குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ் செள்ளை ஈன்றமகன்
வெருவரு தானையொடு வெய்(து)உறச் செய்துசென்(று)
இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ
அருமிளைக் கல்லகத்(து) ஐந்(து)எயில் எறிந்து 5
பொத்தி ஆண்ட பெரும்சோ ழனையும்
வித்தை ஆண்டஇளம் பழையன் மாறனையும்
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று
வாஞ்சி மூதூர்த் தந்துபிறர்க்(கு) உதவி
மந்திர மரபின் தெய்வம் பேணி 10
மெய்யூர் அமைச்சியன் மையூர் கிழானைப்
புரைஅறு கேள்விப் புரோசு மயக்கி
அருந்திறல் மரபின் பெருஞ்சதுக்(கு) அமர்ந்த
வெந்திறல் பூதரைத் தந்(து)இவண் நிறீஇ
ஆய்ந்த மரபில் சாந்தி வேட்டு 15
மன்உயிர் காத்த மறுஇல் செங்கோல்
இன்இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப்பாட்டு.

அவைதாம்: நிழல்விடு கட்டி, வினை நவில் யானை, பஃறோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடுகாண் நெடு வரை, வெந்திறல் தடக்கை, வெண்டலைச் செம்புனல், கல்கால் கவணை, துவராக் கூந்தல், வலிகெழு தடக்கை: இவை பாட்டின் பதிகம்.

பாடிப்பெற்ற பரிசில்: மருள் இல்லார்க்கு மருளக் கொடுக்க என்று உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காப்புமறம் தான்விட்டான் அக்கோ.

குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework