அரும்பெறற் பாவையை அடைக்கலம் பெற்ற
இரும்பே ருவகையின் இடைக்குல மடந்தை
அளைவிலை யுணவின் ஆய்ச்சியர் தம்மொடு
மிளைசூழ் கோவலர் இருக்கை யன்றிப்
பூவ லூட்டிய புனைமாண் பந்தர்க் 5
காவற் சிற்றிற் கடிமனைப் படுத்துச்
செறிவளை யாய்ச்சியர் சிலருடன் கூடி
நறுமலர்க் கோதையை நாணீ ராட்டிக்
கூடல் மகளிர் கோலங் கொள்ளும்
ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச் 10
செய்யாக் கோலமொடு வந்தீர்க் கென்மகள்
ஐயை காணீ ரடித்தொழி லாட்டி
பொன்னிற் பொதிந்தேன் புனைபூங் கோதை
என்னுடன் நங்கையீங் கிருக்கெனத் தொழுது
மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி 15
ஏத மில்லா இடந்தலைப் படுத்தினள்
நோதக வுண்டோ நும்மக னார்க்கினிச்
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள் 20
நெடியா தளிமின் நீரெனக் கூற
இடைக்குல மடந்தையர் இயல்பிற் குன்றா
மடைக்கலந் தன்னொடு மாண்புடை மரபிற்
கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய்
வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய் 25
மாவின் கனியொடு வாழைத் தீங்கனி
சாலி யரிசி தம்பாற் பயனொடு
கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப
மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய்
கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத் 30
திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன
கரிபுற அட்டில் கண்டனள் பெயர
வையெரி மூட்டிய ஐயை தன்னொடு
கையறி மடைமையிற் காதலற் காக்கித்
தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக் 35
கைவன் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசிற் செல்வன் இருந்தபின்
கடிமல ரங்கையிற் காதல னடிநீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல் 40
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுத முண்க அடிக ளீங்கென
அரசர் பின்னோர்க் கருமறை மருங்கின்
உரிய வெல்லாம் ஒருமுறை கழித்தாங்கு 45
ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த
பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ
நல்லமு துண்ணும் நம்பி யீங்குப்
பல்வளைத் தோளியும் பண்டுநங் குலத்துத்
தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை 50
விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லென
ஐயையுந் தவ்வையும் விம்மிதம் எய்திக்
கண்கொளா நமக் கிவர் காட்சி யீங்கென
உண்டினி திருந்த உயர்பே ராளற்கு
அம்மென் திரையலோ டடைக்கா யீத்த 55
மையீ ரோதியை வருகெனப் பொருந்திக்
கல்லதர் அத்தம் கடக்க யாவதும்
வல்லுந கொல்லோ மடந்தைமெல் லடியென
வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி
எம்முது குரவர் என்னுற் றனர்கொல் 60
மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ
யானுளங் கலங்கி யாவதும் அறியேன்
வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழி கோட்டி நெடுநகை புக்குப்
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர் 65
நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ
இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன்
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்
வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என்செய் தனையென 70
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன் 75
முந்தை நில்லா முனிவிகந் தனனா
அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி அளைஇ
எற்பா ராட்ட யானகத் தொளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலுமென்
வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப் 80
போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின்
ஏற்றெழுந் தனன்யான் என்றவள் கூறக்
குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி 85
நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்
நாணின் பாவாய் நீணில விளக்கே 90
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடிச் சிலம்பி னொன்றுகொண் டியான்போய்
மாறி வருவன் மயங்கா தொழிகெனக்
கருங்கயல் நெடுங்கட் காதலி தன்னை
ஒருங்குடன் தழீஇ உழையோ ரில்லா 95
ஒருதனி கண்டுதன் உள்ளகம் வெதும்பி
வருபனி கரந்த கண்ண னாகிப்
பல்லான் கோவல ரில்லம் நீங்கி
வல்லா நடையின் மறுகிற் செல்வோன்
இமிலே றெதிர்ந்த திழுக்கென அறியான் 100
தன்குலம் அறியுந் தகுதியன் றாதலின்
தாதெரு மன்றந் தானுடன் கழிந்து
மாதர் வீதி மறுகிடை நடந்து
பீடிகைத் தெருவிற் பெயர்வோன் ஆங்கண்
கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய 105
நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின்
கைக்கோற் கொல்லனைக் கண்டன னாகித்
தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன்வினைக் கொல்லன் இவனெனப் பொருந்திக் 110
காவலன் றேவிக் காவதோர் காற்கணி
நீவிலை யிடுதற் காதி யோவென
அடியேன் அறியே னாயினும் வேந்தர்
முடிமுதற் கலன்கள் சமைப்பேன் யானெனக்
கூற்றத் தூதன் கைதொழு தேத்தப் 115
போற்றருஞ் சிலம்பின் பொதிவா யவிழ்த்தனன்
மத்தக மணியோடு வயிரம் கட்டிய
பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூற்
சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம்
பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கிக் 120
கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு
யாப்புற வில்லை யெனமுன் போந்து
விறல்மிகு வேந்தற்கு விளம்பியான் வரவென்
சிறுகுடி லங்கண் இருமின் நீரெனக்
கோவலன் சென்றக் குறுமக னிருக்கையோர் 125
தேவ கோட்டச் சிறையகம் புக்கபின்
கரந்தியான் கொண்ட காலணி ஈங்குப்
பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்குப்
புலம்பெயர் புதுவனிற் போக்குவன் யானெனக்
கலங்கா வுள்ளம் கரந்தனன் செல்வோன் 130
கூடன் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும்
காவல னுள்ளம் கவர்ந்தன என்றுதன்
ஊட லுள்ளம் உள்கரந் தொளித்துத்
தலைநோய் வருத்தந் தன்மே லிட்டுக் 135
குலமுதல் தேவி கூடா தேக
மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன்
சிந்தரி நெடுங்கட் சிலதியர் தம்மொடு
கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக்
காப்புடை வாயிற் கடைகாண் அகவையின் 140
வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்திக்
கன்னக மின்றியும் கவைக்கோ லின்றியும்
துன்னிய மந்திரந் துணையெனக் கொண்டு
வாயி லாளரை மயக்குதுயி லுறுத்துக்
கோயிற் சிலம்பு கொண்ட கள்வன் 145
கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்தென்
சில்லைச் சிறுகுடி லகத்திருந் தோனென
வினைவிளை கால மாதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரான் ஆகி
ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கென் 150
தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகில்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக்
காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும்
ஏவ லுள்ளத் தெண்ணியது முடித்தெனத் 155
தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த
கோவலன் றன்னைக் குறுகின னாகி
வலம்படு தானை மன்னவன் ஏவச்
சிலம்பு காணிய வந்தோர் இவரெனச்
செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம் 160
பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட
இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன்
கொலைப்படு மகனலன் என்றுகூறும்
அருந்திறல் மாக்களை அகநகைத் துரைத்துக்
கருந்தொழிற் கொல்லன் காட்டின னுரைப்போன் 165
மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம்
தந்திரம் இடனே காலம் கருவியென்று
எட்டுட னன்றே இழுக்குடை மரபிற்
கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது
மருந்திற் பட்டீ ராயின் யாவரும் 170
பெரும்பெயர் மன்னனிற் பெருநவைப் பட்டீர்
மந்திர நாவிடை வழுத்துவ ராயின்
இந்திர குமரரின் யாங்காண் குவமோ
தெய்வத் தோற்றம் தெளிகுவ ராயின்
கையகத் துறுபொருள் காட்டியும் பெயர்குவர் 175
மருந்தின் நங்கண் மயக்குவ ராயின்
இருந்தோம் பெயரும் இடனுமா ருண்டோ
நிமித்தம் வாய்த்திடி னல்ல தியாவதும்
புகற்கிலா அரும்பொருள் வந்துகைப் புகுதினும்
தந்திர கரணம் எண்ணுவ ராயின் 180
இந்திரன் மார்பத் தாரமும் எய்துவர்
இவ்விடம் இப்பொருள் கோடற் கிடமெனின்
அவ்விடத் தவரை யார்காண் கிற்பார்
காலங் கருதி அவர்பொருள் கையுறின்
மேலோ ராயினும் விலக்கலு முண்டோ 185
கருவி கொண்டவர் அரும்பொருள் கையுறின்
இருநில மருங்கின் யார்காண் கிற்பார்
இரவே பகலே என்றிரண் டில்லை
கரவிடங் கேட்பினோர் புகலிட மில்லை
தூதர் கோலத்து வாயிலின் இருந்து 190
மாதர் கோலத்து வல்லிருட் புக்கு
விளக்கு நிழலில் துளக்கிலன் சென்றாங்கு
இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்
வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்கத்
துயில்கண் விழித்தோன் தோளிற் காணான் 195
உடைவாள் உருவ உறைகை வாங்கி
எறிதொறுஞ் செறித்த இயல்பிற் காற்றான்
மல்லிற் காண மணித்தூண் காட்டிக்
கல்வியிற் பெயர்ந்த கள்வன் றன்னைக்
கண்டோர் உளரெனிற் காட்டும் ஈங்கிவர்க் 200
குண்டோ வுலகத் தொப்போ ரென்றக்
கருந்தொழிற் கொல்லன் சொல்ல ஆங்கோர்
திருந்துவேற் றடக்கை இளையோன் கூறும்
நிலனகழ் உளியன் நீலத் தானையன்
கலன்நசை வேட்கையிற் கடும்புலி போன்று 205
மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து
ஊர்மடி கங்குல் ஒருவன் தோன்றக்
கைவாள் உருவஎன் கைவாள் வாங்க
எவ்வாய் மருங்கினும் யானவற் கண்டிலேன்
அரிதிவர் செய்தி அலைக்கும் வேந்தனும் 210
உரிய தொன் றுரைமின் உறுபடை யீரெனக்
கல்லாக் களிமக னொருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது
புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்றுயர் கூரக் 215
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்.

நேரிசை வெண்பா

நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே
கண்ணகி தன் கேள்வன் காரணத்தான்-மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை
விளைவாகி வந்த வினை.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework