந்திர லோகம் விட்டிந்திரன் வந்தனன்
அந்தரத் திருந்தியான் அன்பினின் வந்தேன்
இந்திரன் எனக்கிறை யீண்டும் புதல்வர்க்குத்
தந்திரக் குமக்குத் தானிறை யாமென. 78
புற்றினில் உறையும் பொறிவரி ஐந்தலைப்
பற்றரு நாகம் பற்றி வந்தினிதா
உற்ற இந்நகரத்துள் சிறை வைத்தார்
அற்றதை எங்கும் அறியக் காட்டினர். 79
மருளுந் தெருளும் வரம்பில பயிற்றித்
திரளுறு செனங்கள் திறவதிற் சூழப்
பெருந்தெரு வெல்லாம் பிற்படப் போந்தே
அருஞ் சிறைப்பள்ளி அருகினிற் சேர்ந்தான். 80
யூகி தன் வரவினை உதயணனுக்கு உணர்த்தல்
கிளைத்தலை இருவர் கற்றகிளர் நரப்பிசையுங் கீதம்
தளைச் சிறை மன்னன் கேட்பத்தான் மகிழ்குழலினூத
உளத்தியல் பாட்டைக் கேட்டு யூகியாமென மகிழ்ந்து
களைந்தனன் கவலையெல்லாம் காவலர்க்குணர்த்திப் போந்தான். 81
வீரர்கள் யூகியை அணுகி ஆராய்ந்து போதல்
பலகொடி வாயிற்செல்லப் பார்மன்னன் சேனைவந்து
நலமுறுவடிவு நோக்க நகரத்தின் கோடுபாய்ந்த
கலனணிமார் வடுவ்வைக் கஞ்சுகத்துகிலின் மூடத்
தலைமுதல் அடியீராகத் தரத்தினாற் கண்டுபோந்தார். 82
யூகி யானைக்கு வெறியூட்டுதல்
பித்தனற் பேயனென்று பெருமகற்கு உரைப்பக் கேட்டு
வெற்றிநற் சேனைமற்றும் வெஞ்சிறை காக்கவென்றான்
மற்றினி யூகிபோந்து மலிகுடிப் பாக்கஞ் சேர்ந்தே
அன்றைநாள் இரவில் யானை அனல் கதம்படுக்கலுற்றான். 83
வாளொடு கைவிலேந்தி வயந்தகன் தன்னோடு எண்ணித்
தோளன் தோழன் கூடத்தூபத்துக் கேற்ற வத்தும்
வேளையீதென்று கொண்டு விரகினாற் கயிறு பற்றித்
தாளொத்த கொம்மை மீதிற்றரத்தினாலிழிந் தானன்றே. 84
நளகிரியின் செயல்
ஆனை தன்னிலை கண்டெய்தி அகிலிடும் புகையு மூட்டிச்
சேனை மன்னகரழித்துச் சிறைவீடுன் கடனேயென்று
மான நல்யூகி யானை செவியின் மந்திரத்தைச் செப்ப
யானை தன்மதக்கம் பத்திலருந்தனை யுதறித் தன்றே 85
யானை பாகரைக் கொல்லுதல்
நீங்கிட மிதுவென்றெண்ணி நிலைமதிலேறிப் போகத்
தூங்கிருடன் னிலானை சுழன்றலைந் தோடப்பாகர்
பாங்கினால் வளைப்பப் பொங்கிப் படுமுகின் முழக்க மென்ன
ஆங்கது பிடுங்கிக் கையால வரைக்கொன்றிட்ட தன்றே. 86
பிரச்சோதனன் களிற்றின் வெறிச்செயலைக் கானல்
வேழமும் மதங்கொண்டோ ட வேந்தன்கேட்டினிது எழுந்து
வேழ நன் வேட்டங்காண வெம்முலை மாதரோடும்
ஆழிநல் இறைவன் தானும் அணிமிகு மாடமேறிச்
சூழநன் மாதர் நிற்பத்துளக்கின்றி நோக்கினானே. 87
நளகிரியின் தீயச் செயல்கள்
கூடமாளிகை களெல்லாங் கோட்டினாற் குத்திச் செம்பொன்
மாடமு மதிலுமற்று மறித்தஃ திடித்துச்செல்ல
ஆடவர் கூடியோடு யயில்குந்தந் தண்டமேந்தி
நாடிநற்கையால் தட்டி நாற்றிசை சூழ்ந்து நின்றார். 88
கூற்றுருவெய்தி யோடிக் கோட்டிடைக் குடர்களாடக்
காற்றென முழக்கி வேழங்கண்ட மாத்தரைத்தன்கையால்
நாற்பத்தெண் பேரைக்கொன்று நடுவுறப் பிளந்திட்டோடி
மாற்றருங் கோட்டை வாயின் மதிற்புறம் போந்ததன்றே. 89
அற்நூற்றின் மீதிலைம்ப தானநற்சேரி தானும்
உறு நூற்றிலேழை மாறவுள்ள நாற்பாடியோடும்
நறுமலர் கந்தம்வீசு நன்குள காவுமற்றும்
பெறுமத யானை கோட்டாற் பெருநகரழித்த தம்மா. 90
உஞ்சை மாந்தர் அலறல்
பாடுநன் மகளிரெல்லாம் பாட்டொழிந் தரற்றியோட
ஆடுநன் மாதர் தாமும் ஆடல் விட்டுலந்துசெல்லக்
கூடுநன் மங்கைமைந்தர் குலைந்தவரேச் செம்பொன்
மாடநன் மேனிலைப்பான் மன்னினார் பலரோடு ஆங்கே. 91
அமைச்சர் அக்களிற்றினை அடக்க உதயணனால் மட்டுமே முடியும் எனல்
மத்துறுகடலின் மிக்கு மறுகிய நகரத்தாரும்
வெற்றிநல் வேந்தனோடு வினவினா ரமைச்சரெண்ணி
இத்தின நகரம் பட்டவிடரது விலக்கனல்ல
வத்தவன் கையதென்ன வகுத்துரை கேட்டமன்னன். 92
மன்னன் மறுத்துக் கூறுதல்
போரினில் நிற்கலாற்றாம் பொய்யினிற்றந்த மைந்தன்
சீரொடு சிறப்பும் வௌவிச் சிறையினில் வைத்ததன்றிப்
பேரிடிக் கரிமுன்விட்டால் பெரும்பழி யாகுமென்று
தாருடை வேந்தன் சொல்லத்தரத்தினால் அமைச்சர் சொல்வார். 93
அமைச்சர்கள் அது பழியன்று புகழே ஆகுமெனல்
இந்திரனானை தானுமிவன் கையாழிசைக்கு மீறாது
இந்திரன் வேழமுங் கேட்டேழடி செல்லுமற்றிக்
கந்திறு கைம்மாவிக்கோன் கைவீணை கடவாதென்ன
மந்திரித் தவர்சொற்கேட்டு மன்னன் அப்படிசெய்கின்றான். 94
பிரச்சோதனன் அமைச்சன் சீவகன் என்பவன் உதயணனைக் கண்டு கூறல்
சீவகன் வத்தவற்குச் செவ்விதிற் செப்புகின்றான்
தேவ இந்நகரின் இடுக்கண் தீர்க்கைநின் கடனதாகும்
போவதுன்நேசத் தென்றல் புரவலன் கடனதாகும்
பூவலன் உரைத்தான் என்னப் புகழ்ந்தவன் சிறை விடுத்தான். 95
உருவுள சிவிகை ஏறி உயர்மன்னன் மனை புகுந்து
திருமயிர் எண்ணெய் இட்டுத் திறத்தினன் நீருமாடி
மருவிறன் பட்டுடுத்து மணிக்கலன் இனிது தாங்கித்
தெருவிடைத் திகழப்புக்கான் திருநகர் மகிழவன்றே. 96
உதயணன் யாழ் இசைத்தலும் களிறு அடங்குதலும்
பருந்து பின் தொடர யானை பறிவைகண் பற்றும்சூழப்
பெருந்தெரு நடுவுட்டோ ன்றப் பீடுடைக்குமரன் தானும்
திருவலித்தடக்கை வீணை சீருடன் பாடலோடும்
மருவலிக்களிறுங் கேட்டு வந்தடி பணிந்ததம்மா. 97
உதயணன் நளகிரியின் மேல் ஏறுதல்
பிரிந்தநற் புதல்வர் வந்து பெற்றதன் தந்தை பாதம்
பரிந்த நற்காதாலே பணிந்திடுமாறு போல
இருந்துதற் பணிந்த யானை எழின் மருப்படிவைத்தேறிப்
பெருந்தகையேவிக் கோட்டு பெருங்கையாற் றோட்டி கொண்டான். 98
உதயணன் அக்களிநூர்ந்து வருதலும் பிரச்சோதனன் மகிழ்தலும்
வைத்த நன் மணியும் யாழும் வரிக்கயிறதுவு நீட்ட
வெற்றிநல்வேந்தன் வாங்கி வீக்கிமிக் கார்த்துக்கொண்டே
உற்றநல் வீதிதோறும் ஊர்ந்துநற் சாரிவட்டம்
பற்றிதன் கோட்டக் கண்டு பார்த்திபன் மகிழ்ச்சி கொண்டான். 99
பிரச்சோதனன் உதயணனுக்கு பரிசு வழங்குதல்
பிடிப்புப் பொன்விலை மட்டில்லாப் பெருவலியாரந் தன்னை
முடிப்புவி அரசன் ஈய மொய்ம்பனுமணிந்து கொண்டு
கொடிப்புலிமுகத்து வாயிற்கோட்டையுட் கொண்டு வந்தான்
இடிக்குரற் சீயமொப்ப விலங்கிய குமரன்தானே. 100
பிரச்சோதனன் உதயணனைத் தழுவுதல்
சால்கவென்று இறைவன் செப்பத் தன்னுடைக் கையினோச்சி
கால்களின் விரலினெற்றி கனக்கநன் கூன்றி நின்று
மால்கரி கால் கொடுப்ப மன்னனு மகிழ்ந்து போந்து
வேல்கவின் வேந்தன் காண வியந்துடன் தழுவிக் கொண்டான். 101
பிரச்சோதனன் உதயணனுக்கு முகமன் கூறி உறவு கொள்ளல்
மருமகன் நீயே என்று மன்னவன் இனிமை கூறி
வருமுறை நயந்து கொண்டு மகிழ்ந்து உடன் இருந்த போழ்து
திருமகள் கனவு கூறிச் செல்வநீ கற்பியென்னப்
பெருவலியுரைப்பக் கேட்டுப் பெருமகன் உணர்த்தலானான். 102
உதயணன் பிரச்சோதனன் மக்கட்கு வித்தை கற்பித்தல்
வேந்தன் தன் மக்கட்கெல்லாம் வேன்முதல் பயிற்றுவித்தும்
பூந்துகில் செறிமருங்குற் பொருகயற்கண்ணி வேய்த்தோள்
வாய்ந்த வாசவதத்தைக்கு வருவித்தும் வீணைதன்னைச்
சேர்ந்த வணிகரிலின்பிற் செல்வனும் மகிழ்வுற்றானே. 103
மன்னன் மைந்தர் அரங்கேறுதல்
உரையினிலரியனாய உதயண குமரன் ஓர் நாள்
அரசிளங்குமரர் வித்தை யண்ணனீ காண்கவென்ன
வரைநிகர் யானையூர்ந்து மாவுடன் தேரிலேறி
வரிசையிற்காட்டி வாள்வில் வகையுடன் விளக்கக் கண்டான். 104
வாசவதத்தை யாழ் அரங்கேற்றம்
வாசவதத்தை வந்து மன்னனை இறைஞ்ச நல்யாழ்
பேசவை தளரக் கேட்டுப் பெருமகன் இனியனாகி
ஆசிலா வித்தையெல்லாம் ஆயிழை கொண்டாள் என்றே
ஏசவன் சிறைசெய்குற்ற மெண்ணுறேல் பெருக்க வென்றான். 105
வாசவதத்தை யாழ் இசையின் மாண்பு
விசும்புயல் குமரர்தாமும் வியந்துடனிருப்பப் புள்ளும்
பசும் பொனினிலத்தில் வீழப்பாவையர் மயக்கமுற்றார்
வசம்படக் குறுக்கி நீட்டி வரிசையிற் பாடலோடும்
அசும்பறாக் கடாத்து வேழத்தரசனு மகிழ்ந்தானன்றே. 106
பிரச்சோதனன் உதயணனை வத்தவநாட்டிற்கு அனுப்பத் துணிதல்
வத்தவன் கையைப் பற்றி மன்னவன் இனிது கூறி
வத்தவன் ஓலை தன்னுள் வளமையிற் புள்ளியிட்டும்
வத்தவ நாட்டுக் கேற வள்ளலைப் போக வென்ன
வத்தவ நாளை யென்றே மறையவர் முகிழ்த்த மிட்டார். 107
பிரச்சோதனன் உதயணனுக்குச் சிறப்புச் செய்தல்
ஓரிரண்டாயிரங்க ளோடை தாழ் மத்த யானை
ஈரிரண்டாயிரங்களெழின் மணிப் பொன்னின்றேரும்
போரியல் புரவி மானம் பொருவிலை யாயிரம்மும்
வீரர்கள் இலக்கம் பேரும் வீறுநற்குமரற்கீந்தான். 108
யூகி குறத்தி வேடம் புனைந்து குறிசொல்லல்
யூகியும் வஞ்சந்தன்னையுற்றுச் சூழ்வழாமை நோக்கி
வாகுடன் குறத்திவேடம் வகுத்தனன் குறிகள் கூற்றாம்
நகரத்தினகரழிந்த நடுக்கங்கள் தீர வெண்ணிப்
போக நன்னீரிலாடப் புரத்தினில் இனிதுரைத்தான். 109
பிரச்சோதனன் முதலியோர் நீராடச் செல்ல யூகி நகரத்திற்கு தீயிடுதல்
மன்னவன்றன்னோ டெண்ணி மாநகர் திரண்டுசென்று
துன்னிய நீர்க்கயத்திற்றொல் புரப் புறத்திலாட
நன்னெறி வத்தவன்றானன் பிடியேறி நிற்ப
உன்னிய யூகிமிக்க ஊரில் தீயிடுவித்தானே. 110
உதயணன் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு போதல்
பயந்து தீக்கண்டுசேனை பார்த்திபன் தன்னோடுஏக
வயந்தகன் வந்துரைப்ப வத்தவகுமரன் தானும்
நயந்துகோன் மகளைமிக்க நன்பிடியேற்றத் தோழி
கயந்தனை விட்டுவந்த காஞ்சனை ஏறினாளே. 111
வயந்தகன் வீணைகொண்டு வன்பிடியேறிப் பின்னைச்
செயந்தரக் கரிணிகாதிற்செல்வன் மந்திரத்தைச் செப்ப
வியந்து பஞ்சவனந் தாண்ட வேயொடு பற்ற வீணை
வயந்தகன் கூற மன்னன் மாப்பிடி நிற்க வென்றான். 112
நலமிகு புகழார் மன்னநாலிரு நூற்றுவில்லு
நிலமிகக் கடந்ததென்ன நீர்மையிற் றந்த தெய்வம்
நலமிகத் தருமின்றென்ன பண்ணுகை நம்மாலென்னக்
குலமிகு குமரன் செல்லக் குஞ்சரம் அசைந்ததன்றே. 113
பிடி வீழ்தல்
அசைந்த நற்பிடியைக் கண்டே யசலித மனத்தராகி
இசைந்த வரிழிந்தபின்னை இருநில மீதில்வீழத்
தசைந்த கையுதிரம் பாயச்சால மந்திரமங்காதில்
இசைந்தவர் சொல்லக் கேட்டே இன்புறத் தேவாயிற்றே. 114
உதயணன் முதலியோர் ஊர் நோக்கி செல்லல்
உவளகத்திறங்கிச் சென்றேயூர் நிலத்தருகு செல்லப்
பவளக் கொப்புளங்கள் பாவை பஞ்சிமெல்லடி யிற்றோன்றத்
தவளைக்கிண் கிணிகண்மிக்க தரத்தினாற் பேசலின்றித்
துவளிடையருகின் மேவுந்தோழி தோள்பற்றிச் செல்வாள். 115
வயந்தகன் அவர்களை விட்டுப் புட்பகம் போதல்
பாவைதன் வருத்தங்கண்டு பார்த்திபன் பாங்கினோங்கும்
பூவை வண்டரற்றுங் காவுட்பூம்பொய்கை கண்டிருப்ப
வாவு நாற்படையுங்கொண்டு வயந்தகன் வருவேனென்றான்
போவதே பொருளூர்க்கென்று புரவலனுரைப்பப் போந்தான். 116
வேடர்களை உதயணன் வளைத்துக் கொள்ளுதல்
சூரியன் குடற்பாற்சென்று குடவரை சொருகக்கண்டு
நாரியைத் தோழிகூட நன்மையிற் றுயில்கவென்று
வீரியனிரவு தன்னில் விழித்து உடன் இருந்தபோழ்து
சூரியன் உதயம்செய்யத் தொக்குடன் புளிஞர் சூழ்ந்தார். 117
உதயணனுடன் வேடர் போர் செய்தல்
வந்த வரம்புமாரி வள்ளன்மேற் றூவத்தானும்
தந்தனு மேவிச்சாராத் தரத்தினால் விலக்கிப்பின்னும்
வெந்திறல் வேடர்வின்னாண் வெந்நுனைப் பகழிவீழ
நந்திய சிலைவளைத்து நன்பிறையம்பின் எய்தான். 118
வேடர்கள் உதயணனிருந்த பொழிலிலே தீயிடுதலும் வயந்தகன் வரவும்
செய்வகையின்றி வேடர் தீவனங்கொளுத்த மன்னன்
உய்வகையுங்களுக்கின்றுறு பொருளீவன் என்ன
ஐவகை அடிசில் கொண்டே யான நாற்படையுஞ் சூழ
மெய்வகை வயந்தகன் தான் வீறமைந்தினிதின் வந்தான். 119
உதயணன் வாசவதத்தை முதலியோரொடு சயந்தி நகரம் புகல்
அன்புறும் அடிசில் உண்டே அற்றை நாள் அங்கிருந்தார்
இன்புறு மற்றை நாளினெழிற் களிற்றரசனேற
நன்புறச் சிவிகையேற நங்கை நாற்படையுஞ் சூழப்
பண்புறு சயந்திபுக்குப் பார்த்திபன் இனிது இருந்தான். 120
இலாவாண காண்டம்
உஞ்சை நகர்விட்டகன்று உதயண குமாரனும்
தஞ்சமாய்ச் சயந்தியிற் றளர்வின்றிப் புகுந்தபின்
என் செய்தனன் என்றிடினியம்புதும் அறியவே
கொஞ்ச பைங்கிளி மொழிதன்கூடலை விரும்பினான். 121
உதயணன் வாசவதத்தை திருமணம்
இலங்கிழை நன்மாதரை யினிமை வேள்வித்தன்மையால்
நலங்கொளப் புணர்ந்தனன் நாகநற் புணர்ச்சிபோல்
புலங்களின் மிகுந்தபோகம் பொற்புடன் நுகர்ந்தனன்
அலங்கலணி வேலினான் அன்புமிகக் கூரினான். 122
கைம்மிகு காமம்கரை காண்கிலன் அழுந்தலில்
ஐம்மிகுங் கணைமதன் அம்புமீக் குளிப்பவும்
பைம்மிகும் பொனல்குலாள் படாமுலை புணையென
மைம்மிகும் களிற்றரசன் மாரன்கடல் நீந்துவான். 123
உதயணன் கழிபெருங்காமத்து அழுந்தி கடமையை புறக்கணித்தல்
இழந்த தன் நிலத்தையும் எளிமையும் நினைப்பிலன்
கழிந்த அறமுமெய்ம்மறந்து கங்குலும் பகல்விடான்
அழிந்தி அன்பிற்புல்லியே அரிவையுடைய நன்னலம்
விழுந்தவண் மயக்கத்தில் வேந்தன் இனிச் செல்கின்றான். 124
ஒழுகுங்காலை யூகியாம் உயிரினும் சிறந்தவன்
எழில் பெருகும்சூழ்ச்சிக் கணினியதன் வரவதாற்
பழுதின்றிச் சிறைவிடுத்துப் பாங்குபுகழ் வத்தவன்
எழின் மங்கை இளம்பிடி யேற்றிஏகக் கண்டனன். 125
மிஞ்சி நெஞ்சிலன்புடன் மீண்டு வர எண்ணினன்
உஞ்சைநகர்க்கு அரசன் கேட்டுள்ளகத் தழுங்கினன்
விஞ்சுபடை மேலெழாமை விரகுடனறிந்தந்த
உஞ்சை எல்லை விட்டுவந்து யூகிபுட்பகஞ் சென்றான். 126
யூகி இடபகனிடம் உதயணனைப் பற்றி வினாதலும் அவனின் விடையும்
இடபகற்குத் தன்னுரை இனிது வைத்துரைத்துப் பொன்
முடியுடைய நம் அரசன் முயற்சியது என் என
பிடிமிசை வருகையிற் பெருநிலங் கழிந்த பின்
அடியிடவிடம் பொறாமையானை மண்ணிற் சாய்ந்ததே. 127
சவரர் தாம் வளைத்ததும் தாம் அவரை வென்றதும்
உவமையில் வயந்தகன்றனூர் வந்து உடன்போந்ததும்
தவளவெண் கொடிமிடை சயந்தியிற் புகுந்ததும்
குவிமுலை நற்கோதை அன்பு கூர்ந்துடன் புணர்ந்ததும். 128
இழந்தபூமி எண்ணிலன் இனிய போகத்தழுந்தலும்
குழைந்தவன் உரைப்ப யூகி கூரெயிறிலங்கறக்கு
விழைந்தவேந்தன் தேவியை விரகினாற் பிரித்திடின்
இழந்தமிக்கரசியல் கைகூடு மென எண்ணினான். 129
யூகியின் செயல்
சாங்கிய மகளெனுந் தபசினியைக் கண்டுடன்
ஆங்கவனறியக் கூறியான யூகி தன்னுயிர்
நீங்கினது போலவு நின்றமைச்சர் மூவரும்
பாங்கரசன் ரூபமும் படத்தினில் வரைந்தனன். 130
படத்துருவி லொன்றினைப் பரந்தமேற் கண்ணாகவைத்து
இடக்கண் நீக்கியிட்டு மிக்கியல்புடன் கொடுத்துடன்
முடிக்கரசற் கறிவியென்ன முதுமகளும் போயினள்
இடிக்குரனற் சீயமாம் இறைவனையே கண்டனள். 131
சாங்கியத்தாய் அரசனைக் கண்டு வினாதல்
வேந்தனுங்கண்டே விரும்பி வினயஞ்செய் திருக்கென
பாந்தவக் கிழவியும் பண்பினிய சொல்லியபின்
சேந்ததன் சிறைவிடுத்த செல்வயூகி நின்னுடன்
போந்துபின் வராததென்ன புரவலநீ கூறென்றாள். 132
உதயணன் செயல்
அவனுரையறிந்திலன் அறிந்த நீ யுரைக்கெனத்
தவிசிடை யிருந்தவடான் படத்தைக் காட்டினள்
புவியரசன் கண்டுடன் புலம்பி மிகவாடிப்பின்
தவமலி முனிவனைத் தான் வணங்கிக் கேட்டனன். 133
உதயணன் விரிசிகைக்கு மலர்மாலை சூட்டுதல்
முடிமுதல ரசினோடு முனிவறநின்று ணைவனை
வடிவுடன் பெறுவையென்ன வன்மையினிற்றேறிமீக்
கடிகமழ்ச்சாரலிற் கண்ட மாதவன் மகள்
துடியிடை விரிசிகையைத் தோன்றன் மாலைசூட்டினான். 134
உதயணனன் தழைகொண்டுவரப் போதல்
கலந்தனனிருந்து பின் கானகத் தழைதர
நலந்திகழ் மாதர்செப்ப நரபதியும் போயினன்
கலந்திகழும் யூகியும் காவலன் தன் தேவியை
சிலதினம் பிரிவிக்கச் சிந்தை கூரித் தோன்றினான். 135
யூகியின் செயல்
மன்னவன் மனைதனின் மறைந்திருக்கும் மாதரைத்
துன்னுநன் திருவரைத் தொக்குடன் இருக்கவென்று
மன்னன் மனைதன் மனைக்கு மாநிலச் சுருங்கை செய்
தன்னவண் மனை முழுதுமறைந்தவர் தீயிட்டனர். 136
சாங்கியத்தாய் வாசவதத்தையை யூகி இருக்கைக்கு அழைத்து வருதல்
நிலந்திகழ் சுருங்கையினீதி மன்னன் றேவியை
இலங்கு சாங்கியம் மகளெழில் பெறக் கொண்டுவந்
தலங்கலணி வேலினானமைச்சன் மனை சேர்ந்தனன்
துலங்கி வந்தடி பரவிச் சொல்லினிது கூறுவான். 137
யூகி வாசவதத்தையை வரங்கேட்டல்
என்னுடைய நற்றாயே நீ எனக்கொரு வரங்கொடு
நின் அரசன் நின்னைவிட்டு நீங்குஞ் சிலநாளன்றி
நன்னில மடந்தை நமக்காகுவதும் இல்லையே
என்னவுடன் பட்டனள் இயல்புடன் கரந்தனள். 138
உதயணன் மீண்டும்வந்து வருந்துதல்
சவரர் வந்து தீயிட்டுத் தஞ்செயலினாக்கிமிக்
கவகுறிகள் கண்டரசனன் பிற்றேவிக் கேதமென்
றுவளகத் தழுங்கி வந்துற்ற கருமஞ் சொலக்
கவற்சியுட் கதறியே கலங்கி மன்னன் வீழ்ந்தனன். 139
பூண்டமார் பனன்னிலம் புரண்டு மிக்கெழுந்துபோய்
மாண்டதேவி தன்னுடன் மரித்திடுவன் நான் என்றான்
நீண்டதோள் அமைச்சரு நின்றரசற் பற்றியே
வேண்டித் தானுடனிருந்த வெந்தவுடல் காட்டென்றான். 140
உதயணன் வாசவதத்தையின் அணிகலன் கண்டழுதல்
கரிப்பிணத்தைக் காண்கிலர் காவலர் களென்றபின்
எரிப்பொன்னணி காட்டென வெடுத்து முன்புவைத்தனர்
நெப்பிடை விழுந்தமை நினைப்ப மாயமன்றென
விருப்புடை நற்றேவிக்கு வேந்தன் மிக்கரற்றுவான். 141
மனம்வருந்தி உதயணன் அழுது புலம்பல்
மண்விளக்கமாகி நீ வரத்தினெய்தி வந்தனை
பெண்விளக்கமாகி நீ பெறற்கரியை யென்று தன்
கண்விளக்கு காரிகையைக் காதலித் திரங்குவான்
புண் விளக்கிலங்குவேற் பொற்புடைய மன்னவன். 142
மானெனும் மயிலெனும் மரைமிசைத் திருவெனும்
தேனெனுங் கொடியெனுஞ் சிறந்தகொங்கை நீயெனும்
வானில மடந்தையே மாதவத்தின் வந்தனை
நான் இடர்ப்படுவது நன்மையோ நீவீந்ததும். 143
நங்கை நறுங்கொங்கையே நல்லமைக் குழலியெம்
கொங்குலவ கோதைபொன் குழையிலங்கு நன்முகம்
சிங்கார முனதுரையுஞ் செல்வி சீதளம்மதி
பொங்காரம் முகமெனப் புலம்பினான் புரவலன். 144
வீணைநற் கிழத்திநீ வித்தக வுருவி நீ
நாணின் பாவைதானுநீ நலந்திகழ் மணியுநீ
காணவென்றன் முன்பதாய்க் காரிகையே வந்துநீ
தேரணி முகங்காட்டெனச் சொல்லியே புலம்புவான். 145
அமைச்சர் தேற்றுதல்
துன்பமிக வும்பெருகச் சொற்கரிய தேவிக்கா
அன்புகிக்கு அரற்றுவதை அகல்வது பொருளென
நன்புறும் அமைச்சர்சொல்ல நரபதியும் கேட்டனன்
இன்புறும் மனைவி காதலியல்புடன் அகன்றனன். 146
யூகி உருமண்ணுவாவிடம் உரைத்தல்
அண்ண றன்னிலை அறிந்த யூகியும்
திண்ணி தின்னியல் செய்கை யென்றுரு
மண்ணு வாவினை மன்னன் அண்டையில்
எண்ணுங் காரிய மீண்டுஞ் செய்கென்றான். 147
வயந்தகன் உதயணனுக்குக் கூறுதல்
தன்னிலைக் கமைந்த தத்துவ ஞானத்தான்
துன்னருஞ் சூழ்ச்சித் தோழன் வயந்தகன்
மன்னற் குறுதி மறித்தினிக் கூறும்
பொன்னடி வணங்கிப் புரவலன் கேட்ப. 148
வெற்றிவேன் மகதவன் வேந்தன் றேசத்தில்
இற்றவர்க் காட்டும் இயல்பினனூலுரை
கற்றுவல் லவனற் காட்சி யறிவுடன்
தத்துவ முனியுளனாமினிச் சார்வோம். 149
உதயணன் மகதநாடு செல்லல்
வத்தவ குமரன் கேட்டு வயந்தகன் தன்னைநோக்கி
அத்திசை போவோம் என்றே அகமகிழ்ந்து இனிய கூறி
வெற்றிநாற் படையுஞ் சூழ வெண்குடை கவரிமேவ
ஒத்துடனிசைந்து சென்றான் உதயண குமரன் றானே. 150