கயலெழுதிய இமயநெற்றியின்
அயலெழுதிய புலியும்வில்லும்
நாவலந்தண் பொழின்மன்னர்
ஏவல்கேட்பப் பாரரசாண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில் 5
காலை முரசங் கனைகுர லியம்புமாகலின்
நெய்ம்முறை நமக்கின் றாமென்று
ஐயைதன் மகளைக் கூஉய்க்
கடைகயிறு மத்துங் கொண்டு
இடைமுதுமகள் வந்துதோன்றுமன்; 10

உரைப்பாட்டு மடை


குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின் 1
மடக்கணீர் சோரும் வருவதொன் றுண்டு;

உறிநறு வெண்ணெய் உருகா உருகும் 2
மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு;

நான்முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும் 3
மான்மணி வீழும் வருவதொன் றுண்டு;

கருப்பம்


குடத்துப்பா லுறையாமையும் குவியிமி லேற்றின்
மடக்கண்ணீ£ர் சோர்தலும் உறியில் வெண்ணெ
யுருகாமையும் மறி முடங்கியாடாமையும் மான்மணி
நிலத்தற்று வீழ்தலும் வருவதோர் துன்பமுண்டென
மகளை நோக்கி மனமயங்காதே மண்ணின்
மாதர்க்கணியாகிய கண்ணகியுந்தான்காண
ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய
வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண்
பிஞ்ஞையோ டாடிய குரவை யாடுதும் யாமென்றாள்
கறவை கன்று துயர் நீங்குகவெனவே;

கொளு


காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ் 1
வேரி மலர்க் கோதையாள்;

கட்டு


நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப் 2
பொற்றொடி மாதராள் தோள்;

மல்லல் மழவிடை யூர்ந்தாற் குரியளிம் 3
முல்லையம் பூங்குழல் தான்;

நுண்பொறி வெள்ளை யடர்த்தாற்கே யாகுமிப் 4
பெண்கொடி மாதர்தன் தோள்;

பொற்பொறி வெள்ளை யடர்த்தார்க்கே யாகுமிந் 5
நற்கொடி மென்முலை தான்;

வென்றி மழவிடை யூர்ந்தாற் குரியளிக் 6
கொன்றையம் பூங்குழ லாள்;

தூநிற வெள்ளை அடர்த்தாற் குரியளிப் 7
பூவைப் புதுமல ராள்;

எடுத்துக் காட்டு


ஆங்கு,
தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவரிளங் கோதை யார்
என்றுதன் மகளை நோக்கித்
தொன்றுபடு முறையால் நிறுத்தி
இடைமுது மகளிவர்க்குப்
படைத்துக்கோட் பெயரிடுவாள்
குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம்
கைக்கிளை உழைஇளி விளரி தாரமென
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே;

மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை
ஆயவன் என்றாள் இளிதன்னை- ஆய்மகள்
பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார்
முன்னையாம் என்றாள் முறை;

மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும்
வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும்
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள்
முத்தைக்கு நல்விளரி தான்;

அவருள்,
வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத்
தண்டாக் குரவைதான் உள்படுவாள்-கொண்டசீர்
வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்
பெய்வளைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே
ஐயென்றா ளாயர் மகள்;

கூத்துள் படுதல்


அவர் தாம்,
செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஒத்து
அந்நிலையே யாடற்சீ ராய்ந்துளார்- முன்னைக்
குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்புற்ற
கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும்
முல்லைத்தீம் பாணி யென்றாள்;
எனாக்,
குரன்மந்த மாக இளிசம னாக
வரன்முறையே துத்தம் வலியா உரனிலா
மந்தம் விளரி பிடிப்பாள் அவள்நட்பின்
பின்றையைப் பாட்டெடுப் பாள்;

பாட்டு


கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் 1
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் 2
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ;

கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் 3
எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ;
தொழுனைத் துறைவனோ டாடிய பின்னை
அணிநிறம் பாடுகேம் யாம்;

இறுமென் சாயல் நுடங்க நுடங்கி 1
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்
அறுவை யொளித்தான் அயர அயரும்
நறுமென் சாயல் முகமென் கோயாம்;

வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள் 2
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;

தையல் கலையும் வளையும் இழந்தே 3
கையி லொளித்தாள் முகமென் கோயாம்
கையி லொளித்தாள் முகங்கண் டழுங்கி
மைய லுழந்தான் வடிவென் கோயாம்;

ஒன்றன் பகுதி


கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள் 1
மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்;

மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள் 2
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள்
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்;

ஆடுநர்ப் புகழ்தல்


மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்
கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர
ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசொதையார் தொழுதேத்தத்
தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே;

எல்லாநாம்,
புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும்
உள்வரிப் பாணியொன் றுற்று;

உள்வரி வாழ்த்து


கோவா மலையாரம் கோத்த கடலாரம் 1
தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே
தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக்
கோகுல மேய்த்துக் குருந்தொசித்தா னென்பரால்;

பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் 2
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
பொன்னன் திகிரிப் பொருபடையா னென்பரால்;

முந்நீரி னுள்புக்கு மூவாக் கடம்பெறிந்தான் 3
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
கன்னவில் தோளோச்சிக் கடல்கடைந்தா னென்பரால்;

முன்னிலைப் பரவல்


வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் 1
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே;

அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த 2
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே;

திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல 3
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே;

படர்க்கைப் பரவல்


மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் 1
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் 2
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே;

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் 3
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே;

என்றியாம்,
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வநம்
ஆத்தலைப் பட்ட துயர்தீர்க்க வேத்தர்
மருள வைகல் வைகல் மாறட்டு
வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து
இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த
தொடித்தோட் டென்னவன் கடிப்பிகு முரசே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework