துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: தீம்சேற்று யாணர்

இரும்புலி கொன்று பெரும்களி(று) அடூஉம்
அரும்பொறி வயமான் அனையை பல்வேல்
பொலந்தார் யானை இயல்தேர்ப் பொறைய
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து
நின்வழிப் படாஅர் ஆயின் நெல்மிக்(கு) 5
அறைஉறு கரும்பின் *தீம்சேற்(று) யாணர்*
வருநர் வரையா வளம்வீங்(கு) இருக்கை
வன்புலம் தழீஇ மென்பால் தோறும்
அரும்பறை வினைஞர் புல்இகல் படுத்துக்
கள்உடை நியமத்(து) ஒள்விலை கொடுக்கும் 10
வெள்வர(கு) உழுத கொள்உடைக் கரம்பைச்
செந்நெல் வல்சி அறியார் தத்தம்
பாடல் சான்ற வைப்பின்
நா(டு)உடன் ஆடல் யாவண(து) அவர்க்கே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework