வேற்றுமைதாமே ஏழ் என மொழிப. 1
விளி கொள்வதன்கண் விளியொடு எட்டே. 2
அவைதாம்,
பெயர் ஐ ஒடு கு
இன் அது கண் விளி என்னும் ஈற்ற.
3
அவற்றுள்,
எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே.
4
பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
வினை நிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல்
பண்பு கொள வருதல் பெயர் கொள வருதல் என்று
அன்றி அனைத்தும் பெயர்ப் பயனிலையே.
5
பெயரின் ஆகிய தொகையுமார் உளவே
அவ்வும் உரிய அப்பாலான.
6
எவ் வயின் பெயரும் வெளிப்படத் தோன்றி
அவ் இயல் நிலையல் செவ்விது என்ப.
7
கூறிய முறையின் உருபு நிலை திரியாது
ஈறு பெயர்க்கு ஆகும் இயற்கைய என்ப.
8
பெயர்நிலைக் கிளவி காலம் தோன்றா
தொழில் நிலை ஒட்டும் ஒன்று அலங்கடையே.
9
இரண்டாகுவதே,
ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எவ் வழி வரினும் வினையே வினைக்குறிப்பு
அவ் இரு முதலின் தோன்றும் அதுவே.
10
காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்
ஒப்பின் புகழின் பழியின் என்றா
பெறலின் இழவின் காதலின் வெகுளியின்
செறலின் உவத்தலின் கற்பின் என்றா
அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின்
நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா
ஆக்கலின் சார்தலின் செலவின் கன்றலின்
நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா
அன்ன பிறவும் அம் முதற் பொருள
என்ன கிளவியும் அதன் பால என்மனார்.
11
மூன்றாகுவதே,
ஒடு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைமுதல் கருவி அனை முதற்று அதுவே.
12
அதனின் இயறல் அதன் தகு கிளவி
அதன் வினைப்படுதல் அதனின் ஆதல்
அதனின் கோடல் அதனொடு மயங்கல்
அதனொடு இயைந்த ஒரு வினைக் கிளவி
அதனொடு இயைந்த வேறு வினைக் கிளவி
அதனொடு இயைந்த ஒப்பு அல் ஒப்பு உரை
இன் ஆன் ஏது ஈங்கு என வரூஉம்
அன்ன பிறவும் அதன் பால என்மனார்.
13
நான்காகுவதே,
கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எப் பொருள் ஆயினும் கொள்ளும் அதுவே.
14
அதற்கு வினை உடைமையின் அதற்கு உடம்படுதலின்
அதற்குப் படு பொருளின் அது ஆகு கிளவியின்
அதற்கு யாப்பு உடைமையின் அதன் பொருட்டு ஆதலின்
நட்பின் பகையின் காதலின் சிறப்பின் என்று
அப் பொருட் கிளவியும் அதன் பால என்மனார்.
15
ஐந்தாகுவதே,
இன் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
இதனின் இற்று இது என்னும் அதுவே.
16
வண்ணம் வடிவே அளவே சுவையே
தண்மை வெம்மை அச்சம் என்றா
நன்மை தீமை சிறுமை பெருமை
வன்மை மென்மை கடுமை என்றா
முதுமை இளமை சிறத்தல் இழித்தல்
புதுமை பழமை ஆக்கம் என்றா
இன்மை உடைமை நாற்றம் தீர்தல்
பன்மை சின்மை பற்று விடுதல் என்று
அன்ன பிறவும் அதன் பால என்மனார்.
17
ஆறாகுவதே,
அது எனப் பெரிய வேற்றுமைக் கிளவி
தன்னினும் பிறிதினும் இதனது இது எனும்
அன்ன கிளவிக் கிழமைத்து அதுவே.
18
இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின்
செயற்கையின் முதுமையின் வினையின் என்றா
கருவியின் துணையின் கலத்தின் முதலின்
ஒருவழி உறுப்பின் குழுவின் என்றா
தெரிந்து மொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்
திரிந்து வேறுபடூஉம் பிறவும் அன்ன
கூறிய மருங்கின் தோன்றும் கிளவி
ஆறன் பால என்மனார் புலவர்.
19
ஏழாகுவதே,
கண் எனப் பெயரிய வேற்றுமை கிளவி
வினை செய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
அனை வகைக் குறிப்பின் தோன்றும் அதுவே.
20
கண் கால் புறம் அகம் உள் உழை கீழ் மேல்
பின் சார் அயல் புடை தேவகை எனாஅ
முன் இடை கடை தலை வலம் இடம் எனாஅ
அன்ன பிறவும் அதன் பால என்மனார்.
21
வேற்றுமைப் பொருளை விரிக்கும் காலை
ஈற்று நின்று இயலும் தொகைவயின் பிரிந்து
பல் ஆறாகப் பொருள் புணர்ந்து இசைக்கும்
எல்லாச் சொல்லும் உரிய என்ப.
22
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework