அந்த வாடி வீட்டு மாடியிலே ஒரு மாலை நேரத்தில் நாங்கள் மூன்று பேரும் கூடியிருக்கிறோம். பதினாலு வருடம் ரஸ்ய துருப்புகளுடன் போராடியும் முற்றிலும் அழிந்து விடாமல் நொண்டிக் கொண்டு நிற்கிறது. அப்ப கானிஸ்தானிலுள்ள 'ஹெராத்' என்ற நகரம். நான் சுற்றிலும் பார்க்கிறேன். அழகிய மலைகள் சூழ்ந்து இருக்கின்றன. மெல்லிய குளிர் காற்று உடம்பை வருடுகிறது.

'ஹுமெலின்' கனடாக்காரர், நீண்டதாடி வைத்திருப்பவர், அறிவுஜ“வி. கனடாவில் பேராசிரியராக இருந்து இப்போது (U.N) ஐ.நாவின் போதைப் பழக்கம் தடுப்பு பிரிவில் வேலை பார்க்கிறார்.



'லூனன்பெர்க்' ஜெர்மன்காரர். சதுரமான தாடை அதை எப்பவும் நிமிர்த்தி வைத்துக் தான் கதைப்பார். ஐ.நாவின் அகதிகள் மறுகுடியேற்றத்தில் அவருக்கு வேலை.

மாவீரன் அலெக்சாந்தர் அழகி ருக்ஷானாவின் சௌந்தர்யத்தில் மனதைப் பறி கொடுத்தது இங்கே தான். ஆஹா! இந்தப் பெண்கள் தான் என்ன அழகு! அவர்கள் கண்கள் பச்சை நிறத்தில் ஆளை மயக்கும். கூந்தலோ கருமையிலும் கருமை. பெண் குழந்தைகளைத் தான் பார்க்க முடியும்; வளர்ந்து விட்டாலோ 'பர்தாவில்' புகுந்து விடுவார்களோ?

நான் தான் தொடங்கினேன். எனக்கு கனடாக் காரரைச் சீண்டுவதில் ஒரு தனி இன்பம், "அப்ப, ஹுமெலின் இந்த போதைப் பழக்கம் மிகவும் கெட்டது. இதை முற்றிலும் அழித்த பிற்பாடு என்ன கெய்வதாக உத்தேசம்? உமக்கு வேலை போய் விடுமே?" என்று கேட்டேன்.

அப்கானிஸ்தானில் பத்து லட்சம் பேர் இதற்கு அடிமை. இது தவிர, போதைப் பொருள் உற்பத்தி உலகத்திலேயே 35 வீதம் இங்கே தான். இவர் தனியாளாக இதை ஒரித்துக் கட்ட கொடுக்குக் கட்டிக் கொண்டு கனடாவில் இருந்து வந்து குதித்திருக்கிறார். இது நடக்கிற காரியமா? மலையை இடித்து மூக்குப் பொடி போட்டு முடிக்கிற கதைதான்.

இதற்கு கனடாக்காரர் பதில் கூறுமுன் ஜெர்மன்காரர் முந்திக் கொண்டு சொன்னார்:

(இங்கே நடந்த சம்பாஷணைகள் எல்லாம் ஆங்கிலத்தில் தான். அதை வாசகர்களுக்காக நான் 'என் தமிழில்' தந்திருக்கிறேன்.)

"பழக்கத்தில் 'நல்ல பழக்கம், கெட்ட பழக்கம்' என்று இல்லை; 'விடக்கூடிய பழக்கம்', 'விட முடியாத பழக்கம்' இப்படி இரண்டு தான். சிலருக்கு காலையில் எழுந்தவுடன் தேநீர் வேண்டும்; சிலருக்கு சிகரெட் தேவை; இது இல்லாமல் நடுக்காடடில் இவர்களை விட்டால் தலையைப் பிய்த்துக் கொண்டு பைத்தியமாகி விடுவார்கள். எந்தப் பழக்கமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அதை மீறினால் தான் கஷ்டம்."

அதற்கு கனடாக்காரர் "எனக்கு ஒரு நண்பர் இருந்தார். புத்தகக் கடையென்றால் அவருக்கு பைத்தியம். எந்த ஒரு கடையைக் கண்டாலும் புகுந்து விடுவார். நேரகாலம் தெரியாமல் உள்ளே இருப்பார். இருக்கிற காசெல்லாவற்றையும் கொடுத்து புத்தகங்களை அள்ளுவார். காசில்லாவிடில் உங்களிடமும் கடன் வாங்குவார். புத்தகம் படிப்பது நல்ல பழக்கம். அதிலும் அவர் அறிவுசார்ந்த புத்தகங்களைத் தான் படிப்பார். இருந்தும், அவர் வரையில் இந்த நல்ல பழக்கமும் ஒரு கெட்ட அடிமைப் பழக்கம் தான். ஏனெனில், அவரால் இதை விட முடியவில்லையே" என்றார்.

நான் சொன்னேன்: " நான் செருப்பு போடும் போது எப்பவும் இடதுகாலைப் போட்டு பிறகு தான் வலகு காலைப் போடுவேன். 'ஷேவ்' எடுக்கும் போது வலகு பக்கம் செய்து பிறகு இடது பக்கம். இதுவும் பழக்கம் தானே?"

ஜெர்மன்காரர் சொன்னார், மிக அவசரப்பட்டு "என் மனைவி எப்போதும் கொண்டையூசி குத்தும் போது இடது பக்கம் குத்தி தான் வலது பக்கம் குத்துவான். நான் அவதானித்துப் பார்த்திருக்கிறேன்."

"வேறு என்னவெல்லாம் உமது மனைவி செய்வதை நீர் அவதானித்து பார்த்திருக்கீர்" என்றார் கனடாக்காரர், கண்களைச் சிமிட்டியபடி.

அதற்கு பிறகு சம்பாஷணை கீழிறங்கி விட்டது. இது அப்படியே கொஞ்ச நேரம் நீடித்தது.

நான் "தயவு செய்து உங்கள் சம்பாஷணையை இடுப்புக்கு மேலே கொண்டு வருகிறீர்களா?" என்று விட்டுத் தொடர்ந்தேன்:

"ஒரு பழக்கமானது எப்போது அடிமைப் பழக்கமாக மாறுகிறது என்பதை கண்டு பிடிக்க முடியுமா?"

ஜெர்மன்காரர் அந்தச் சமயம் பார்த்து தன் பையில் இருந்து ஒரு வளைந்த போத்தலை எடுத்தார். அவர் எப்பவும் அதில் குடிவகை வைத்திருப்பார். எந்தக் காடு, மேடு, மலை, சமுத்திரம் என்றாலும் அதைக் 'கவசகுண்டலம்' போல காவிக் கொண்டு திரிவார். அவர் ஒரு மிடறுகுடித்து விட்டு சொன்னார்.

"அது மிகவும் சிம்பிள். ஒரு மனிதனைப் பத்து நாள் பட்டினி போட வேண்டும். அதற்கு பிறகு ஐந்து ரூபாயை அவன் கையில் கொடுத்துப் பார்க்க வேண்டும். அவன் நேராக சிகரெட் வாங்க ஓடினால் அவன் அந்தப் பழக்கத்துக்கு அடிமை."

"எனக்கு சவ்வரிசிப் பாயசம் என்றால் உயிர். திரும்பத் திரும்ப சாப்பிடுவேன்; களவெடுத்தும் கூட சாப்பிடுவேன். இதுவும் அடிமைப் பழக்கமா? என்று கேட்டேன்.

அதற்கு கனடாக்காரர் "ச்சீ, அது எப்படி அடிமைப் பழக்கம் ஆக முடியும்? நீ வயிறு நிறைய பாயசம் குடித்து ஓய்ந்த பின் யாராவது உன் முன்னே ஒரு கப் பாயசத்தை நீட்டினால் உனக்கு குமட்டிக் கொண்டு வருகிறதே. அது அடிமைப் பழக்கம் அல்ல. அடிமைப் பழக்கம் என்றால் அதற்கு முடிவே கிடையாது. 'போதும்' என்று நீ சொல்லவே மாட்டாய். அறிவு நிலையில் இருக்கும் வரை எடுத்துக் கொண்டே இருப்பாய்; முடிவு என் வசமே இல்லை" என்றார்.

ஜெர்மன்காரர் சொன்னார்: "இது சொல்லித் தெரிவதில்லை. இந்த போதைக் கொடுமையில் விழுந்தவர்களைக் கண்ணால் பார்க்க வேணும். நான் 'பெஷாவாரில்' மூன்று வருடம் வேலை செய்தேன். நாளொன்றுக்கு நாலு, ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்துக் கொண்டிருந்த காலம் அது. என் வீட்டுக்கு காவல் ஒரு பட்டாணி காவல்காரன். மடியிலே ரிவால்வரும், தோளிலே AK47 ஆக வீட்டைச் சுற்றியபடியே இருப்பான்.

"அன்று கிறிஸ்மஸ் இரவு. நானும், மனைவியும் வெளியே போய் விட்டு ஒரு மணி மட்டில் வந்து படுத்து கண்ணயர்ந்திருப்போம். வீட்டின் கீழே கண்ணாடிகள் உடைத்து சலு சலு வென்ற சத்தம். கீழே ஓடி வந்து விளக்கைப் போட்டால் எங்கும் கண்ணாடிச் சில்லுகள்."

" 'காக்கா இஸ்மயில், காக்கா இஸ்மயில்' என்று கத்தினோம். இஸ்மயில் கதிரையில் இருந்த படியே AK47 ஐ மடியில் குழந்தை போல அணைத்தவாறு தூக்கத்தில் இருந்தான்."

"பொலீஸ் வந்து எல்லா விபரங்களையும் பதிவு செய்து கொண்டு போனார்கள். கனவு போனது விலையுயர்ந்த கலைப் பொருள்கள். அதற்கு பிறகு பொலீஸ’டம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நானும் மறந்து விட்டேன்."

"ஒரு நாள் என் கந்தோருக்கு பொலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு தொலைபேசி வந்தது, என்னை நிலையத்துக்கு உடனே வரும்படி. நானும் மன€வியைக் கூட்டிக் கொண்டு விரைந்து சென்றேன்."

"அங்கே நான் கண்ட காட்சி என்னை ஸ்தம்பிக்க வைத்தது. ஒரு பையன், 24 வயது இருக்கும். குந்தி முழங்காலைக் கட்டிய படி ஒரு மூலையில் இருக்கிறான். குளிருக்கு நடுங்குவது போல அவன் தேகம் நடுங்குகிறது. நெற்றி, தாடையெங்கும் காயங்கள்; சில காயங்களில் இரத்தம் வழிந்த வண்ணம் இருக்கிறது."

"அன்று காலை அவன் பொலீஸாரிடம் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறான். அவன் திருடிய சாமான்களை அங்கே அடுக்கி வைத்திருந்தார்கள். என் வீட்டில் களவுபோன பொருட்கள் அங்கே இல்லை. அவை எல்லாம் வேறு வேறு திருடியவை. அவன் என் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டிருக்கிறான். அவன் என் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டிருக்கிறான், ஆனால் விட்டு விட்டானாம்.

"என் மனைவி அவன் முன்னே முழந்தாளில் உட்கார்ந்தாள். 'உன்னை நான் எப்படியும் வெளியே கொண்டு வந்து விடுவேன். தயவு செய்து என் முகத்தைப் பார். எங்கள் வீட்டில் நீ எடுத்த பொருள்கள் ஆயிரம் டொலர் பெறும். யாரிடம் அவற்றை விற்றாய், சொல்' என்று மன்றாடினாள்."

"அவன் கண்களில் கண்­ர் தான் வந்தது. வாய் குழறியது. அவனால் ஒன்றுமே கதைக்க முடியவில்லை."

"அவன் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனாம். தாய்க்கு ஒரே பையன். தகப்பன் இல்லை. தங்கை மட்டும் தான். வீட்டிலோ வறுமையிலும் வறுமை. இவன் படிப்பில் எப்பவும் முதல் தான். திறமையாகப் படித்து மருத்துவக் கல்லூரிக்கு செய்யப் பட்டு விட்டான்."

"முதல் வருடம் நன்றாகவே படித்தான். ஆனால் இரண்டாவது வருடம் பிடித்தது சனியன். நண்பர்களுடன் ஒரு நாள் மாலை ஒரு 'சிமிட்டா' பொடி போல் உறிஞ்சிக் கொண்டான். ஒரே ஒரு முறை தான். அடுத்த நாளும் எடுத்தான்; அதற்கு அடுத்த நாளும், இப்படியே போயிற்று. ஒவ்வொரு முறை எடுக்கம் போதும் 'இது தான் கடைசித்தரம்' என்று நினைத்துக் கொள்வான்.

"கல்லூரிக்குப் போவது இப்போது தடைபட்டது. இவன் சிந்தனை எல்லாம் அடுத்த வேலை 'சிமிட்டாவுக்கு' காசு எப்படிச் சம்பாதிப்பது என்பது தான். முதலில் புத்தகங்களை விற்கத் தொடங்கினான். பிறகு வீட்டில் பொருட்கள் திடீர் திடீரென்று காணாமல் போகத் தொடங்கின. கடைசியில் ஒரு நாள் தங்கையின் தோட்டிலேயே கை வைத்தான். அதை விற்கக் கொண்டு போன இடத்தில் பிடிபட்டு விட்டான்."

"அப்ப தான் முதன் முதலாக தாய்க்கும் தங்கைக்கும் விஷயம் தெரிய வந்தது. அவர்கள் மன்றால பொலீஸ’ல் இருந்து அவனை காப்பாற்றி விட்டார்கள். ஆனால் வீட்டுப்பயம் இப்போது இல்லை. ஒவ்வொரு நாளும் வீட்டிலே சண்டை. இப்படி தொடங்கி அடிதடி வரையில் போய்விட்டது. ஒரு நாள் தாயாரை அடித்தே விட்டான்."

"அதற்குப் பிறகு அவன் வீட்டிற்கு வருவதே இல்லை. சுருண்டு சுருண்டு போய் ரோட்டு ஓரங்களில் படுத்திருப்பான். போதையின் உத்வேகம் வரும் போது எங்கேயாவது புகுந்து களவெடுத்து விடுவான்."

"நானும் மனைவியும் பெஷாவரை விடும் போது அவனை ஜெயிலில் போய்ப் பார்த்தோம். மனைவி அவனுக்கு ஒரு கம்பளிப் போர்வை கொடுத்தாள். இப்ப கூட அவனுடைய நீளமான கண்கள் என் நினைவில் அடிக்கடி வரும். அவன் இன்னும் இருக்கிறானா இறந்து விட்டானா, தெரியவில்லை."

"இந்தப் பழக்கத்தில் இருந்து மீளவே முடியாதா?"

ஹுமெலின் சொன்னார். "சில பேரால் முடிகிறது. நான் ஒரு நாளைக்கு நூறு சிகரெட் வரை குடித்திருக்கிறேன். கல்லூரியில் தான் எனக்கு இந்தப் பழக்கம் முதலில் ஏற்பட்டது. இரவிரவாக இருந்து ஆராய்ச்கிக்கு தயார் பண்ண வேண்டும். சிகரெட் இதற்கு உறுதுணையாக இருந்தது. என் விரல் நகங்கள் எல்லாம் மஞ்சள். உதடுகள் கறுத்து இருக்கும். ஐந்து நிமிடங்களில் இன்னொரு சிகரெட் பத்தாவிட்டால் கைகள் நடுங்கத் தொடங்கி விடும்."

"நான் தீக்குச்சியினால் தான் சிகரெட் பற்ற வைப்பேன். முதல் உரசலில் அதைப் பற்ற வைக்கும் போது தீக்குச்சி மருந்துடன் சேர்ந்து ஒரு சுவை வரும். அது மகத்தானது. என் இன்பம் எல்லாம் அந்த முதல் இழுப்பில் தான். எத்தனையோ முறை முயன்றும் இந்தப் பழக்கத்தை உதற முடியவில்லை."

"ஒருகோடை விடுமுறையாக பெற்றோரிடம் போய்க் கொண்டிருந்தேன். நீண்ட ரயில் பிரயாணம், ரொரென்டோவில் இருந்து வுட்ஸ்ரொக் வரை."

"என்ன தோன்றியதோ, திடீரென்று என் கையிலிருந்த கடைசி சிகரெட் பெட்டியை ஜன்னல் வழியாக விட்டெறிந்தேன். ஏன் அப்படிச் செய்தேன் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அதன் பின் நான் அதை தொடவே இல்லை. நான் பாக்கியசாலி."

"அதற்குப் பிறகு சிகரெட் குடிக்க வேண்டும் என்ற உத்வேகம் எப்பவாவது வந்ததா?"

"நான் அதை மாற்ற வேறு சில பழக்கங்களை வரவழைத்துக் கொண்டேன். சூயிங்கம் சாப்பிடுவது அதில் ஒன்று . இப்ப 17 வருடங்கள் ஆகிறது. இன்னும் எனக்கு அந்தப் பயம் முற்றிலும் போகவில்லை. எங்கே இன்னோரு முறை திரும்பவும் தொற்றி விடுமோ? என்று பயந்த படியே இருக்கிறேன்" என்றார்.

நான் சிறு வயதில் பார்த்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறேன். எங்கள் கிராம வாழ்க்கையும் அதில் வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்களும் என் நண்பர்களுக்கு வியப்பாக இருக்கிறது.

"எனக்கு அப்ப அஞ்சு, ஆறு வயது இருக்கும். 'குடிகாரச் சின்னத்தம்பி' என்று தான் அவனுக்குப் பேர்; எங்களுக்குப் பயம். வீட்டிலே சோறு தீத்தும் போது கூட 'குடிகாரச் சின்னத்தம்பி'என்று சொல்லித் தான் தீத்துவார்கள்.

"ஒழுங்கையின் எத்தத்தில் அவன் வரும் போதே நாங்கள் உள்ளே ஓடி விடுவோம். குடித்து விட்டு ஆடிக்கொண்டே வருவான். வேட்டி அவிழ்ந்து விடும். வேட்டியை ஒரு கையால் இழுத்த படியே வருவான் சின்னத்தம்பி."

"சும்மா வரமாட்டான். உரத்த குரலில் திட்டிக்கொண்டு தான் வருவான். அவனுடைய 'மூடைப்' பொறுத்தது. ஒரு நாளைக்கு முன்வீட்டு முருகேசுவைப் பேசுவான். இந்த வேலிக்கும் அந்த வேலிக்குமாக 'உலாஞ்சி, உலாஞ்சி' தான் வருவான்; இன்னொரு நாளைக்கு நடராசாவை திட்டியபடி வருவான்; ஒரு நாளைக்கு அவன் பெண்சாதி; மற்றொரு நாளைக்கு அவன்தாயார், இப்படி.

"எங்கள் ஊர் பெண்டுகள் எல்லாம் அவன் இன்றைக்கு ஆரை வைகிறான் என்று வேலி வழியலாலும் பொட்டு வழியாலும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். மற்ற வீட்டி ரகசியங்களை அவன் கொட்டக் கொட்டக் கேட்டுக் கொண்டிருப்பதில் அவர்களுக்கு ஆர்வம்."

"எங்கள் வீடு அவன் வீட்டுக்குப் பக்கத்தில் தான். ஆனால் அவன் வீட்டுப் படிலை அடுத்து ஒழுங்கை வழியாகத் தான் இருக்கும். அம்மா அவன் மனைவியை 'ராசக்கா' என்று தான் கூப்பிடுவாள். எங்கள் வீட்டுக் குந்தில் ஏறி நின்று பார்த்தால் அவர்கள் வீட்டுக் கூரை தெரியும்."

"எங்கள் வீட்டுக்கு ஒரு பாட்டு வாத்தியார் வருவார். அவர் அக்காவுக்கு பாட்டு சொல்லிக் கொடுப்பார். ஹார்மோனியம் வாசித்த படியே அக்கா அவர் சொல்லிக் கொடுப்பதைத் திருப்பிப் பாடுவாள். அக்காவுக்கு அப்ப பதினாறு, பதினேழு வயதிருக்கும்."

"அக்கா பாடும் போது நான் அவள் முகத்தையே பார்த்த படி இருப்பேன். அக்காவுக்கு வட்டமான பெரிய கண்கள். அக்காவின் கைவிரல்கள் வெள்ளைக் கட்டையிலும், கறுப்புக் கட்டையிலும் மாறி மாறி தவழ்ந்து விளையாடும், அவள் குரலும் பாட்டு வாத்தியார் குரலும் சேர்ந்து ஒலிக்கும்."

"கனக சபா....பதி....தரி...சனம் ஒருநாள் கண்டால்...கலி...தீ...ரும் ஆ....."

"அக்கா இந்தப் பாட்டை பாடுகிறாள். என் தகப்பனார் மரக் கட்டிலில் சப்பணம் கட்டிக் கொண்டு இருந்து ரசிக்கிறார்."

"மூன்று வீடு தள்ளி 'கனகசபாபதி' கனகசபாபதி' என்று ஒரு இளம் பொடியன். சைக்கிளுக்குப் பின்னால் உமலைக் கட்டியபடி அடிக்கடி அந்தப் பக்கம் ஓடிக் கொண்டிருப்பது தான் அவன் வேலை."

"ஒரு நாள் இந்தக் குடிகாரன் வழக்கம் போல வேட்டியை இழுத்தபடி போறான். சத்தம் போட்டுக் கத்தியபடியே. எல்லாப் பெண்டுகளும் தங்கள், தங்கள் வேலைகளை விட்டு விட்டு காது கொடுத்துக்கேட்ட படியே இருக்கிறார்கள். அன்றைக்கு எங்களுடைய முறை போலும், குடிகாரன் சொல்கிறான்:

" 'அது ஆரடி கனகசபாபதி? இது என்ன கூத்து, இதைக் கேப்பாரில்லையா?'"

"அதற்குப் பிறகு அக்கா அந்தப் பாட்டைப் பாடுவதை நிறுத்தி விட்டாள். என் தகப்பனார் அப்படி உத்தரவு போட்டு விட்டார். கொஞ்ச நாள் பிறக பாட்டுக்காரரையும் வேண்டாமென்று விட்டார்."

"இப்படித் தான் ஒரு நாள் நான் ஒரு சின்னச் சருவச் சட்டியோடு எங்கள் படலையடியில் நிற்கிறேன். வழக்கமாக அந்த வழியால் மாணிக்கம் கள் எடுத்துக் கொண்டு போவான். அம்மா சொன்னபடி அப்பத்திற்கு போட ஒரு சொட்டு கள்ளு வாங்க காத்துக் கொண்டிருக்கிறேன்."

"தூரத்திலே குடிகாரச் சின்னத்தம்பி. முதலில் அவன் குரல். பிறகு தான் உருவம் தெரிகிறது. வழக்கம் போலச் சத்தம் போட்டு பேசிய படியே வாறான். நான் சருவச் சட்டியைப் போட்டு விட்டு உள்ளுக்கு ஓடி விட்டேன்."

"அவன் வீட்டுக்கு போனவுடன் சண்டை தொடங்குகிறது. இவன் நாலரை அடி உயரம். ராசக்கா ஆறு அடி. முதலில் வார்த்தையிலே தான் சண்டை. அம்மா குந்தில் ஏறி நின்று பார்க்கிறாள். நாங்கள் அவள் முந்தானையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறோம்."

"ராசக்காவுக்கு இரண்டு பிள்ளைகள். பூரணம்,அவளுக்கு பதின்மூன்று வயது; பெரிய பிள்ளை ஆனவுடன் படிப்பை நிறுத்தி விட்டாள். மற்றது பற்பன் (பத்மநாபன்) என்னோடு தான் படிக்கிறான். அவன் பள்ளிக்கு வர்றதே 'பாணும், சம்பலும்' வாங்கத்தான். அவன் அரைவாசி சாப்பிட்டு விட்டு மீதியை அக்காவுக்கும், அம்மாவுக்கும் கொண்டு போய் கொடுப்பான்."

" 'என்ன இழவுக்கு இஞ்ச குடிச்சப் போட்டுவாறாய்?' "

" 'ஏண்டி, உன்ரை கொப்பற்ற சீதனத்தில் குடிக்கிறானே?' இது அவன்."

" 'மூன்று நாள் பிள்ளைகளுக்கு சாப்பாடில்லை; நாள் மாறி நாள் இப்பிடி வாறியே? உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?'"

"எந்தப் பெண்ணும் கேட்க வேண்டிய கேள்விதான்?"

"இப்ப அடி விழும் சத்தம். பிறகு ராசக்கா விளக்குமாத்தைப் பிடுங்கி 'ரப்பிலே' செருகி விட்டாள். இவருக்கு அது எட்டவில்லை. எம்பி எம்பிப் பார்க்கிறார்."

" 'எடுத்துக் குடடி, எடுத்துக் குடடி' "

"காலால் அவளை உதைக்கிறார்"

"மனிதனடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? ராசக்கா அறைக்குள் புகுந்து கதவைப் படார் என்று சாத்தும் சத்தம். கொஞ்சம் நேரம் அமைதி. ஊர் முழுக்க மூச்சு விடாமல் காதைக் கூர்மையாக்கி வைத்துக் கொண்டிருக்கிறது."

"அம்மா தான் முதலில் பார்த்தாள். வீட்டுக் கூரை 'டங்' கென்று ஒரு கணம் ஆடியதை. 'ஐயோ இஞ்சருங்கோ, என்னெண்டு போய் பாருங்கோ' என்று கத்தினாள் அம்மா."

"எல்லோரும் வேலியைப் பாய்ந்தும் கிணத்தை தாண்டியும் வந்து விட்டார்கள். கதவு பூட்டியிருக்கிறது. சின்னராசு தான் உலக்கையால் கதவை உடைத்து முதலில் உள்ளுக்கு போறான், பிறகு அம்மா."

"நாக்கு வெளியே நீண்டு விட்டது. ராசக்கா முகட்டில் இருந்து ஒரு சேலையில் தொங்கி கொண்டிருந்தாள். எல்லோருமாகப் பிடித்து கீழே இறக்கி தண்ணி தெளிக்கிறார்கள். ஒரு கணம் பிந்தியிருந்தால் மரணம் தான்."

"சின்னத்தம்பிக்கு வெறி முறிந்து விட்டது. தலையில் கைவைத்த படி ஒரு மூலையில் இருக்கிறான். பிள்ளைகள் கத்துக்கத்தென்று கத்துகிறார்கள்.

"கொக்குவில் சனம் எல்லாம் வீட்டுக்குள்; விதானையாரும் வந்து விட்டார்."

" 'ஐயா ஐயா! என்னைக் கொல்லுங்கோ! இந்த சனியனை இனி நான் தொட மாட்டேன். இது சத்தியம்' என்று கத்துகிறான் சின்னத்தம்பி. பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

"முதல் நாள், வேட்டியைக் கட்டிய படியே கீழே பார்த்த படி வேலையிலிருந்து திரும்பினான் சின்னத்தம்பி; இரண்டாம் நாளும் அப்படித்தான்; மூன்றாம் நாளும் அதே தான்."

"அம்மா சொன்னாள் 'சின்னத்தம்பி திருத்தி விட்டான்' என்று."

"நாலாம் நாள் வேட்டி அவிழ, அவிழ அவன் கத்திக்கொண்டே வாறான்."

" 'விதானையார் என்ன எனக்குச் சொல்லுறது? அவள் என்ரை பெண்சாதி. இவர் ஆர் என்னைக் கேட்க?'"

கொஞ்ச நேரம் நாங்கள் எல்லாம் மௌனம். பிறகு கனடாக்காரர் சொன்னார்.

"இந்தப் பழக்கம் உள்ளே வெகு நைஸாகப் புகுந்துவிடும். அது புகுந்ததே தெரியாது. ஆனால் அதை வெளியேற்றுவது தான் மிகவும் சிரமம்.

"அதிலும் 'நோய் விலகும் அறிகுறிகள்' (Withdrawal symptoms) - அதன் பாதிப்போ அவஸ்தையானது. நரக வேதனை தான். இதிலே மீள்வது மிகவும் அரிது என்றார் ஜெர்மன்காரர்.

"அவர்களுக்கான 'புனர்வாழ்வு மையங்கள்' (rehabilitation centres) மேல் நாடுகளில் இருக்கின்றன. ஆனால் பத்திலே ஒருவர் தான் மீண்டு வருவார்கள்."

"எனக்கு அப்படி ஒருவரைத் தெரியும். ஆபிரிக்காவில் நான் வேலை செய்த போது அந்தப் பரிச்சயமேற்பட்டது." என்று நான் கூறினேன்.

"அது மரங்கள் ஏற்றுமதி செய்யும் ஒரு பெரிய கம்பனி. ஆபிரிக்காவில் சிவப்பு மரங்களுக்கு உலகமெங்கம் நல்ல வரவேற்பு. பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கே வேலை செய்தார்கள். கம்புயூட்டர் பிரிவில் தான் நான். எனக்கு கீழே நாற்பது பேர்.

"அவனுடைய பேர் 'லுங்கே ஒபுக்கு'. நல்ல தேகக் கட்டுடன் இருப்பான். எப்பவும் சிரித்த முகம். வயது இருபத்தியாறு. ஒரு மனைவியும் மகளும் தான்."

"கம்புயூட்டரை அவன் கண்டதேயில்லை. ஆனால் அதைக் கண்ட நாளிலிருந்து அவனுக்கு ஒரு மோகம். அதில் மீன்குஞ்சு நீந்துவது போல இவனும் புகுந்து விளையாடுவான். இயற்கையாகவே அவனுக்கும் கம்புயூட்டருக்கும் ஒரு தொந்தம் இருந்தது. நான் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால் தானாகவே பத்து விஷயங்களைக் கற்றுக் கொண்டு விடுவான்."

"நாங்கள் மாதா மாதம் அமெரிக்காவிலுள்ள தலைமையகத்துக்கு நாற்பது பக்கங்கள் கொண்ட செயலாட்சி அறிக்கையை அனுப்ப வேண்டும், ஆறு மாதத்திலேயே இவனை நான் இது தயாரிப்பதில் ஒரு விற்பன்னனாகத் தயார் செய்து விட்டேன்."

"இரவு பகலாக கம்புயூட்டரே கதி என்று கிடப்பான். என் வேலையானது சுகமாகவும் அவசரமின்றியும் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது தான் ஒபுக்குவுக்கு இன்னொரு மோகம் பிடித்தது."

இந்த இடத்தில் நான் கொஞ்சம் கதையை நிற்பாட்டினேன். ஜெர்மன்காரர் போத்தல் மூடியைத் திறந்து ஒரு மிடறு வாயில் ஊற்றிக் கொண்டார். நான் தொடர்ந்தேன்.

"அங்கே அமெரிக்காவில் இருந்து வந்த 'பீஸ்கோ' ஊழியர்கள் (Volunteers) அநேகம். அதிலும் பெண்களே அதிகம். எல்லாருமே கட்டிளம் கன்னியர். கன்னியர் என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குத் தான். அதிலே ஒரு நீலக்கண் அழகி; பெயர் 'கரலைன்'. அவளுக்கு இவன் மேல் மையல்."

"பீஸ்கோவில் இருந்து வரும் பெண்கள் ஒரு ஆணைவலையில் வீழ்த்தி இழுத்துக் கொண்டு போவது அங்கே வழக்கம் தான். பீஸ்கோ பெண்கள் அங்கு வருவதே அதற்காகத் தான் என்று என்னுடைய மேலதிகாரி எனக்கு அடிக்கடி சொல்லுவார்."

"மேற்கு ஆபிரிக்காவில் ஒரு வித குடிவகையை சிறு சிறு 'பொலிதீன்' பைகளில் போட்டு விற்பார்கள். அதில் ஊசியால் ஒரு சிறு ஓட்டை போட்டு வாய்க்குள் அடக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மது வகையோ மிகவும் சக்தி வாய்ந்தது. அது கசிந்த கசிந்து ஒரு மணியளவுக்கு தாக்குப்பிடிக்கும். அது முடிந்தவுடன் இன்னும் கேட்கம். கொடுத்துக் கொண்டே இருக்க வேணும்."

"கரலைன் காதலிக்கு 'பொலிதீன்' மோகம். இவன் சாது. இவனும் பழகிக் கொண்டான். அது பிடரியில் ஏறி இடம் பார்த்து உட்கார்ந்து விட்டது. இவனுக்கு அதை இறக்கி விட வழியில்லை. அதன் சொற்படி எல்லாம் ஆடத் தொடங்கினான்.

"ஆபிரிக்காவில் ஒரு பழமொழி இருக்கிறது. 'ஆற்றிலே ஆழம் பார்க்க ஒரு காலை மட்டு விடு, இரண்டு காலையும் விடாதே, முட்டாளே' என்று. இவன் இரண்டு காலையும் விட்டு விட்டான்."

"ஒரு நாள் அவன் என்முன்னே நிற்கும் போது கவனித்தேன். நிற்க முடியாமல் திண்டாடினான்; கைகளெல்லாம் நடுக்கம். அடிக்கடி வேலைக்கு வரத் தவறினான். அறிக்கைகள் தயாராக நாட்கள் எடுத்தன. எனக்கு அவனிலே சம்சயம் ஏற்பட்டது."

"ஒரு திங்கள் காலை நான் அலுவலகம் வருகிறேன். என் மேசையில் ஒரு சிறு குறிப்பு இருக்கிறது. அந்த மாதத்தின் 'ப்ரோகிராம் விபரங்கள்; இந்த கம்புயூட்டர் பைல் இந்த 'டைரக்டரியில்' இருக்கிறது; ரகசிய 'கோட்' இது என்று இப்படியான சில குறிப்புகள் தான். எனக்கு அது முழுவதுமாய் விளங்கவில்லை. ஒரு மூலையிலே போட்டு விட்டேன்.

"இரண்டு நாளாக ஒபுக்கு வரவில்லை. மூன்றாம் நாளும் இல்லை. எனக்கு கிலி பிடித்து விட்டது. தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்பும் நாள் நெருக்கிக் கொண்டே வந்தது. விசாரித்ததில் அமெரிக்கச் சிட்டுடன் இவன் ஓடி விட்டான் என்றார்கள். 'கரலைன்' இவனைக் கடத்தி விட்டாள். கந்தோரில் எல்லாருக்கும் தெரிந்திருந்தது; ஆனால் நான் தான் கடைசி."

"அப்பதான் அந்தக் குறிப்பு நினைவுக்கு வந்தது. அதைப் பார்த்து இரவு பகல் வேலை செய்து தலைமையகத்துக்கு அறிக்கையை கெடு முடிவதற்கிடையில் அனுப்பிவைத்தேன். எனக்கு அவன் மீது அன்பு தான் சுரந்தது. கோபம்வரவில்லை. அவன் எவ்வளவு ஒரு இக்கட்டில் மாட்டி தன் குடும்பத்தையும், சுற்றத்தையும் துறந்து ஓடினாலும் என்னை நட்டாற்றில் விட்டுப் போக விரும்பவில்லை. அவனுடைய குறிப்புகள் என் வேலையைக் காப்பாற்றின."

"நான் ஒப்புக்குவை மறந்தே விட்டேன். ஆனால் ஒரு வருடம் கழித்து எனக்கு அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது."

ஐயா.

உங்களை நான் மறப்பேனா? உங்களிடம் படித்த கம்புயூட்டர் தான் இன்று சோறு போடுகிறது.

நான் போதைக்கு ஆளாகிப் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சம் அல்ல. புனர்வாழ்வு மையத்தில் ஆறு மாதம் கிடந்தேன். அதனிலும் பார்க்க நரகம் வேறு ஒன்றும் இல்லை. இந்நோயின் 'விலகும் அறிகுறிகள்' என்னைச் சித்திரவதை செய்து விட்டன. எத்தனையோ முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். இறுதியில் தப்பிவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன். கரலைனும் தன் அன்பைத் தெரிவிக்கிறான்.

ஒபுக்கு.

இதை நான் சொல்லி முடிக்கவும் சமையல்காரன் 'டிங்டிங்' என்று மணியடித்து 'டின்னர்ரெடி' என்று சொல்லவும் சரியாகவிருந்தது.

ஜெர்மன்காரர் போத்தலை உருவினார். மூடியைத் திறந்து கொஞ்சம் வாயிலே ஊற்றி விட்டு மறுபடியும் போத்தலை பையிலே வைத்தார்.

"இது என்ன? நாங்கள் இவ்வளவு கதைத்த பிறகும் இப்படி செய்கிறீரே? இதை இன்றே தலையைச் சுத்தி வீசிவிடும்" என்றேன்.

ஜெர்மன்காரர் "ஆமாம், இன்று இதுதான் கடைசித்தடவை - நாளை விடியும் வரை" என்றார்.

* * *

மேற்படி கதையைப் படித்துவிட்டு நண்பனொருவன் "என்ன கதை எழுதிறாய் நீ? தலையுமில்லை. வாலுமில்லை! குங்கிலியக்கலய நாயனார் என்று தலைப்பு வேறு கொடுத்திருக்கிறாயே" என்று கேட்டான்.

"உனக்கு குங்கிலியக்கலய நாயனார் கதை தெரியுமா?" என்று கேட்டேன்.

"என்ன தெரிய வேணும். அறுபத்தி மூன்று நாயன்மாகளில் அவரும் ஒருவர்" என்றான்.

"திருக்கடவூரிலே சுவாமிக்கு தினமும் குங்கிலியம் தூபம் இடுவதே இவர் தொழில். எப்பேர்ப்பட்ட வறுமையில் வாடினாலும் தினமும் இதைச் செய்யத் தவற மாட்டார். கிடைக்கும் காசையெல்லாம் கொடுத்து குங்கிலியம் வாங்கி சுவாமிக்குத் தூபம் போட்ட படியே இருப்பார். இப்படியே வீட்டிலே இருக்கும் பொருள்களையெல்லாம் விற்று விற்று குங்கிலியம் வாங்குவார்.

"ஒரு நாள் வீட்டிலே மனைவியும் பிள்ளைகளும் பட்டினி. விற்பதற்கு இனி ஒன்றுமே இல்லை. அப்பொழுது அந்த மனைவி தன் தாலியை கழற்றிக் கொடுத்து அதை எப்படியாவது விற்று நெல் வாங்கி வரச் சொல்கிறாள், பிள்ளைகளின் பசியைத் தீர்ப்பதற்கு. இவரும் 'அப்படியே' என்று போனார். ஆனால் வழியில் ஒருவன் ஒரு பொதி குங்கிலியம் கொண்டு வரக் கண்டு அதிலே மனதைப் பறி கொடுத்தார்.

"தன் வயமிழந்து மதிமயங்கி, தாரை தாரையாக கண்­ர் சொரிய அவன் காலி விழுந்து தாலியைக் கொடுத்து குங்கிலியப் பொதியை பெற்றுக் கொண்டார். அதை நேரே கொண்டு போய் கோயிலிலே வைத்து தூபம் போடலானார். பசிறை மறந்தார்; மனைவியை மறந்தார், பிள்ளைகளையும் மறந்தார்."

"இது என்னத்தைக் காட்டுகிறது?" என்றேன்.

"அவருடைய பக்தியைத் தான்" என்றான் நண்பன்.

"இல்லை, இதுவும் ஒரு வித அடிக்ஷன் (addiction) தான்" என்றேன் நான்.

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework