பார்வதி
- விவரங்கள்
- அ. முத்துலிங்கம்
- தாய்ப் பிரிவு: இயல்
- சிறுகதைகள்
இந்தத் தலைப்பில் பல கதைகளை நானே படித்திருக்கிறேன். ஆனால் தலைப்பை மாற்றுவதற்கில்லை. ஐம்பது வருடங்களுக்கு முன்பு இது உண்மையாகவே என் கண்முன்னே நடந்த கதை. எனது பிராயம் ஐந்தில் இருந்து எட்டு வரைக்கும் இவையெல்லாம் நடந்து முடிந்து விட்டன. என் பிஞ்சு மனத்தில் ஆணி அடித்தது போல சம்பவங்களும், சம்பாஷணைகளும் நிலைத்து நிற்கின்றன. இங்கே நடந்தது நடந்த படியே கூறியிருக்கிறேன்.
பார்வதி என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவளுடைய தோசை தான். தோசை என்றால் 'கம்பாஸ்' வைத்து வட்டம் அடித்தது போல இருக்கும். அந்த மணம் நாலு வீடு தள்ளி மணக்கும்; ஆட்களை சுண்டி இழுக்கும்.
எங்கள் வீட்டிலிருந்து மூன்றாவது வீடு தான் பார்வதி வீ டு. விடியற்காலை பல பலவென்ற விடியும் போது கொழும்பு ரயில் வந்து சேரும். அதுதான் பார்வதி தோசை சுடும் மும்முரமான நேரம்.
முதலில் தோசை மாவை அகப்பையில் எடுத்து தோசைக் கல்லில் ஊற்றுவாள். அதுவே ஒரு தனி அழகு. அது 'உஸ்' என்று சொல்லி வைத்தபடி அப்படியே வட்டமாக உருவெடுக்கும் கொஞ்சம் பொறுத்து தோசைக் கரண்டியால், அது பாதி காயும் போதே, கீழே கொடுத்து 'தெம்மி' மற்றப் பக்கம் பிரட்டுவாள். அது படக்கென்று விழும். பிறகு அவதானித்து பொன்னிறமாக அது மாறும் போது எடுத்து ஓலைப் பெட்டியில் வைப்பாள்; அல்லது நீட்டிக் கொண்டிருக்கும் சில பேருடைய தட்டிலே போடுவாள்.
தோசை அப்ப ஆவி பறந்த படி இருக்கும். எடுத்து நேராகப் பார்த்தால் ஊசி ஓட்டைகள் ஒரு நூறாவது பார்க்கலாம். எல்லா தோசையும் அதே மாதிரிதான் அச்சில் வார்த்து போல வரும். அதிலே ஒரு 'விள்ளல்' எடுத்து வாயிலே போட்டால் அது மெத்தென்று புளிப்பு கலந்த ஒரு ருசியாக மாறும்; தேவாமிர்தமாக இருக்கும்; பார்த்துக் கொண்டிருக்கும் போதே கரைந்து விடும். சாதாரணமான தோசை மாவுக்கு இப்படி ஒரு மெதுமையையும், மணத்தையும், ருசியையும் சேர்ப்பதென்றால் அது ஒரு பரம ரகஸ்யம் தான். என்னுடைய அம்மாவும், மற்ற ஊர் பெண்டுகளும் அந்த ரகஸ்யத்தை அறிய எவ்வளவோ முயற்சித்தார்கள். ஆனால் பலிக்கவில்லை. இந்த தோசையை அப்படியே சாப்பிடலாம். அதுக்குச் சேர்த்துக் கொள்ள ஒன்றுமே தேவையில்லைதான். ஆனால் பார்வதி அதற்கென்று ஒரு 'சம்பல்' செய்வாள். சம்பல் என்றால் சின்ன வெங்காயம், சிவப்பு தெத்தல் மிளகாய், தேங்காய்ப்பூ, கொஞ்சம் உப்பு, ஒரு சொட்டுப் புளி என்று எல்லாம் போட்டு செய்ததுதான். இதற்கு கறிவேப்பிலையும் சேர்த்து பக்குவமாக தாளித்துப் போடுவாள். அப்ப அதில் இருந்து ஒரு திவ்யமான மணம் வரும். சம்பலை கொஞ்சம் தொட்டு தோசையையும் விண்டு வாயில் போட்டால் அதுவே ஒரு தனி மயக்கம் தான்.
சம்பல் இடிக்கும் போது பார்வதி யாருடனும் கதைக்க மாட்டாள். 'நாணமாம்.' முணு முணுவென்று வாய்க்குள்ளே ஏதோ சொல்லுவாள்; மந்திரமோ என்னவோ. நாங்கள் 'குஞ்சு குருமான்' அப்ப அங்கே போய் சத்தம் போட்டு விளையாடுவோம். அவள் ஒன்றுமே பேசமாட்டாள் அந்த நேரத்தில்.
பார்வதிக்க பன்னிரெண்டு வயது நடக்கும் போது கல்யாணம் ஆகி விட்டதாம். சின்னையாபிள்ளைக்குத் தொழில் விவசாயம்தான். அன்னியோன்னியமான அந்த தம்பதிகளுக்கு பிள்ளையே பிறக்கவில்லை. எவ்வளவோ வைத்தியம் பார்த்தார்கள். கோயில்கள் எல்லாத்துக்கம் போய் வந்தார்கள். தவறாமல் விரதம் பிடித்தார்கள். பிள்ளை மாத்திரம் உண்டாகவே இல்ல. பார்வதி உடைந்து போனாள். இப்படியே இருபது வருடம் ஓடியது. நம்பிக்கை முற்றிலும் போய்விட்டது.
அப்போது தான் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தேடியில் ஒரு சாமியார் "நீ கந்தசஷ்டி விரதம் இரு. உனக்கென்று முருகனே வந்து பிறப்பான்" என்று சொன்னாராம். பார்வதியும் முழு நம்புக்கையுடன் குளித்து, முழுகி ஆறு நாள் விரதம் காத்தாள்; கடுமையான விரதம். அப்படித்தான் அவர்களக்கு பிள்ளை பிறந்தது. எப்படி பேர் வைப்பார்கள்? பார்வதிக்கு பிறந்த பிள்ளையாயிற்றே! 'முருகேசன்' என்று தான் பேர் சூட்டினார்கள். அம்மா சொல்லுவாள், பிள்ளை பிறந்த போது ஊர் முழுக்க அப்படி ஒரே கொண்டாட்டமாக இருந்ததாம்.
ஆனால் விதி வேறு மாதிரி நினைத்திருந்தது. சீன்னையாபிள்ளை காலை நாலு மணிக்கே எழும்பி புறப்பட்டு விடுவார் தோட்டத்துக்கு தண்ர் இறைக்க. நாலு மணியென்றால் 'கூ, கூ' என்று ஒருவரை ஒருவர் கூவி அழைத்துக் கொண்டுதான் புறப்படுவார்கள். தோட்டம் இரண்டு கல் தொலைவில் இருந்தது.
அன்று சின்னையாபிள்ளைக்கு சரியான அலுப்பு. மனைவியோடு இரவிரவாக சல்லாபம். நித்திரை சரியாகத் தூங்கவில்லை. 'துலா' ஏறி மிதித்துக் கொண்டிருந்தார். நித்திரை அசதியோ, வேறு நினைவோ கால் தவறி விட்டார். 'நெம்பு' என்று நினைத்து வெறும்காற்றில் காலை வைத்துத்தான் வினை. பொத்தென்று கீழே விழுந்து தலையிலே பலமான அடி. உயிர் 'பொசுக்' கென்று போய்விட்டது.
முருகேசனுக்கு அப்போது இரண்டு வயது. ஊருக்குள்ளே முருகேசன் பிறந்த வேளை தான் என்று பேசிக்கொண்டார்கள். பார்வதி தளரவில்லை. தோசைக் கடை போட்டாள். பிள்ளையை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள்.
நான் ஐந்து வயதாக இருந்த போது முருகேசன் நெடிதுயர்ந்து வளர்ந்த ஒரு முழு ஆம்பிளைப்பிள்ளை. பார்க்க லட்சணமாக இருப்பான். வெள்ளை வெளேரென்று வேட்டி கட்டி, சட்டையும் போடுவான். செல்லமாக வளர்ந்த பிள்ளையாதலால் ஊரிலே எல்லோருக்கும் அவனிடம் 'பகிடி' பண்ண ஆசை.
புத்தம் புது சைக்கிள் வைத்திருந்தான். அதில் கொம்பு வைத்த ஒரு குதிரை முன் இரண்டு கால்களையும் தூக்கிய படி நின்று கொண்டிருக்கும். சைக்கிள் 'பெல்' மூன்று. இன்னும் வண்ண வண்ணமாக வினோதமான பல அலங்காரப் பொருட்கள் அந்த சைக்கிளில் பூட்டியிருக்கும். நாங்கள் சின்னப் பிள்ளையாக அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தது நினைவிருக்கு.
அப்ப 'பேசாத படம்' ஓடின காலம். முருகேசன் டவுனுக்குப் போய்இந்தப் படங்களைப் பார்த்து விட்டு வருவான். பிறகு அந்தக் கதைகளை விஸ்தாரமாகச் சொல்லுவான். எல்லோரும் வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருப்பான்.
இந்த நேரம் தான் அவனுக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சல் என்றால் சாதாரண காய்ச்சல் இல்லை. நெருப்புக் காய்ச்சல். அப்போதெல்லாம் நெருப்புக் காய்ச்சல் வந்து தப்பினவர்கள் வெகு சிலரே.
பார்வதி தோசைக் கடையை மூடிவிட்டாள். மகன் பக்கத்திலேயே பழியாய்க் கிடந்தாள். நெல்லியபடிப் பரியாரி அடிக்கடி வந்து மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார். ஊர் முழுக்க 'என்ன நடக்கப் போகுதோ' என்று பயந்த படியே இருந்தது. நிலைமை ஒரு நாள் மோசமாய் போய்விட்டது. என்னுடைய அப்பா கொழும்புக்கு பயணமாவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். அம்மா சொல்கிறாள். "முருகேசன் பாடு நாளைக்குத் தாங்காது போல இருக்கு, நின்று பார்த்திட்டு போங்கோ"
அன்னு பின்னேரம் அம்மா பார்வதியைப் பார்க்க போனாள். நானும் பின்னாலேயே போனேன். ஆனால் என்னைக் 'கிட்ட வர வேண்டாம்' என்று சொல்லி விட்டார்கள். முருகேசன் அடித்துப் போட்ட வாழைத் தண்டு போலக்கிடந்தான். பார்வதி அழுதபடியே பக்கத்தில். அந்த உருக்கமான காட்சி என் மனதை விட்டு நீங்கவே இல்லை.
அம்மா தான் சொன்னாள். பார்வதி அப்போது ஒரு நேர்த்திக்கடன் செய்தாளாம். "அப்பா, நல்லூர்க் கந்தா இது நீ கொடுத்த பிள்ளை. நீயே திருப்பி எடுக்கலாமா? இந்தத் தத்தில் என் பிள்ளை தப்பினால், நூறு நாளைக்கிடையில் அவன் உன்னுடைய கோயில் வெளிப் பிராகாரத்தை பிறதட்டை (அங்கப்பிரதட்சணம்) பண்ணுவான். அப்பா, என்னை கைவிட்டு விடாதே."
எல்லோரும் அதிசயிக்கும்படி முருகேசன் தப்பிப் பிழைத்து விட்டான். பார்வதிக்கு சந்தோஷம். மறுபடியும் ஒரு குமரிப் பெண்ணாகவே காட்சியளித்தாள். அப்படியான ஒரு குதூகலத்தை ஒரு பெண்ணிடம் மிகவும் ரகஸ்யமான நேரங்களிலேதான் காண முடியும்.
நல்லூர்க் கந்தனுக்க கைத்த 'கெடுவோ' நூறு நாட்கள்தான். அப்ப பங்குனி மாதம். கொளுத்தும் வெய்யில். நல்லூர்க் வெளிப் பிரகாரத்தை பிறதட்டை பண்ணுவெதன்றால் லேசுப்பட்ட காரியமா? ஆனாலும் முருகப்பெருமானோடு விளையா முடியுமா?
முருகேசனுக்கு உடம்பு முற்றிலும் தேறவில்லை. காய்ச்சல் களை இன்னமும் இருந்தது. நெருப்புக் காய்ச்சல் அவனை உலுக்கி எடுத்து விட்டது.
பார்வதி 'அடிஅழித்த' படி முன்னுக்குப் போக, முருகேசன் பின்னால் பிறதட்டை செய்தபடியே வருகிறான். சில பந்து சனங்களும் அவர்கள் பின்னால் போகிறார்கள். சிலர் தண்ணி தெளித்தபடி, சிலர் வேப்பம் கொத்தை வீசியபடி.
உள்வீதி என்றாலும் பரவாயில்லை. இது வெளி வீதி. முருகேசனோ சொகுசாக வளர்த்த பிள்ளை. 'முந்திப் பிந்தி' பிரதட்டை செய்த பழக்கமுமில்லை. மேற்கு வீதியில் வந்த போதே அவனுக்கு 'மேல்மூச்சு, கீழ்மூச்சு' வாங்கியது. இனசனம் எல்லோரும் அவனுக்கு 'அரோஹரா' சொல்லி உற்சாக மூட்டினார்கள்.
வடக்கு வீதியும் வந்த விட்டது. அவனுக்கு இதற்க மேல் தாக்குப் பிடிக்க இயலவில்லை. எழுந்து விட்டான். ஒரு கரித்துண்டை எடுத்து கோயில் சுவரிலே கோடு போட்டு விட்டு சொன்னான்;
"ஆச்சி, இனி எனக்கு தாங்காது; மிச்சத்தை வந்து நாளைக்கு முடிக்கிறேன்" என்று விட்டு போய் விட்டான். பார்வதி திகைத்துப் போனாள் என்றாலும் மீதி தூரத்தை அவளே 'அடி அழித்து' முடித்து விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
அடுத்த நாள் ஊர் முழுக்க இதே பேச்சுத் தான். சும்மா சும்மா முருகேசனைப் பகிடி பண்ணியவர்களுக்கு இது நல்ல சாட்டாகப் போய் விட்டது. அவனால் தலை நிமிர்த்தவே முடியவில்லை. குழந்தைகள் கூட அவன் முகத்துக்கு நேரே கேலி பண்ணத் தொடங்கி விட்டார்கள்.
நமசிவாயம்பிள்ளை தான் கேட்டார். 'நக்கலாகப்' பேசுவதில் எங்கள் ஊரில் 'டிகரி' வாங்கியவர்.
"என்ன முருகேசன்! கரிக்கோடு போட்டியாமே கோயில் சுவரில்? ராத்திரி பெய்த பனியில் எல்லாம் நனைஞ்சு போச்சாமே! அப்ப நாளைக்கு எங்கையிலிருந்து தொடங்கப் போறாய்?
எல்லோரும் 'கெக்கே, கெக்கே' என்று சிரித்தார்கள். முருகேசனுக்கு முகம் எல்லாம் சிவந்து விட்டது. விசுக்கென்று போய் விட்டான்.
இப்படியாகத் தான் முருகேசனுக்கும் நமசிவாயம் பிள்ளைக்கும் ஒரு சின்னப் பகைமை வித்து முளைவிட்டது. அது ஒரு நாள் விஸ்வரூபம் எடுத்ததை நான் என் கண்ணாலேயே பார்த்தேன்.
முருகேசனுக்கு நல்ல நீண்ட மூக்கு; அவன் முகத்துக்கு அது நல்ல பொருத்தம். ஆனால் மூக்குத் துவாரங்களோ பெரிசு; அப்படிப் பெரிசு. எல்லோரும் ஒரு சுருட்டுக் கொட்டகைக்குள் இருந்து சுருட்டு சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். முருகேசனுடைய வெள்ளை வெளேர் என்ற வேட்டி கொடியில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவன் மாற்று வேட்டி கட்டிக் கொண்டு வேலையிலேயே கண்ணாயிருக்கிறான்.
அப்ப இலுப்பைப் பூ காலம். 'கமகம' வென்று வாசம். ஒரு காற்று சுழன்று வீசியது. தூசோ தும்போ தெரியவில்லை. முருகேசன் 'அச்சூ' என்று தன் பலம் எல்லாத்தையும் பிரயோகித்து ஒரு தும்மல் தும்மினான். அது ஒரு அதிர வைக்கும் பயங்கரமான தும்மல்.
தொங்கலில் இருந்த நமசிவாயம் பிள்ளைதான் கேட்டார் "என்ன முருகேசன், மூக்குக்குள்ளே யானை பூந்திட்டுதோ?"
அவ்வளவு தான். முருகேசன் ருத்திரனாகவே மாறிவிட்டான். படாரென்று எழும்பினான்; ரீல் கட்டையை நமசிவாயம் பிள்ளையை நோக்கி வீசி எறிந்தான். அவனுடைய வெள்ளை வேட்டியைக் கூட எடுக்கவில்லை. ஒரே மூச்சில் சைக்கிளில் பாய்ந்து ஏறிப் போய் விட்டான். அதுக்குப் பிறகு அவனை யாருமே பார்க்கவில்லை. பார்வதி பதறிவிட்டாள். வீடு வீடாய்ப் போய்த் தேடினாள். போவோர் வருவோர் எல்லோரிடமும் விசாரித்தாள். பொல பொல வென்று கண்ர் விட்டு அழுதாள். கடைசியாக நமசிவாயம் பிள்ளை வீட்டு வாசலுக்கே சென்று மண்ணைவாரி, வாரிக் கொட்டித் திட்டினாள். கிராமங்களிலே மண்ணை வாரிக் கொட்டித் திட்டுவது எல்லாம் சாதாரணமான காரியமில்லை. கடைசிக் கட்டத்தில் தான், கிளைமாக்ஸ்.
ஆனால் முருகேசன் போனவன், போனவன் தான். தகவலே இல்லை. கொஞ்ச நாள் ஊர்முபக்க மௌனமாக இருந்தது போல் பட்டது. எல்லோருக்கும் உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்வு.
கடைசியாக ஒரு நாள் ஒரு தபால் அட்டை வந்தது. பார்வதிக்கு படிக்கத் தெரியாது. அம்மா தான் வாசித்து காட்டினாள். முருகேசன் குருநாகலையில் சுருட்டு கடையில் வேலை செய்கிறானாம்.'எடுபிடி' வேலை. கவலைப்பட வேண்டாம் என்று எழுதியிருந்தான்.
பார்வதிக்கு ஒரு பக்கம் நிம்மதி என்றாலும் ஒரே மகன் தன்னை இப்படி விட்டுப் போய் விட்டானே என்ற ஏக்கம். அதற்குப் பிறகு பார்வதி பார்வதியாகவே இல்லை. எப்பவும் அவள் முகத்தில் வேதனை தான் குடி இருக்கும்.
"என் மகன் என்ரை கடைசி காலத்தில் வருவானோ?" என்று கவலைப் படுவாள். ஒவ்வொரு நாளும் அம்மாவிடம் வந்து ஒரு பாட்டம் அழுதுவிட்டு போவது அவளுக்கு வழக்கமாகி விட்டது.
கடிதத்திற்கு மேல் கடிதம் போட்ட படியே இருந்தாள் பார்வதி. ஒரு பதிலும் இல்லை. பார்வதிக்காக பல பேரும் கடிதம் எழுதினார்கள். ஒரு முறை வாத்தியார் எழுதினார்; இன்னொரு முறை அம்மா எழுதினாள். ஒரு நாள் சங்கக் கடை சுப்பிரமணியம், கடைசியில் நமசிவாயம் பிள்ளை கூட எழுதினார். அவர் தன் பங்காகவும் ஒரு வரி சேர்த்திருந்தார்; அது பார்வதிக்குத் தெரியாது. "நான் ஏதோ ஒரு பகிடிக்காகத் தான் அப்பிடிச் சொல்லி விட்டேன். இதைப் பெரிசு படுத்தாதே, தயவு செய்து வந்துவிடு. உன் அம்மாவைப் பார்க்க பெரிய பாவமாக இருக்கிறது" என்று.
முருகேசன் வரவே இல்லை. மூன்று வருடம் ஓடி விட்டது. அப்ப எனக்கு வயது எட்டு. எல்லோரும் முருகேசனை மறந்து விட்டார்கள் என்று தான் சொல் வேண்டும். பார்வதி, அவள் தாயல்லவா? மறப்பாளா?
ஒவ்வொரு நாள் காலையும் ஆறு மணிக்கு கொழும்பு ரயில் கொக்குவில் ஸ்டேசனில் வந்து நிற்கும் சத்தம் எங்கள் வீடு வரைக்கும் கேட்கும். பார்வதி வாசலிலே வந்து பழி கிடப்பாள்.
ரயிலிலே இருந்து இறங்கியவர்கள் எங்கள் ஒழுங்கைக்கு வந்து சேத பத்து நிமிடமாவது பிடிக்கும். இவள் தலையில் கை வைத்து பார்த்த படியே நிற்பாள். யாராவது சூட்கேசுடன் தூரத்தில் வந்தால் ஒரு கணம் திடுக்கிட்டு சிறிது தூரம் ஒடிவந்து பார்ப்பாள். பிறகு ஆள் அடையாளம் தெரிந்தவுடன் விரக்தியுடன் திரும்பிப் போய் விடுவாள்.
ஒரு நாள் பின்னேரம் வழக்கம் போல் பார்வதி அழுதபடியே வந்தாள். அன்றைக்கு அம்மாவிடம் போகவில்லை. அப்பாவிடம் தான் நேரே போனாள். அவள் சொன்னாள்:
"முருகேசன் உங்கடை சொல்லுக்கு கட்டுப்பட்டவன்;நான் எத்தினையோ காயிதம் போட்டு விட்டன்; அவன் திரும்பிக் கூட பார்க்கவில்லை. எனக்கு வயித்தைக் கலக்குது என்ரை பிள்ளையைப் பார்க்காமல் செத்து விடுவேனோ என்று பயமாயிருக்கு"
அதற்கு அப்பா பதிலே கூறவில்லை; மாறாக பெட்டியில் இருந்து ஒரு 'போஸ்ட் கார்டை' எடுத்து எழுதினார். வேறு ஒன்றும் இல்லை; ஒரு பாடலைத் தான் எழுதினார். திகதியோ, எழுதியவர் பெயரோ இல்லை. எல்லோர்க்கும் தெரிந்த ஒரு பாடல் தான் அது:
- "வற்றாத பொய்கை வளநாடு தந்து
- மலைமேலிருந்த குமரா
- உற்றார் எனக்கு ஒரு பேரும் இல்லை
- உமையாள் தனக்கு மகனே
- முத்தாரமாக மடிமீதிருக்கம்
- முருகேசன் எந்த உயிரே
- வித்தாரமாக ரயில் மீதிலேறி
- வரவேணும் எந்தனருகே"
இதை எழுதிவிட்டு அந்த தபால் அட்டையை அப்பா என்கையில் கொடுத்து "ஓடிப் போய் போட்டு விட்டு வா" என்று சொன்னார்.
நான் சீவரத்தினம் கடையில் இருக்கும் தபால் பெட்டியை நோக்கி ஓடினேன். அந்தப் பாடலில் 'மயில் மீது' என்று வரும் இடத்தில் அப்பா 'ரயில் மீது' என்று மாற்றி எழுதியிருந்தார். மற்றம்படி பாடல் ஒரிஜினல் பாடலாகத்தான் இருந்தது.
(ஐம்பது வருடத்திற்கு முன்பு ஒரு முறை மட்டும் படித்த இந்தப் பாடலை நினைவில் வைத்து இங்கே கூறியிருக்கிறேன். இதில் பிழையிருந்தால் அது என்னுடையது தான்; மன்னிக்கவும்)
இந்தக் 'கார்டு' போட்டு நாலு நாள் ஒடிவிட்டது. ஐந்தாம் நாள் காலை நாங்கள் எங்கள் வீட்டு ஒழுங்கைப் புழுதியில் விளையாடியபடி இருக்கிறோம். கொழும்பு ரயில் வந்து போகும் சத்தம். பிறகு ஒரு பத்து நிமிடம் கழித்து தூரத்தில் ஒருவர் நடந்து வருகிறார். உயர்ந்த உருவம், கையிலே சூட்கேஸ், வெள்ளை வெளேர் என்று வேட்டி. முருகேசன் தான்.
முதலில் பார்த்தது பூரணி தான். அவளோ குமரிப் பெண். படலைக்கு அந்தப் பக்கம் வர இயலாது. இருந்தும் பார்த்துவிட்டாள். ஆண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெண்களின் கண்களுக்கு வேகம் அதிகம் தான்.
'குஞ்சு குருமான்' எல்லாம் 'முருகேசன் வந்திட்டார், முருகேசன் வந்திட்டார்' என்று கூவிய படியே ஒழுங்கையை நிறைத்து விட்டார்கள்.
இந்தக் காட்சி தான் என் மனசில் ஐம்பது வருடமாக அழியாமல் இருக்கிறது. பார்வதி வெளியே வந்து நிற்கிறாள். கையை இடுப்பில் ஊன்றியபடி உற்றுப் பார்க்கிறாள். நாலடி முன்னுக்கு வந்து இன்னொரு முறை பார்க்கிறாள். கைகால்கள் எல்லாம் இப்ப தள்ளாடுது. கண்ணிலே தாரை தாரையாகக் கண்ர். ஏதோ சொல்ல வாயெடுக்கிறாள்; ஒன்றும் வரவில்லை. நாக்கு தளதளக்குது. நிற்கக்கூட முடியவில்லை.
முருகேசன் சூட்கேஸை பொத்தென்று போட்டு விட்டு ஓடி வந்து தாயைக் கட்டிப் பிடிக்கிறான். 'என்ரை பிள்ளை, என்ரை பிள்ளை' என்று பார்வதி மகனைக் கட்டிக் கொள்கிறாள். தடவித் தடவிப் பார்க்கிறாள். முத்தமிடுகிறாள்; தலையைக் கோதுகிறாள். பிறகு இன்னொரு முறை தடவி விடுகிறாள். மீண்டு முத்தமிடுகிறாள்.
ஒரு நூறு பேர் சேர்ந்து விட்டார்கள். இந்தக்காட்சி நீண்டு கொண்டே போகிறது. தாயும் மகனும் குடிசைக்குள்ளே போனதும் ஆரோ சூட்கேஸை உள்ளே கொண்டு வந்து வைக்கிறார்கள்.
அடுத்த ஒரு கிழமை பார்வதி நிலத்திலே நடக்கவில்லை; ஆகாயத்தில்தான் உலாவினாள். பிறகு பயம் பிடித்துக் கொண்டது அவளுக்கு. முருகேசன் தன்னை விட்டுத் திரும்பி போய் விடுவானோ என்று. ஆனால் நல்லூர்கந்தன் அதற்கும் ஒரு வழி வகுத்திருந்தார்; எங்களுக்குத் தான் அது அப்ப தெரியவில்லை.
பார்வதி ஒரு நாள் படுத்தபடி நித்திரையிலேயே போய் விட்டாள். எங்கள் ஊர் முழுக்க இதே கதைதான். செத்த வீடு மிக விமரிசையாக நடந்து முடிந்தது.
நாலாம் நாள் காரியங்கள் எல்லாம் நிறை வேறியவுடன் முருகேசன் மீண்டும் 'ரயிலேறி' விட்டான்.