இந் நூலின் நாயகி குண்டலகேசி செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள். அவள் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசா. அவள் பருவமடைந்து இனிது இருந்த சமயத்தில் அவ்வூரில் சத்துவான் என்பவன் வழிப்பறிக் கொள்ளை அடித்து, அரசனால் கொலைகளத்துக்கு அனுப்பப்பட்டான். அப்போது அவனைச் சாளரத்தின் வழியே கண்டு, அவள் அவன் மீது காதல் கொண்டாள். அது அறிந்த அவள் தந்தை அரசனுக்கு பொருள் தந்து அக்கள்வனை மீட்டு அவளுக்கு மணமுடித்து வைத்தார். இருவரும் சிலகாலம் இனிது வாழ்ந்த பின்னர், அவனுக்கு மனைவியின் நகைகளை கொள்ளை அடிக்கும் எண்ணம் வரவே, அவளைத் தனியே அருகில் இருந்த சேரர் மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான். அவன் நடத்தையில் சந்தேகம் கொண்ட பத்தா அது பற்றி கேட்க, அவன் நகைகளைப் பறித்துக் கொண்டு அவளை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட இருப்பதைக் கூறினான். அது கேட்ட அவள் சாவதற்கு முன் கடைசியாக அவனை ஒருமுறை சுற்றி வந்து வணங்கவிரும்புவதாகக் கூறி அவனை அம் மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டாள். பின்னர் அவள் சமண மதத்தை தழுவினாள். அவள் தலைக் கூந்தல் பனங்கருக்கு மட்டையால் மழிக்கப்பட்டது. பின்னர் வளர்ந்த அவள் முடி வளைந்து குண்டலம் போக் காட்சி யளித்ததால் குண்டலகேசி என வழங்கப்பட்டாள். அவள் பல இடங்களில் வாதம் புரிந்து, கடைசியில் புத்தரிடம் ஞானத் தெளிவு பெற்று பௌத்தத் துறவியானாள்.

இக் காப்பியத்தில் தற்சமயம் 19 பாடல்களே கிடைக்கப் பெற்றுள்ளன. இந் நூல் பௌத்த சமயத்தைச் சார்ந்தது. இந்நூலாசிரியர் நாதகுத்தனார் ஆவர். இந்நூலின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ஆகும். இந்நூலுக்கு குண்டலகேசி விருத்தம் என்கிற பெயரும் உண்டு.

கடவுள் வாழ்த்து

முன் தான் பெருமைக்கண் நின்றான் முடிவு எய்துகாறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந் தான் தனக்கென்று
ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்
அன்றே இறைவன் அவன் தாள் சரண் நாங்களே.    1

அவையடக்கம்


நோய்க்கு உற்ற மாந்தர் மருந்தின் சுவை நோக்க கில்லார்
தீக்குற்ற காதல் உடையார் புகைத் தீமை ஓரார்
போய்க்குற்றம் மூன்றும் அறுத்தான் புகழ்கூறு வேற்கு என்
வாய்க்கு உற்ற சொல்லின் வழுவும் வழுவல்ல அன்றே.    2

தூய மனம்


வாயுவினை நோக்கி உள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கி உள வாழ்க்கை அதுவேபோல்
தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்லாத
தூயவனை நோக்கிஉள துப்புரவும் எல்லாம்.     3

போற்றல் உடை நீக்குதல் பொடித்துகள் மெய்பூசல்
கூர்த்த பனி ஆற்றுதல் குளித்து அழலுள் நிற்றல்
சார்த்தர் இடு பிச்சையர் சடைத் தலையர் ஆதல்
வார்த்தை இவை செய்தவம் மடிந்து ஒழுகல் என்றான்.    4

பற்றை பற்று கொண்டு நீக்கல் அரிது


வகை எழில் தோள்கள் என்றும் மணிநிறக் குஞ்சி என்றும்
புகழ் எழ விகற்பிக் கின்ற பொருளில்கா மத்தை மற்றோர்
தொகை எழும் காதல் தன்னால் துய்த்து யாம் துடைத்தும் என்பார்
அகையழல் அழுவம் தன்னை நெய்யினால் அவிக்கல் ஆமோ!    5

அனல் என நினைப்பிற் பொத்தி அகந் தலைக் கொண்ட காமக்
கனலினை உவர்ப்பு நீரால் கடையற அவித்தும் என்னார்
நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குதும் என்று நிற்பார்
புனலினைப் புனலினாலே யாவர்போகாமை வைப்பார்.     6

யாக்கை நிலையாமை


போதர உயிர்த்த ஆவி புக உயிர்கின்ற தேனும்
ஊதியம் என்று கொள்வர் உணர்வினான் மிக்க நீரார்
ஆதலால் அழிதல் மாலைப் பொருள்களுக்கு அழிதல் வேண்டா
காதலால் அழுதும் என்பார் கண் நனி களையல் உற்றார்.    7

இரக்கமில்லாத கூற்றுவன்


அரவினம் அரக்கர் ஆளி அவைகளும் சிறிது தம்மை
மருவினால் தீய ஆகா வரம்பில் காலத்துள் என்றும்
பிரிவிலம் ஆகித் தன்சொல் பேணியே ஒழுகும் நங்கட்கு
ஒருபொழுது இரங்க மாட்டாக் கூற்றின் யார் உய்தும் என்பார்.    8

பல நிலைகளைக் கடக்கும் சரீரம்


பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரு மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின் றாமால் நமக்கு நாம் அழாதது என்னோ!    9

நிலையில்லா வாழ்க்கை


கோள்வலைப் பட்டுச் சாவாம் கொலைக்களம் குறித்துச் சென்றே
மீளினும் மீளக் காண்டும் மீட்சி ஒன்றானும் இல்லா
நாள் அடி இடுதல் தோன்றும் நம்முயிர் பருகும் கூற்றின்
வாளின்வாய்த் தலைவைப் பாக்குச் செல்கின்றோம் வாழ்கின்றோமா!    10

ஊனுடம்பின் இழிவு


நன்கணம் நாறும் இது என்று இவ் உடம்பு நயக்கின்றது ஆயின்
ஒன்பது வாயில்கள் தோறும் உள் நின்று அழுக்குச் சொரியத்
தின்பது ஓர்நாயும் இழுப்பத் திசைதொறும் சீப் பில்கு போழ்தின்
இன்பநல் நாற்றம் இதன்கண் எவ்வகை யாற்கொள்ள லாமே.    11

மாறுகொள் மந்தரம் என்றும் மரகத(ம்) வீங்கு எழு என்றும்
தேறிடத் தோள்கள் திறத்தே திறந்துளிக் காமுற்றது ஆயின்
பாறொடு நாய்கள் அசிப்பப் பறிப்பறிப் பற்றிய போழ்தின்
ஏறிய இத் தசைதன் மாட்டு இன்புறல் ஆவது இங்கு என்னோ!    12

உறுப்புக்கள் தாம் உடன் கூடி ஒன்றாய் இருந்த பெரும்பை
மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவ தேல் இவ் வுறுப்புக்
குறைத்தன போல் அழுகிக் குறைந்து குறைந்து சொரிய
வெறுப்பிற் கிடந்த பொழுதின் வேண்டப் படுவதும் உண்டோ !    13

எனதெனச் சிந்தித்தலால் மற்று இவ்வுடம்பு இன்பத்துக்கு ஆமேல்
தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவும் மூத்தவும் ஆகி
நுனைய புழுக்குலம் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட
இனைய உடம்பினைப் பாவி யான் எனது என்னல் ஆமோ!    14

மன்னனைப் போற்றுதல்


இறந்த நற்குணம் எய்தற்கு அரியவாய்
உறைந்த தம்மை எல்லாம் உடன் ஆக்குவான்
பிறந்த மூர்த்தி ஒத்தான் திங்கள் வெண்குடை
அறங்கொள் கோல் அண்ணல் மும்மத யானையான்    15

சீற்றம் செற்றுப்பொய் நீக்கிச் செங்கோலினால்
கூற்றம் காய்ந்து கொடுக்க எனும் துணை
மாற்றமே நவின்றான் தடுமாற்றத்துத்
தோற்றம் தன்னையும் காமுறத் தோன்றினான்.     16

குற்றப்படாத வண்ணம் காத்தல்


மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டாதே அன்று வாய்மை
நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா
விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டம் தன் மேல் கறையை யார் கறையன்று என்பார்.     17

ஆதலும் அழித்தலும்
மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவது உறும் என்று உரைப்பது நன்று.    18

வேரிக் கமழ்தார் அரசன் விடுக என்ற போழ்தும்
தாரித்தல் ஆகா வகையால் கொலை சூழ்ந்த பின்னும்
பூரித்தல் வாடுதல் என்று இவற்றால் பொழிவு இன்றி நின்றான்
பாரித்தது எல்லாம் வினையின் பயன் என்ன வல்லான்.    19

[கீழ்க்காணும் பாடல்கள் குண்டலகேசியின் பாடல்களாக கருதப்படுகின்றன]


குண்டலகேசி பாடிய பாடல்கள்


அறுசீர் ஆசிரிய விருத்தம்


வெட்டிய கேசத் தோடும் விளங்குசேற்று உடிலனோடும்
முட்டரும் அரையின் மீது முடையுடைக் கந்தை தன்னை
இட்டமாய்த் திரிந்தேன் முன்னாள் இனியதை இன்னா என்றும்
மட்டரும் இன்னா உள்ள பொருளையும் இனுதஎன்றேனே.    1

நண்பகல் உறங்கும் சாலை நடுநின்றே வெளியே போந்தேன்
தன்புனல் கழுகுக் குன்றம் தனையடைந்து அலைந்த போது
நன்புடை அறவோர் கூட்டம் நடுவணே மாசில் தூயோன்
பண்புடைப் புத்தன் தன்னைப் பாவியேன் கண்டேன் கண்ணால்.    2

அண்ணலை நேரே கண்டேன் அவன்முனே முழந்தாள் இட்டு
மண்ணதில் வீழ்ந்து நைந்து வணங்கினேன் வணங்கி நிற்கத்
தண்ணவன் என்னை நோக்கித் தகவொரு பத்தா இங்கே
நண்ணுதி என்றே சாற்றி நாடரும் துறவை ஈந்தான்.    3

அலைந்துமே அங்கநாட்டோடு அண்டுமா மகத நாடு
மலைந்த பேர் வச்சி யோடு மன்னுகோ சலமும் காசி
நலந்தரு நாடு தோறும் நாடினேன் பிச்சைக் காக
உலைந்த இவ் ஐம்ப தாண்டில் எவர்க்குமே கடன்பட்டில்லேன்.    4

துறவியேன் பத்தா கட்டச் சீவரம் கொடுக்கும் மாந்தர்
முறையுடை மணத்தராகி நீள்புவி வாழ்ந்து நாளும்
குறைவில்நல் வினைகள் ஈட்டிக் கோதின் மெய் அறிவர் ஆகி
முறைமையாய் மலங்கள் நீங்கி முத்தியை அடைவார் திண்ணம்.    5



குண்டலகேசியிற் கிட்டியுள்ள செய்யுள்களின் தொகை முற்றிற்று.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework