அதற்குப் பேர் 'கட்டிங்கிராஸ்' மேற்று ஆபிரிக்காவில் பெருகிக்கிடக்கம் ஒரு வகை பெருச்சாளி இனம். ஒரு பெரிய முயல் குட்டி அளவுக்கு வளரும். இதில் விசேஷம் என்னவென்றால் இது ஒரு தோட்டத்தில் வாய் வைத்துவிட்டால் என்றால் தோட்டக்காரன் கதி அதோ கதிதான். மண்ணைப் பிராண்டி உள்ளே போய் கிழங்கு வகை எல்லவற்றையும் நாசமாக்கி விடும்.

மேலுக்குப் பார்த்தால் பயிர்கள் 'ஓகோ' வென்று இருக்கும். ஆனால் உள்ளுக்குள்ளே கிழங்கையும் வேர்களையும் ஒட்டச் சாப்பிட்டிருக்கும். பார்ப்பவர்களக்கு விஷயமே தெரியாது. கண் முன்னே பார்த்துக் கொண்டிருக்கும் பயிர் செத்துப் போகும்.



சில வைரஸ் இருக்குதான். அது ஆட்களை முற்றிலும் கொல்லாது. ஆள் செத்தால் அதுவும் செத்து விடுமல்லவா, ஆகையால், மெள்ள, மெள்ள ஆளைச் சாப்பிட்டுக் கொண்டே வருமாம், தன் உயிரை நீடிப்பதற்கு.

கட்டிங்கிராஸ•ம் அந்த வகை தான். வள்ளிக் கிழங்கு என்றால் அதற்கு உயிர். நாலு கிழங்க இருந்தால் மூன்றைச் சாப்பிட்டு விட்டு ஒன்றை விட்டுவிடும். உங்களில் கரிசனப் பட்டு அல்ல. பயிர் மடிந்தால் அதுவும் மடிந்துவிடுமே.

கட்டிங்கிராஸ் இப்படியாக மனிதனுக்கு ஏற்பட்ட உணவைச் சாப்பிட, மேற்கு ஆபிரிக்க மனிதனோ கட்டிங்கிராஸையே சாப்பிடலானான். மிகப் பிரியமாகச் சுவைத்து சாப்பிடுவான். சுட்டுச் சாப்பிடுவான்; பொரிச்சு சாப்பிடுவான்; கறி வைச்சும் சாப்பிடுவான்.

கட்டிங்கிராஸ் மனித இனத்தை ஒழிக்க பாடுபட மனிதனோ கட்டிங்கிராஸை வேரோடு கறுவறுக்க வழிகள் தேடிக் கொண்டிருந்தான். எழுத்தில் இல்லாத ஒப்பந்தம் இது. ஒரு உயிர் வாழ் இனச்சூழல் சமனம் (Ecological balance) இங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது. யாருக்கும் தெரியாது.

* * *

நான் அப்போது உலக வங்கிக்காக மேற்க ஆபிரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கே தான் எனக்கு முதன் முதல் கட்டிங்கிராஸ”டன் பரிச்சயமேற்பட்டது. 'ம்மயம்பா' என்ற ஊருக்குக் காரில் பயணம். பென்ஸ் கார். அங்கே இதெல்லாம் சர்வசாதாரணம். நடுத்தர வர்க்கம் இல்லாத நாடு; மிதமிஞ்சிய பணக்காரனாக இருப்பான் ஒருவன், அல்லது பரம ஏழை. இடையில் ஒன்றும் இல்லை. வாகனமும் அது மாதிரிதான். பென்ஸ்கார் தான் வீதியெல்லாம். கொஞ்சம் முட்டுப்பட்ட பணக்காரன் என்றால் peugeot அல்லது Toyata வைத்திருப்பான் அல்லது நடைதான். வண்டி, குதிரை, ரிக்ஷா, ஓட்டோ என்றெல்லாம் இல்லை. தள்ளு வண்டி, சைக்கில் கூடக்கிடையாது. மோட்டார் சைக்கிளை மட்டும் அதிசயமாகக் காணலாம். சனங்கள் பொடா பொடாவில் (பஸ்ஸ’ல்) போய்க் கொள்வார்கள். அதன் சத்தத்தை வைத்து அப்படிப் பேர் வந்ததும்.

காரைச் சாரதி நூறு மைல் வேகத்தல் ஓட்டிக் கொண்டிருந்தான். இதுவும் சர்வசாதாரணம் தான். அவன் பேர் 'க்காணு'. அவனுடைய வாய் எப்பவும் கோலா நட்டை (பாக்குப் போன்ற துவர்ப்பாய் இருக்கம் ஒரு காய்) மென்று கொண்டே இருக்கும். வாய் சிவப்பாகும். பசியே எடுக்காது 'ஹ’ ஹ’' என்று அடிக்கடி சிரிப்பான். சிவப்பு முரசு பளிச்சென்னும். சிரிக்காத வேளையில் நன்றாக கார் ஓட்டுவான்.

நான் சாடையாகக் கண்ணயர்ந்திருக்க வேணும். திடீரென்று கார் 150 மைல் வேகத்தில் துள்ளிப் பாய்ந்து திசை மாறி ஓடியது. 'டபார்' என்று ஒரு சத்தம். திடுக்கிட்டு "என்ன? என்ன?" என்றேன். அவன் காரை திடுமென்று நிற்பாட்டி இறங்கி காட்டுக்குள் ஓடினான்.. நான் கத்துவதைக் கூடப் பொருட்படுத்தவில்லை. செடிகளின் சலசலப்பு. ஆனால் இவனைக் காணவில்லை. ஒரு நிமிடம் கழித்து மெள்ள எட்டிப் பார்த்தான். பல் எல்லாம் தெரிய 'ஹ’ ஹ’' என்று சிரித்து "மாஸ்ட, மாஸ்ட கட்ங்கிராஸ்" என்றான்.

என்ன இளவு இவனுடன் என்று இறங்கிப் பார்த்தேன். குற்றுயிரும் கொலையுயிருமாக அதுகிடந்தது. அசல் பெருச்சாளி தான்.

"மாஸ்ட! மாஸ்ட! கட்டிங்கிராஸ் சொப் பைன் பொக்கு ஸ்வீட்டோ" என்றான். ஐயா! இது அருமையான சாப்பாடு எடுத்து வரவா?" என்று கேட்டான். கண்டிப்பாக "முடியாது" என்று விட்டேன். முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே வந்தான்.

அதற்குப் பிறகு தான் எனக்குத் தெரியும் அந்தப் பெருச்சாளியை யார் ரோட்டிலே பார்த்தாலும் காரை ஏற்றிக் கொண்டு விடுவார்கள் என்பது. பிறகு விரும்பிய மாதிரி அதைச் சுட்டோ, கறி வைத்தோ சாப்பிடுவார்களாம்.

க்காணு மூன்று நாளாக முகம் நிமித்த வில்லை. அருமையான 'சொப்' மூதேவியால அநியாயமாய் போய் விட்டது என்ற ஆதங்கம் அவனுக்கு. "மாஸ்ட, சொப்பைன், சொன் பைன்" என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தான். அவனால் அந்தத் துக்கத்தை தாள முடியவில்லை. போறவர், வாறவர் எல்லாரிடமும் அதைப் பற்றி பிரலாபித்தான். நான் அந்த ஊரை விடும் வரை அவன் என்னை மன்னித்ததாகவே தெரியவில்லை.

* * *

உலக வங்கி இன்னொரு பத்து மில்லியன் டொலர் கடன் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இன்னேரம் பார்த்து புகார் கடிதங்கள் அறம்பிறமாகப் பறந்தன. ஊழல், லஞ்சம், பணவிரயம் என்று பல விதமான குற்றச் சாட்டுகள். வங்கி கடன் தர மறுத்து விடக்கூடுமோ என்ற ஒரு அவலமாக நிலைமை.

மந்திரி ஒரு விசாரணைக் குழு அமைத்தார். அவர்தான் தலைவர். குழுவில் அவர் தவிர நானும் இன்னும் மூன்று பேரும். விசாரணைக் குழு தீர விசாரணை செய்து ஒரு அறிக்கை சமர்ப்பிப்பதாக ஏற்பாடு.

ஒரு நல்ல நாள் பார்த்து மக்கெனி என்ற ஊருக்கு வெளிக்கிட்டோம். நல்ல நாள் என்றால் அட்டமி, நவமி, மரணயோகம் பார்த்து அல்ல. மக்கெனி 200 மைல் தள்ளி இருக்கும் சிறு ஊர். சனி, ஞாயிறு என்றால் அங்கு பீர் தீர்ந்து விடும். திங்கள் தான் பீர் வரும் நாள். ஆகையால் கணக்குப்பார்த்து செவ்வாயே வெளிக்கிட்டோம்.

மந்திரி ஆள் படையோடு மூன்று வாகனங்களில் முன்னால் போய்க் கொண்டிருக்கிறார். நாங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நல்ல ஸ்பீடில் போய்க் கொண்டிருக்கிறோம்.

எங்களுக்கு பின்னே ஒரு கார் விடாமல் தொடர்ந்து வந்து கொண்டே, "பாம், பாம்" என்று சத்தம் போட்டபடியே. அங்கே எல்லாம் பின்னால் வரும் வாகனத்துக்கு வழிவிட மாட்டார்கள். 'இவனுக்கென்ன நான் வழி விடுவது' என்ற மனப்பாங்குதான். மானப்பிரச்சினை. வழி கேட்டு வழி விடாமல் பெரிய சண்டைகள் எல்லாம் நான் பின்னாலே பார்த்திருக்கிறேன்.

க்காணு தன் பாட்டுக்கு ஓட்டிக் கொண்டே இருக்கிறான். வழிவிடக் காணோம். பின்னால் வாறவனோ "பாம், பாம்" என்று சத்தம் கொடுத்தபடியே வாறான்.

"க்காணு, கிவ்ரோட்பா".

"வழிவிடப்பா அவனுக்கு" என்றேன். க்காணு என்னைக் கண்ணாடியிலே பார்க்கிறான். ஆனால் வழி விடவே இல்லை.

"வழி விடு, வழி விடு" என்னு நான் சத்தம் போட்டதும் க்காணுவின் முகம் சுருங்கி விட்டது. வேண்டா வெறுப்பாக ஒதுங்கினான். அப்ப பின்கார் விரைந்து முன்னாலே போய்விட்டது.

வழி நெடுக சிவப்பான மண்மலைகள், திடீரென்று தோன்றும் கல் பாறைகள். 'கொலபஸ்' என்று சொல்லப்படும் ஒரு சாதிக் குரங்கு காட்டும்விளையாட்டுகள், இவையெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வருகிறேன். நல்ல இளம் வெய்யில், எண்ணெய்க் கறுப்பான பெண்கள் விதம் விதமான கலர் லப்பாத் துணிகள் அணிந்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சில தாய்மார்கள் முதுகிலே கட்டியபடி குழந்தைகள். அவர்கள் அங்கு மிங்கும் அசையும் போது குழந்தைகளும் ஒவ்வொரு பக்கமாகச் சாய்ந்து அதை ஒரு விளையாட்டுப் போல அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

சடுதியில் க்காணு "மாஸ்ட, மாஸ்ட லுக்" என்றான். அப்படிப் சொல்லி விட்டு வாயைத் திறந்து சிரிக்கத் தொடங்னி‘ன். எங்களை இருபது நிமிடம் முந்தி ஓவர்டேக் பண்ணி போன கார் ஒரு வளைவில் ஒரு லொறியுடன் மோதி நொறுங்கிப் போய் இருந்தது. அதில் போன சாரதியும், பயணியும் இறந்து போக லொறி குப்புறக் கிடந்தது. பொலீஸ் வானும், ஒரு சிறு கூட்டமும் சுற்றி வர. காரைக் கொஞ்சம் ஸ்லோ பண்ணி முழு விபரத்தையும் கண்களால் சேகரித்துக் கொண்டு மறுபடியும் காரை முடுக்கி விட்டான். "மாஸ்ட, மாஸ்ட டொண், டொண்". "அவர்களுக்கு எல்லாம் முடிந்து விட்டது" என்று சொல்லி விட்டு மறுபடியும் பலமாக 'ஹ’ ஹ’' என்று திரும்பி பார்த்த படியே சிரித்தான்.

எனக்கு மனதை என்னவோ செய்தது, அவர்களுடைய சாவு என் தலையில் விடிந்தது போல. என் நாக்கிலே ஏதோ சனியிருந்திருக்க வேண்டும். நான் க்காணுவை 'வழி விடு' என்று சொல்லாமலே இருந்திருக்கலாம். அல்லது அரை செகண்ட் முந்தி சொல்லியிருப்பார்கள். அப்படியென்றாலும் அவர்கள் தப்பியிருப்பார்கள். அரை செகண்ட் பிந்தி சொல்லியிருக்கலாம். அப்படியும் தப்பியிருப்பார்கள். என்னத்திற்கு சரி கரெக்டாக அந்த நேரம் பார்த்துச் சொன்னேன். அவர்களுடைய சாவு என்னுடைய எந்த ஒரு சொல்லினால்தான் ஏற்பட்டது என்று எனக்கு நிச்சயமாகப்பட்டது.

நாங்கள் மக்கெனி போய் இறங்கியதும் இது பற்றி யாரிடமாவது கதைக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் என்னுடன் வந்தவர்களோ, மற்றவர்களோ இதைச் சட்டை செய்யவே இல்லை. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று விபத்துக்கள் நடப்பதும் செத்த உடல்கள் சிதறிக் கவனிப்பாரற்றுக் கிடப்பதும் போகப் போக பின்னால் எனக்கு பழகி விட்டது. ஆனால் அப்ப தெரியவில்லை.

மந்திரி இறங்கியவுடன் முதல் கேட்ட கேள்வி "பீர் இருக்கிறதா" என்று தான். "இல்லை ஐயா, ஆனால் கெதியில் வந்து விடும்" என்றான் எங்களை வரவேற்ற ஊர் அதிகாரி. மந்திரி நாங்கள் வந்த வேலையை ஒரு கூட்டம் கூட்டி விளக்கி விட்டு விசாரனைணைத் தொடங்கினார்.

அந்த விசாரணையை விஸ்தரித்தால் மூன்று புத்தகங்கள் எழுதி விடலாம். எங்கள் ஊரில் சொல்வார்கள். "அம்பட்டன் வீட்டுக் குப்பையைக் கிளற மயிர்" என்று. அது போலத்தான். விசாரிக்க விசாரிக்க குப்பைதான் வந்தது. அந்தக் குப்பையை வைத்து ஒரு குப்பையும் கொட்ட ஏலாது. "சுற்றிச் சுற்றி சுப்பற்றை கொல்லை" என்பது போல விசாரணை திசை தெரியாமல் போய்க் கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட விசாரணையில் ஒரு சங்கடம். வழக்கமாக பொய்களும், உண்மைகளும் கலந்து கலந்து வரும். பொய்களைக் களைந்து விட்டால் உண்மை வெளிப்படும். அப்படி சிம்பிள். ஆனால் மேற்கு ஆபிரிக்காவில் விஷயமே வேறு. அங்கே பொய்க்கு மேல் பொய் வரும். சின்னப் பொய், பெரிய பொய், புளுகுணிப் பொய், அண்டப் பொய், ஆகாயப் பொய் என்று பல விதம். இதில் 'புருடா' வேறு. அதில்போய் உண்மையைக் கண்டு பிடிக்கிற தென்பது லேசுப்பட்ட காரியமா?

அங்க பொய் பேசுவதை ஒரு கலையாகவே போற்றி வளர்க்கிறார்கள். அதற்கு ஒரு கெட்டித்தனம் வேண்டும். பல நாள் பயிற்சியும் விடாமுயற்சியும் தேவை. பொய் என்றால் முகத்தில் அடித்தது போல முட்டாளாக்கும் பொய்தான்.

"என்னப்பா எட்டு மணிக்கு வரதென்றிட்டு பத்து மணிக்கு வாறியே?"

"இல்லையே, மாஸ்ட!நான் எட்டு மணிக்கே வந்திட்டேனே?"

"அப்ப ஏன் உள்ளே வரவில்லை?"

"உங்களைக் குளப்ப வேண்டாம் என்று அப்படியே அந்த மரத்தடியில் இருந்திட்டேன்."

"இருபது தரம் உன்னை வந்து வெளியிலே தேடினேனே?"

"நான் பார்த்தேன், நான் பார்த்தேன்".

"அப்ப ஏன் உள்ளே வரவில்லை."

"ஐயோ எனக்கு நீங்கள் என்னைத் தான் தேடுகிறீர்கள் என்று தெரியவில்லையே?"

இப்படியே போய்க் கொண்டிருக்கும். எண்ணெய் பூசிய பாம்பு போல வழுக்கிக் கொண்டே போவார்கள். பிடிபடவே மாட்டார்கள்.

* * *

காலி பீர் போத்தல்களெல்லாம் ஒரு பக்கம் குவிந்து கிடந்தன. பைல் கட்டுகள் ஒன்றன் மேல் ஒன்றாக மக்கெனி மலையைப் பிடிப்பது போல வளர்ந்தவண்ணம் இருந்தது. பேப்பர்கள், நகல்கள், புத்தகங்கள், லெட்ஜர்கள் என்று வந்த படியே இருக்கு. கையிலே பசையைப் பூசி விட்டு தொட்ட தெல்லாத்தையும் குருவி போல சேர்த்தோம்; கழுகு போல காவாந்து பண்ணினோம்.

'ஏண்டா, இப்படி வந்து மாட்டினோம்' என்று இருந்தது எனக்கு. பெருச்சாளியைக் காரால் அடித்து தின்கிறது சரி. கார் விபத்திலே இறந்தவனைப் பார்த்து சிரிக்கிறார்களே! இது பத்தாதென்று பொய்பேசுவதில் தங்கள் வித்வத்தன்மையை நிரூபிக்க என்ன பாடுபடுகிறார்கள். இவ்வளவும் இருக்க நான் என்ன வெட்டி விழுத்ப் போறேன். எனக்கு முன் இருந்த அதிகாரி ஆறு மாதத்திலேயே வேலையை உதறி விட்டு ஓடியது காரணமில்லாமலா?

எங்கள் கண்களும், காதுகளும் 'எங்கே ஒரு சின்ன ஓட்டை விழும்' என்று ஏங்கிய படியே இருந்தன. ஒரு சின்ன ஓட்டையைக் கண்டால் அதை பெரிதாக்க ஒன்பது வழிகள் தெரியும் எங்களுக்கு; அதுதானே எங்களை பிழைப்பு.

அன்று இரவு எட்டு மணி போல மந்திரி தனது பதினாறாவது பீர் போத்திலைக் காலி செய்தார். முதலாம் நாள் போர் முடிவின் போது தர்மராஜனும் பரிவாரங்களும் விசனத்துடன் குனிந்த படி கூடாரங்களுக்கு போனது போல மந்திரியும் நாங்கள் பின்தொடர தங்குமிடத்துக்குப் புறப்பட்டார்.

* * *

இப்படியாகத் தானே விசாணை தொடர்ந்தது. சாட்சிகளுடைய வாக்கு மூலங்கள் பக்கம், பக்கமாக குவிந்தன. என் மனமானது 'பக் பக்' என்று அடித்துக் கொண்டேயிருந்தது. விசாரணை குறுக்கு விசாரணை என்று நேரம் ஓடியது. என்னோடு வந்த குழுவினர்கள் எல்லாரும் நல்ல வாய்ச்சொல்லில் வீரர்கள். ஆனால் பேனை பிடித்து எழுதுவதென்றால் என் தலையில் தான் விடியும். என்மனம் கணக்குப் போட்ட படியே இருந்தது. இது வரை வந்தது இருநூறு பக்கமாவது தேறும். இன்னும் இழுத்துக் கொண்டே போனால் எங்கே போய் முடியுமோ?

இரண்டாவது நாளும் பலன் இல்லை. இப்ப விசாரணை அறை பார்க்க மிகவும் ரம்மியமாக இருந்தது. காலி பீர் போத்தல் எந்தப் பக்கம் திரும்பினாலும் குவிந்து கிடந்தது. நிற்கவும், நடக்கவும் இடம் இல்லை. பிள்ளைகள் 'ரைட்டோ' விளையாடுவது போல் பாய்ந்து, பாய்ந்து தான் போக வேண்டும். சூரியனும் எங்கள் பரிதாபத்தைக் காணச் சகிக்காமல் மக்கெனி மலைகளில் அஸ்தமனமானான்.

அன்று இரவு மக்கெனி மக்கள் மந்திரி குழுவினருக்கு ஒரு விமரிசையான விருந்து ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். விருந்து என்றால் குடிவகை, சாப்பாடு, நடனங்கள் என்று குசாலான விஷயம் தான்.

முகமூடி ஆட்டத்தைத் தொடர்ந்து இளம் பெண்கள் மந்திரியாரைச் சுற்றி ஆடியபடியே வந்தார்கள். வாத்தியங்களில் ட்ரம்முக்குத் தான் முக்கிய இடம். அதன் ஒவ்வொரு அடியும் 'த்தும் த்தும்' என்று விழ துள்ளித் துள்ளி ஆடாமல் எப்படி இருக்க முடியும்.

பெண்கள் என்றால் எல்லோருமே பொறுக்கி எடுத்த இளம் குமரிகள்தான். கன்னங்கரேல் என்ற நிறம். இரும்பு உடம்பு. கால்களை முன்வைத்து உதைத்து பின்னுக்கு போய் 'ரிதம்' தவறாத ஆட்டம். அவர்களுடைய பெரிய பின் பகுதிகள் இடம் வளமாக அசைந்து நல்ல மனசையும் சங்கடப்படுத்தும். எங்கள் பக்கத்து பெண்களைப் போல தலை குனிந்து பார்க்காது. கண்களும், மார்புகளும் நிமிர்ந்து தான் நிற்கும். ஒவ்வொரு ரவுண்டும் முடிந்தவுடன் எங்களைச் சுற்றிக் கைதட்டிக் கொண்டே வருவார்கள். பக்கெட்டுக்குள் கையை விட்டு காசையெடுத்து எறிய வேணும். மந்திரி பெண்களைக் கட்டிப் பிடித்து தடவியபடி வெகு நேரம் ஆடினார்.

அடுத்த நாள் விசாரணை வழமை போல் தொடங்க வில்லை. மந்திரி லேட், அதனால் விசாரணை இரண்டு மணி நேரம் தள்ளி ஆரம்பித்தது. ஆமை வேகத்தில் தான் விசாரணை. பதினொரு மணியிருக்கும். ஊசிக் கண் போல ஒரு சின்ன ஒட்டை. அவ்வளவு தான் இரண்டு மணி நேரத்துக்குள் விறுவிறுறென்று நாங்கள் ஒரு ஆள் போகும் அளவுக்கு அந்த ஓட்டையை விஸ்தரித்து விட்டோம்.

மந்திரியார் முகத்தில் பெருமிதம். எங்களுக்கோ மகிழ்ச்சி. இனி என்ன? எல்லா தடயங்களையும், சாட்சியங்களையும், வாக்கு மூலங்களையும் வரிசைப் படுத்தி எங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி ஒரு அறிக்கை தயாரிக்க வேண்டியதுதான் பாக்கி. அதற்குத் தான் நான் ஒரு மடையன் இருக்கிறேனே!

ஆறு மணியளவில் நாங்கள் களைத்துப் போய் கடையை மூடத் தொடங்கினோம். அப்பத்தான் 'மஸக்கோய், மஸக்கோய்' என்று ஒரு கிழவன்; வயது 65, 70 இருக்கும்; ஊருக்குள் பெரியவர்; எல்லாருடைய நல் மதிப்பையும் பெற்றவர்; எங்களைப் பார்க்க விரும்புகிறாராம்.

'இது என்னடா புது வம்பு' இந்த நேரத்தில். மந்திரி எங்களைப் பார்க்க நாங்கள் வேறு திசையில் பார்க்கிறோம். எல்லாருக்கும் அவசரத்தில் பறந்தார்கள். அநியாயத்துக்கும் மேலே அநியாயம், பீர் எல்லாம் முடிந்து விட்டது. மந்திரி சொன்னார், "அஞ்சு நிமிடம் மட்டும்" என்று.

மஸக்கோய் ஒரு தடியை ஊன்றிய படி மெள்ள, மெள்ள நடந்து வந்தார். அவருக்கு ஒரு அவசமுமில்லை. பீர் முடிந்த கதை அவருக்கு எங்கே தெரியப் போகுது?.

கறுத்த நெடிய உருவம். சுருள் சுருளாகத் தலைமுடி, சாடையாக நரை கரையோரத்தில். நிமிர்ந்த நடை. எங்களை ஊடுருவிப் பார்த்தார். கையிலே வைத்திருந்த தடியால் மெலிதாக ஊன்றிய படியே நின்றார். கைகளில் மட்டும் சிறிய நடுக்கம்.

நாகரீகமான நடையிலே சரளமாகப் பேசத் தொடங்கினார்.

"மதிப்பிற்குரிய மந்திரியாரே, விசாரணைக் குழுவினரே."

"உங்கள் நேரத்தை நான் வீணடிக்க வரவில்லை. ஒரு சிறுகதை மட்டும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்."

"ஒரு ஊரில் ஒரு விவசாயி. அவன் கஷ்டப்பட்டு ஒரு கிழங்குத் தோட்டம் போட்டிருந்தான். அவனுக்குச் சனியாக வந்த ஒரு பெருச்சாளி அவன் கிழங்குகளை எல்லாம் நாசமாக்கி கொண்டு வந்து. அவனோ பரம ஏழை. 'அவனா, பெருச்சாளியா" என்ற அவல் நிலை. பாவம், அவன் என் செய்வான்?"

"ஒரு பெருச்சாளிப் பொறி வாங்கி தோட்டத்திலே இடம் பார்த்து மறைவாக வைத்தான். ஆனால், பெருச்சாளி பெரிய கை தேர்ந்த பெருச்சாளி. தப்பிக்கொண்டே வந்தது."

"ஒரு நாள் அதிகாலையில் பொறி வைத்த இடத்தில் இருந்து பெரிய சத்தம். விவசாயியின் எட்டு வயது மகன் ஓடோடிச் சென்றான். முற்றிலும் சாகாத நிலையில் அப்படியும், இப்படியும் ஆக்ரோஷத்துடன் தலையை அடித்துக் கொண்டிருந்தது. பொறிக்குத் தெரியுமா அது பெருச்சாளியைப் பிடிக்க வைத்த பொறி என்று. கிட்ட வந்து பாம்பை தவறுதலாகப் பிடித்து விட்டது. தள்ளி நின்று புதினம் பார்த்தான் பையன். பிரண்டு,பிரண்டு அடித்த பாம்பு அவனை எட்டிக் கொத்தி விட்டது."

"விவசாயியும், மனைவியும் 'குய்யோ, முறையோ' என்று தங்கள் தலையில் அடித்து அடித்துக் கதறினார்கள். பாம்பையும் ஒரே அடியில் கொண்டு போட்டாகி விட்டது. ஊர் முழுக்க அழுதது. பையனுடைய இறக்க சடலத்தை கொண்டு போய் புதைத்தார்கள்.

"பன்னிரெண்டு நாள் துக்கம் அனுட்டிக்க வேணும். பன்னிரெண்டாம் நாள் ஊர் வழக்கப் படி வந்து சனம் எல்லோரையும் கூப்பிட்டு விருந்தும் கொடுக்க ஏற்பாடு. ஏழை விவசாயியிடம என்ன இருக்கு? கனகாலமாக வளர்த்த ஒரு ஆடு. அதை வெட்டி எல்லோருக்கும் விருந்து வைத்தான்."

இந்த இடத்தில் மஸக்கோப் கொஞ்சம் கதையை நிற்பாட்டி விட்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்தார். நாங்கள் "இனி என்ன வரப் போகுதோ?' என்று மூச்சு விடாமல் காத்திருந்தோம். தொண்டையைச் சரி செய்து கொண்டு மஸக்கோய் மேலே தொடர்ந்தார்.

"பெருச்சாளியைக் கொல்லத் தான் பொறி வைத்தான் கமக்காரன். ஆனால் அவனுடைய பிள்ளை இறந்தது. பிறகு பாம்பு செத்தது. பெருச்சாளி மட்டும் இன்னும் ஒடிக் கொண்டே இருக்கிறது."

இவ்வளவு தான். மஸக்கோய் இதைச் சொல்லி விட்டு விடு விடென்று போய் விட்டார்.

எங்கள் முகத்தில் ஈயாடவில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதைத் தவிரிப்பது கூட கஷ்டமாகி விட்டது. கடகட வென்று குனிந்த தலைநிமிராமல் மூட்டையைக் கட்டத் தொடங்கினோம்.

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework